Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐந்து தலைமுறை கண்ட பூர்வீக கிராமமான வலைஞர் மடத்தின் இந்த நிலைக்கு காரணம் என்ன…?

ஐந்து தலைமுறை கண்ட பூர்வீக கிராமமான வலைஞர் மடத்தின் இந்த நிலைக்கு காரணம் என்ன…?

-கே.வாசு-

யுத்தம் தந்த வலிகள் எமது மண்ணில் இருந்து இன்னும் அகலவில்லை. வடக்கின் பல மாவட்டங்களில் இன்றும் போரின் வடுக்களை நாம் காணக்கூடியதாகவுள்ளது. அபிவிருத்தி, கல்விக்கான உதவிகள், தொழில் வாய்ப்புக்கள் என என்ன தான் அரசாங்கம் கூறிக கொண்டாலும் அவை எல்லா மக்களுக்கும் கிடைத்தாக இல்லை. வடக்கில் பல சவால்களுக்கு மத்தியில் பல மாணவர்கள் சாதித்து வரும் நிலையில் சில கிராமங்களில் பாடசாலைகளே இருந்த இடம் தெரியாது அழிந்து மறைந்து செல்கின்ற அவலநிலை தொடர்கிறது. நாளைய தலைவர்களான நல்லதொரு மாணவர் சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு பாடசாலைகளுக்குரியது. ஒவ்வொரு ஊரிலும் ஆலயங்கள் போல் பாடசாலைகளும் அமைக்கப்பட வேண்டும் என சிந்தனை வலுப்பெற்று வரும் நிலையில் முல்லை மாவட்டத்தில் சில பாடசாலைகள் இருந்த இடம் தெரியாது மறைந்து செல்கின்றது.

கடல் அன்னை தாலாட்டும் முல்லைத்தீவு மண்ணின் கரையோரப் பிரதேசமே வலைஞர்மடம் கிராமம். இக் கிராமம் ஐந்து தலைமுறைகண்ட பூர்வீக கிராமம். கடந்த யுத்த காலப்பகுதிக்கு முன்னர் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் கடல் தொழில் மற்றும் வியாபாரம் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு சன நடமாட்டம் அதிகம் காணப்பட்ட வலைஞர் மடம் பிரதேசத்தில் மாணவர்களின் கல்வியை உயர்த்தும் நோக்கத்தோடு 1962ஆம் ஆண்டு இக் கிராமத்துக்கென தனி பாடசாலை ஒன்று நிறுவப்பட்டது.

IMG_5159முதலாம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு வரையான 230 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை பல புத்திஜீவிகளையும், கல்விமான்களையும் உருவாக்கியது. இருப்பினும், இப் பாடசாலையில் தற்போது அதிபர் உட்பட 3 ஆசிரியர்கள் மாத்திரம் 15 மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

2008, 2009ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் கிளிநொச்சி, பரந்தன், உடையார்கட்டு, மூங்கிலாறு, விசுவமடு, தேவிபுரம், புதுக்குடியிருப்பு போன்ற இடங்களிலிருந்து இடம் பெயர்ந்து வருகை தந்த மக்கள் வலைஞர்மடம் பகுதியில் தங்கியிருந்தனர். இந்த காலப்பகுதியில் இப் பாடசாலையில் தரம் 10 வரை 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றனர்.

யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் வலைஞர்மடம் பாடசாலை நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு பாதுகாப்பான தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டது. வலைஞர்மடம் கிராமத்தில் வசித்த பல குடும்பங்கள் யுத்தத்தில் இறந்தும் எஞ்சிய குடும்பங்கள் வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் காணி வாங்கி நிரந்தரமாக குடியேறியும் விட்டனர். அதிலும் எஞ்சிய 75 குடும்பங்களே தற்போது குறித்த கிராமத்தில் மீள் குடியேறியுள்ளனர்.

IMG_5167இங்கு மீள்குடியேறிய மக்கள் தமது பிள்ளைகள் நகர்ப்பகுதியில் இருக்கும் பாடசாலைகளிலேயே கல்வி கற்கவேண்டுமென்று விரும்பி முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் இருக்கும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். வசதிவாய்ப்பு குறைந்த பெற்றோர்களின் பிள்ளைகள் 15 பேர் மாத்திரமே வலைஞர்மடம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கின்றனர்.

அங்கு யுத்த வடுக்கள் தாங்கிய 100 அடி ஓலைக் கொட்டகையில் அமைந்துள்ள வகுப்பறை, 75 அடி நீளமுடைய சிதைவடைந்த சீமெந்து கட்டடம், பாழடைந்த கிணறு போன்ற சூழலில் யுத்த்தில் எஞ்சிய 15 அடி நீளமுடைய ஒரு வகுப்பறை கட்டடத்தில் பாடவேளைகளை கவனித்து மணி அடித்து ஒலி எழுப்பும் அதிபர் 15 மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் இரு ஆசிரியர்களென இருண்ட பாடசாலையாக காட்சியளிக்கின்றது.

பாடசாலையின் கவர்ச்சிகளை நோக்கி மாணவர்கள் நகர்வதாலும் பாடசாலையின் பௌதீக வளங்களை பராமரித்தல், அழகுபடுத்தல், தரமான ஆசிரியர்களை நியமித்தல் போன்ற செயற்பாடுகளில் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தினால் பாடசாலையின் தரம் உயர்ந்து பழைய நிலையை அடையும் என அப்பகுதி பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

IMG_5160முன்னைய அரசாங்கத்தாலும் சரி, புதிய அரசாங்கத்தாலும் சரி கல்விக்கான பல உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாகாணசபையாலும் கல்விக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த உதவிகள் ஏன் இந்த பாடசாலைக்கு கிடைக்கவில்லை…? நகரங்களில் உள்ள வசதி படைத்த மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கு மட்டும் தான் அரச உதவிகளா என்ற எண்ணத்தை இந்த பாடசாலையின் இன்றைய நிலை உணர்த்தியுள்ளது. எனவே, பொறுப்பு அதிகாரிகள் பின்தங்கிழய பாடசாலைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி அவற்றை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்பாகும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *