Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழர்கள் மீது சீனாவும் ஆர்வம் காட்டுகின்றதா ?

தமிழர்கள் மீது சீனாவும் ஆர்வம் காட்டுகின்றதா ?

– யதீந்திரா –

எந்தவொரு நாட்டினதும் உள் விவகாரங்களில் சீனா தலையீடு செய்வதில்லை. இதனையே சீனா தலையிடாக் கொள்கை என வரைவிலக்கணப்படுத்துகின்றது. சீனாவின் அபார பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு பூகோள அரசியல் நிபுனர்கள் பலர் பலவாறான அபிப்பிராயங்களை கூறிவருகின்றனர். சீனாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி நிச்சயம் அமெரிக்காவிற்கு சவாலாக அமையும் என்பதே ஒரு பொதுநிலை விவாதமாகும். இந்த அடிப்படையிலேயே அமெரிக்கா அண்மைக்காலமாக ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்திவருகின்றது. விடுதலைப் புலிகளுக்கும் மகிந்த அரசிற்குமான இறுதி யுத்த காலத்தில் சீனாவிற்கும் கொழும்பிற்குமான அரசியல் பிணைப்பு முன்னர் எப்போதுமில்லாதவாறு அதிகரித்தது. விடுதலைப் புலிகளை வீழ்த்தும் இறுதி யுத்தத்திற்கு பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை தாராளமாகவே சீனா வழங்கியிருந்தது. சீனா மட்டுமன்றி அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் இறுதி யுத்தத்திற்கு உதவியிருந்தன. இந்தியா தமிழ்நாட்டின் உணர்வுகளை முன்னிறுத்தி கனரக ஆயுதங்களை வழங்குவதை தவிர்த்துக்கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத பரிவர்த்தனையை முடக்குவதில் அமெரிக்க உளவுத்துறையின் உதவிகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவே குறிப்பிட்டிருக்கின்றார். அந்தளவிற்கு அமெரிக்கா, யுத்தத்தை முடிவுறுத்துவதற்காக பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தது. அதே போன்று இங்கிலாந்தின் அழுத்தங்களுக்கு கட்டுப்பட்டு ஜரோப்பிய ஒன்றியம் 2007இல் விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டு, தடைசெய்தது. இந்தத் தடையே, எவ்வழியிலும் விடுதலைப் புலிகளை அழிக்கலாமென்னும் உற்சாகத்தை ராஜபக்சேக்களுக்குள் தொற்றவைத்தது. புலிகளுக்கு எதிரான ராஜபக்சவின் வெற்றியில் மேற்படி தடைக்கு மிகவும் முக்கியமான பங்குண்டு. சீனா ஆயுத உதவிகளை வாரிவழங்கியிருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை முடக்குவதில் சீனாவினால் பெரியளவில் உதவ முடிந்திருக்கவில்லை. உதவவும் முடியாது. ஆனால் அமெரிக்க மற்றும் பிரித்தானிய கூட்டுதவி மிகவும் முக்கியமானது. ஆனால் இவ்வாறு மேற்குலகின் உதவியினால் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் வெற்றிபெற்ற ராஜபக்ச வெற்றிக் கனியை புசித்ததும் தன் முகத்தை தோலுரித்துக்காட்டிவிட்டார்.

ராஜபக்ச அரசியல் நிலைப்பாட்டில் ஒரு ஆசிய சார்பாளனாவார் அத்துடன் ஒப்பீட்டடிப்டையில் ஒரு மேற்கு எதிர்ப்பாளன். இது மேற்கும் அறியாததுமல்ல ஆனாலும் மேற்குலகு விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு கடும்போக்காளன் என்னும் வகையில் ராஜபக்சவை கையாண்டிருந்தது. இதனை பிறிதொரு வகையில் நோக்கினால் ராஜபக்ச மேற்கை கையாண்டார் மேற்கோ ராஜபச்வை கையாண்டது. ஆனால் யுத்த முடிவின் பின்னர் ராஜபக்சவை கையாளும் முயற்சியில் மேற்கு முற்றிலுமாக தோல்வியடைந்தது. மேற்கு தோல்வியடைந்து கொண்டிருந்த காலம்தான் சீனா இலங்கைக்குள் வென்றுகொண்டிருந்த காலம்.

இலங்கையின் மீதான மேற்குலகின் குறிப்பாக அமெரிக்காவின் பிடி இறுகிக்கொண்டு செல்ல மறுபுறத்தில் இலங்கையின் மீதான சீனாவின் பிடியும் இறுகிக் கொண்டுசென்றது. மேற்கு விலகிச் செல்லச்செல்ல சினாவோ மேலும்மேலும் தன் நெருக்கத்தை அதிகரித்துச் சென்றது. ஆனால் ஆட்சி மாற்றம் சீனாவின் கட்டற்ற செல்வாக்கின்மீதான கடிவாளமாகவே அமைந்தது. சீனாவை பொறுத்தவரையில் இது மிகவும் சிக்கலான ஒன்றாகவே நோக்கப்பட்டது. ராஜபக்சவினால் நிபந்தனையற்ற வகையில் முன்னெடுக்கப்பட்ட கெழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் மீது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த விடயமானது ஆட்சி மாற்றத்தின் பின்னாலிருந்த புவிசார் அரசியலின் தாக்கங்களை தெளிவாக எடுத்துக்காட்டியது.

இந்த இடத்தில்தான் கொழும்மை கையாள்வதில் இதுவரை சீனா கடைப்பிடித்துவந்த அனுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். ராஜபக்சவின் வீழ்ச்சி வரையில் சீனா தமிழர்களுடன் உத்தியோகபூர்வமாகவோ அல்லது உத்தியோகப்பற்றற்ற வகையிலோ எவ்வித தொடர்புகளையும் பேணியதில்லை. இதற்கு நான் ஏலவே குறிப்பிட்ட சீனாவின் வெளிவிவகாரக் கொள்கையே காரணமாகும். ஆனால் கடந்த வாரம் இலங்கைக்கான சீனத் தூதுவர் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து, வடக்கின் அபிவிருத்திக்கு தாம் உவத் தயாராக இருப்பதுடன், இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பிலும் பேசியிருப்பதானது சீனாவின் மரபுசார் அனுகுமுறைக்கு முற்றிலும் மாறான ஒன்றாகும். வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அண்மைக்காலமாக கொழும்புடன் மட்டுமன்றி புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளித்துவரும் மேற்குலகு குறிப்பாக, அமெரிக்க அனுகுமுறைகளையும் விமர்சித்துவருகின்ற சூழலில்தான் சீனத் தூதுவர் விக்கினேஸ்வரனை சந்தித்து பேசியிருக்கிறார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால் இந்தியா ஒன்றே இலங்கையின் முரண்பாடான அரசியலில் கரிசனைகொள்ளும் ஒரேயொரு நாடாக இருந்திருக்கிறது. அணமைக்காலமாக அமெரிக்காவும் ஒரு சிறிதளவான ஈடுபாட்டை காண்பித்துவருகின்றது ஆனால் சீனாவிற்கு அவ்வாறானதொரு வரலாறு ஒருபோதுமே இருந்ததில்லை. ஆனால் ஆட்சி மாற்றத்தின் மூலம் கிடைத்த அனுபவஙங்களை முன்னிறுத்தி இலங்கையின் முரண்பாடுகளிலும் சீனாவும் ஆர்வம் காட்ட முற்படுகின்றதா என்னும் கேள்வி எழுகிறது. ஒரு எழுச்சியடைந்துவரும் சக்தியென்னும் வகையில் தான் தன்னுடைய மரபுசார் கொள்கையையே தொடர்ந்தும் அடைகாத்துவருவதன் மூலம் புதிய சூழலுக்கேற்ப தன்னால் புதியவற்றை பிரசவிக்க முடியாதென்று சீனா கருதுகின்றதா?

இந்தியாவின் ஈடுபாட்டுக்கு சமதையான ஆர்வத்தை வடக்கின் மீதும் காண்பிப்பதன் மூலம் முரண்பட்ட தரப்புக்களுடனும் தொடர்புகளை பேண விரும்புகிறதா? ஏனெனில் ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றியதல் தமிழர்களின் வாக்கே தீர்மானகரமான பங்கை வகித்திருந்தது. இவ்வாறானதொரு சூழலில் எதிர்காலத்திலும் ஏற்படக் கூடிய ஜனநாயக ர்Pதியான மாற்றங்களில் தமிழர்களின் பங்கு முக்கியமான ஒன்றாகவே இருக்கும். இவ்வாறானதொரு சூழலில் தமிழர் தரப்பிலிருந்து முற்றிலுமாக விலகியிருப்பது தனது மூலோபாய நலன்களுக்கு உகந்த ஒன்றல்லவென்று சீனா கருதியிருக்க வேண்டும். இந்த பின்னணியில்தான் வடக்குடனும் ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்திக்கொள்வதில் சீனா தற்போது ஆர்வம் காட்டுகின்றது.

இலங்கையை பொறுத்தவரையில் மத்தியுடன் எல்லாவற்றிலும் இணங்கிப் போகாத ஒரேயொரு மக்கள் பிரிவாக தமிழ் மக்கள் மட்டுமே இருக்கின்றனர். அந்த வகையில் இலங்கையின் முரண்பாடான அரசியலின் மையப்புள்ளி தமிழ் மக்கள் மட்டுமே. தமிழ் மக்களை கையாளுவதன் மூலம் மட்டுமே இலங்கையின் முரண்பாடான அரசியலுக்குள் செல்வாக்குச் செலுத்த முடியும். விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் தோற்றம்பெற்ற தமிழரின் ஜனநாயக தலைமை ஒப்பீட்டடிப்படையில் அதீத மென்போக்கையும் மத்தியுடன் இணைந்துபோகும் அனுகுமுறையையுமே பின்பற்றிவருகின்றது ஆனால் அண்மைக்காலமாக அதற்கு மாறானதொரு போக்கையே வடக்கிலிருந்து விக்கினேஸ்வரன் காண்பித்துவருகின்றார்.

ஒரு வேளை எதிர்காலத்தில் ஒப்பீட்டடிப்படையில் உரிமைகளில் உடுப்புப்பிடியானதொரு மிதவாத தலைமையும் தோற்றம் பெறலாம். அது முரண்பாட்டு அரசியலை கூர்மைப்படுத்தலாம். வடக்கை பொறுத்தவரையில் விக்கினேஸ்வரன் மட்டுமல்ல நாளை பிறிதொருவர் முதல்வராக வரினும்கூட அவரால், அவ்வளவு சுலபாக உரிமைசார் அரசியல் கோரிக்கைகளை கைவிட்டுவிட்டு ஏனைய மாகாணங்களிலிருக்கும் முதலமைச்சர்கள் போல் இருக்க முடியாது. இந்த அரசியலை சீனா கருத்தில் கொள்வது போல் தெரிகிறது.

எனவே முரண்பாட்டு அரசியலின் மையமாக இருக்கும் வடக்கு மக்கள் மத்தியிலும் தங்களது தொடர்புகளை பேணிக்கொள்ள சீனா விரும்பலாம். இவ்வாறான முரண்பட்ட சர்வதேச சக்திகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் தமிழர் தரப்பிடமும் தெளிவானதொரு நிலைப்பாடு இருப்பது அவசியம். உண்மையில் கொழும்பு எவ்வாறு அனிசாராக் கொள்கையென்று கூறிக்கொண்டு ஒன்றுக்கொன்று முரண்பட்ட சர்வதேச சக்திகளை வெற்றிகரமாக கையாண்டுவருகின்றதோ அதனையொத்த அனுகுமுறையே தற்போது தமிழர்களுக்கும் தேவைப்படுகிறது. வடகிழக்கின் அபிவிருத்திக்கு சீனாவை தகுந்த முறையில் கையாள்வதன் மூலம் அவிருத்தியில் முன்னேற்றங்களை பெற முடியும். இதில் சீன- இந்திய- அமெரிக்க மூலோபாய முரண்பாடுகள் தொடர்பில் தமிழர் தரப்பு தங்களை குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை.


One thought on “தமிழர்கள் மீது சீனாவும் ஆர்வம் காட்டுகின்றதா ?

  1. H.V.VISWESWARAN

    கம்யூனிச நாடான சீனா எத்தனை காலம் கட்டுக்கோப்பாக இருக்க முடியும். சோவியத் போல சீனாவும் 20/25 ஆண்டுகளில் குலைந்து விடும்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *