Search
Thursday 24 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தம்பி சுமந்திரன் உள்ளூர்த் தீர்ப்பை நம்பலாமோ?

தம்பி சுமந்திரன் உள்ளூர்த் தீர்ப்பை நம்பலாமோ?

எண்பத்தைந்து வயது முதியவர் ஒருவர் வாசிகசாலை ஒன்றில் பத்திரிகை பார்த்துவிட்டு ஒரு வெள்ளைத்  தாளில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். எழுதுகின்ற அதேநேரம் அவரின் முணுமுணுப்பும் மெல்லக் கேட்கிறது.

பத்திரிகை வாசித்துவிட்டு இப்பெரியவர் எதை எழுதுகிறார் என்று நினைத்து சரி, ஒருக்கால் பார்த்து விடலாம் என முடிவு செய்தேன். அந்த எழுத்து இப்படி இருந்தது.

தம்பி சுமந்திரனுக்கு வணக்கம். எனக்கு வயது எண்பத்தைந்து இனி நாங்கள் சருகுகள். இருந்தும் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். ஏற்புடையதாயின் ஏற்றுக்கொள்க.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை தொடர்பிலான விசாரணை முடிவில் குற்ற வாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள், நிரபராதிகள் ஆகக் கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இது தான் நடக்கும் என்று எனக்கு நன்கு தெரியும்.

எண்பது வயதும் எனது அனுபவமும் அப்படி ஒரு முடிவுக்கு என்னைக் கொண்டு வந்தது. ஆனாலும் ஓர் ஐயம்! எங்கட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூர் விசாரணையில் திருப்தியடைவது போல தெரிவி த்ததால சிலவேளை ரவிராஜ் படுகொலைக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கிடைத்து விடுமோ என்று திசை மாறினேன்.

ஆனால் நடந்தது நான் முன்பு நினைத்து போலத் தான். அதுமட்டுமல்ல, திருகோணமலையில் நடந்த படுகொலை தொடர்பிலும் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் விடுதலை பெற்றனர்.

இவைமட்டுமல்ல, இதற்கு முன்பும் ஏகப்பட்ட விடயங்கள் எனக்குத் தெரியும். அவற்றையெல்ல்லாம் எழு துவதற்கு என் வயது இடந்தரவில்லை.

அதேநேரம் நல்லாட்சி என்றாலும் என் பாதுகாப்புப் பற்றி நான் கவனம் எடுக்காவிட்டால் வேறு யார் தான் கவனம் எடுப்பார்கள்? ஆகையால் அவற்றை விட்டு விடுகிறேன்.

இது ஒருபுறமிருக்க, தம்பி சுமந்திரன்! மேலும் அறிவது, நடந்து முடிந்த வன்னிப் பெருயுத்தம் தொடர்பில என்ன மகன் நடக்குது?  சர்வதேச விசாரணை நடந்த முடிந்து விட்டது என்று தாங்கள் கூறியதாக பத் திரிகை மூலம் அறிந்தேன்.

நீங்கள் கூறியதை தம்பி மாவை வன்னிக்கூட்டம் ஒன்றில் வைத்து வழிமொழிந்தார்.

ஆனால் பலரும் சொல்கிறார்கள் சர்வதேச விசாரணை நடக்கவில்லை. சர்வதேச விசாரணைதான் தேவை என்று.

அட! காலன் அழைக்கின்ற நேரத்தில உமக்கேன் இந்த ஆய்வென்று தாங்கள் மனதுக்க நினைத்தாலும் பரவாயில்லை. என்ர இறுதிக் காலத்துக்குள் சர்வதேச விசாரணை நடந்து விட்டதா? அல்லது நடக்குமா? என்பதை அறிய வேண்டும் என்பதுதான் என் பெருவிருப்பம்.

சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றால் அந்த விசாரணை எங்கே? அதற்கு நடந்தது என்ன? அல்லது வன்னி பெருநில யுத்தத்தின் போது எங்களைப் பாதுகாக்காத பரம்பொருள் போல சர்வதேச விசாரணையும் அருவத் திருமேனியாய் விறகில் தீ போல்; பாலில் நெய் போல்; சங்கில ஒலி போல  உள்ளதோ? யாமறியேன்.

அது சரி, ரவிராஜ் படுகொலை விசாரணையின் தீர்ப்புக்குப் பின்னரும் உள்ளூர்த் தீர்ப்பு உத்தமம் என்று தாங்கள் கருதுகிறீர்களா? என்பதையும் அறிய ஆவல்.

ஏனென்றால் உள்நாட்டுத் தீர்ப்பில் நம்பிக்கை உண்டு என்பது போல  எங்கோ ஓரிடத்தில் தாங்கள் கூறி யதாக ஞாபகம். பின்னர் அண்மையில் கரவெட்டியில் நடந்த நிகழ்வொன்றில், இலங்கையின் நீதித்துறை மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதென்று தாங்கள் உரையாற்றியதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன்.

அட தம்பி! எப்பதான் நாங்கள் உண்மையை உண்மையாக அறியப் போகிறோம். உண்மை ஒன்றுதான். இந்த ஓர் உண்மைக்குள் உண்மைதான் இருக்கும். உண்மை பற்றிக்கூறும் மற்றவை அனைத்தும் பொய்யாகும்.

ஏதோ எங்கட சனங்கள் பாவம் மகன்! நம்பி புள்ளடி போட்டவையள். ஏதோ பாத்து நடவுங்கள். என்ர நண்பன் சம்பந்தரை நலன் விசாரித்ததாகவும் கூறவும்.

நன்றி : வலம்புரி 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *