Search
Thursday 26 April 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தவறை உணரத்தவறும் முன்னாள் ஜனா­தி­பதி

தவறை உணரத்தவறும்  முன்னாள் ஜனா­தி­பதி

வீரகத்தி  தனபாலசிங்கம்

முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷ புதிய வரு­டத்தை நாட்­டுக்கு நல­மார்ந்­த­தாக இருக்­காது என்று கூறிக்­கொண்டே வர­வேற்றார். ஆனால், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­னதும் தலை­மை­யி­லான தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தை இவ்­வ­ரு­டத்தில் நிச்­ச­ய­மாகக் கவிழ்க்கப் போவ­தாக அவர் நம்­பிக்­கை­யுடன் கூறி­யதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. அதன் அடிப்­ப­டையில் நோக்­கு­கையில் மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரு­வ­தற்­கான சாத்­தி­யத்தில் அவர் நம்­பிக்கை கொண்­டி­ருக்­கிறார் என்­பதால் அவ­ருக்கு இவ்­வ­ருடம் நல­மார்ந்­த­தாக இருக்­கு­மென்­று­தானே அர்த்­தப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது. புது­வ­ருடம் பிறப்­ப­தற்கு இரு தினங்கள் முன்­ன­தாக கொழும்பில் உள்ள வெளி­நாட்டு நிரு­பர்­களைச் சந்­தித்த அவர் விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனை தோற்­க­டிக்கப் போவ­தாக முன்னர் கூறி­யி­ருந்­ததைச் சுட்­டிக்­காட்டி, அதைச் சாதித்துக் காட்­டி­ய­தையும் நினை­வு­ப­டுத்தி, ‘அதே நம்­பிக்­கை­யு­ணர்­வுடன்’ மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரு­வது குறித்து பேசினார். தனது இரண்­டா­வது பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு இரு வரு­டங்கள் இருந்த நிலையில் 2015 ஜன­வ­ரியில் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்தி அதில் கண்ட தோல்­வியின் பாதிப்பில் இருந்து முன்னாள் ஜனா­தி­பதி இன்­னமும் விடு­பட முடி­யா­த­வ­ரா­கவே இருக்­கிறார் என்­பதை வெளி­நாட்டு நிரு­பர்­க­ளிடம் அவர் தெரி­வித்த கருத்­துகள் தெளி­வாக வெளிக்­காட்டி நிற்­கின்­றன. ஆனால், தனது தோல்­விக்கு வழி­வ­குத்த பிர­தான கார­ணிகள் பற்­றிய அவரின் விளக்­கப்­பாட்டில் இருக்­கக்­கூ­டிய பிசகே இது­வி­ட­யத்தில் முக்­கி­ய­மாகக் கவ­னிக்­கப்­பட வேண்­டிய அம்­ச­மாகும்.

இலங்­கையில் ஆட்­சி­மாற்றம் ஒன்றைக் கொண்டு வரு­வ­தற்­காக மேற்­கு­லக நாடுகள் மேற்­கொண்ட சதி முயற்­சியின் விளைவே தனது தோல்­வி­யென்றும் அந்த முயற்­சியில் இந்­தி­யாவும் இணைந்து செயற்­பட்­ட­தா­கவும் ராஜபக் ஷ கூறி­யி­ருக்­கிறார். ஆட்சி மாற்­றத்தைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு இந்­தியா எந்­த­வ­ழியில் உத­வி­யது என்று கேட்­கப்­பட்­ட­போது, அதைக் கண்­ட­றிய முயற்­சித்துக் கொண்­டி­ருப்­ப­தாக அவர் பதி­ல­ளித்தார். தன்னைப் பத­வியில் இருந்து அகற்­று­வ­தற்­காக அமெ­ரிக்கா சுமார் 65 கோடி டொலர்­களைச் செல­விட்­ட­தாக ஒரு கணக்கு விப­ரத்­தையும் ராஜபக் ஷ வெளி­யிட்டார்.

தனது ஆட்­சிக்கு எதி­ரான வெளி­நாட்டு குறிப்­பாக மேற்­கு­ல­கத்தின் சதி முயற்­சிகள் குறித்து அல்­லது 2015 ஜன­வரி ஜனா­தி­பதி தேர்­தலில் தனது தோல்­விக்கு அமெ­ரிக்­காவும் இந்­தி­யா­வுமே முக்­கி­ய­கா­ரணம் என்று ராஜபக் ஷ பேசி­யி­ருப்­பது இது முதற்­த­ட­வை­யல்ல. அவர் ஏற்­க­னவே பல தட­வைகள் அது­பற்றிக் குறிப்­பிட்டு வந்­தி­ருக்­கிறார்.

தனது தோல்­விக்கு முற்­றிலும் வெளிக் கார­ணி­களே பொறுப்பு என்ற குற்­றச்­சாட்டை இடை­ய­றாது முன்­வைத்துக் கொண்­டி­ருக்கும் அவர், உள்­நாட்டுக் கார­ணிகள் பற்றி கவ­னத்தைச் செலுத்­து­வதை தவிர்க்­கிறார். ஒரு நாட்டின் முக்­கி­ய­மான தேர்­தல்­க­ளிலே வெளிக்­கா­ர­ணிகள் செல்­வாக்குச் செலுத்­து­வது ஒன்றும் இன்­றைய உலகில் புது­மை­யான விடயம் அல்ல. ஆனால், உள்­நாட்டுக் கார­ணிகள் வச­தி­யாக அமை­யா­விட்டால் வெளிக்­கா­ர­ணிகள் அவற்றின் நோக்­கங்­களை எளிதில் சாதிக்­கக்­கூ­டி­ய­தாக சூழ்­நி­லைகள் அமையப் போவ­தில்லை.

இன்று ராஜபக் ஷ தலை­மையில் இயங்கும் ‘கூட்டு எதி­ர­ணிக்கு’ முழு­மை­யாக ஆத­ர­வாக இருக்கும் கொழும்பு ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்று’ இலங்­கையில் ஆட்­சி­மாற்­றத்தைச் செய்­வ­தற்கு அமெ­ரிக்கா 65 கோடி டொலர்­களைச் செல­விட்­ட­தாக அவர் தெரி­வித்த குற்­றச்­சாட்டு தொடர்பில் சில தினங்­க­ளுக்கு முன்னர் அதன் ஆசி­ரிய தலை­யங்­கத்தில் ஒரு­வித நகைச்­சுவை உணர்­வுடன் கருத்து வெளி­யிட்­டி­ருந்­தது.

‘ஏனைய நாடு­களின் உள்­வி­வ­கா­ரங்­களில் தலை­யீடு செய்து அமெ­ரிக்கா அப­கீர்த்­தியைச் சம்­பா­தித்­தி­ருக்­கி­றது. ஆட்சி மாற்­றங்­க­ளுக்குத் தூண்­டுதல் அளித்­ததன் மூல­மாக சில நாடு­களில் பெரும் குழப்­ப­நிலை உரு­வா­கவும் அமெ­ரிக்கா கார­ண­மா­யி­ருந்­தி­ருக்­கி­றது. சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் லிபி­யாவில் வன்­முறைக் கிளர்ச்­சியை அது வெளிப்­ப­டை­யாக ஆத­ரித்­தது. மேற்­கு­லக ஆத­ர­வு­ட­னான கிளர்ச்­சி­யா­ளர்­க­ளினால் கேணல் கடாபி கொடூ­ர­மான முறையில் கொலை செய்­யப்­பட்­ட­தையும் தயக்­க­மில்­லாமல் அமெ­ரிக்கா ஆத­ரித்­தது. தன்னைப் பத­வியில் இருந்து அகற்­றி­யதில் வாஷிங்­ட­னுக்குத் தொடர்பு இருக்­கி­ற­தென்று முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷவும் கூட குற்­றஞ்­சாட்­டி­யி­ருக்­கிறார். அமெ­ரிக்­கா­வுக்கு அடி­வ­ரு­டி­க­ளாக இருக்­கின்ற தனது அர­சியல் எதி­ரி­க­ளுக்கு சார்­பான முறையில் 2015 ஆம் ஆண்டில் ஆட்­சி­மாற்­ற­மொன்றைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­காக அமெ­ரிக்கா 65 கோடி டொலர்­களைச் செலவு செய்­வ­தாக அவர் குற்­றஞ்­சாட்­டி­ய­தாக ‘இந்து’ பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டி­ருக்­கி­றது.

22-Mahinda-Rajapakse-afp

‘அமெ­ரிக்க வரி­யி­றுப்­பா­ளர்­களின் பெரு­ம­ளவு பணத்தை ராஜபக் ஷ காப்­பாற்­றி­யி­ருக்­கிறார் என்றும் எவரும் வாதி­டலாம். எவ்­வாறு தெரி­யுமா? தனக்குத் தானே கெடு­தி­யாக நடந்து கொண்­டதன் மூல­மாக தன்னைப் பத­வியிலிருந்து அகற்றும் பணியை சிரமம் குறைந்­த­தாக்­கி­ய­தனால் இலங்­கையில் ஆட்­சி­மாற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்­கான அமெ­ரிக்கச் செலவை குறைக்க அவர் உத­வி­யி­ருக்­கிறார். அல்­லா­விட்டால், ஒபாமா நிரு­வாகம் அதன் இலக்கை அடை­வ­தற்­காக மேலும் கூடு­த­லா­ன­ளவு பணத்தைச் செல­விட வேண்­டி­யி­ருந்­தி­ருக்கும் அல்­லது ராஜபக் ஷ தனது பாதங்­களை நக்கிக் கொண்­டி­ருந்த அடா­வ­டித்­த­ன­மான பிர­கி­ரு­தி­களை கட்­டுப்­ப­டுத்தி, அர­சாங்­கத்­திற்குள் ஊழல் செய்­த­வர்­களைத் தண்­டிப்­பதில் கவனம் செலுத்­தி­யி­ருந்தால் மக்கள் அவரை அமோ­க­மாக ஆத­ரித்து தேர்­தலில் மீண்டும் வெற்றி பெறச் செய்­தி­ருக்­கக்­கூ­டிய பட்­சத்தில் அமெ­ரிக்கா செலவு செய்த டொலர்கள் எல்லாம் வீணாகிப் போயி­ருக்கும் என்றும் கூட வாதி­டலாம். ராஜபக் ஷ அர­சாங்கம் அதி­கா­ரத்தைத் துஷ்­பி­ர­யோகம் செய்­வ­திலும் ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­டு­வ­திலும் காட்­டிய வேகத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நோக்­கும்­போது அமெ­ரிக்கா சிறிது காலம் பொறுத்­தி­ருந்தால், அந்த அர­சாங்கம் தானா­கவே வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருக்கும் என்றும் கூறலாம்.” இதுவே அந்தப் பத்­தி­ரி­கையின் ஆசி­ரிய தலை­யங்­கத்தின் பகு­தி­யாகும்.

அதே­வேளை, தனது தேர்தல் தோல்­விக்கு வழி­வ­குத்த சதித்­திட்­டத்­துக்கு உத­வி­ய­தாக இந்­தி­யாவைக் குற்­றஞ்­சாட்டும் ராஜபக் ஷ, அதே இந்­தி­யாவே விடு­தலை புலி­க­ளு­ட­னான போரில் தனது அர­சாங்கம் வெற்­றி­பெற உத­வி­யது என்று முன்னர் அடிக்­கடி கூறி­வந்­தி­ருக்­கிறார். போரின் இறுதிக் கால கட்­டத்தில் இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ராக பதவி வகித்த சிவ்­சங்கர் மேனன் அண்­மையில் ‘தெரி­வுகள்; இந்­தி­யாவின் வெளி­யு­றவுக் கொள்கை உரு­வாக்­கலின் உட்­பக்கம்’ (Choices; Inside the making of India’s foreign policy) என்ற நூலை வெளி­யிட்­டி­ருக்­கிறார். அதில் ‘Force works’ என்ற தலைப்பில் நான்­கா­வது அத்­தி­யா­யத்தில் இலங்கை பற்­றிய தனது அபிப்­பி­ரா­யத்தை அவர் வெளி­யிட்­டி­ருக்­கிறார். போரின் முடி­வுக்குப் பின்­ன­ரான கால­கட்­டத்தில் ராஜபக் ஷ வின் அணு­கு­மு­றைகள் பற்றி பின்­வ­ரு­மாறு மேனன் குறிப்­பி­டு­கிறார்.

‘போரின் விளை­வான பெள­தீகக் காயங்கள் பெரு­ம­ள­வுக்கு இல்­லா­மல்­செய்­யப்­பட்டு விட்­டன. கம்­போ­டியா, ருவாண்டா அல்­லது அமெ­ரிக்கா போன்று குறு­கிய கால உள்­நாட்டுப் போர்­களைச் சந்­தித்த ஏனைய நாடு­களை விடவும் இலங்­கையில் புனர்­வாழ்வும் வழமை நிலையும் மிகவும் துரி­த­மாக நிலை நாட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆனால், சமா­தானம் என்­பது வன்­முறை இல்­லாத சூழ்­நி­லை­யையும் அடிப்­படை உட்­கட்­ட­மைப்பு வச­தி­களின் பிர­சன்­னத்­தையும் விட மேலா­னது. சமா­தானம் மன­திலும் இருக்­க­வேண்டும். போருக்குப் பிறகு இது­வி­ட­யத்தில் தான் இலங்கை தோல்வி கண்­டி­ருக்­கி­றது.

போரில் வெற்­றி­பெற்ற மகிந்த ராஜபக் ஷவின் கீழான அர­சாங்­கமும் சிங்­களப் பெரும்­பான்­மை­யி­னரும் வெற்­றியில் பெருந்­தன்­மையைக் காட்­ட­வில்லை. உண்­மை­யான சமா­தானம் அத்­த­கைய பெருந்­தன்­மை­யையே வேண்­டி­நிற்­கி­றது.

‘புனர் நிர்­மா­ணமும் நிவா­ர­ணமும் உட­னடி முன்­னு­ரி­மைக்­கு­ரி­ய­வை­யாக இருந்­தன என்றால், இலங்­கையில் தீவி­ர­வாதக் கிளர்ச்­சியும் பயங்­க­ர­வா­தமும் மீண்டும் தலை­யெ­டுக்­காமல் தடுப்­பதில் உள்ள நீண்­ட­கால நோக்­கி­லான நலன்கள் நல்­லி­ணக்­கத்­தையும் அர­சியல் விவே­கத்­தையும் வேண்டி நின்­றன. இதை ராஜபக் ஷவினால் செய்ய முடி­ய­வில்லை. சகல இலங்­கை­யர்­க­ளுக்­கு­மான தலை­வ­ராக இருக்க வேண்டும் என்­பது உண்­மை­யானால், ராஜபக் ஷ அர­சியல் அதி­காரப் பர­வ­லாக்­கத்தின் ஊடாக நேசக்­க­ரத்தை நீட்­ட­வேண்டும் என்றும் ஜன­நா­யக வழி முறை­களின் ஊடாக மனித உரி­மை­களை மீள நிலை நிறுத்தி தனது நாட்டில் வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்கும் தோல்வி கண்­ட­வர்­க­ளுக்கும் ஒரே­மா­தி­ரி­யான கெள­ரவ உணர்வை ஏற்­ப­டுத்த வேண்டும் என்றும் நாம் அவ­ரிடம் வலி­யு­றுத்திக் கேட்­டி­ருந்தோம்.

‘இந்­தியா முன்­னெ­டுத்த புனர் நிர்­மாணம் மற்றும் நிவா­ரணப் பணி­க­ளுக்கு அனு­ச­ர­ணை­யாகச் செயற்­பட்ட அதே­வேளை, அவர் போர் வெற்­றியில் அர­சியல் ரீதியில் பெருந்­தன்மை கொண்­ட­வ­ராக தன்னை மாற்றிக் கொள்ள முடி­ய­வில்லை. தான் சேர்ந்து பணி­யாற்றக் கூடி­ய­தாக தமிழ்த் தரப்பில் எவரும் இல்லை என்று எம்­மிடம் அவர் கூறினார். அது ஓள­ர­வுக்கு சரி­யா­னதே. போரில் உயிர்­தப்­பி­வாழும் தமிழ் அர­சியல் வாதிகள் குறிப்­பாக, தமிழ்த் தேசியக் ‘கூட்­ட­மைப்பில் உள்­ள­வர்கள் விடு­தலை புலி­க­ளுடன் உடந்­தை­யாக செயற்­பட்­ட­வர்­க­ளா­கவும் அல்­லது விடு­தலை புலி­க­ளுக்கும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூ­கத்தில் இருக்­கக்­கூ­டிய மிகவும் தீவி­ர­வாதப் போக்கைக் கொண்ட சக்­தி­க­ளுக்கு கட­மைப்­பட்­ட­வர்­க­ளா­கவும் இருந்­தனர். ஆனால், தமிழ் மித­வாத தலை­மைத்­து­வத்தை ஊக்­க­ம­ளித்து மேம்­ப­டுத்­து­வ­தற்கு ராஜபக் ஷ தன்­னி­ட­மி­ருந்த அளவு கடந்த அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­த­வில்லை. மண்­டே­லா­வுக்கு ஒரு டி கிளார்க் தேவை. டி கிளார்க்­கிற்கு ஒரு மண்­டேலா தேவை. இலங்­கையில் இரு­வ­ரை­யுமே காண முடி­ய­வில்லை. இரு­த­ரப்­பி­லுமே அர­சியல் வளர்ச்சி என்­பது குன்­றி­ய­தா­கவே இருக்­கி­றது. இவ்­விரு தரப்­பி­ன­ருமோ அல்­லது சர்­வ­தேச சமூ­கமோ கடந்த கால வாக்­கு­வா­தங்­களைக் கடந்து செல்ல இய­ல­வில்லை’.

அந்த ஆங்­கிலப் பத்­தி­ரி­கையின் ஆசி­ரிய தலை­யங்­கத்­தையும் மேனனின் கருத்­துக்­க­ளையும் இங்கு மேற்கோள் காட்­டு­வ­தற்­கான கார­ணத்தைச் சொல்லிப் புரிய வைக்க வேண்­டி­ய­தில்லை. அது தானா­கவே விளங்கும் தன்­மை­யா­ன­தாகும்.

ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் ஒரு புறத்தில் முன்­னொ­ரு­போ­து­மில்­லாத வகை­யி­லான ஊழல் மோச­டி­களும் அதி­கார துஷ்­பி­ர­யோ­கமும் சட்­டத்தின் ஆட்­சியின் சீர்­கு­லைவும் குடும்ப அர­சியல் ஆதிக்­கமும் தலை­வி­ரித்­தா­டிய அதே­வேளை, மறு­பு­றத்தில் இனக்­கு­ழுமப் பெரும்­பான்மை வாதம் (Ethnic majoritarianism) கடு­மை­யாகத் தீவி­ர­ம­டைந்­தி­ருந்­தது.

சிறு­பான்மைத் தேசிய இனங்­களின் நியா­ய­பூர்­வ­மான அர­சியல் அபி­லா­சை­களில் குறைந்­த­பட்­ட­ச­மா­ன­வற்றைக் கூட ஏற்­றுக்­கொள்ளத் தயா­ரில்­லாத அள­வுக்கு தென்­னி­லங்கை அர­சியல் சமு­தா­யத்தில் இன­வாதப் போக்­குகள் வளர்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தன. அந்தப் போக்­கு­களை மேலும் ஊக்­கு­விக்கும் வகை­யி­லா­ன­வை­யா­கவே அர­சாங்­கத்தின் கொள்­கை­களும் செயற்­பா­டு­களும் அமைந்­தி­ருந்­தன.

போர் வெற்றி கார­ண­மா­கவே ராஜபக் ஷ சிங்­கள மக்கள் மத்­தியில் பெருஞ்­செல்­வாக்குக் கொண்­ட­வ­ராக விளங்­கு­கிறார். அதே கார­ணத்­துக்­கா­கவே அவர் தமிழ் மக்­க­ளினால் வெறுக்­கப்­ப­டு­ப­வ­ராக இருக்­கிறார். போர் வெற்றிக் குதூ­க­லத்தில் சிங்­கள மக்­களை மிதக்­க­விட்டு அர­சியல் அனு­கூ­ல­ம­டை­வ­தற்கு முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற்­பா­டு­களின் விளை­வாக அந்த மக்கள் மத்­தியில் இரா­ணு­வ­வாத அர­சியல் உணர்­வுகள் மேலோங்கிக் காணப்­பட்­டன.

இலங்கைச் சமு­தாயம் இன்று பெரு­ம­ள­வுக்கு இரா­ணு­வ­ம­யப்­பட்­ட­தாக இருப்­ப­தற்கு ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் அணு­கு­மு­றை­களும் செயற்­பா­டு­க­ளுமே கூடு­த­லான பங்­க­ளிப்பைச் செய்­தி­ருந்­தன.

 2010 ஜன­வரி ஜனா­தி­பதி தேர்­தலில் ராஜபக் ஷவுக்கு எதி­ராக கள­மி­றக்­கு­வ­தற்கு அவ­ருடன் முரண்­பட்டுக் கொண்ட முன்னாள் இரா­ணுவ தள­ப­தியை தெரிவு செய்ய வேண்­டி­ய­ள­வுக்கு எதி­ர­ணிக்கு ஏற்­பட்ட நிர்­பந்தம் இந்த இரா­ணு­வ­மய அர­சி­யலின் இலட்­ச­ணத்தை தெளி­வாக வெளிக்­காட்டி நின்­றது.

போருக்கு அர­சியல் தலை­மைத்­து­வத்தை வழங்­கிய ராஜபக் ஷவுக்கும் இரா­ணு­வத்தை வழி­ந­டத்­திய தள­பதி சரத் பொன்­சே­கா­வுக்கும் இடை­யி­லான தேர்தல் போட்டி என்று வந்த போது தமிழ் மக்கள் பொன்­சே­கா­வையே ஆத­ரித்­தார்கள். தங்­களை அர­சியல் ரீதியில் வீரி­ய­மற்ற ஒரு சமு­தா­ய­மாக மாற்­றி­யவர் ராஜபக் ஷவே என்ற கவலை தமிழ் மக்கள் மனதில் ஆழப் பதிந்­தி­ருந்­தது. அதனால், அவர்கள் ஏழு­மா­தங்­க­ளுக்கு முன்­ன­தாக முடி­வ­டைந்த போரில் இரா­ணு­வத்­துக்குத் தலைமை தாங்­கி­ய­வ­ருக்கு வாக்­க­ளிப்­ப­தற்கு ‘கூட அசௌக­ரி­யப்­ப­ட­வில்லை. இதை தமிழ் மக்­களை வர­லாறு வஞ்­சித்த இன்­னொரு சந்­தர்ப்பம் என்று அந்த நேரத்தில் சில அர­சியல் அவ­தா­னிகள் குறிப்­பிட்­டனர் என்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

போரின் முடி­வுக்குப் பின்னர் மாத்­தி­ர­மல்ல அதற்கு முன்­னரும் கூட, தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் இணக்கத் தீர்­வொன்றைக் காண்­ப­தற்கு முயற்­சி­களை முன்­னெ­டுப்­ப­தாக சர்­வ­தேச சமூ­கத்­துக்கு உறு­தி­ய­ளித்த ராஜபக் ஷ அர­சாங்கம் அதில் ஒரு போதுமே கவ­னத்தைச் செலுத்­த­வில்லை. தமிழ்ப் பகு­தி­களை இரா­ணுவ முற்­று­கைக்குள் தொடர்ந்தும் வைத்­தி­ருக்கும் நட­வ­டிக்­கை­க­ளையே அர­சாங்கம் முன்­னெ­டுத்­ததைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

ராஜபக் ஷ ஆட்சிக் காலத்தின் இறுதிக் கட்­டங்­களில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக சிங்­கள கடும்­போக்கு தேசி­ய­வாத சக்­தி­க­ளினால் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட இன, மத வெறிப்­பி­ர­சா­ரங்­களும் வன்­முறை நட­வ­டிக்­கை­களும் முஸ்­லிம்கள் மத்­தியில் அர­சாங்­கத்­துக்கு இருந்த ஆத­ர­வையும் இல்­லாமல் செய்­தது. தமி­ழர்கள், முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மல்ல, தென்­னி­லங்­கையில் உள்ள சிங்­கள கிறிஸ்­த­வர்கள் மத்­தி­யிலும் ராஜபக் ஷ மீதான வெறுப்­பு­ணர்வு வளர்ந்­தி­ருந்­தது. அத்­த­கை­ய­தொரு பின்புலத்திலேயே 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தல் வந்தது. சகல சிறுபான்மையினத்தவர்களும் அன்றைய எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவையே ஆதரித்தார்கள். அவரின் வெற்றிக்கு சிறுபான்மைச் சமூகங்களின் அமோகமான ஆதரவே முக்கிய காரணியாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. அதன் காரணத்தினால்தான் சிங்கள மக்கள் மத்தியில் தான் தோல்வி காணவில்லை என்ற நம்பிக்கையை ராஜபக் ஷ வளர்த்துக் கொண்டார். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவரின் தற்போதைய அரசியல் தந்திரோபாயங்களும் முன்னெடுப்புகளும் அமைந்திருக்கின்றன.

சிறுபான்மைச் சமூகங்கள் சகலவற்றிடமிருந்தும் முற்றுமுழுதாகத் தனிமைப்பட்டுப் போனமை தனது தோல்விக்கான பிரதான காரணிகளில் ஒன்று என்பதை ராஜபக் ஷ புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அமெரிக்காவையும் இந்தியாவையும் குற்றஞ்சாட்டிக் கொண்டேயிருக்கிறார். சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு தற்போது ராஜபக் ஷவுக்கு முன்னால் ஒரு வாய்ப்பு விரிந்துகிடக்கிறது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்து தேசியப இனப் பிரச்சினைக்கு பயனுறுதியுடைய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு ஆரோக்கியமான பங்களிப்பைச் செய்வதற்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி அந்த செயற்பாடுகள் எதுவிதத்திலும் முன்னேற்றம் கண்டுவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்து வருகிறார் . அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் தொடர்பில் தென்னிலங்கை மக்களைத் தவறாக வழிநடத்துகின்ற அரசியல் சக்திகள் தங்களுக்கு ஒரு ஆதர்சமாக ராஜபக் ஷவை நோக்குகின்றன என்பதில் சந்தேகமில்லை.

அவர் உண்மையான தவறுகளை உணர்ந்து தன்னை மாற்றிக் கொள்ளத் தவறுகிறார்.

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *