Search
Saturday 25 January 2020
 • :
 • :
தலைப்பு செய்திகள்

பாலின வேறுபாடுகளைத் தகர்த்தெறிவதே முழுமையான சமத்துவ சமுதாயமாகும்

பாலின வேறுபாடுகளைத் தகர்த்தெறிவதே முழுமையான சமத்துவ சமுதாயமாகும்
சர்வதேச மகளிர் தினம் – 2015

இவ்வருடம் 104 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை மார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டின் மையக் கருத்தானது முழுமையான சமத்துவத்;தை நடைமுறைப்படுத்து (ஆயமந வை ர்யிpநn) என்பதாகும்.
இன்று பெண்களின் நிலையில் ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டிருப்பதற்கு காரணம் 15ஆம் நூற்றாண்டு தொடக்கம் இன்று வரையும்  உழைக்கும் பெண்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள், தியாகங்கள், உயிரிழப்புகள் என்பனவாகும். இந்தச் சரித்திர கண்ணோட்டம் இன்றையப் பெண்களின் அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து எழுச்சிக்கொண்ட பெண்கள் சமுதாயத்தை உருவாக்குவதற்கு அமைப்புகளே ஆணிவேராக உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.

சரித்திரக் கண்ணோட்டம்

பல நாடுகளில் 1400 முதல் 1789 வரையில் பெண்ணினத்தின் அடக்குமுறைப்பற்றி  மொழிவாரியான உணர்வு இருந்ததாக கூறலாம். 1789 ஆம் ஆண்டு பாரீஸ் நகரில் பெண்கள் ஒன்றுசேர்ந்து போராடி, ஆண்களுக்குச் சமமானதாகவும், நியாயமானதாகவும், பெண்களுக்கும் உரிமைகள் வேண்டுமெனவும், வேலைக்கேற்ற ஊதியம், 8 மணிநேர வேலை என்ற கோஷத்துடன் பிரேஞ்சுப் புரட்சியில் ஈடுபட்டனர். இப்பெண்கள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கையினூடாக “வெசயில்” என்ற பட்டினத்தில் பெண்கள் வாக்குரிமை வேண்டுமென்று கேட்டுச்சென்றனர். பின்பு இந்தச் சிந்தனை பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. பிரான்ஸ் நாட்டில் 2ஆவது முடியாடசியிலிருந்த லூயிஸ் மன்னன் 1878ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி பெண்களுக்கு வாக்குரிமையும், அரச ஆலோசனைச் சபைக் குழுக்களில் இடமளிக்கவும் அனுமதி வழங்கியுள்ளார்.

மேரி வோருஸ்டன் கிராபட் 1759 – 1797 காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். இவரே பெண் உரிமைக்காக முதன் முதலில் குரல் கொடுத்தவராவார். இவர் 1792இல் “பெண்ணுரிமைக் கொள்கை நிறுவீடு”(The Vindication of the Rights of Women) என்ற நூலில், பெண் இயக்கம். பெண் விடுதலை. பெண் கல்வி, பெண்களுக்கு சட்டத்தில் தகுந்த வாய்ப்பு, பெண் வாக்குரிமை, பெண் வேலை வாய்ப்பு போன்ற புரட்சிகரமான கருத்துகளைக் கூறியிருந்தார்.

அமெரிக்க நாட்டின் நியுயோர்க் நகரில் உள்ள”செனக்காபோல்ஸ்” என்ற இடத்தில் 1848இல் நடந்த மாநாடு உலக பெண்ணிய  வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். 1857ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி நிவ்யோர்க் நகரில் ஆடைத் தொழில் மற்றும் ஜவுளித் தொழில் சார்ந்த சுமார் 40ஆயிரம் பெண்கள் குறைந்த வேதனம், நீண்ட வேலை நேரம், பொருத்தமற்ற வேலை நிபந்தனைகள் ஆகியவற்றை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தனர். இதனைத் தொடர்ந்து  அமெரிக்காவிலும், எனைய நாடுகளிலும் பெண் தொழிலாளர்களின் போராட்டங்கள் தலைதூக்கலாயிற்று. 1869ஆம் ஆண்டு பெண்ணிய செயற்பாட்டாளர்கள் பெண்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதற்கு வாக்குரிமை இன்றியமையதது என்ற கருத்தைப் பரப்பினர். 1908ஆம் ஆண்டு நிவ்யோர்க் பெண்கள்  புகையிலை கம்பெனிகள் மற்றும் தொழிற்சாலைகளில் பெண்கள் சம்பள உயர்வு, பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்துத் தெருவில் ஊர்வலம் சென்றனர்;.1909ஆமஆண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் 20 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் நிவ்யோர்க் நகரில் வேலை நிறுத்தம் செய்தனர். இவ்வேலை  நிறுத்தப் போராட்டம் இரண்டு மாதங்கள் நீடித்தன. வேலை நிறத்தத்தின்போது பலர் கைதுசெய்யப்பட்டனர். எனினும் அவர்களது  கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதே காலக்கட்டத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பெண்களுக்கான அரசியல் சமத்துவம், வாக்குரிமை, சம வேலைக்குச் சம சம்பளம், 8 மணிநேர வேலை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சுமார் பத்து இலட்சம் ஆண்,பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்துக்கொண்டனர்.

1909ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி 120 பெண் தொழிலாளர்கள் ஆண்களுக்குக் கிடைத்த 10 மணி நேர வேலைத் தமக்கும் தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து ஆலையினுள் போராட்டம் நடத்தினார்கள். முதலாளியோ ஆலைக்குத் தீ வைத்து அங்கிருந்த 120 பேரையும் தீக்கிரையாக்கினான். இந்த நிகழ்ச்சியும் மார்ச் 8ஆம் திகதியைப் பெண்கள் தினமாக பிரகடனப் படுத்தப்பட முக்கிய காரணமாக அமைந்தது. 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ”கொபன்ஹெக்” நகரில் சர்வதேச பெண்கள் சோசலிச அமைப்பு ஒரு கூட்டத்தினை நடாத்தியது. அக்கூட்டத்தில் 1837ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி நடைப்பெற்ற வேலை நிறுத்தத்தை நினைவுகூறும் வகையில் வருடந்தோறும் அத்தினத்தை சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆரம்பக் காலக்கட்டத்தில் இது சோசலிச அரசியல் நிகழ்வாகவே ஆரம்பமானது. 1917ல் ரஷ்யப் புரட்சியி;ன் பின்னர் கம்யூனிஸ, சோசலிச நாடுகளில் பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பெண்கள் தங்களது உரிமைகளை அறிந்திருக்கவும், தங்களது சக்தியைப் பயன்படுத்தி தங்களது எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கவும்  தெரிந்திருக்க வேண்டுமென உறுதிசெய்தனர். இதற்காக ஏறக்குறைய இன்று 27 நாடுகளில் கூடுதலாக சோசலிச கமியூனிச நாடுகளில் இத்தினம் விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில் ஆப்கானிஸ்தானில் இத்தினம் விடுமுறை தினமாகவும் நேபாள நாட்டில் பெண் தொழிலாளருக்கு விடுமுறை தினமாகவும் உள்ளது. ஆரம்பத்தில் இத்தினம் சர்வதேச தொழில் புரியும் பெண்கள் தினமாக நினைவுகூறப்பட்டது. முதலாவது தேசியப் பெண்கள் தினம் அமெரிக்காவில்  1909ஆம் ஆண்டு பெப்ரவரி 28இல் நினைவுகூறப்பட்டது. 1911ஆம் ஆண்டு கொபன்ஹெகன் ஏற்பாடு என்று சொல்லப்படும் உடன்படிக்கையின் பிரகாரம் ஒஸ்ரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிற்சலாந்து போன்ற நாடுகளிலிருந்து வாக்குரிமை பொதுத் தாபனங்களில் தொழில்புரியும் உரிமை முதலிய உரிமைகளை வலியுறுத்தி 10 இலட்சத்திற்கும் மேலான பெண்களும் ஆண்களும் பங்குக்கொண்ட ஆர்பாட்ட ஊர்வலத்தின் பின்னரே சர்வதேச மகளிர் தினம் ஆரம்பிக்கப்பட்டது. முதலாம் உலகமகா யுத்தத்தின்போது பெண்கள் ஒன்றிணைந்து யுத்தத்திற்கு எதிராகச் சமாதானத்தை வலியுறுத்திப் போராடினார்கள். ஆதி கிரேக்கத்தில் லிஸ்ட்ராட்டா என்ற இடத்தில் பெண்கள் ஒன்றுசேர்ந்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஆண்களுக்கு எதிராக பாலியல் எதிர்ப்பை நடைமுறைப்படுத்தனார்கள்.

இலங்கை அரசியலில் பெண்கள்

உலகளாவிய ரீதியில் பெண்களின் சம உரிமைகள் தொடர்பாக முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால் தெற்காசியாவில் விசேடமாக இலங்கையிலும்  இன, மத, மொழி, பால் கடந்து சகலரும் அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவதை உறுதிசெய்யப்படுவதே ஜனநாயகத்தின் எதிர்பார்ப்பாகும். சார்க் நாடுகள் இதிலொரு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அண்மையில் இந்தியாவில் 33 வீத அரசியல் பிரதிநிதித்துவம் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில்  இதை நடைமுறைப் படுத்துவதற்கு  ஆணாதிக்க அரசியலானது தவிர்த்து வருகின்றது. 2014ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் 225 உறப்பினர்களில் 13 பேர்தான் பெண்கள். இது 5.8 வீதமாகவே உள்ளது. இதில் ஒரே ஒரு தமிழ் பெண்மனிதான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்;. எமது நாட்டின் சனத்தொகையில் 52 வீதமானவர்கள் பெண்கள். 56 வீதமான வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

ஆசிய நாடுகளுடனான ஒரு ஒப்பீட்டு நோக்கு – பாராளுமன்றத்தில்

 zzz-1

சர்வதேச மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் – 2005 –பாராளுமன்றத்தில்

 zzz-2

இந்தியாவைப் போல் இலங்கையிலும் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு அனைத்து தரப்பினரும் உறுதியாக செயற்படவேண்டும்.

பெண்களுக்கான மனித உரிமை நிரல் ஒன்றை சீடா ஒப்பந்தம் வரையறை செய்துள்ளது. இதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதை பெண்கள் மசோதாவாக பெண்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதையும் நடவடிக்கைக்கான பெய்ஜிங் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட 12 முக்கிய பகுதிகளையும் 215ஆம்  ஆண்டிற்கு முன் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளையும் இலங்கை அரசு நிறைவேற்றினால் பெண்கள் ஆரம்பக்கால பெண்நிலைவாத அமைப்பு ஒன்று கூறியதுபோல் “எமக்கு உண்பதற்கு உணவு மாத்திரமல்ல பூக்களும் தேவயாகும்” அதாவது பெண்களுக்கு உணவும் வேண்டும். சுதந்திரமும் வேண்டும்”. அதாவது கௌரவமான வாழ்க்கையை வாழக்கூடிய சாத்தியபாடு அவசியம்.

பொருளாதாரத்தில் பெண்கள்

1977ஆம் ஆண்டிற்குப் பின் எமது நாட்டின் பொருளாதராம் படிப்படியாக  நவீன தாராளவாத கொள்கையின் அடிப்படையில் சென்றுக்கொண்டிருக்கிறது. 2015ஆம் ஆண்டிற்கு முன் உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவ சந்தைப் பொருளாதார முறை கடைபிடிக்கப்பட்டது. இன்றைய அரசாங்கம் சமூக சந்தைக் கொள்கையை பின்பற்றப் போவதாக கூறுகின்றது.  எமது நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களே முக்கிய இடத்தை வகிக்கின்றனர்.

இன்று இந்த நாட்டில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாததால் நாடு விட்டு நாடு சென்று வேலை வாய்ப்பைத் தேடும் நிலை சர்வசாதாரணமாகிவிட்டது. இதில் கூடுதலாக தொழில்பயிற்சியற்ற (Unskilled) பெண்கள் வீட்டுப்பணிப்பெண்களாக  மத்தியகிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர். ஏறக்குறைய வெளிநாடுகளில் 20 இலட்சம் பேர் பணிபுரிகின்றனர். இதில் 70மூ ஆனவர்கள் பெண்களே. கடந்த வருடம் அந்நிய செலாவணியாக 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை எமது நாட்டுக்கு பெற்றுத் தந்துள்ளனர். பன்னாட்டு நிறுவனங்களினால் நடத்தப்படும் ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் அந்நிய செலாவணியை பெற்றுத் தருவதில் இரண்டாம் இடத்தை வகிக்கின்றனர். 2014ஆம் ஆண்டில் 4,900 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நிய செலாவியாகப் பெற்றுக் கொடுத்துள்ளது. மூன்றாம் இடத்தில் சுற்றுலாத்துறை உள்ளது. 2012 ஆம் ஆண்டில் 102,427 மில்லியன் ரூபாவை அந்நிய செலாவணியாகப் பெற்றுள்ளது. முதலாம் இடத்தில் இருந்து பெருந்தோட்டத்துறை 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தேயிலை, இறப்பர், தென்னை மூலம் 2014ஆம் ஆண்டு 2,698 மில்லியன் ரூபா பெற்றுக்கொடுத்துள்ளது. இத்துறையிலும் 60 வீதத்திற்கு மேலானவர்கள் பெண்களே. இத்தனை வருமானத்தை நாட்டிற்கு பெற்றுத்தரும் பெண்களின் பொருளாதாரமோ வலுப்படுத்தப்படவில்லை. ஆண்களுடன் ஒப்பிடும்போது சகல துறைகளிலும் பின்தள்ளப்பட்டே இருக்கிறார்கள். இந்த அசமத்துவ நிலை மாற்றப்பட வேண்டும். கவர்ச்சியான சம்பளம் என்ற அடிப்படையில் வீட்டுப் பணிப்பெண்கள் வன்முறைகளுக்கு உட்படுவதையும் அவர்களது சட்டரீதியான உரிமைகளை பாதுகாக்கக்கூடிய பொறிமுறைகளோ அனுகுமுறைகளோ  இல்லாதிருப்பது மிகவும் பாரதூரமான விடயமாக இருக்கிறது. ஹாங்காங்கில் கடந்த 3 ஆண்டுகளில் 115 இலங்கைப் பெண்கள் வீட்டு வன்முறைக்கு உட்பட்டுள்ளார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.  இலங்கை காசில் ரூபா 70,241 அடிப்படைச் சம்பளமும், இலவச உணவும் வழங்கப்படும். இதற்காக 3 இலட்சம் செலவழித்து அங்கு செல்லும் பெண்கள் கொடுமைக்கு உட்படும் அவலம் தொடரத்தான் வேண்டுமா?

பெண்களின் கோரிக்கைகள்
 • சம வேலைக்குச் சம சம்பளம்
 • வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும்
 • வேலைத்தளத்தில, சமுதாயத்தில், வீட்டில், சமய நிறுவனங்களில்,தொழிற்சங்கங்களில் பெண்கள் இரண்டாம் நிலையில் இருக்கும்  நிலை மாற்றப்படவேண்டும்.
 • நவீன உலகத்திலும், குடும்ப வன்கொடுமைகளிலும் பெண்கள் பாதிக்கப்படும்பொழுது அவர்களுக்கான உளநல ஆலோசனைகளும் தற்காலிக தங்குமிட வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட வேண்டும்.
 • பெண்களைப் பற்றிய பார்வை சமுதாயத்தாலேயே திரித்துக்கூறப்படுகின்றது. இது மாற்றப்பட வேண்டும்.
 • ஓரு பெண்ணைப் பற்றி தீர்ப்பிடுவது அவளது நடை ,உடை, பாவனை,செய்யும் தொழில், உபயோகிக்கும் வார்த்தைகள் என்பவற்றின் மீதே தங்கியுள்ளது. இதனை மாற்ற வேண்டும்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளை குறைக்கும் ஐக்கிய நாட்டு பிரகடனம் கூறுவதாவது ,

”பெண்களுக்கெதிரான வன்முறையானது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஆதிக்க உறவில் வரலாற்று ரீதியாக நிலவிவந்த அசமத்துவத்தின் வெளிப்பாடாகும். ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களை கீழ்நிலைக்கு பலவந்தமாக தள்ளுவதற்கான ஒரு கொடுமையான சமூகத்தால் கையாளப்படும் ஒரு யுக்திதான் பெண்களுக்கெதிரான வன்முறை”.

ஆண் பெண் சமத்துவத்திற்கு சாதகமான பற்பல பிரகடனங்கள், சமவாயங்கள், சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் அவை வெறும் எழுத்தளவிலேயே நின்றுவிடுகிறது. பொருத்தமான தீர்வுகள் செயற்படுத்தப்படவில்லை. சொல்லப்போனால் பல வன்கொடுமைகள் வெளிப்படுத்தப்படுவதேயில்லை. சமூக விதிகள், கலங்கம், விலக்கிவைத்தல்;, மனநிலை போன்றன அந்த விடயங்கள் வெளிவராமல் தடுப்பதற்கு ஊக்குவிப்பனவாக அமைகின்றது.

மலையகப் பெண்களின் கோரிக்கைகள்
 • வேலை செய்யும் இடங்களில்  போதிய அளவு குடிநீரும் கழிவறை வசதிகளும் செய்துக் கொடுக்கப்பட வேண்டும்.
 • தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நீட்டிக்கப்படவேண்டும்.
 • ஞாயிறு, போயா நாட்களில் 25 கிலோ தேயிலை பறிக்கவேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டு வழமைப்போல் 15 கிலோவிற்கு ஒன்றரை நாள் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்.
 • நாயாந்தம் பெயருக்கு எடுக்கும் கொழுந்துக்கு ரூபா 34 கொடுக்கப்படுகிறது. மேலதிக கிலோவிற்கு 20 ரூபாதான் வழங்கப்படுகிறது. இதனால் கம்பெனிக்கு இலாபமே அன்றி இது பெண்களின் உழைப்பை சுரண்டும் ஒரு வழியாகும். ஆகவே இது கூட்டப்பட வேண்டும்.
 • மறைமுக பட்டினியிலிருந்து (hidden hunger) மீட்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் இலங்கைப் பெண்களின் பிறப்பில் வாழ்நாள் எதிர்பார்ப்பு  75.1 இருந்தாலும் கூடுதலான மலையகப் பெண்களுக்கு அது 60 க்கும் குறைவாகவே உள்ளது.

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக மலையகப் பெண்கள் தாங்களாகவே முன்வந்து போராட நினைக்காவிட்டால் சமத்துவம் என்பது கானல் நீராகிவிடும். முழுமையான சமத்துவத்தை கொண்டுவருவதற்கு பெண்கள் கூட்டாகப் போராடவேண்டும்.; நீர்கொழும்பு களப்புக்கான சீ-பிளேன் கருத்திட்டத்தை தடுப்பதற்கு முழுமையான பங்களிப்பை நழ்கிய மீனவப் பெண்களின் போராட்டத்தை போல் மலையகப் பெண்களும் தங்கள் உரிமைகளுக்கு குரல் எழுப்பத் தலைப்பட்டால் தோல் கொடுக்க பலபேர் முன்வருவார்கள் என்பதை மலையகப் பெண்கள் கவனத்தில் எடுத்தால் சமத்துவம,; சமவாய்ப்பு, சமூக அங்கீகாரம் அனைத்தையும் அடைய முடியும் என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

முழுமையான சமத்துவம் பற்றிய அதீதமான விழிப்புணர்ச்சி
முதன்மை தலைமைத்துவ பணிகளில் அதிகமான வாய்ப்பு
பெண்களின் பொருளாதார சுதந்திரத்தின் அதிகரிப்பு
ஆகியவற்றை மலையகப் பெண்கள்;அடைந்தே தீரவேண்டும். அதற்கான செயற்பாட்டை இப்போது எடுக்காவிட்டால் எதிர்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவர் என்பதை கருத்தில் கொள்வது அவசியம்.

“எங்களது மனைவியர், தாய்மார்கள், மகள்கள் ஆகியோர் தங்களது முயற்சிகளுக்கு சமனான வருமானத்தைப் பெறுகின்ற வரையில் எங்கள் பயணம் முடிவடையப் போவதில்லை.”(பராக் ஒபாமா)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *