Search
Saturday 23 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திரி­சங்கு நிலையில் தமி­ழர்கள்

திரி­சங்கு நிலையில் தமி­ழர்கள்

வீரகத்தி தனபாலசிங்கம் 

ஜெனீ­வாவில் 10 தினங்­க­ளுக்கு முன்னர் முடி­வ­டைந்த ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 34ஆவது கூட்டத் தொடரில் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் 2015 அக்­டோபர் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்­கைக்கு இரு­வ­ருட கால அவ­கா­சத்தை வழங்­கி­யி­ருப்­ப­தை­ய­டுத்து எதிர்­வரும் நாட்­களில் அர­சாங்கம் இது தொடர்பில் எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை எடுக்கும் அல்­லது எடுக்­கக்­கூ­டி­ய­தாக இருக்கும் என்­பதே அர­சியல் மற்றும் இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்­களின் முக்­கிய அவ­தா­னிப்­புக்­கு­ரிய விட­ய­மாக இருக்­கி­றது. முன்­னைய தட­வையைப் போன்றே இத்­த­ட­வையும் அமெ­ரிக்கா தலை­மையில் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ச­ர­ணையை வழங்­கிய அர­சாங்கம் மனித உரி­மைகள் பேர­வையின் உறுப்பு நாடு­களின் முழு­மை­யான ஆத­ர­வுடன் கால அவ­கா­சத்தை பெறக்­கூ­டி­ய­தாக இருந்­ததை பெரி­ய­தொரு இரா­ஜ­தந்­திர வெற்­றி­யென்று பெரு­மைப்­ப­டு­கி­றது. அதே­வேளை, தென்­னி­லங்கை எதி­ர­ணி­யினர் குறிப்­பாக, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான. அர­சியல் சக்­திகள் 2015 அக்­டோபர் தீர்­மா­னத்தில் மாற்­றங்­களைச் செய்­வ­தற்கு முயற்­சிக்­காமல் அதே தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு கால அவ­கா­சத்தை வழங்கும் புதிய தீர்­மா­னத்­துக்கும் இணை அனு­ச­ர­ணையை வழங்­கி­யதன் மூல­மாக அர­சாங்கம் மேற்­கு­லக நாடு­களின் பொறியில் சிக்­கி­விட்­ட­தாக விமர்­சனம் செய்­வதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. மறு­பு­றத்தில், இலங்கைத் தமி­ழர்­களின் பிர­தான அர­சியல் பிர­தி­நி­தி­க­ளாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 2017 மார்ச் தீர்­மா­னத்தை வர­வேற்று அறிக்கை வெளி­யிட்­டி­ருந்த போதிலும் கடந்த 18 மாதங்­க­ளாக ஜெனீவா தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு உருப்­ப­டி­யான எந்தக் காரி­யத்­தையும் முன்­னெ­டுக்­காத அர­சாங்­கத்­துக்கு மேலும் இரு­வ­ருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டி­ருப்­பது குறித்து பொதுவில் தமி­ழர்கள் மத்­தியில் ஏமாற்­றமும் கடு­மை­யான விச­ன­முமே காணப்­ப­டு­கி­றது.

2015 அக்­டோபர் தீர்­மா­னத்தின் பிர­காரம் அமைப்­ப­தாக அர­சாங்கம் உறு­தி­ய­ளித்த நான்கு நல்­லி­ணக்கப் பொறி­மு­றை­களில் எந்­த­வொன்­றுமே செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அவற்றில் ஒன்­றான காணாமல் போனோர் விவ­கார அலு­வ­ல­கத்­துக்கு பாரா­ளு­மன்றம் அங்­கீ­காரம் அளித்­து­விட்­ட­போ­திலும் இன்­னமும் அது வெறு­மனே ஒரு சட்­ட­மாக காகி­தத்­தி­லேயே இருக்­கி­றது. அந்தச் சட்­டத்­துக்கு மேலும் திருத்­தங்­களைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் குறித்து அர­சாங்கம் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றது.

UNHRC Sri Lanka

நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரங்­களைப் பொறுத்­த­வரை மிகவும் முக்­கி­ய­மா­னது உள்­நாட்­டுப்­போரின் இறு­திக்­கட்­டங்­களில் இடம்­பெற்­றி­ருக்­கக்­கூ­டிய மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க்­குற்­றங்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரணை செய்­வ­தற்கு அமைக்­கப்­ப­ட­வேண்­டிய நீதி விசா­ரணைப் பொறி­மு­றை­யே­யாகும். வெளி­நாட்டு நீதி­ப­திகள், வழக்குத் தொடு­நர்கள் மற்றும் விசா­ர­ணை­யா­ளர்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக கலப்பு முறை­யி­லான (Hybrid Court) நீதி­மன்றம் அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்று ஜெனீவா தீர்­மா­னத்தில் கூறப்­பட்ட போதிலும், அதற்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­ய­தையும்   பொருட்­ப­டுத்­தாமல் அர­சாங்கம் உள்­நாட்டு நீதி விசா­ரணைப் பொறி­மு­றையைப்­பற்­றியே தொடர்ச்­சி­யாகப் பேசிக்­கொண்டு வந்­தி­ருக்­கி­றது.

வெளி­நாட்டு நீதி­ப­தி­களை ஒரு­போதும் அனு­ம­திக்கப் போவ­தில்லை என்ற அர­சாங்­கத்தின் உறு­தி­யான நிலைப்­பாட்­டுக்கு மத்­தி­யிலும் கடந்த மாத ஜெனீவா கூட்டத் தொட­ரிலும் கூட ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் இள­வ­ரசர் செய்த் ராட் அல் – ஹுசெய்ன் கலப்பு முறை­யி­லான நீதி­மன்­றத்தின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தத் தவ­ற­வில்லை. இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்கும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்தில் இறு­தி­யாக நிகழ்த்­திய உரையில் இள­வ­ரசர் ஹுசெய்ன் கலப்பு முறை­யி­லான நீதி விசா­ரணைப் பொறி­மு­றையின் தேவையை நாம் தொடர்ந்து வலி­யு­றுத்திக் கொண்­டே­யி­ருப்போம் என்று குறிப்­பிட்­டதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஆனால், கூட்டத் தொடரின் இறு­திக்­கட்­டத்தில் இலங்கைத் தூதுக்­கு­ழு­வுக்கு தலைமை தாங்­கிய பிரதி வெளி­யு­றவு அமைச்சர் கலா­நிதி ஹர்ஷா டி சில்வா சர்­வ­தேச உத­வி­யு­டனும் ஆத­ர­வு­டனும் கூடிய உள்­நாட்டு பொறி­மு­றை­யொன்றை அமைப்­ப­தி­லேயே தாங்கள் நாட்டம் கொண்­டி­ருப்­ப­தாகத் தெரி­வித்தார். கடந்த வாரம் கொழும்பில் செய்­தி­யாளர் மாநாட்டில் உரை­யாற்­றிய வெளி­யு­றவு அமைச்சர் மங்­கள சம­ர­வீர 2017 ஜெனீவா தீர்­மானம் தொடர்­பி­லான இறுதி முடி­வுகள் சுயா­தி­பத்­தியம் கொண்ட அரசு என்ற வகையில் இலங்­கையைப் பொறுத்­த­வையே என்று குறிப்­பிட்­டி­ருந்­ததும் கவ­னிக்­கத்­தக்­கது. உண்மை ஆணைக்­கு­ழுவின் (Truth  seeking commission) வடிவம் குறித்து பல்­வேறு நிபு­ணர்­க­ளுடன் அர­சாங்கம் கலந்­தா­லோ­சனை நடத்தி வரு­வ­தா­கவும் அடுத்த ஒரு சில மாதங்­களில் உண்மை ஆணைக்­கு­ழு­வுக்கு அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வது தங்­க­ளது முன்­னு­ரி­மைக்­கு­ரிய விவ­கா­ரங்­களில் ஒன்று என்றும் சம­ர­வீர கூறி­யி­ருந்தார்.

Wijedasa Rajapaksa

ஜெனீவா கூட்­டத்­தொடர் முடி­வ­டைந்த கையோடு அர­சாங்கத் தரப்பில் இருந்து இத்­த­கைய கருத்­துகள் வந்­தாலும் உள்­நாட்டில் ஏற்­ப­டக்­கூ­டிய அர­சியல் நில­வர மாற்­றங்­களைப் பொறுத்தே ஜெனீவா தீர்­மானம் தொடர்­பி­லான நட­வ­டிக்­கைகள் அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை. தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டிய நட­வ­டிக்­கை­களின் முன்­னேற்­றத்தை அவ­தா­னித்து மனித உரி­மைகள் பேர­வையின் 37ஆவது கூட்டத் தொடரில் (2018 மார்ச்) ஒரு எழுத்­து­மூல அறிக்­கை­யையும் 40ஆவது கூட்டத் தொடரில் (2019 மார்ச்) விரி­வான அறிக்­கை­யொன்­றையும் ஐ.நா.மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­லகம் சமர்ப்­பிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. இதுவே இலங்­கையின் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரங்­க­ளுடன் தொடர்­பு­டைய ஜெனீவா செயன்­மு­றை­களின் இறு­தி­யான நில­வ­ர­மாகும்.  இது இவ்­வா­றி­ருக்க, ஜெனீ­வாவில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட அதே­தினம் பாரா­ளு­மன்­றத்தில் நீதி­ய­மைச்சர் விஜே­­தாச ராஜபக் ஷ நிகழ்த்­திய உரையில் இந்த விவ­கா­ரங்கள் குறித்து தெரி­வித்த கருத்­துக்கள் ஊன்றிக் கவ­னிக்­கப்­பட வேண்­டி­ய­வை­யாக இருக்­கின்­றன. போர்க்­குற்ற விசா­ர­ணை­க­ளுக்­காக நீதி­மன்­றத்தை அமைக்­கு­மாறு இலங்­கையை நிர்ப்­பந்­திப்­ப­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக கண்­டனம் தெரி­வித்த அவர், ஆயுதப் படை­களின் உறுப்­பி­னர்­களை அத்­த­கைய நீதி­மன்­றத்தில் நிறுத்­து­வ­தற்­கான திட்­டங்கள் பெரும் அனர்த்­தத்­துக்கு வழி­வ­குக்கும் என்றும் அவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் நல்­லி­ணக்கச் செயன்­மு­றை­களைப் பாதிக்கும் என்­ப­துடன் இனங்­க­ளுக்­கி­டையில் அமை­தி­யின்­மை­யையும் தோற்­று­விக்கும் என்றும் கூறினார். ‘போர்க்­கா­லத்தில் இடம்­பெற்­றி­ருக்­கக்­கூ­டிய குற்­றங்கள் தொடர்பில் விசா­ர­ணை­யையும் நல்­லி­ணக்கச் செயன்­மு­றை­க­ளையும் ஒரே­நே­ரத்தில் முன்­னெ­டுப்­ப­தென்­பது எந்த வகை­யிலும் யதார்த்த பூர்­வ­மான அணு­கு­மு­றை­யாக இருக்கப் போவ­தில்லை. போர்க்­குற்ற விசா­ர­ணையும் நல்­லி­ணக்­கமும் தண்­ட­வா­ளங்­களைப் போன்­றவை. அவை ஒரு­போதும் ஒன்­றுடன் ஒன்று சந்­திக்­காது. ஒரு புறத்தில், அவர்கள் பொறி­மு­றை­யொன்றை அமைத்து விசா­ரணை நடத்தி குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­ப­டக்­கூ­டி­ய­வர்­களைத் தண்­டிக்­கு­மாறு எங்­களை கேட்­கின்ற அதே­வேளை, மறு­பு­றத்தில் நல்­லி­ணக்­கத்தை நோக்கி செயற்­ப­டு­மாறும் கேட்­கி­றார்கள். இந்த இரு நிலைப்­பா­டு­க­ளுமே ஒத்­தி­சை­வாகச் செல்ல முடி­யா­த­வை­யாகும். கடந்­த­கால சம்­ப­வங்கள் தொடர்பில் ஆட்கள் சாட்­சி­யங்­களைக் கூறி போர்க்­குற்­றங்­க­ளுக்கு பொறுப்­பா­ன­வர்கள் என்று எவ­ரை­யா­வது சுட்­டிக்­காட்­டும்­போது நாட்டின் ஆட்­புல ஒரு­மைப்­பாட்­டையும் சுயா­தி­பத்­தி­யத்­தையும் பாது­காப்­ப­தற்­காக உயி­ரையும் பொருட்­ப­டுத்­தாமல் செயற்­பட்ட முப்­ப­டை­க­ளையும் பொலி­ஸா­ரையும் விரோ­தித்­துக்­கொள்­ள­வேண்­டி­யி­ருக்கும். அதனால் சிங்­கள சமூ­கத்­துக்கும் தமிழ்ச் சமூ­கத்­துக்கும் இடையில் மீண்டும் தக­ராறு ஏற்­படும். அத்­த­கைய நிலைமை இன்­னொரு போருக்கே வழி­வ­குக்கும்’ என்று நீதி­ய­மைச்சர் தன­து­ரையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அவரின் இந்தக் கருத்­துகள் ஊடாக தமி­ழர்­க­ளுக்கு ஒரு செய்தி சொல்­லப்­ப­டு­கி­றது. தமி­ழர்கள் போர்க்­குற்ற விசா­ர­ணையை வலி­யு­றுத்­து­வ­தாயின் நல்­லி­ணக்­கத்தை எதிர்­பார்க்க முடி­யாது என்­பதே அச்­செய்­தி­யாகும்.

அமைச்சர் ராஜபக் ஷ நேர­டி­யாக தமி­ழர்­களை நோக்கி உங்கள் தெரிவு என்­ன­வென்று கேட்­க­வில்­லை­யென்­றாலும், 2015 அக்­டோபர் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இரு­வ­ருட கால அவ­காசம் வழங்கி மீண்டும் ஜெனீ­வாவில் தீர்­மா­ன­மொன்று நிறை­வேற்­றப்­பட்ட கையோடு அவரின் உரையின் மூல­மாக அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு வெளி­காட்­டப்­பட்­டி­ருக்­கி­றதோ என்ற கேள்வி இயல்­பா­கவே எழு­கி­றது.

இத்­த­கை­ய­தொரு பின்­பு­லத்­தி­லேயே கடந்­த­வாரம் இலங்கை தேசிய சமா­தானப் பேர­வையின் (National Peace Council of Sri Lanka) நிறை­வேற்­றுப்­ப­ணிப்­பா­ள­ரான கலா­நிதி ஜெகான் பெரேரா வெளிப்­ப­டுத்­திய கருத்­து­களும் முக்­கிய கவ­னத்­துக்­கு­ரி­ய­வை­யா­கின்­றன. கடந்த மாதத்­தைய  ஜெனீவா கூட்டத் தொடரில் பங்­கேற்ற இலங்கைத் தூதுக்­கு­ழுவில் அவரும் இடம்­பெற்­றி­ருந்தார். அத்­தூ­துக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளு­ட­னான தனது கலந்­து­ரை­யா­டல்கள் கார­ண­மாக தன்னால் உண­ரப்­ப­டக்­கூ­டி­ய­தாக இருந்த ஒரு நிலைப்­பாட்டை பிர­தி­ப­லிக்கும் வகையில் தான் ஜெகான் பேரேரா இக்­க­ருத்­து­களை அர­சியல் மற்றும் சிவில் சமூ­கத்தின் மத்­தியில் ஒரு விவா­தத்தை தூண்­டி­விடும் நோக்கில் முன்­வைத்­தாரோ என்று எண்­ண­வேண்­டி­யி­ருக்­கி­றது.

நிலை­மா­று­கால நீதியைப் (Transitional justice) பொறுத்­த­வரை போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு அதிக முக்­கி­யத்­து­வத்தைக் கொடுத்தால் நல்­லி­ணக்கச் செயன்­மு­றை­களில் முன்­னேற்றம் ஏற்­பட வாய்ப்­பி­ருக்­காது என்று ஜெகான் பெரேரா எழு­தி­யி­ருக்­கிறார்.

‘இலங்­கையில் எதி­ர­ணி­யினர் தேசிய சுயா­தி­பத்­தியம் மற்றும் தேசிய பாது­காப்பு மீதே கவனம் செலுத்­து­கி­றார்கள்.’ இந்த விவ­காரம் தொடர்பில் பொது வெளியில் விவாதம் என்று வரும்­போது சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுப்­பதில் அர­சாங்கம் பெரும் நெருக்­க­டியைச் சந்­திக்க வேண்­டி­யி­ருக்கும். பெரும்­பா­லான மக்­களின் மனதில் வேறு எந்­த­வொரு விவ­கா­ரத்­தையும் விட தேசிய பாது­காப்பே கூடுதல் அக்­க­றை­யையும் முன்­னு­ரி­மை­யையும் பெறு­கி­றது. இந்த யதார்த்த நிலைக்கு ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் கீழான அமெ­ரிக்கா ஒரு மிக அண்­மைய உதா­ர­ண­மாகும்.

இத்­த­கைய அனு­கூ­ல­மற்ற அர­சியல் சூழ்­நி­லையில் நிலை­மாறு கால நீதிக் கோட்­பாட்டின் மைய விவ­கா­ர­மாக போர்க்­குற்­றங்­க­ளுக்­கான பொறுப்புக் கூறலை முக்­கி­யத்­து­வப்­ப­டுத்­து­கின்ற அணு­கு­மு­றையில் இருந்து விடு­பட்டால் மாத்­தி­ரமே நல்­லி­ணக்­கத்தை நோக்கி நக­ரக்­கூ­டி­ய­தாக இருக்கும். போர்க்­குற்­றங்­க­ளுக்­கான பொறுப்புக் கூறல் மீதான நாட்­டத்­துக்கு நிலை­மா­று­கால நீதிச் செயன்­முறை முழு­வதும் பண­ய­மாக வைக்­கப்­பட்­டி­ருப்­பதே இன்­றுள்ள பிரச்­சி­னை­யாகும்.

UNHRC

நிலை­மா­று­கால நீதி என்­பது பொறுப்புக் கூறலைப் பற்­றி­யது மாத்­தி­ர­மல்ல, அது உண்­மையைக் கண்­ட­றிதல், இழப்­பீடு மற்றும் நிறு­வன ரீதி­யான சீர்­தி­ருத்தம் ஆகி­ய­வற்­றையும் உள்­ள­டக்­கி­ய­தாகும். பொறுப்புக் கூறலை உறு­தி­செய்­வ­தென்­பது பல தசாப்­தங்கள் நீடிக்­கின்ற ஒரு நெடிய செயன்­மு­றை­யாகும் என்­பதை ஏனைய நாடு­களின் அனு­ப­வங்கள் வெளி­க்காட்­டு­கின்­றன. போர்க்­குற்­றங்கள் தொடர்­பாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­ற­வர்கள் அர­சியல் எதி­ர­ணி­யிலும், இரா­ணு­வத்­திலும் இன்­னமும் பலம்­பொ­ருந்­தி­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். நாட்டைப் பிரி­வி­னையில் இருந்து காப்­பாற்­றி­ய­வர்கள் என்­ப­தற்­காக அவர்கள் சனத்­தொ­கையின் பரந்­த­ளவு பிரி­வி­னரின் ஆத­ர­வைக்­கொண்­ட­வர்­க­ளா­கவும் இருக்­கி­றார்கள். இதன் விளை­வாக அர­சாங்­கத்தின் முக்­கி­ய­மான கடப்­பா­டுகள் சகல மட்­டங்­க­ளிலும் தடங்­க­லுக்­குள்­ளா­கி­யி­ருக்­கின்­றன. போர்க்­குற்­றங்­களை மைய­மா­கக்­கொண்ட நிலை­மா­று­கால நீதிச் செயன்­முறை முன்­னோக்கி நகரப் போவ­தில்லை என்­பது இப்­போது தெளி­வாக விளங்­கிக்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். பொறுப்­புக்­கூ­றலை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு சர்­வ­தேச விசா­ரணை மன்றம் அல்­லது கலப்பு முறை­யி­லான நீதி­மன்றம் அமைக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை நிலை­மா­று­கால நீதிக்கு எதி­ரா­ன­வர்­களின் கரங்­க­ளையே வலுப்­ப­டுத்­து­கி­றது. சர்­வ­தேச சமூ­கத்­தி­னதும் தமிழ் அர­சியல் சமு­தா­யத்­தி­னதும் சில பிரி­வி­னரால் வலி­யு­றுத்­தப்­ப­டு­வது போன்று நிலை­மா­று­கால நீதியின் மைய விவ­கா­ர­மாக போர்க்­குற்­றங்கள் மீதான விசா­ர­ணையைக் கரு­தினால் நிலை­மா­று­கால நீதிக்கு மக்­களின் ஆத­ரவைப் பெறு­வ­தென்­பது மேலும் கஷ்­ட­மா­ன­தா­கி­விடும் என்று ஜெகான் பெரேரா கூறி­யி­ருக்­கிறார். (கொழும்பு ரெலி­கிராவ் 27 மார்ச் 2017)

எமது பிரச்­சினை உலகில் முன்­னு­தா­ரணம் இல்­லா­தது என்று கூறு­ப­வர்­களும் இருக்­கி­றார்கள். போரில் தோல்வி கண்­ட­வர்­க­ளுக்கு எதி­ரா­கவே இது­வ­ரையில் போர்க்­குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு தண்­ட­னையும் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இலங்­கையில் போரில் வெற்­றி­ய­டைந்­த­வர்­க­ளுக்கு எதி­ராக அவர்­க­ளா­கவே விசா­ரணை நடத்த வேண்டும் என்று கோரப்­ப­டு­கி­றது. இந்த ‘வித்­தி­யா­ச­மான கோலம்’ எமது தேசிய இனப்­பி­ரச்­சி­னை­யையும் அதற்­கான தீர்வு முயற்­சி­க­ளையும் மேலும் சிக்­க­லாக்­கு­கி­றது. இந்தச் சிக்­கலின் பிர­தி­ப­லிப்பே இன்­றைய அர­சியல் கருத்­தா­டல்­களும் விவா­தங்­களும் ஏன் விதண்­டா­வா­தங்­க­ளும்தான்.

நீதி­ய­மைச்சர் ராஜபக் ஷவும் கலா­நிதி ஜெகான் பெரே­ராவும் முன்வைத்திருக்கும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தமிழர்கள் ஒன்றில் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்த வேண்டும் அல்லது நல்லிணக்கத்தை எதிர்பார்க்க வேண்டும். இரண்டையும் ஏக காலத்தில் எதிர்பார்ப்பது ஏற்புடையதோ நடைமுறைச் சாத்தியமானதோ அல்ல என்றே அவர்கள் கூற முன்வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. தமிழர் தரப்பில் அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் இதற்கு தெளிவான பதிலொன்றை முன்வைக்கவேண்டும்.

போர்க்குற்ற விசாரணையைக் கைவிட தமிழர்கள் முன்வந்தால் அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய பயனுறுதியுடையதும் நிலைபேறானதாக அமையக்கூடியதுமான அரசியல் தீர்வொன்றைத் தருவதற்கு சிங்கள மக்களைத் தயார்படுத்துவதற்கான அரசியல் துணிவாற்றலும் தூரநோக்கும் அரசாங்கத்துக்கும் எஞ்சிய சிங்கள அரசியல் சமுதாயத்துக்கும் இருக்கிறதா? நல்லிணக்கச் செயன்முறையை விட போர்க்குற்ற விசாரணையே தங்களுக்கு இப்போது முக்கியமானது என்று சொல்வதற்கு தமிழர்கள் தயாராயிருக்கிறார்களா? அரசியல் தீர்வு விவகாரத்தைப் பொறுத்தவரை, கடந்த வருடம் ஏப்ரலில் புதிய அரசியலமைப்பு வரைவுக்கான செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்ட நாளில் இருந்து தென்னிலங்கை அரசியலில் இடம்பெற்றுவருகின்ற வாதப் பிரதிவாதங்களை நோக்கும் போது தமிழர்கள் நம்பிக்கை வைப்பதற்கு எதுவுமேயில்லை என்பதே யதார்த்த நிலையாகும்.

விடுதலை புலிகளைத் தோற்கடித்த போரில் சம்பந்தப்பட்ட எந்தவொரு படைவீரருக்கு எதிராகவும் போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கின்ற சிங்கள அரசியல் சமுதாயத்திடமே பொறுப்புக்கூறல் கடப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் எதிர்பார்க்க வேண்டிய திரிசங்கு நிலையில் தமிழர்கள் இன்று விடப்பட்டிருக்கிறார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *