Search
Monday 18 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சந்திரிகாவும் போர்க்குற்ற விசாரணையும்

சந்திரிகாவும் போர்க்குற்ற விசாரணையும்

வீரகத்தி தனபாலசிங்கம் 

அர­சாங்­கத்தின் தேசிய ஐக்­கியம் மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்­கான அலு­வ­ல­கத்தின் தலை­வி­யாக இருக்கும் முன்னாள் ஜனா­தி­பதி திரு­மதி சந்­தி­ரிகா பண்டார­நா­யக்க கும­ர­துங்க கொழும்பு ஆங்­கிலத் தின­ச­ரி­யொன்­றுக்கு கடந்த வாரம் வழங்­கிய நேர்­கா­ணலில் நல்­லி­ணக்கச் செயன்­மு­றைகள் தொடர்பில் விளக்கம் அளித்­த­போது அவ­ரி­ட­மி­ருந்து வெளி­வ­ரக்­கூ­டி­யவை என்று பலரும் எதிர்­பார்த்­தி­ருக்க முடி­யாத சில கருத்­துக்­களைத் தெரி­வித்­ததைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

தேசிய நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் பணியை அர­சாங்கம் உங்­க­ளிடம் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றது. அப்­ப­ணி­களின் தற்­போ­தைய நிலை என்­ன­வென்று அவ­ரிடம் கேட்­கப்­பட்ட போது ‘அவை வெற்­றி­க­ர­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. எதி­ர­ணி­யினர் மற்றும் சிறிய எண்­ணிக்­கை­யி­லான தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து வரு­கின்ற எதிர்ப்­புக்கு மத்­தியில் பெரும்­பான்­மை­யா­ன­வர்­களின் ஆசீர்­வா­தத்­துடன் செயற்­பா­டுகள் தொட­ரு­கின்­றன. நல்­லி­ணக்கம் என்­பது நீண்­ட­தொரு செயன்­முறை. புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றைக் கொண்­டு­வர  வேண்­டி­யதே இப்­போது அவ­ச­ர­மா­ன­தாகும். அடுத்து காணாமல் போனோர் விவ­கார அலு­வ­ல­கத்­தையும் அமைக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது. இவை எல்­லா­வற்­றையும் செய்­து­விட்டால் போர்க்­குற்­றங்­களை விசா­ரணை செய்­வ­தற்கு நீதி­மன்­றங்­களை அமைக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை’ என்று பதி­ல­ளித்தார்.

திரு­மதி.மனோரி முத்­தெட்­டு­வே­கம தலை­மை­யி­லான நல்­லி­ணக்கப் பொறி­மு­றைகள் தொடர்­பான கலந்­தா­லோசனைச் செய­ல­ணியின் அறிக்கை அண்­மையில் வெளி­யி­டப்­பட்­டது. உள்­நாட்­டுப்­போரின் இறுதிக் கட்­டங்­களில் இடம்­பெற்ற பிரச்­சி­னைகள் தொடர்­பாக விசா­ரிப்­ப­தற்கு வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளையும் வர­வ­ழைக்க வேண்டும் என்று அந்த அறிக்­கையில் விதந்­துரை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. அது தொடர்­பாக முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ரணி கடு­மை­யான விமர்­ச­னங்­களைத் தெரி­வித்­தி­ருக்­கி­றது. அது­பற்றி உங்­க­ளது அபிப்­பி­ராயம் என்­ன­வென்று திரு­மதி குமா­ர­துங்­க­விடம் கேட்­கப்­பட்­டது. அதற்குப் பதி­ல­ளித்த அவர், ‘அவ் வித­மாக கருத்துத் தெரி­விப்­ப­தற்கு அந்தச் செய­ல­ணிக்கு உரிமை கிடை­யாது. பொது மக்­களின் கருத்­துக்­களை அறிந்து அர­சாங்­கத்­துக்கு அறிக்­கை­யொன்றை சமர்ப்­பிக்­க­வேண்­டிய பொறுப்பே அவர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. அதுவே அவர்­க­ளு­டைய பொறுப்­பாக இருந்­தது. செய­ல­ணியின் உறுப்­பி­னர்கள் தங்­க­ளு­டைய சொந்தக் கருத்­துக்­க­ளையும் அறிக்­கையில் சேர்த்­தி­ருக்­கி­றார்கள்’ என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

chandeika sam

முன்னாள் ஜனா­தி­ப­தியின் இந்தக் கருத்­துக்கள் தொடர்­பாக செய்தி வெளி­யிட்ட இணை­யத்­தள செய்திச் சேவை­யொன்று ‘திரு­மதி குமா­ர­துங்க குண்­டொன்றைத் தூக்கிப் போட்­டி­ருக்­கிறார் . போர்க்­குற்ற விசா­ர­ணைகள் தேவை­யில்லை என்­கிறார்’ என்று அதற்கு தலைப்­பிட்­டி­ருந்­தது. உள்­நாட்டுப் போரின் இறுதிக் கட்­டங்­களில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­ப­டு­கின்ற மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் வெளி­நாட்டுப் பங்­கேற்­புடன் நீதி விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மென்று முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற கோரிக்கை குறித்து நீண்ட கால­மா­கவே சர்ச்­சைகள் கிளம்­பி­யி­ருந்த போதிலும், அது குறித்து கவ­னத்தைப் பெரிதும் ஈர்க்­கின்ற வகையில் முனைப்­பான கருத்­துக்­களை திரு­மதி குமா­ர­துங்க முன்னர் வெளி­யிட்­ட­தில்லை என்­ப­தா­லேயே கடந்த வாரத்­தைய நேர்­கா­ணலில் அவர் தெரி­வித்­தி­ருக்கும் இந்தக் கருத்­துக்கள் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. பொது­ந­ல­வாய நாடு­களைச் சேர்ந்த நீதி­ப­திகள், வழக்­குத்­தொ­டு­நர்கள் மற்றும் விசா­ர­ணை­யா­ளர்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக உள்­நாட்டு நீதி விசா­ரணைப்  பொறி­மு­றை­யொன்று அமைக்­கப்­பட வேண்டும் என்ற நிபந்­தனை உட்­பட, போருக்குப் பின்­ன­ரான காலகட்­டத்தில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய தேசிய நல்­லி­ணக்கம் மற்றும் நிலை­மா­று­கால நீதிச்­செ­யன்­மு­றைகள் தொடர்பில் 2015 அக்­டோ­பரில் ஜெனீ­வாவில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை இது­வ­ரையில் முன்­னெ­டுத்­தி­ருக்கக் கூடிய செயற்­பா­டுகள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் உயர் ஸ்தானிகர், இம்­மாத பிற்­ப­கு­தியில் ஆரம்­ப­மா­க­வி­ருக்கும் மனித உரி­மைகள் பேர­வையின் 34ஆவது கூட்­டத்­தொ­டரில், விரி­வான அறிக்­கை­யொன்றை வெளி­யி­ட­வி­ருக்கும் நிலையில் திரு­மதி குமா­ர­துங்க போர்க்­குற்­றங்கள் தொடர்­பான விசா­ரணை பற்றி, அதுவும் அர­சாங்­கத்தின் தேசிய ஐக்­கியம் மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்­கான அலு­வ­ல­கத்தின் தலை­வி­யாக இருந்­து­கொண்டு இத்­த­கைய கருத்தை வெளி­யிட்­டி­ருப்­பது பிரத்­தி­யே­க­மாகக் கவ­னிக்கப் ­ப­ட­வேண்­டிய அம்­ச­மாகும்.

ஜெனீவா தீர்­மா­னத்தின் ஏற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான செயன்­மு­றைகள் தொடர்பில் சர்­வ­தேச சமூ­கத்­துக்கு உறு­தி­ய­ளித்­ததன் பிர­காரம் உரிய முறையில் அர­சாங்­கத்­தினால் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­ய­வில்லை. கடந்த வருடம் ஆகஸ்ட் 23 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட காணாமல் போனோர் விவ­கார அலு­வ­லக  சட்­டத்­தையும் கூட, அர­சாங்கம் இது­வ­ரையில் வர்த்­த­மா­னியில் வெளி­யி­ட­ வில்லை. இத­னி­டையே அந்த அலு­வ­ல­கத்­துக்கு இருக்கும் அதி­கா­ரங்­களைக் குறைப்புச் செய்­வ­தற்­கான பிர­த­மரின் யோச­னையை  அமைச்­ச­ரவை  சில  தினங்­க­ளுக்கு   முன்னர்  அங்கீ­கரித் திருப்­ப­தா­கவும்   அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது இந்த இலட்­ச­ணத்தில் அர­சாங்கம் எதிர்­வரும் ஜெனீவா கூட்­டத்­தொ­ட­ருக்கு எவ்­வாறு முகம் கொடுக்கப் போகின்­றது என்ற கேள்­வியும் எழுந்­தி­ருக்­கி­றது.

பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­ட­து­போன்றே, 2015 அக்­டோபர் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் கால அவ­கா­சத்தை ஜெனீ­வாவில் அர­சாங்கம் கோர­வி­ருப்­ப­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர சில தினங்­க­ளுக்கு முன்னர் கொழும்­பி­லுள்ள வெளி­நாட்டு செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் தெரி­வித்­தி­ருக்­கிறார். ஜெனீவா தீர்­மா­னத்­துக்குப் பின்­ன­ரான சுமார் ஒன்­றரை வருட காலத்தில் அத்­தீர்­மா­னத்தின் ஏற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான செயன்­மு­றை­களில் அக்­கறை காட்­டு­வ­தை­வி­டவும் காலத்தை எவ்­வாறு கடத்­து­வது என்­ப­தில்தான் அர­சாங்கம் கருத்­தூன்­றிய கவ­னத்தை செலுத்­தி­யி­ருக்­கி­றது. பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான பொறி­மு­றை­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மேலாக புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்டு வரும் செயன்­மு­றை­க­ளுக்கே அர­சாங்கம் முன்­னு­ரிமை கொடுக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது என்றும் சம­ர­வீர வெளி­நாட்டுச் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறி­யி­ருக்­கிறார். அந்த ஜெனீவா தீர்­மா­னத்­துக்கு இலங்கை இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­த­போ­திலும், வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளையும் விசா­ர­ணை­யா­ளர்­க­ளையும் உள்­ள­டக்­கிய நீதி விசா­ரணைப் பொறி­முறை தொடர்­பான ஏற்­பாட்­டுக்கு எதிர்ப்பை வெளிக்­காட்­டு­வ­தி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உட்­பட அர­சாங்கத் தலை­வர்கள் கூடு­த­லான காலத்தை செல­விட்­டதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

இத்­த­கை­ய­தொரு பின்­பு­லத்தில், திரு­மதி குமா­ர­துங்க தெரி­வித்­தி­ருக்கும் கருத்­துக்­களை உன்­னிப்­பாக நோக்­கும்­போது அவர் சர்­வ­தேச பங்­க­ளிப்­பு­ட­னான நீதி விசா­ரணைப் பொறி­முறை மாத்­தி­ர­மல்ல, முற்­று­மு­ழு­தாக உள்­நாட்டு நீதி­ப­தி­களைக் கொண்ட விசா­ர­ணையும் கூட தேவை­யில்லை என்ற நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கிறார் என்­பது தெளி­வா­கி­றது. அத்­துடன் நல்­லி­ணக்கப் பொறி­மு­றைகள் தொடர்­பான கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியின் அறிக்­கையை கடந்­த­மாத முற்­ப­கு­தியில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்ற நிகழ்வில் வைத்து அர­சாங்­கத்தின் சார்பில் பெற்­றுக்­கொண்ட திரு­மதி. குமா­ர­துங்க, அந்த அறிக்கை தொடர்பில் ஒரு  மாத­கால இடை­வெ­ளிக்குள் முரண்­பட்ட கருத்தை வெளி­யிட்­டி­ருக்­கிறார். அதா­வது, அறிக்­கையின் விதப்­பு­ரை­களை அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யது கட்­டா­ய­மில்லை என்ற போதிலும், அந்த அறிக்­கையை முழு­மை­யாக அக்­க­றை­யுடன் ஆராய்ந்து பொது விவா­தத்­துக்கு உட்­ப­டுத்­திய பிறகே ஒரு தீர்­மா­னத்­துக்கு வர­வேண்டும் என்று கடந்த மாதம் அவர் கூறி­யி­ருந்தார். அறிக்­கையை திரு­மதி முத்­தெட்­டு­வே­க­ம­வி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­வதைக் கூட திட்­ட­மிட்டுத் தவிர்த்த ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அதன் விதப்­பு­ரை­களைப் பற்றி எந்­த­வி­த­மான அக்­க­றையும் காட்­ட­வில்லை.பொது விவாதம் எங்கே நடக்­கப்­போ­கி­றது?

வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளையும் உள்­ள­டக்­கிய கலப்பு முறை­யி­லான நீதி­வி­சா­ரணைப் பொறி­மு­றை­யொன்றே போரில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­டை­யே­யான பர­வ­லான விருப்­ப­மாக இருக்­கி­றது என்று செய­ல­ணி­யினால் தெரி­விக்­கப்­பட்ட விதப்­பு­ரைக்கு எதி­ராக பிர­சா­ரங்­களைத் தீவி­ரப்­ப­டுத்­து­வ­தி­லேயே அர­சாங்கத் தலை­வர்கள் கவ­னத்தைச் செலுத்­தி­னார்கள். அவர்­களின் சிந்­த­னையின் வழி­யி­லேயே திரு­மதி குமா­ர­துங்­கவும் ஒரு­மாதம் கழித்து கருத்துக் கூறி­யி­ருக்­கிறார். நீதி விசா­ரணைப் பொறி­முறை எந்­த­வ­கை­யா­ன­தாக இருக்­க­வேண்டும் என்­பது குறித்து அறிக்­கையில் கருத்துக் கூறு­வ­தற்கு செய­ல­ணியின் உறுப்­பி­னர்­க­ளுக்கு உரிமை கிடை­யாது என்று  அவர் கடுந்­தொ­னியில் பேசி­யி­ருப்­ப­தையும் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இத் தரு­ணத்தில் திரு­மதி குமா­ர­துங்க இலங்கைப் போரின் இறு­திக்­கட்ட  மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்­றங்கள் தொடர்பில் சுமார் ஐந்­தரை வரு­டங்­க­ளுக்கு முன்னர் வெளி­யிட்ட கருத்து  தவிர்க்க முடி­யாமல் நினை­வுக்கு வரு­கின்­றது.  மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் முன்னாள் தலைவர் நீதி­ய­ரசர் கே.பால­கிட்­ணரின் 10 ஆவது நினைவு தினத்தை முன்­னிட்டு கொழும்பு இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் 2011 ஜூலை பிற்­ப­கு­தியில் அவரின் குடும்­பத்­த­வர்­க­ளினால் நிகழ்வு ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. அதில் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, சகல பிரி­வி­ன­ரையும் தழு­விய சமூ­கங்கள், சமா­தானம் என்ற தலைப்பில் நினைவுப் பேரு­ரையை திரு­மதி குமா­ர­துங்க நிகழ்த்­தினார்.

chandrika

இலங்­கையின் போர்க் குற்­றங்கள் தொடர்­பாக பிரிட்­டனின் செனல் 4 தொலைக்­காட்­சியில் ‘இலங்­கையின் கொலைக் களங்கள்’ என்ற தலைப்­பி­லான விவ­ர­ணப்­படம் ஒளி­ப­ரப்­பாகி பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நேரம் அது.

’28 வய­தான எனது மகன் கொலைக் களங்­களை பிரித்­தா­னிய தொலைக்­காட்­சியில் பார்த்த பின்னர் ஒரு இலங்­கையர் என்றும், பௌத்தர் என்றும் தன்னைக் கூறு­வ­தற்கு வெட்­கப்­ப­டு­வ­தாக எனக்கு தொலை­பேசி மூலம் ஒரு காலை­வேளை தெரி­வித்தார். அந்­த­வே­ளையை எனது வாழ்நாள் முழு­வதும் மறக்­க­மாட்டேன். எனது மகளும் இதே போன்ற கருத்தைத் தெரி­வித்தார். எமது நாட்­ட­வர்கள் இத்­த­கைய பயங்­கர நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வார்கள் என்­பது குறித்து அவர்கள் அதிர்ச்­சி­யையும், அச்­சத்­தையும் வெளிப்­ப­டுத்­தினர். எனது மகனும் மகளும் மற்­ற­வர்­களைப் பற்றி அக்­கறைக் கொண்­ட­வர்­க­ளாக இருக்­கி­றார்கள் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன். அவர்கள் இரு­வரும் தங்­க­ளது தாயாரும் தந்­தை­யாரும் விரும்­பி­ய­ப­டி­யான மனி­தர்­க­ளாக வளர்ந்­தி­ருக்­கி­றார்கள் என்­பது குறித்தும் நான் பெரு­மைப்­ப­டு­கிறேன். ஒரு தேசம் என்ற வகையில் இலங்­கை­யர்­க­ளாகிய நாம் தோல்­வி­ய­டைந்து விட்டோம் என்­பதை தன்­ன­டக்­கத்­துடன் ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.  எமது தவ­று­களை ஒப்­புக்­கொள்­வ­தற்­கான நேர்­மை­யையும் தவ­று­களைத் திருத்­திக்­கொள்­வ­தற்­கான பெருந்­தன்­மை­யையும் நாம் கொண்­டி­ருக்க வேண்டும். நிரூ­பிக்­கப்­பட்ட  உண்­மை­க­ளையும் நேர்­மை­யான விமர்­ச­னங்­க­ளையும் தொடர்ந்தும் நிரா­க­ரிப்­பது எவ­ரது பிரச்­சி­னை­யையும் தீர்த்து வைக்க உத­வாது. நல்­லி­ணக்கம், புனர்­வாழ்வு, புன­ர­மைப்பை அடையும் உய­ரிய இலக்­கிற்கு எமது தலை­வர்கள் தலைமை தாங்­க­வேண்டும்’ என்று திரு­மதி குமா­ர­துங்க அன்று தன­து­ரையில் குறிப்­பிட்டார். அவ்­வாறு பேசிக்­கொண்­டி­ருந்த போது ஒரு கட்­டத்தில் அவர் கண்­க­லங்­கிய நிலையில் ஒரு சில நிமி­டங்கள் மெளனம் சாதித்­த­தையும் கண்டோம்.

இலங்­கை­யர்கள் என்றும் பௌத்­தர்கள் என்றும் கூறு­வ­தற்கு தனது பிள்­ளை­களை வெட்­கப்­ப­ட­வைத்த போர்க்­குற்­றங்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்கச் செய்­வ­தற்கு அவ­சி­ய­மான விசா­ர­ணையை அவ­சி­ய­மற்­றது என்று ஏன் முன்னாள் ஜனா­தி­பதி இப்­போது கூறு­கிறார்? புதி­ய­தொரு அர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு­வந்து, அடுத்து காணாமல் போனோர் அலு­வ­ல­கத்­தையும் அமைத்­து­விட்டால் போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு நீதி­மன்­றங்கள் தேவை­யில்லை என்று அவர் கூறு­கிறார் என்றால், இது­கா­ல­வ­ரை­யான பாதிப்­புக்­க­ளுக்கும் போர்க்­குற்­றங்­க­ளுக்கும் பரி­காரம் கிடைக்­கக்­கூ­டிய அள­வுக்கு தமிழ் மக்­களை திருப்தி படுத்­தக்­கூ­டிய அர­சியல் தீர்வைத் தர­வல்ல பய­னு­று­தி­யு­டைய அர­சி­ய­ல­மைப்­பொன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்­கே­து­வான அர­சியல் சூழ்­நிலை இன்று தென்­னி­லங்­கையில் இருக்­கி­றதா ?  நிரூ­பிக்­கப்­பட்ட  உண்­மைகள்’,  நேர்மையான  விமர்சனங்கள்  என்று  நினைவுப்  பேருரையில்   தானே  குறிப்பிட்டவற்றை   தமிழர்கள்  மறந்து விட வேண்டும்   என்று  இப்போது  திருமதி  குமாரதுங்க   எதிர்பார்க்கின்றாரா?

போரின் இறுதிக்கட்டங்களில் குடிமக்கள் இழப்பு அறவே ஏற்படவில்லை என்பதே முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷவின் நிலைப்பாடாக இருக்கிறது. இன்றைய ஆட்சியாளர்கள்  குறிப்பாக  ஜனாதிபதி சிறிசேன போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை கைவிடுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை நிர்ப்பந்திக்க அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்  உதவியை நாடுவது குறித்துப் பேசுகிறார்கள்.

போர்க் குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புடைமையை ஏற்றுக்கொண்டு அவற்றுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன்நிறுத்துவதற்கும் தென்னிலங்கை தயாராயில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான பயனுறுதியுடைய முயற்சிகளுக்கும் தயாராயில்லை என்பதே தமிழ் மக்கள் முன்னால் விரிந்துகிடக்கும் யதார்த்த நிலை என்றே எண்ணவேண்டியுள்ளது.  இறுதியாக டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் ஃபொக்ஸ் நியூஸுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்த கருத்தொன்றை நினைவுபடுத்துவது இவ் விடத்தில் பொருத்தமாக இருக்கும்.

‘உலகம் பூராவும் பெரும் எண்ணிக்கையான மக்கள் உயிரிழப்பதற்கு அமெரிக்காவின் தவறுகளே காரணம். நாம் பல தவறுகளைச் செய்திருக்கிறோம். பெரும் எண்ணிக்கையானவர்களைக் கொலை செய்திருக்கிறோம். எம்மிடையே பெருமளவு கொலைகாரர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவை பாவம் செய்யாத நாடு என்று நினைக்கிறீர்களா?’

ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும், தனது நாடு செய்த பாவங்களை ஒப்புக்கொள்கிற அளவுக்கு ஒரு நேர்மை ட்ரம்பிடம் இருந்திருக்கிறதே ?  நம்மவரிடம்…..?

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *