Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் அரசியல் முன் நோக்கி நகருமா?

தமிழ் அரசியல் முன் நோக்கி நகருமா?

சி.அ. ஜோதிலிங்கம்

மைத்திரியின் இந்தியப்பயணம் மைத்திரி – ரணில் கூட்டுக்கு எதிர்பார்க்காத வெற்றியைக் கொடுத்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி விமான நிலையம் சென்று மைத்திரியை வரவேற்றிருக்கின்றார். மைத்திரியைச் சங்கடப்படுத்தக்கூடாது என்பதற்காக மோடி தமிழர் பிரச்சினை பற்றி மூச்சேவிடவில்லை. குறைந்த பட்சம் 13 ஆவது திருத்தத்தினை அமுல்படுத்துகள் என்று கூட கேட்கவில்லை. முன்னர் ஒரு சடங்கிற்காவது தமிழர் பிரச்சினை பேசப்படுவதுண்டு தற்போது அதுவும் இல்லை. அதுவும் சம்பந்தனும் கூடச்சென்ற நிலையில் பேசப்படாததுதான் மிகப்பெரிய சோகம்.

இருவிடயத்தில் மைத்திரி – ரணில் கூட்டின் இராஜதந்திரம் வெற்றியடைந்துள்ளது என்றே கூறவேண்டும்;. ஆட்சிமாற்றம் வந்தபின்னர் அரசாங்கம் தங்களுடைய பொம்மையாக வரும் என்றே மேற்குலகும் இந்தியாவும் எதிர்பார்த்தன. ஆரம்பத்தில் அது போன்ற ஒரு நிலையே தோற்றமளித்தது. சீனாவீற்கு வழங்கப்பட்ட கொழும்புத் துறைமுகப்பணிகள் நிறுத்தப்பட்டபோது இந்தத் தோற்றம் சற்று வெளிச்சமாகத் தெரிந்தது. இந்த வெளிச்சத்தை வைத்துக்கொண்டு இலங்கைத்தீவு எங்கள் வசம் என இந்தியாவும், மேற்குலகும், ஆட்டம் போட்டன. ஆனால் இவைகொஞ்சம் காலம் தான் நீடித்தது. உள்ளூர் காரணிகளும், சர்வதேச காரணிகளும் அழுத்தம் கொடுக்க அரசாங்கம் யதார்த்த நிலைக்கு வந்தது.

இலங்கையைப் பொறுத்தவரை யதார்த்த நிலையென்பது இலங்கைத்தீவினை மையமாக வைத்து ஆடுகளத்தில் விளையாடும் பிரதான போட்டியாளர்களிடமிருந்து சம தூரத்தில் விலகி நிற்பது தான். கறாராக கூறினால் இந்தியா – மேற்குலக கூட்டிற்கும் சீனாவிற்கும் சமதூரத்தில் விலக நிற்பது தான். இந்தச் சமதூரக் கோட்பாடு தான் ஆட்சியாளர்களை உள்அழுத்தங்களிலிருந்தும் வெளி அழுத்தங்களிலிருந்தும் மரபுரீதியாக காப்பாற்றி வந்தது. புவிசார் அரசியல் போட்டியாளர்கள் விளையாடும் ஆடுகளத்தில் இலங்கையும் கௌரவமாக விiளாயடுவதற்கான களத்தையும் பெற்றுக்கொடுத்தது.

இலங்கை அரசியல் வரலாற்றில் இந்த சமதூரக்கோட்பாட்டை பின்பற்றாத அரசியல் தலைவர்கள் தூக்கிவீசப்பட்டனர். இதற்கு இரண்டு பெரிய உதாரணங்கள் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும், மகிந்த ராஜபக்சவும்.

ஜே.ஆர். ஜெயவர்த்தனா புவிசார் அரசியலில் இந்தியாவின் நிலையை கணக்கெடுக்காது அமெரிக்காவின் பொம்மையாக மாற முற்பட்டார். இந்தியா தமிழ் விடுதலை இயக்கங்களை பயன்படுத்தி ஜே.ஆகுக்கு தலைவலியைக்கொடுத்தது. இறுதியில் 1987 ஆம் ஆண்டு யூலை 29 ஆம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் அவரது ஆட்டமெல்லாம் அடங்கிப் போனது. அதற்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினால் வலுவுடன் எழுந்து நிமிர்ந்து நிற்க இன்னமும் முடியவில்லை.

மகிந்தர் புவிசார் அரசியல் நிலையை கணக்கெடுக்காது சீனாவின் பொம்மையாக மாறமுற்பட்டார். இந்தியாவும் மேற்குலகும் சேர்ந்து அந்த போர் வெற்றி கதாநாயகனை முகம்குப்பற கவிழ்த்துவிட்டன. போர் வெற்றி கதாநாயகன் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவேயில்லை. போர் வெற்றி நிரந்தரமாக ராஜபக்ச வம்சம் ஆட்சியை தொடரவைக்கும் என நினைத்தவருக்கு புவிசார் அரசியல் என்ற இடி தலையில் வீழ்ந்தது.

மைத்திரியின் சமதூரக்கோட்பாடு ஒருகல்லில் பல மாங்காய்கள் என பல வெற்றிகளை மைத்திரி அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளது. அதில் முக்கியமானது முன்னரே கூறியது போல புவிசார் அரசியல் போட்டிக்கான ஆடுகளத்தில் கௌவரமாக விளையாடுவதற்கான இடத்தை அதற்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றமையாகும்.

மைத்திரி சீனாவிற்கு சென்றபோது அங்கும் அவருக்கு சிறந்த வரவேற்பு. இந்தியாவிற்கு சென்றபோது அங்கும் சிறந்த வரவேற்பு. பலத்த வெகுமதிகளுடன் அவர் நாடு திரும்பினார். சீனாவிற்கு சென்றபோது சீனா கேட்டதற்கெல்லாம் ஒப்புக்கொண்டார். துறைமுக ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டார். சீனா மகிழ்ச்சியின் உச்சத்தில் 1300 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியது.

சீனா நெருக்கடியில் இருக்கும் போதெல்லாம் உறவுக்கரம் நீட்டி அன்பளிப்புக்களை பெறுவது ஐக்கிய தேசியக் கட்சியிக்கு கைவந்த கலை. 1949 ஆம் ஆண்டு மக்கள் சீனா உருவானபோது இந்தியாவைத் தொடர்ந்து தானும் அதனை அங்கீகரித்து சீனாவை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க வைத்தது. அப்போதய சீனா வெளிவிவகார அமைச்சர் சூஎன்லாய் இந்த அங்கீகாரத்தை இhஜதந்திர உறவாக விஸ்தரியுங்கள் எனக் கேட்டபோது பிரித்தானியவை அதிகம் சங்கடப்படுத்கூடாது எனப் பின்வாங்கியது. இத்தனைக்கும் அன்றைய காலகட்டத்தில் இலங்கை வெளிவிவகார செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது பிரித்தானியாவுடன் கலந்தலோசிக்கவேண்டும் என எழுத்துமூல ஒப்பந்தம் ஒன்றும் இருந்தது. அதையெல்லாம் மீறியே இந்த உறவை வளர்த்தது.

sri-lankan-president-maithripala-sirisena_650x400_41463233825

1952 ஆம் ஆண்டு மேலும் ஒரு படி சென்று பிரித்தானியாவின் ஆலோசனையையும் புறக்கணித்து சீனாவுடன் அரிசி – றப்பர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இதில் இருவகை வெற்றி. அரிசியைக் குறைந்த விலையில் சீனாவிடமிருந்து வாங்கியது. றப்பரை அதிக விலையில் சீனாவிற்கு விற்றது. இன்று அதேபாணியில் மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம் சீனாவிடமிருந்து அன்பளிப்புக்களை அள்ளிக் குவிக்கின்றது.

இதில் இருவகை இராஜதந்திரம் இருக்கின்றது ஒன்று இலங்கைப் பெருந்தேசியவாதிகளின் எதிர்ப்புகளை கட்டுக்குள் வைத்திருப்பது. இரண்டாவது இந்தியாவை நோக்கித்தான் செல்வதை விட இந்தியாவை தன்னை நோக்கி வரவைப்பது. இந்தியாவை முதலில் திருப்திப்படுத்திவிட்டு சீனாவைத் திருப்திப்படுத்த முற்பட்டிருத்தால் இவை இரண்டிலும் வெற்றி பெற்றிருக்கமுடியாது. சிங்களப் பெருந்தேசியவாதம் அதற்கான இடத்தைக் கொடுத்திருக்காது. சிங்களப் பெருந் தேசியவாதம் எப்போதும் இந்திய மேற்குலக எதிர்ப்பு நிலையைக் கொண்டது. அதேவேளை சீனா ஆதரவு நிலையைக் கொண்டது. இதற்கு ஆழமான அரசியல் பொருளாதார, வரலாற்றுக் காரணங்கள் உள்ளன.

மைத்திரி அரசாங்கம் அகத்தே சிங்களப் பெருந்தேசியவாதிகளை திருப்திப்படுத்தவேண்டும். மறுபக்கத்தில் புறத்தே இந்தியாவையும் மேற்குலகையும் திருப்திப்படுத்தவேண்டும். இந்த இரண்டிற்கும் இடையே சமனிலையைப் பேணுவதில்தான் ஆட்சி நிலைப்பு தங்கியிருக்கின்றது. இதனால்தான் மைத்திரி அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மேற்குலக – இந்தியாச் சார்பு என்ற தோற்றநிலையைக் கொடுத்தாலும் விரைவிலேயே யதார்த்த நிலைக்கு வந்து சமதூரத்தில் நிற்க முனைகின்றது.

மைத்திரி அரசாங்கம் முதலில் சீனாவை திருப்தி செய்து சிங்களப் பெருந்தேசிய வாதிகளின் எதிர்ப்பை கட்டுக்குள் வைத்துக்கொண்டது. தற்போது இந்தியாவை திருப்திப்படுத்த முனைந்துள்ளது. சீனாவை திருப்திப்படுத்தியதனால் இந்தியாவே இலங்கையை நோக்கி வந்திருக்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி விமானநிலையம் வரை சென்று மைத்திரியை வரவேற்றிருக்கின்றார். மைத்திரி சங்கடப்படக்கூடிய எந்த விவகாரத்தையும் ;அவர் கிளப்பவில்லை. அவர் குறிப்பாக இனப்பிரச்சினை பற்றி வாயே திறக்கவில்லை. குறைந்தபட்சம் வடமாகாணசபைக்கு அதிகாரங்களைக் கொடு என்று கூடக் கேட்கவில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை இந்திய தொடர்பான இராஜதந்திரம் வெளிப்படையானது. இந்தியாவை வழிக்குக்கொண்டுவரவேண்டும் என்றால் ‘இந்தியாவின் எதிரிகளோடு உறவுகளை அதிகரி’ அதேவேளை ‘அந்த உறவு பொம்மைநிலைக்குச் செல்லாமலும் பார்த்துக்கொள்’ என்பதே அந்த ராஜதந்திரம். இலங்கையின் நலன்களைப் பேணக்கூடிய சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கை, சிறிமா – இந்திரா உடன்படிக்கை, கச்சதீவு உடன்படிக்கை என்பன இந்தவகை இராஜதந்திரத்தின் மூலமே மேற்கொள்ளப்பட்டன.

இலங்கை முழுமையாக சீனா, பாகீஸ்தான் பக்கம் சாயக்கூடாது என்பதே இதற்குக் காரணம். இதற்காக மலையக மக்களையும் தமிழக மக்களையும் விலையாகக் கொடுக்கவும் இந்தியா தயங்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை மலையக மக்கள், வடகிழக்கு தமிழ் மக்கள், தமிழக மக்கள் ஆகிய மூன்று மக்கள் கூட்டமும் தனது நலன்களுக்காக அவ்வப்போது பயன்படுத்தக்கூடிய கருவியாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதில் கவனமாக உள்ளது. இதற்கேற்ற வகையில் அவ்மக்கள்கூட்டம் சுயாதீன நிலையைப் பெற்றுவிடாது எப்போது பலவீன நிலையில் தன்னில் தங்கியிருக்கும் ஒரே கூட்டமாக இருக்கவேண்டும் என்பதிலும் கவனமாக உள்ளது. இதற்கு விதிவிலக்ககாக இருந்த ஒரேயொரு நபர்தான் பிரபாகரன். அவர் அதற்காகவே அழிக்கப்பட்டார். இத்தனைக்கும் புலிகள் இயக்கமும் இந்திய நலன்களுக்கு எதிரானது அல்ல. பிரபாகரனும் எதிரானவர் அல்லர். மாறாக இந்திய நலன்களுக்காக தமிழ் மக்களை விலையாகக் கொடுப்பதற்கே பிரபாகரன் எதிராக இருந்தார். புலிகள் இயக்கம் எதிராக இருந்தது. எந்தக் கட்டத்திலும் மற்றைய இயக்கங்களைப்போல பொம்மை நிலைக்கு புலிகள் செல்லவி;ல்லை.
புலிகள் இருக்கும்வரை இந்த புவிசார் அரசியல் போட்டிக்கான ஆடுகளத்தில் புலிகளும் ஒரு பங்காளியாக இருந்தனர். இதனால் தமிழ்மக்களின் நலன்களையும் கவனத்தில் எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் போட்டியாளர்களுக்கு இருந்தது. தங்களுடைய நலன்களுக்காக தமிழர்களை விற்கவும் முடியவில்லை. தற்போது ஆடுகளத்தில் தமிழ்மக்கள் இல்லை. இந்தியாவும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும் தமிழ்மக்களை ஆடுகளத்தில் இருந்து அகற்றிவிட்டு தமிழ்மக்களை பகடைக்காயாக வைத்து தாங்கள் ஆடுகின்றன. தங்களுடைய நலன்களுக்காக தமிழ்மக்களை விற்கின்றன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் எந்தவித சுயாதீனமும் இல்லை. அது எல்லாவற்றையும் இந்தியாவிடம் கொடுத்துவிட்டு வெறும் பார்வையாளர்களராக நி;ற்கின்றது. சுயாதீன சக்திகள் எதுவும் எழுந்துவிடமால் தடுக்கின்ற ஒரு காவல்காரனாகவும் நிற்கின்றது. மறுபக்கத்தில் தமிழ்த்தேசிய அரசியலை நீர்த்துப்போக வைப்பதற்காக இனக்க அரசியல் என்ற பெயரில் சரணகதி அரசியலையும் நடாத்துகின்;றது. எதிர்க்கட்சித் தலைமைப்பதவி தமிழ்மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்க வில்லை மாறாக தமிழ்த்தேசிய அரசியல் நீர்த்துப்போக செய்வதற்கே உதவுகின்றது. முழு இலங்கைக்கும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு தமிழ்மக்களின் நலன்களை ஒருபோதும் பாதுகாக்கமுடியாது.

சிறிலங்கா அரசு என்பது சிங்கள பௌத்த அரசே. எதிர்க்கட்சித் தலைவர் பதவியால் இந்த அரசுருவாக்கம் தொடர்பாக எதுவும் செய்யமுடியாது. ஒன்றில் சிங்கள பௌத்த அரசினை வலுப்படுத்துவதற்கு சேவைசெய்யவேண்டும் அல்லது மௌனமாக இருக்கவேண்டும். சம்மந்தன் மௌனத்தைக் கடைப்பிடிக்கின்றார். இந்த மௌனம் கூட ஒருவகையில் சேவைசெய்வதே. மறுபக்கத்தில் எதிர்க்கட்சி இல்லாததொரு அரசியலுக்கு சம்மந்தன் துணைபோயிருக்கின்றார். மகிந்த அணியிடம் எதிர்க்கட்சி தலைமைப்பதவி செல்லக்கூடாது என்பதற்காகவே சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் ஆக்கப்பட்டார். புதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு ஒன்றும் இருக்கக்கூடாது என்பதே இதற்கு பின்னால் இருந்த நோக்கம். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கப்பட்டதால் சிங்களத் தரப்பிடமிருந்தும் எதிர்ப்பு இல்லை. தமிழ்த் தரப்பிடம் இருந்தும் எதிர்ப்பு இல்லை. மைத்திரி அரசாங்கத்திற்கு இது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்.
தமிழ்த்தரப்பில் இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காகத்தான் தமிழ்; மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. வரலாற்றுக்கட்டாயம் காரணமாக சிவில் சமூகத்தையும் அரசியல் கட்சிகளையும் இணைத்த இயக்கமாக அது பரிணமித்தது. விக்கினேஸ்வரன் அதற்கு அரசியல் அதிகாரத்தை வழங்கினார். கஜேந்திரகுமார் கோட்பாட்டுப் பலத்தை வழங்கினார். சுரேஸ்பிறேமச்சந்திரனும், சித்தார்த்தனும் துணைநின்றனர். கூட்டமைப்பு தலைமை மட்டுமல்ல இந்திய மேற்குலக சக்திகளும் ஒரு கணம் ஆடிப்போயின. சுயாதீனச் சக்தியாக வளர்ந்து புவிசார் அரசியலில் பங்காளிகளாக மாறிவிடுவார்களோ என்ற அச்சம் அவற்றிற்கு ஏற்பட்டது. புதிய அரசியல் தீர்வு யோசனை உருவாக்க முயற்சிகளோடு அந்த அச்சம் உச்சத்திற்கு சென்றது. உடனடியாகவே அவை களத்தில் இறங்கின. விக்கினேஸ்வரனுக்கு அனைத்துப் பக்கத்தில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இன்னோர் பக்கத்தில் கூட்டமைப்பு சார்பு ஊடகம் விக்னேஸ்வரன் மீது அவதூறு மழை பொழிந்தது. வடமாகாணசபையின் சில உறுப்பினர்கள் விக்கினேஸ்வரனுக்கு எதிராக களமிறக்கப்பட்டனர். தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுயோசனை மேல்நிலைக்கு வரக்கூடாது என்பதற்காக வடமாகாண சபையும் தீர்வு யோசனையை சமர்ப்பிக்க முற்பட்டது,

இறுதியில் விக்னேஸ்வரன் பின்வாங்கினார். வடமாகாணசபையின் தீர்வுயோசனைகளால் தமிழ்மக்கள் பேரவையின் யோசனைகள் பின்னிலைக்குச் சென்றன. பேரவை ஏற்பட்டாளர்களின் பலவீனங்களும் தமிழ் மக்கள் பேரவையின் வளர்ச்சியை மட்டுப்படுத்தின. தமிழ்மக்கள் பேரவை ஆரம்ப்பிபதற்கு முன்னர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சிறு சிறு போராட்டங்களை நடத்தியது. தமிழ் சிவில் சமூம அமையம் தமிழ்த் தேசிய அரசியலுக்கு புலமை பின்பலம் கொடுக்க முற்பட்டது. இதன்மூலம் பிரக்ஞை பூர்வ அரசியல் சற்று சூடாக இருந்தது. இன்று அவையும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன.

விக்கினேஸ்வரன் களத்தை கொஞ்சம் சூடாக வைத்திருக்கின்றார். அவர் சுயாதீன தளத்தில் நின்று கொண்டு சூட்டினைக் கிளப்பியிருந்தால் அது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கும். ஆனால் கூட்டமைப்பின் தளத்தில் இருந்துகொண்டே அவர் சூட்டினைக் கிளப்புகின்றார். கூட்டமைப்பின் சாவி அவரிடம் இல்லாததினால் இது பெரிதாக நகரப்போவதில்லை. இந்தியாவிற்கு இது ஒரு தந்திரோபாய வெற்றிதான். இந்தியா உருவாக்கிய களத்திற்குள் தான் தற்போது விக்னேஸ்வரன் நிற்கின்றார்.

தமிழ் அரசியல் இந்த நச்சுவட்டத்தில் இருந்து வெளியேறி சுயாதீன நிலையை அடையாத வரை இது ஒருபோதும் முன்னோக்கி நகரப்போவதில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *