Search
Thursday 24 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜல்லிக்கட்டுப் புரட்சி

ஜல்லிக்கட்டுப் புரட்சி

வீரகத்தி தனபாலசிங்கம் 

தைப்பொங்கலுக்கு அடுத்தடுத்த தினங்களில் தமிழகத்தில் மாணவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி அமைதிவழிப் போராட்டத்தைத் தொடங்கியபோது இலங்கையில் பலர் ஜல்லிக்கட்டை நடத்த முடியாமல் இருக்கின்ற சூழ்நிலையா தமிழர்கள் இன்று எதிர் நோக்குகின்ற பெரிய பிரச்சினை? வரட்சிக்கொடுமையில் வாடிய பயிரைக்கண்டு மாரடைப்பினாலும் தற்கொலை செய்து கொண்டும் 200 க்கும் அதிகமான தமிழக விவசாயிகள் மாண்டுபோன போது  இந்த மாணவர்கள் எங்கே போயிருந்தார்கள்? இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும் கூட தமிழகத்துக்கு காவிரி ஆற்றுநீரைத் திறந்து விடுவதற்கு கர்நாடக மாநில அரசாங்கம் மறுத்தபோது இந்த மாணவர்கள் ஏன் எழுச்சி கொள்ளவில்லை? எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கையில் உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசாங்கத்தின் தலையீட்டைக் கோரி இந்த மாணவர்கள் ஏன் போராட்டத்தில் இறங்கவில்லை? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். அந்தக் கேள்விகளில் நியாயம் இருந்தபோதிலும் அது எல்லாவற்றையும் தாண்டி எல்லோரையும் மலைக்க வைத்து விட்டது தமிழக மாணவர்களின் கடந்த வாரத்தைய போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவ வெற்றி.

ஜல்லிக்கட்டு மீதான தடையின் விளைவான பிரச்சினை தமிழகத்தில் மக்கள் மத்தியில் ஒரு கிளர்வுணர்ச்சிமிக்கதாகவே இருந்து வந்திருக்கிறது. தமிழர்களின் கலாசாரப் பெருமையுடன் கூடிய பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாக அதை அவர்கள் போற்றுகிறார்கள். அதன் மீதான தடையை நீக்க வேண்டுமென்று தமிழக அரசியல் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக மத்திய அரசாங்கத்திடம் இடையறாது கோரிக்கைகளை விடுத்துவந்தன. நீதிமன்றங்களின் மூலமான தீர்வுகளைத் தேடும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆனால், இவையெல்லாம் பலவருடங்களாகப் பயனைத் தராத நிலையில் அமைதிவழியிலான வெகுஜனப் போராட்டத்தைத் தவிர வேறுவழியில்லை என்று தன்னெழுச்சியாகவே முடிவுக்கு வந்த மாணவர்களும் இளைஞர்களும் சமூகத்தின் சகல தரப்பினரதும் ஆதரவுடன் கொளுத்தும் வெயிலையும் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் நின்று நிலைகுலையாமல் போராடி தாங்கள் நினைத்ததை சாதித்து காட்டியிருக்கிறார்கள்.

jallikkattu_3122220f

இந்தப் போராட்டத்தை இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் மத்திய கிழக்கில் எதேச்சாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் நடத்திய ‘அரபுவசந்தம்’ புரட்சியுடன் ஒப்பிட்டவர்கள் ‘தமிழ் வசந்தம்’ என்று வர்ணித்தார்கள். தமிழகத்தின் பல நகரங்களிலும் கிராமங்களிலும் போராட்டங்கள் நடந்த போதிலும் இந்தியாவையும் கடந்து உலகின் கவனத்தை ஈர்த்தது இலட்சக்கணக்கில் மாணவர்களும் மக்களும் திரண்டு நின்ற சென்னை மெரீனா கடற்கரையே என்பதால் அதை ‘மெரீனா புரட்சி’ என்றும் வேறுசிலர் வர்ணித்தார்கள். தை மாதத்தில் நடைபெற்றதால் ‘தைப் புரட்சி’ என்றும் வர்ணிக்கப்பட்டது.

மாணவர்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த வேளையில் அதற்கு ஒருமைப்பாட்டை வெளிக்காட்டி புலம் பெயர் தமிழ்ச்சமூகம் உலகின் பல நாடுகளிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தியது. இலங்கையிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், மலையகம் மற்றும் தலைநகர் கொழும்பிலும் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியதைக் காணக்கூடியதாகக் இருந்தது. அவை தொடர்பான செய்திகளை ஒளிப்பரப்பிய தமிழகத்தின் தொலைக்காட்சி சேவையொன்று ‘தரணியெங்கும் தமிழன் குரல்’ என்று வர்ணனை செய்திருந்தது. இந்த வர்ணனை உணர்வெழுச்சியின் வெளிப்பாடாக இருந்த போதிலும், மாணவர்களின் போராட்டம் இந்தியாவைக் கடந்து உலகெங்கிலும் கவனத்தை பெற்றிருந்ததன் தவிர்க்க முடியாத ஒரு பிரதிபலிப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

அண்மைய தசாப்தங்களில் மாத்திரமல்ல நினைவுக்கெட்டிய வரலாற்றிலும் கூட தமிழர்கள் இத்தகையதொரு அமைதிவழி எழுச்சிப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கவில்லை. தமிழ்நாடு மாநில அரசாங்கத்தையும்  இந்திய மத்திய அரசாங்கத்தையும் அசரவைத்து மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய வெகுஜனங்களும் தங்களது கோரிக்கையை வென்றெடுத்திருக்கிறார்கள்.

வெறுமனே கோரிக்கைகளை முன்வைப்பதையும் மத்திய அரசாங்கத்துக்கு கடிதம் எழுதுவதையும் இயன்றவரை ஏட்டிக்கு போட்டியாக தங்களுக்குள் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களைக் சுமத்துவதையும் செய்யத் தெரிந்தவர்களாக இருக்கும் தமிழக அரசியல்வாதிகள் இந்த வெகுஜனப் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டாலும் உண்மையில் இவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டியவர்களே. தங்களது கையாலாகத்தனம் தலைமைத்துவமோ ஒழுங்கமைவான வழிகாட்டலோ இல்லாத ஒரு மாணவர் சமூகத்தின் தன்னெழுச்சியின் மூலமாக அம்பலப்படுத்தப்பட்டிருப்பதை அரசியல்வாதிகளினால் எவ்வாறு மனதால் ஏற்றுக்கொள்ள முடியும்? தங்களது போராட்டத்தை எந்தக் கட்டத்திலும் அரசியல்வாதிகள் அவர்களின் நோக்கங்களுக்கு இசைவான முறையில் ‘கடத்திச்செல்ல’ அனுமதிக்காமல் மாணவர்கள் உறுதி குலையாமல் செயற்பட்டார்கள். மாணவர்களை தங்களது ரசிகர்களாகவே இதுவரையில் பார்த்த திரையுலக பிரபலங்கள் மறுதலையாக அவர்களின் ரசிகர்களாக மாறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

jallikkattu 2

மாணவர்களின் எழுச்சியைக் கண்ட பிரதமர் நரேந்திரமோடியின் அரசாங்கத்திற்கு சட்டத்திருத்தம் ஒன்றின் மூலமாக ஜல்லிக்கட்டுக்கு இருந்துவந்த தடையை நீக்குவதற்கான தமிழக அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதைத்தவிர வேறுமார்க்கம் இருக்கவில்லை. எதிர்காலத்தில் எந்த விதத்திலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது தடுக்கப்படாதிருப்பதை உறுதி செய்யக் கூடிய வகையில் நிரந்தர சட்டமொன்று கொண்டுவரப்படாத வரை போராட்டத்தைக் கைவிட முடியாது என்று மாணவர்கள்  மறுத்து நின்றதால் ஏற்பட்ட முறுகல் நிலை இறுதியில் வன்முறைக்கு வழிவகுத்தது துரதிர்ஷ்ட வசமானதே. மிருகவதை தடுப்பு தொடர்பான மத்திய சட்டத்துக்கு திருத்தமொன்றைக் கொண்டு வந்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படுகின்ற சட்டமே மாநிலத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குகின்ற நிரந்தரமான ஏற்பாடு என்பதை மாணவர்களுக்கு முன்கூட்டியே புரிய வைத்து தமிழக அரசாங்கம் விவேகமானதும் நிதானமானதுமான வழிமுறைகளைக் கடைப்பிடித்திருந்தால் முழு உலகுமே வியந்து நோக்கிக் கொண்டிருந்த ஒருவாரகால அமைதிவழிப் போராட்டம் இறுதியில் பொலிஸாரின் அடக்குமுறையின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட களங்கம் ஏற்படுவதைத் தவிர்த்திருக்க முடியும்.

அதேவேளை, தமிழகம் இதுவரை கண்டிராத போராட்டத்துக்கு மத்தியில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டம் போராட்டத்தின் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே நீதிமன்றத்தில் சவாலை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இச்சட்டத்தை எதிர்த்து புதுடில்லி உச்சநீதிமன்றத்தில் இந்திய விலங்குகள் நல சபையும் மிருக நலன்களுக்காக பாடுபடுகின்ற பல அமைப்புகளும் மனுதாக்கல்  செய்திருக்கின்றன. நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்படவிருக்கின்றன. உச்சநீதிமன்றம் எத்தகைய நிலைப்பாட்டை  எடுக்கும் என்பதிலேயே தமிழக சட்டத்தின் கதி தங்கியிருக்கிறது.

ஹிந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து 52 வருடங்கள் கடந்த நிலையில் மாணவர்களின் இந்த பிரமாண்டமான அமைதிவழிப் போராட்டம் நடந்திருக்கிறது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் 1965 ஜனவரி 25 ஆம் திகதியே தொடங்கியது. அதில் பல தமிழர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள். அதனால் வருடாந்தம் ஜனவரி 25 மொழிப் போர் தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் இன்றைய மாணவர்களின் போராட்டத்தையும் ஒப்பிட்டு அல்லது இவற்றுக்கிடையில் அடையாளம் காணப்படக்கூடியதாக இருக்கின்ற வேறுபாடுகளை சுட்டிக்காட்டி தமிழக செய்திப் பத்திரிகைகளில் பெருமளவு கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அந்தக்காலத்தில் பங்கேற்று இன்னமும் வாழ்ந்து  கொண்டிருக்கும் முக்கியஸ்தர்களிடம் மாணவர்களின் போராட்டம் குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் அரசியல் ஆய்வாளர்களில் ஒருவர் இரு போராட்டங்களையும் ஒப்பிட்டு கருத்துக்கூறுகையில், ‘1965 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் முன்கூட்டியே காலூன்றிய அரசியல் வியூகத்தின் படிப்படியான வெளிப்பாடு. ஆனால், 2017 மாணவர் போராட்டம் இதுவரை தெளிவாகப் புலப்படாத ஒரு அரசியல் வியூகத்தின் திடீர் வெளிப்பாடு’ என்று வர்ணித்திருக்கிறார்.

jallikkattu 3

கடந்த வாரத்தைய மாணவர்கள் எழுச்சியை தனியே ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு எதிரானதாக மாத்திரம் பார்க்க முடியாது என்பதே அக உணர்வுச் சார்பின்றி நிலைவரங்களை நோக்குகின்ற பெரும்பாலான அவதானிகளின் அபிப்பிராயமாக இருக்கின்றது. ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற தனிக்கோரிக்கையுடன் தொடங்கிய போராட்டம் அதற்கு அப்பால், தமிழகத்தினதும் தமிழர்களினதும் நலன்களுக்காக குரல் கொடுக்கின்ற பொது அடையாளப் போராட்டமாக மாறுகின்ற முனைப்பை வெளிப்படுத்தியது. அரசியல் வாதிகளை சம்பந்தப்படுத்தாமல் ஒரு அரசியலை முன்னெடுக்க தன்னெழுச்சியாக மாணவர்கள் திரண்டமை அரசியல்வாதிகள் மீதான வெறுப்பின் தெளிவான வெளிப்பாடாகும். ஒவ்வொரு மாணவருக்கும் இளைஞருக்கும் ஒரு அரசியல் இருக்கவே செய்யும். ஆனால், பொதுக்கோரிக்கை ஒன்றை வென்றெடுக்க, கட்சி அரசியல் மாச்சரியங்களை புறந்தள்ளுவதான அணுகுமுறையைக் கையாள்கின்ற சிந்தனை மாணவர்களுக்கு வந்தது பெரிதும் ஆரோக்கியமானதொன்றேயாகும். மாணவர்களை சகல அரசியல் கட்சிகளுமே ஆதரித்து நின்றன என்றால் அதன் அர்த்தம், தங்களது கட்சி அரசியலை அந்த மாணவர்கள் மத்தியில் செய்ய முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்  என்பதேயாகும். திராவிட இயக்கக் கட்சிகளினதும் தலைவர்களினதும் அடுக்கு வசனங்களினாலும் சொற்சிலம்பங்களினாலும்  ஆக்கிரக்கப்பட்டிருக்கும் தமிழக அரசியலில் புதியதொரு வெகுஜன அமைதி வழிப் போராட்டக் கலாசாரத்தின் பிரவேசத்துக்கு மாணவர்களின் கடந்த வாரத்தைய போராட்டம் முன்னறிவிப்புச் செய்கின்றதா? இலங்கையில் தமிழர்களின் உரிமைப்  போராட்டத்திற்கு நேர்ந்த கதியால் தமிழகத்தின் இன்றைய இளஞ்சந்ததியினருக்கு ஏற்படக்கூடிய மனவேதனையும் கூட ஜல்லிக்கட்டு எழுச்சியின் முகமாக வடிகால் தேடிக்கொண்டதாகவும் அபிப்பிராயங்கள் வெளியிடப்படுகின்றன.-

இந்தப் போராட்டத்தை அவரவர் தங்களது அரசியலோடும் கருத்து நிலையோடும் பொருத்திப் பார்த்தே விமர்சனங்களை செய்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழக இளைய சமுதாயம் ஆட்சி நிறுவனக் கட்டமைப்பு மீதும் அரசியல் வர்க்கம் மீதும் கடுமையான விரக்தியில் இருக்கிறது என்பது வெளிப்படையானது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் சுகவீனம் காரணமாக பலம்பொருந்திய ஆளுமைகள் இல்லாததாக இருக்கும் திராவிட இயக்க அரசியல் களத்தில் எத்தகைய தாக்கத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உட்கிடையான ஆற்றலை இந்த மாணவர்கள் போராட்டம் கொண்டிருக்கிறது என்பது முக்கியமானதொரு கேள்வி.

சமூக வலைத்தளங்கள் போன்ற தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மக்கள் அணி திரட்டல்களுக்கு செய்துவருகின்ற மகத்தான பங்களிப்புக்கு மாணவர் போராட்டமும் ஒரு பிரகாசமான உதாரணம் என்று சொல்லப்படுகின்ற அதேவேளை, தகவல்தொழிநுட்பம் என்ற ஆயுதத்தை மக்கள் கைகளில் எடுத்துவிட்ட காரணத்தால், ஆளும் வர்க்கங்கள் அவற்றுக்கெதிராக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை நெடுகவும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் என்று எதிர்ப்பார்த்தவாறு பெரிய ஒளி வெள்ளத்தினால் அம்பலப்படுத்த முடியாததாக இருந்த அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனத்தை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் கைகளில் இருந்த செல்போன்களின் வெளிச்சம் அம்பலப்படுத்தியதாக அதீத நம்பிக்கை கொண்டு மெத்தனமான பேச்சைக் கடைபிடிக்கக்கூடாது. மாணவர்களின் போராட்டம் தொடர்பில் தமிழக அரசாங்கமும் அதன் தலைவர்களும் உண்மையில் எத்தகைய மனோபாவத்தைக் கொண்டிருந்தார்கள் என்பதை இறுதிநாள் பொலிஸ் வன்முறைகள் உணர்த்தியிருக்கின்றன என்பதைக் கணிக்கத் தவறக் கூடாது.

இறுதியாக பொது அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்பி மக்களை அணி திரட்டுவதற்கு இனிமேல் உணர்ச்சி பூர்வமான அறைகூவல்களினால் இயலுமா என்ற கேள்வியும் ஜல்லிக்கட்டு போராட்டம் எழுப்பி நிற்கின்றது.

marina-jallikattu


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *