Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திறந்துவிடப்பட்ட உளவியல் போர் – களமுனை -1

திறந்துவிடப்பட்ட உளவியல் போர் – களமுனை -1

செந்துருவன்

உளவியல் போர் அதாவது சத்தமின்றி இரத்தமின்றி நன்கு திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஒரு இராணுவ ஒப்பரேசன் என்றே கூறக்கூடிய அளவு, பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு போரியல் யுக்தி, 2009க்கு பின்னர் தமிழர்களின் ஆயுதக்களமுனை முற்றாக மௌனிக்கப்பட்டதன் பின்னர், சிங்கள தேசத்தினால் ஒரு பாரிய உளவியல் போர்களமுனை ஒன்று புலம் மற்றும் தமிழர் தாயகத்தில் திறந்துவிடப்பட்டுள்ளது. அது முன்னைய ஆட்சியாளரான மகிந்த ராசபக்சேவின் ஆட்சிக்காலத்தை விட, தற்போதைய ரணில் – மைத்திரி ஆட்சியின் கீழ் பெரும் பூதாகரமான ஒரு பிரச்சனையாக தமிழ்மக்களின் அரசியல் வெளியில் உருவாகியிருக்கிறது.

அதாவது தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை உதறிதள்ளி, சிங்களம் கொடுப்பதை வாங்குவோம் என்கிற ஒரு நிலைப்பாடு எடுத்து எதிர்கட்சி கதிரைகளில் இருந்ததோ, அன்றே முற்றுமுழுதான தமிழர்களின் அரசியல் களம் சிதைக்கப்பட்டது. அதற்க்குப் பின்னான தொடர் சம்பவங்களும், தாயகப்பகுதியில் இருக்கின்ற பிரபல்யமான ஊடகங்களின் செய்தியாக்கமும் சிங்கள தேசத்தின் உளவியல் போருக்கு வலுச்சேர்க்கும் ஒரு முக்கிய காரணியாக உருவெடுத்துநிற்கின்றது. இன்னொரு வகையில் கூறுவாதானால், தமிழர் அரசியல் அபிலாசைகளை பலவீனப்படுத்தும் சிங்களத்தின் நிகழ்ச்சிநிரலை செயற்படுத்துபவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள ஒரு சிலரும், சில ‘பிரபல்ய’ ஊடகங்களும் செயற்படத் தொடங்கியுள்ளன.

2குறிப்பாக ஊடக அமைச்சரின் யாழ் வருகையும் அதனுடன் சேர்ந்து நடந்த சில சம்பவங்களும் சிங்கள தேசத்தின் சூழ்ச்சி வலையில் முற்றுமுழுதாக தமிழமக்களை அடிபணிய வைப்பதற்கான ஒரு நிகழ்ச்சி நிரலாகவே காணப்பட்டது. அதாவது சிங்கள அரச பயங்கரவாத்தால் படுகொலை செய்யப்பட்ட காணமல் போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் மக்களுக்குமான பதில் எதுவும் கிடைக்காத ஒரு இடத்தில் நல்லிணக்க இணைப்பொன்றை யாழ் ஊடக அமையம் நடத்தியிருந்தமையானது, ஒரு பேரதிர்ச்சி தரக்கூடிய ஒரு விடயாக தமிழ்மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளது. இப்படியான நிலையில் ஊடக அமைச்சரால் திறந்துவைக்க்பட்ட சிங்கள் எழுத்து பொறிக்கப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி, இன்று சிங்கள தேசத்தால் படுகொலைசெய்யப்பட்ட காணமல் போகச்செய்யப்பட்ட ஊடகர்களின் உத்தியோகபூர்வ நினைவுக்கல்லாக மாற்றம் பெற்றிருக்கினறது. இந்த நிலையில் சிங்கள தேசத்தின் தொலைநோக்கு திட்டமான வரலாற்று சிதைப்புக்கும் வரலாற்று புனைவுக்கும் ஏதோ ஒரு வகையில் தமிழ் ஊடகவியலாளர்களும் ஊன்று கோலாக நின்றுகொண்டிருக்கின்றனர். காரணம் எதிர்கால தலைமுறைக்கு இன்றைய ஊடகர்களின் தியாகங்கள் வெறும் கொலைகளாகவும் போரில் இடம் பெற்ற சம்பவங்களாகவும் மட்டுமே போய்ச்சேரப்போகின்ற ஒரு அவநிலையும், அவர்களின் தியாகங்கள் எதற்காக என்பதும், அதற்கு காரணமானவர்கள் யார் என்பதும் முற்றுமுழுதாக தெரியாத ஒரு விடயமாக்கப்படப் போகிறது.

இரண்டாவது கடந்த மாதங்களில் நடந்த சில தொடர் சம்பவங்கள் அதாவது யாழ்ப்பாணம் வந்த ஊடக அமைச்சரின் பின்புலம் பற்றி ஊடகங்கள் சிந்தித்து மக்களுக்கு சரியான விழிப்புணர்வை கொண்டு சேர்க்க முன் திடீரென 64 அடி புத்தர்சிலை எனும் பிரச்சனை உருவெடுத்தது. அதைப்பற்றி மக்கள் சிந்திக்க தொடங்க முதல் தற்கொலை அங்கி மீட்பு, அதன் பின்னான கைதுகள் என மக்களுக்கு எப்பொழுதும் ஒரு பிரச்சனை மீது தெளிவு ஏற்படும் முன் அடுத்தடுத்த சம்பவங்களை தொடராக நடத்தி மக்களின் உளவியல் மீது ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி.

மூன்றாவது இதில் முற்றுமுழுதாக சிங்கள தேசத்தை விட தமிழ் ஊடகங்களே பாரிய பங்காற்றுகின்றன. அதாவது, ஒரு செய்தியின் மூலம் மக்களுக்கு சிங்கள அரச பயங்கரவாதம் சில செய்திகளை சொல்ல முற்படுகின்றது. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல் கேட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி தமிழ் ஊடகங்களில் பரபரப்பாக வந்திருந்தது. அதாவது மக்களிடையே ஒரு அச்ச உணர்வையும் ஒரு பலவீனமான சிந்தனையையும் உருவாக்ககுவதற்காகவே இப்படி ஆன சம்பவங்கள் நடந்தேறுகின்றன. இவை ஒரு புறம் இருக்க இது தொடர்பாக சிந்திக்க கூட முடியாத ஊடகவியாளர்களைதான் இன்று எமது தமிழ் தேசம் கொண்டுள்ளதா என ஒரு பாரிய கேள்வி ஒன்றை உருவாக்கி நிற்கின்றது.

அதே வகையில் செய்தியாக்கப்பட்ட ஒன்றே சிவகரனின் கைது தொடர்பான செய்தி. அதாவது முகநூலின் மூலம் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தி. இப்படியான செய்திகளின் பின்புலம், தெளிவு என்பன பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஊடகர்களே அதைப்பற்றிய தெளிவின்மையில் இருப்பது, தமிழ் மக்கள் சரியான ஒரு ஊடகத்தலைமுறையை இழந்துவிட்டது என்ற ஒரு கசப்பான உண்மையையும் வேலையின்மையாலும் விளம்பரத்திற்காகவும் உருவான ஒரு ஊடகத்தலைமுறைக்குள் தமிழ் இனம் சிக்கவைக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவாகின்றது.

நான்காவது தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் நம்பிக்கை இழப்பு. அதாவது தாம் இனி செயற்படவே முடியாது. முடக்கப்பட்டு விட்டோம் என்கிற ஒரு விரக்தி மனநிலையை உருவாக்க சிங்கள தேசம் முற்படுகிறது. அப்படியான ஒரு நிலையை ஏற்படுத்துவதற்காகவே ஒரு பெரிய நிகழ்ச்சிநிரல் ஒன்றை உருவாக்கியிருகின்றது. பொருளாதார நெருக்கடிகள் முதல் சமூக சீர்கேடுகள் வரை அது சார்ந்த ஒன்றாகவே இருக்கின்றது.

Journalist-Memorial-Invitation-Vakeesam-தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய விடயங்கள் மிகவும் பரந்துபட்டது தூரநோக்கு கொண்டது. அவற்றை சிந்திக்கவிடாமல் தடுப்பதற்கே இந்த ‘உளவியல் போர்’ அதன் ஒரு வடிவமே ஊடகங்களுடாக எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இந்த களமுனை.

இதை தமிழர்கள் எவ்வாறு கையாள போகிறார்கள். தமிழ்மக்களின் இந்த ஊடகச்சிதைவு அப்படியே தொடர்ந்து முற்றுமுழுதாக தமிழர்களின் ஊடக வெளிகைவிடப்படப்போகிறதா அல்லது உண்மையான ஊடகத்தலைமுறையும் ஊடகங்களும் உருவாக்கப்பட்டு, இரத்தத்தில் இருக்கும் வெண்குருதி சிறுதுணிக்கைகள் எவ்வாறு கிருமிகளை அழிக்கின்றனவோ அப்படி ஒரு நிலையை தமிழ் ஊடகம் பெறப்போகிறதா அல்ல சிதைக்கபடும் ஊடகவெளியில் நாமும் எமது இலட்சியமும் சிதைக்கப்படப்போகிறதா?

களமுனைகள் தொடரும்…….


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *