Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நல்லாட்சியின் பெயரில் விரைவுபடுத்தப்படும் கட்டமைப்புசார் தமிழ் இனஅழிப்பு

நல்லாட்சியின் பெயரில் விரைவுபடுத்தப்படும் கட்டமைப்புசார் தமிழ் இனஅழிப்பு

லோ.விஜயநாதன்

முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான எம் சொந்தங்கள் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இனவழிப்புச் செய்யப்பட்டு ஆண்டுகள் 7 உருண்டோடி விட்டன. இருப்பினும் அதிலிருந்து தப்பி பிழைத்தவர்களோ அந்நினைவுகளைச் சுமந்தவர்களாக ஆற்றொனா துயரத்துடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாதவர்களாக அவ்வின அழிப்பைச் செய்த சிங்கள இராணுவம் சூழ்ந்து நிற்க நடைப்பிணங்களாக வாழ்ந்து வருகின்றனர். தமக்கெதிராகத் தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு கட்டவிழ்ந்து விடப்பட்டுள்ளது என்று தெரிந்தும் எதிர்க்கத் திராணியற்றவர்களாக, எதிர்ப்பை வெளிக்காட்ட முடியாதவர்களாக மிகுந்த மனவழுத்தத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

மறுமுனையில் நல்லாட்சி என்ற பெயரில் சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழினம் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் அசுரவேகத்தில் தமிழர் தாயகப் பரப்பெங்கினும் அகலக் கிளை பரப்பி நடத்தி வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு சில இடங்களிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றிவிட்டு தமிழர் தாயகத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் இராணுவ கடற்படை முகாம்களையும், பௌத்த தலங்களையும் நிறுவி வருவதுடன் சிங்களக் குடியேற்றங்களை மீனவர்கள் என்ற போர்வையில் ஏற்படுத்தி முற்று முழுதான சுற்றிவளைப்பு ஒன்றுக்குள் கொண்டுவர முனைகின்றனர்.

இன்னொரு பிரபாகரனோ, புலிகளோ எந்தவொரு காலகட்டத்திலும் மீள் தோற்றம் பெற முடியாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்தும் பேணப்பட்டு வருவதாகக் கூறும் சிறிலங்கா அரச இயந்திரத்தின் நிர்வாகத்தின் கீழ் தான் வடமாகாணத்தில் ஆவா குழுவும், வாள்வெட்டுக் குழுவும், கஞ்சா-போதை கடத்தல்களும் அதி உச்சளவில் நடைபெறுகின்றன. இந்த சம்பவங்கள் தொடர்பில் எம்மவர்களின் கண்டுபிடிப்போ போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இப்படியான சம்பவங்கள் நடைபெறுவது சகஜமானது என்பதாகும். ஒரு ஆயுதமோ அல்லது ஒரு புலியோ வரமுடியாத இடத்திற்கு எவ்வாறு இக்குழுக்களும், கஞ்சாக்களும் வரவும் செயற்படவும் முடிகிறது என்ற கேள்வியினூடே அதற்கான விடையும் கிடைக்கிறது. ஆனால் அதை விடுத்து எம்மவர்களோ வடக்கில் நடைபெறும் சம்பவங்களுக்கு தெற்கில் கூடி கதைத்து விட்டு அதைக் கட்டவிழ்த்து விடுபவனிடமே அதற்கான பரிகாரத்தை தேடி அலைகிறார்கள். எமது புத்தி ஜீவிகளின் அறிவு இந்தளவிற்கா உள்ளது.

கேரள கஞ்சா
இந்திய கரையோரக் காவல்பிரிவின் கண்காணிப்பையும், சிறிலங்கா கடற்படையின் கண்காணிப்பையும், சிறிலங்கா இராணுவத்தின் கண்காணிப்பையும் தாண்டி வடபுலத்திற்கு கேரள கஞ்சா வந்து சேர்கிறது. இந்த காவல் படைப்பிரிவுகளில் ஒரு பிரிவு தானும் இதை உண்மையிலேயே கட்டுப்படுத்த நினைத்திருந்தால் இது வடபுலத்திற்கு இவ்வளவு பெரியளவில் வந்து சேரமுடியாது. இக்கடத்தல் உண்மையிலேயே முழுக்க முழுக்க இவர்களின் கண்காணிப்பிற்குள்தான் நடைபெறுகிறது என்பதையே இது காட்டுகிறது. இவர்கள் இக்கடத்தல் மூலம் கடத்தலில் ஈடுபடும் முகவர்களினூடாக இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் விடுதலைப் புலிகளின் வழங்கல் பாதைகளையும் வழங்குநர்களையும் பிடிப்பதற்கான ஒரு பொறியாக இந்திய இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் இதை பாவிக்கின்றனர். அத்துடன் இனம், உரிமை சார் சிந்தனைகளிலிருந்து தமிழ் இளைஞர்களை விடுவித்து அவர்களை போதைக்கு அடிமையாக்கி சிந்தனைச் செயழிழப்புகுட்பட செய்கின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக எந்த இராணுவத்தையும் கடற்படையையும் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேறக் கோருகின்றோமோ அவற்றின் இருப்பை எம்மை வைத்தே உறுதி செய்ய முற்படுகின்றனர்.

வாள் வெட்டு
அன்று மகிந்த ஆட்சியில் கிறீஸ் பூதம் என்னும் பெயரில் நடைபெற்றதே, தற்போது நல்லாட்சியில் வாள்வெட்டு கும்பல் மூலம் நடைபெறுகிறது. அதாவது ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தை தொடர்ந்து ஒரு அச்சம் நிறைந்த சூழலில் வைத்திருப்பதற்கான ஒரு உளவியல் போரே இதுவாகும். இப்படியான வன்முறைகளுடாக அச்சமுகத்தை வீட்டிற்குள் முடக்குவதுடன் (அறிவிக்கப்படாத ஊரடங்கு) மற்றும் சமூகம் சார் சிந்தனைகள் செயற்ப்பாடுகளில் இருந்து (எதற்கு வீண்வம்பு என்று ) மக்களை ஒதுங்கிச் செயற்படுவதற்கு தள்ளப்படுகின்றனர்.

இவற்றை நன்கு புரிந்துகொண்டதால் தான் அண்மையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இராணுவத்தை வெளியேற்றி காவல்துறை அதிகாரத்தை தமக்குத் தரும்படி செய்தியாளர் சந்திப்பில் கேட்டிருந்தார்.

இவற்றை விட சுன்னாகம் நீரில் எண்ணெய் கசிவு, யாழ்ப்பாணத்துக்கான இரணைமடுக் குள நீர் விநியோகம், பொருத்து வீடுகள், இராணுவ முகாம்களுக்கான காணி சுவீகரிப்பு, வவுனியாவில் அமையவிருக்கும் பொருளாதார மத்திய நிலையம், புதிதாக முளைவிடும் புத்த விகாரைகள், சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் என எதை எடுத்தாலும் பிரச்சினை ஒன்றை கிளப்பி ஒரு இழுபறி நிலையில் அவற்றை தொடர்ந்து வைத்திருப்பதனூடாக அச்சமூகத்தின் கவனத்தை தமது உரிமைசார் போராட்டத்தில் குவியப்படுத்தவிடாது கவனச்சிதறலை ஏற்படுத்துகிறார்கள். இக் கவனச் சிதறலுக்கூடாக அவர்களுக்கிடையே மோதலை உருவாக்கி பிரித்தாளுவதனூடாக தமது இலக்காண தமிழ் தேசியத்தின் சிதைப்பை கண்ணுக்குப் புலப்படாதவாறு நுட்பமாக சிறிலங்காவின் நல்லாட்சி அரசு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் இவற்றை வைத்து வடமாகாண சபைக்கு நிர்வாகத்திறன் இல்லையென்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதுடன் சிறிலங்கா அரசின் அடிவருடிகளான ஆர்னோல்ட், சயந்தன் போன்றவர்களை பயன்படுத்தி தமிழ் தேசியத்தின்பால் பற்றுருதியுடன் செயற்படும் உறுப்பினர்களை ஓரம்கட்ட முனைகின்றனர்.

Sam mano and others

கதிர்காமர், கருணா, டக்ளஸ் போன்றவர்களினூடாக சிறிலங்கா அடைந்த பயன்களின் அறுவடையின் அனுவங்களிலிருந்து அதே உத்தியை ஆனால் அதனிலும் பார்க்க மிகக் கச்சிதமாக சிறிலங்காவின் நல்லாட்சி அரசு அமுல்ப்படுத்தி வருகின்றது. இதன் விளைவே சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகவும், செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராகவும், சுவாமிநாதனை மீள்குடியேற்ற அமைச்சராகவும், மனோ கணேசனை நல்லிணக்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளமையாகும். இதன் அறுவடைகளை சிறிலங்கா ஐ.நா.மனிதவுரிமை சபையில் பெற்றுவருவதுடன், அன்று வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு கை உயர்த்தியவரே இன்று இந்திய – இலங்கை (1987) ஒப்பந்தத்துடன் அந்த கோரிக்கையை கைவிட்டு விட்டதாக கூறும் நிலையம், எவர் அன்று 2015 ஜனவரிக்குள் தீர்வின்றேல் தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தாரோ அவரே இன்று குழுக்களின் பிரதித்தலைவர் ஆசனத்திலிருந்து பல் இழித்துக்கொண்டிருக்கும் நிலைமையும் ஏற்ப்பட்டிருக்கிறது. அதேவேளை, சேர் பொன்.இராமநாதனின் வாரிசோ இன்று தமிழ்ர்களுக்கு சமஷ்டி தேவையில்லையென சிங்களத்துக்கு வக்காலத்து வாங்குகிறார். நல்லிணக்கம் என்பது உண்மை வெளிக் கொண்டு வரப்பட்டு பொறுப்புக் கூறுவதனூடாகவே ஏற்படும் என்பதை தெரிந்தும் தெரியாதது போல் பெற்று பேச்சினூடாக நல்லிணக்கம் ஏற்படுத்தி வருகின்றார் இன்னொருவர்.

உண்மையில் மிகக் கொடிய போரின் பின் குறைந்தது மீள்கட்டுமான வேலைகள் தொடர்பிலான எந்தவொரு பாரிய திட்டத்தையும் சர்வதேச அரசுகளுடன் இணைந்து முன்னெடுப்பதற்கான குறைந்தபட்ச திட்டங்களைக் கூட இவர்களால் சிறிலங்கா அரசிடம் இருந்து பெற்றுச் செயற்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றனர். எமது தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்களே எமது உரிமையை மறுதலிப்பவர்களாக நல்லாட்சி அரசாங்கத்தினால் மாற்றப்பட்டுள்ள ஆபத்தான கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

மறுபுறத்தில் சிங்களதேசம் தமக்குள் மோதல்கள், பிரிவுகள் இருப்பினும் தமிழின அழிப்பில் ஒன்று சேர்ந்தே செயற்படுகின்றனர் என்பதற்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டாக மகிந்தவின் உகண்டா பயணம் அமைந்துள்ளது. வெளிப்பார்வைக்கு இப்பயணம் சர்வாதிகாரி முசேனியின் 5வது தடவை ஜனாதிபதியாக பதவியேற்கும் ஒரு நிகழ்வுக்கு ஒரு முன்னாள் சர்வாதிகாரி போனது போல் தோன்றினாலும், உண்மையில் ஆபிரிக்க நாடுகளில் மகிந்தவுக்குள்ள செல்வாக்கை தொடர்ந்து தக்கவைப்பதனூடாக எதிர்காலத்தில் சிறிலங்காவிற்கு ஏற்படும் நெருக்கடிகளை (ஐ.நா.மனிதவுரிமை சபையில்) அந்த நாடுகளின் துணையுடன் முறியடிக்க முடியும் என்பதற்காகவே நல்லாட்சி அரசின் செலவில் அவர் சென்று வந்துள்ளார். இதே உகண்டாவே முன்னர் பல தடவை ஐ.நா.மனிதவுரிமை சபையில் சிறிலங்காவுக்காக தோளோடு தோள் நின்றது. இன்றுவரை மகிந்த ராஜபக்சவின் அரசியலானது நல்லாட்சி அரசினால் அனுமதிக்கப்படுவதும் சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்காகவேயாகும்.

இதேவேளை முன்னாள் இராணுவத் தளவபதியும் இந்நாள் நல்லாட்சி அரசின் அமைச்சருமாகிய சரத்பொன்சேகா, கோத்தபாய ராஜபக்ஸ மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதலானது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்படவில்லையென்றும், கோத்தபாய ராஜபக்சவே அதனை மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்துவதற்காக மேற்கொண்டதாகவும் பாராளுமன்றத்தில் கூறியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோத்தபாய ராஜபக்ச மீதான தாக்குதல் தொடர்பில் கூறியது உண்மையோ இல்லையோ, இது முன்னாள் இராணுவத்தளபதியின் கூற்று என்பதற்கூடாக இவ்வாறான சில தாக்குதல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

அண்மையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மகன் தனது தகப்பனாரின் கொலை தொடர்பில் சந்தேகம் உள்ளதாகவும், மீண்டும் விசாரணை வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்திருந்தமையை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

kadira2

மிகவும் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டிருந்த ஒருவரை அவரின் வீட்டின் நீச்சல் தாடாகத்துக்கு நீந்தவரும் போது சினைப்பர் மூலம் குறிதவறாது சுட்டுக் கொல்வதென்பது வெளியிலிருந்து வரும் நபர்களால் இலகுவில் மேற்கொள்ளப்பட முடியாதது. இது உள்ளிருந்து தகவல் வழங்கப்பட்டு, திட்டமிடப்பட்டு கொடுக்கப்பட்டால் அன்றி வெளியிலிருந்து மேற்கொள்ள முடியாது. ஆகவே இக் கொலைக்கு நிச்சயமாக சிறிலங்கா புலனாய்வுத்துறையின் செயற்பாடே காரணமாக இருந்திருக்க வேண்டும். ஒன்றில் அவர்கள் தெற்கில் ஒரு தாக்குதலை மேற்கொள்ள எண்ணிருந்த விடுதலைப் புலிகளின் தாக்குதல் பிரிவிற்கு தகவல்களை வழங்கியிருக்க வேண்டும் அல்லது தாமே நேரடியாக செயற்படுத்தியிருந்திருக்க வேண்டும். கதிர்காமரின் கொலை மூலம் யாருக்கு அதிக பலன் என்பதை சீர்தூக்கிப் பார்க்குமிடத்து இதுமேலும் வலுப்பெறுகிறது. இக்கொலையின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் (25 நாடுகளில்) விடுதலைப் புலிகள் மீதான தடை விதிக்கப்படுகிறது. அன்று வரை இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா ஆகிய 4 நாடுகளிலிருந்த தடையானது மேலும் 25 நாடுகளுக்கு விஸ்தரிக்கப்படுகிறது. இதுவே இறுதி முள்ளிவாய்க்கால் போரில் எம்மக்களின் மரண ஓலங்கள் இந்நாடுகளின் காதுகளுக்கு எட்டாமல் நிற்பதற்கு ஒரு காரணமாகவும் அமைந்தது.

இன்றும் இதையே சிறிலங்காவின் நல்லாட்சி அரசாங்கமும் தமிழர்களையும் அவர்களின் போராட்டத்தையும் தனிமைப்படுத்தி அழிக்க தனது புலனாய்வுச் செயற்பாடுகளினூடாகவும் அரசியல் இராஜதந்திர செயற்பாடுகளினூடாகவும் முனைந்துள்ளதே தவிர உண்மையில் நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளோ, பொறுப்புக் கூறலுக்கான செயற்பாடுகளோ நடைபெறவில்லை. உலக நாடுகளுக்கே நல்லிணக்கம் என்ற விம்பத்தை ஏற்படுத்த முனைந்துள்ளனர்.

உண்மையான நல்லிணக்கம் என்பது, மாறி மாறி ஆட்சி செய்த சிங்கள ஆட்சியாளர்களின் தமிழின ஒடுக்கு முறைக்கு எதிராகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள் என்பதையும் அப்போராட்டமானது பயங்கரவாத போராட்டமன்றி அது ஒரு இனவிடுதலைப் போராட்டம் என்பதையும் அப்போராட்டத்தை பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை பலியெடுத்தே தம்மால் முடிவுக்குக் கொண்டு வர முடிந்தது என்பதையும் சிங்களத் தலைமைகள் சிங்கள மக்களிடையே எப்போது எடுத்துச் சென்று புரியவைக்கின்றார்களோ, அதற்கூடாக தமிழ் மக்கள் ஏற்கக் கூடிய நியாயமான தீர்வு இதுதான் என்பதை சிங்கள மக்களை ஏற்கச் செய்கின்றார்களோ அன்றுதான் இத்தீவில் நல்லிணக்கம் என்பது ஏற்படும்.

ஆனால் நடைபெறும் நல்லாட்சியின் செயற்பாடுகளோ ஒரு புறத்தில் தமிழர்களுக்கெதிராக கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தொடர்ந்து கொண்டு, மறுபுறத்தில் போர் குற்றவாளிகளுக்கு பதவிகளும் பரிசில்களும் வழங்கிய வண்ணம் பயங்கரவாதத்தை வெற்றிகொண்டதற்கான வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தி வருவதாகவே இருக்கின்றன. இவர்களிடத்திலிருந்து தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு வரும் என்று எண்ணுபவர்களுக்கு இது ஒரு பகற்கனவாகவே முடியும்.

ஆகவே எமக்கான பலமாக எமக்கிருப்பது எம்மீது நிகழ்த்தப்பட்டது ஒரு இனவழிப்பேயன்றி வேறொன்றுமில் என்பதை சர்வதேசரீதியில் உணர்த்தி எமக்கான விடுதலையை நாமே பெற்றுக்கொள்ள முயற்சிப்பதே ஆகும். சுதந்திர தமிழ் ஈழத்துக்கான வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 40வது அகவையில் நாம் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் இதை நிச்சயமாக அடைய முடியும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *