Search
Thursday 24 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நீதிக்காக காத்திருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் குடும்பம், ஆனால் நம்பிக்கை குறைவடைகின்றது

நீதிக்காக காத்திருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் குடும்பம், ஆனால் நம்பிக்கை குறைவடைகின்றது

மீரா ஸ்ரீனிவாசன் – த இந்து

கடந்த வருடம், கிறிஸ்மஸ் வார இறுதியில் பிரவீனா ரவிராஜ் அதிகாலையில் ஆர்வத்துடன் அனைத்து பத்திரிகைகளையும் வாசித்தார், அனைத்து பத்திரிகைகளும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை என அலறின.

அந்த செய்தியின் கீழ் அவரது தந்தை ரவிராஜின் புகைப்படம் காணப்பட்டது.  2006 இல் கொல்லப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் படத்துடன் விடுதலை செய்யப்பட்ட மூன்று கடற்படையினரும் அவர்களது குடும்பத்தினரும் விடுதலையை கொண்டாடும் புகைப்படமும் காணப்பட்டது.

ejff

நான் அது சரியான விடயம் என உணரவில்லை என்கிறார் 25 வயது பிரவீனா.

அதற்கு முதல்நாளே 2006 நவம்பரில் கொழும்பின் மும்முரமான வீதியொன்றில் ரவிராஜை படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட மூன்று கடற்படை அதிகாரிகள் உட்பட ஐவரை கொழும்பு நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. சிங்கள நீதிபதிகள் அடங்கிய குழு சந்தேகநபர்களிற்கு எதிரான சாட்சிகள் வலுவற்றவை என தெரிவித்திருந்தது.

அச்சமும் நம்பிக்கையீனமும் 

கடந்த பத்து வருடங்களில் ரவிராஜ்படுகொலை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அவரது குடும்பத்தினர் ஓரு போதும் சிந்தித்திருக்கவில்லை.

எங்களிடம் காணப்பட்ட விடயம் அச்சம் , காணப்படாத விடயம் நம்பிக்கை என ரவிராஜின் மனைவி சசிகலா தெரிவித்தார். அவ்வேளை இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இறுதியும் ஈவிரக்கமும் அற்ற கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. யுத்தகளங்களிற்கு அப்பால் அரசாங்கம் தனது புலனாய்வு பிரிவினரை பயன்படுத்தி இன்னொரு அசிங்கமான யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்தது- வெள்ளை வான் கடத்தல்களும் படுகொலைகளுமே அவை.

எனது கணவர் படுகொலை குறித்து பேசுவதில் அர்த்தமில்லை எனகருதினேன், நான் அமைதியாக, மௌனமாக வாழ தீர்மானித்தேன் என்கிறார் திருமதி ரவிராஜ். கொழும்பின்  பிரபல பாடசாலையொன்றின்  கணித ஆசிரியையான அவர் தனது பிள்ளைகளின் கல்வியிலேயே கவனம் செலுத்தினார். அவரது மூத்த மகள் சட்டம் படித்துள்ளார், மகன்  மருத்துவத்தை தெரிவுசெய்துள்ளார். திருமதி ரவிராஜ் தனது வீட்டிலிருந்து வெளியேறுவதில்லை எனவும் தீர்மானித்தார். அந்த வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவிலேயே ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார்.

முதல் ஊடக பேட்டி

திருமதி ரவிராஜ் அவரது கணவர் கொல்லப்பட்ட பின்னர் ஊடகமொன்றிற்கு அளித்த முதல்பேட்டியிது- 10 வருடங்களிற்கு பின்னர் த இந்து நாளிதழிற்கு அவர் இதனை வழங்கியிருந்தார்.

மீன்பொரியல் மணம் உங்களை பாதிக்காது என நினைக்கிறேன் என தெரிவித்தபடி அவர் என்னுடன் உரையாட ஆரம்பித்தார். அந்த சுவரின் ஓரு மூலையில் ரவிராஜின் படம் காணப்பட்டது. அவர் தாடியுடன் சிரித்துக்கொண்டிருந்தார்.

ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டுவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்வதோ அல்லது ஓரு தசாப்தத்திற்கு பின்னர் நீதிகிடைப்பதற்கான வாய்ப்பு தோன்றியவேளை அதனை எதிர்கொள்வதோ அந்த குடும்பத்தினரிற்கு இலகுவான விடயமாக காணப்படவில்லை.

மகிந்த ராஜபக்ச அரசிலிருந்து விலகிய பின்னர் சிறிசேனவும் அவரது ஆதரவாளர்களும் நல்லாட்சி கொள்கையை முன்வைத்து தீவிரமாக பிரச்சாரம் செய்து 2015 ஜனவரி தேர்தலை வென்றனர். நீண்ட காலமாக கைவிடப்பட்டுள்ள வழக்குகளை மீண்டும் ஆரம்பித்து நீதி வழங்குவதாக அவர்கள் உறுதியளித்தனர். நான் அதனை நம்பி அவரிற்கு வாக்களித்தேன் என்கிறார் திருமதி ரவிராஜ்.

தேர்தல் முடிவுகள் வெளியானதும் பிரவீனா  தன்னுடைய தந்தை, படுகொலை செய்யப்பட்ட சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, படுகொலை செய்யப்பட்ட ரக்பிவீரர் வாசிம் தாஜீடீன் ஆகியோரின் புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து புகைப்பட தொகுப்பொன்றை உருவாக்கினார். இவர்கள் அனைவரும்  2006 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் ராஜபக்ச ஆட்சியிலிருந்த வேளை கொல்லப்பட்டவர்கள்.

இந்த படுகொலைகளிற்கு எல்லாம் நீதி கிடைக்கும்  என நான் நம்பினேன் எனினும் இந்த தீர்ப்பிற்கு பின்னர்- எனது தந்தையின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட  அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை பார்க்கும்போது முதுகில்குத்தப்பட்டுவிட்டது போல உணர்கிறேன் என அவர் தெரிவித்தார்.

ரவிராஜ் கொலையை யார் செய்தது என்பது குறித்து எவருக்கும் சந்தேகமில்லை.நீங்கள் இந்த வீதியில் இறங்கி சாதாரண நபர்களிடம் கேட்டுப்பாருங்கள் அவர்கள் உண்மையை சொல்வார்கள் என்கிறார் ரவிராஜின் மனைவி.

குறிப்பிட்ட படுகொலை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றவேளை குற்றப்புலனாய்வு திணைக்களமும், சட்டமா அதிபர் திணைக்களமும் இந்த படுகொலையின் பின்னால் அரச புலனாய்வு துறையினர் உள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தன. அரசதரப்பு சாட்சியாக மாறிய முன்னாள் கான்ஸ்டபிள் ஓருவர்  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்த கருணா அம்மானிற்கு இந்த படுகொலைக்காக  குறிப்பிடத்தக்க அளவு பணத்தை வழங்கினார் என குறிப்பிட்டிருந்தார்.

ரவிராஜ் படுகொலை என்பது முற்றிலும் எதிர்பாராதொன்றல்ல, சட்டத்துறையில் பணியாற்றிவிட்டு பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஊடாக அரசியலில் ஈடுபட்ட ரவிராஜ் தமிழர்கள் விவகாரம் தொடர்பில் சிங்களவர்களை ஈடுபடுத்தும் , அவர்களுடன் கைகோர்த்து செயற்படும் சமாதான அரசியலை பின்பற்றினார், இதனை அதிகாரத்தில் உள்ளவர்கள் விரும்பவில்லை.

அவர் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி தான் அறிந்த சிங்களத்தில் தயக்கமின்றி கருத்துதெரிவிப்பார். இதனால் அவர் பலரின் மனதை கவர்ந்தார்,பெரும்பான்மை சமூகத்தை நாடிச்சென்றார்

எனது அப்பாவிற்கு அச்சம் என்றால் என்னவென்று தெரியாது என்கிறார் அவரது மகள். அவரிற்கு அடிக்கடி தொலைபேசியில் அச்சுறுத்தல் வந்துகொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

படுகொலை நடப்பதற்கு ஓரு வாரத்திற்கு முன்னரும் ரவிராஜிற்கு அச்சுறுத்தல் அழைப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. அது தனக்கு நல்ல ஞாபகம் என்கிறார் அவரது மனைவி மறுமுனையில் பேசிய குரல் நீ வெள்ளைசேலை உடுத்த தயாரா உனது கணவனை எச்சரிக்கையாகயிருக்க சொல்லு என அச்சுறுத்தியது என்கிறார் அவர். நான் உடனடியாக எனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அறைக்கு சென்று அங்கிருந்த தொலைபேசி இலக்கங்களை காண்பித்து எனக்கோ அப்பாவிற்கோ ஏதாவது நடந்தால் உடனடியாக இந்த இலக்கங்களை தொடர்புகொள்ளுங்கள் என அறிவுறுத்தினேன் என்கிறார் அவர்.

2006 நவம்பர் பத்தாம் திகதி பிரவீணா தனது வகுப்பில் இருந்தவேளை ( பத்தாம்வகுப்பு) அவரை அவரது உடற்கல்வி ஆசிரியர் வகுப்பிற்கு வந்து அழைத்துள்ளார். அவர் பிரவீனாவை அதிபர் அறைக்கு அழைத்துச்சென்றார்.  நான் அதிபர் தொலைபேசிக்கு அருகில் நிற்பதை கண்டேன். அவர் தனதுவாயை கையால் அதிர்ச்சியில் மறைத்திருந்தார், நான் ஏதோ விபரீதம் நடந்துவிட்டதை உணர்ந்தேன் என்றார் அவர்.

அதற்கு பின்னரான பத்து வருடங்களில் பிரவீணா தனது தந்தை குறித்து தனது நண்பர்களிடம் பேசியதில்லை, நான் எவரின் அனுதாபத்தையும் விரும்பவில்லை. தந்தையின் இறுதிக்கிரியைகளின் போது கூட எனது தாயார் ஓரு முறை மாத்திரமே  அழுததை பார்த்தேன். அவர் அவ்வளவு உறுதியான உள்ளம் படைத்தவர். நான் அவரிடமிருந்து பலம் பெற்றேன் என்கிறார் பிரவீணா.

நாங்கள் இதுபோன்று வீட்டில் கதைப்பதில்லை என அவர் தனது தாயை பார்த்தபடி தெரிவித்தார்,அவரது தாயர் ஆச்சரியம் அடைந்தவராக காணப்பட்டார்,அவரது சகோதரனும் நடந்த அந்த சம்பவம் குறித்து அதிகம் பேசுவதில்லை.

பிரிட்டனில் தனது சட்டப்படிப்பை பூர்த்தி செய்துவிட்டு நாடு திரும்பிய பின்னர் பிரவீனா இலங்கையில் நீதித்துறை பயிற்சியில் ஈடுபட தயங்கினார். ஓழுக்கவிதிகளை பின்பற்றாமல் நான் அந்த துறையில் ஈடுபடவிரும்பவில்லை, என அவர் தெரிவித்தார். அரசியல் சூழல் இலங்கையின் நீதித்துறை குறித்து சிறிய நம்பிக்கையையே அளித்தது, இதன் காரணமாக அவர் சந்தைப்படுத்தல் துறையை தெரிவு செய்ய தீர்மானித்தார்

fd276238890ff4fd4fd30b85b5b67400_XL

பெரும் ஏமாற்றம்

ஜனவரி 10 திகதி தீர்ப்பிற்கு எதிராக ரவிராஜின் வழக்கறிஞர் மேல் முறையீடு செய்யவிருந்தார், எனது கணவரிற்கு நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக நான் இதனை செய்யவில்லை.  தீர்ப்பு குறித்த எங்கள் ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தவே  இதனை செய்கிறேன் என்றார்  திருமதி ரவிராஜ். எனது கணவர் படுகொலை தொடர்பில் நீதி நாட்டப்படவேண்டும் என்ற அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் அரசாங்கம்  இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்திருக்கவேண்டிய தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஏன் அவர்கள் அதனை செய்தார்கள் என அவர் குரலை உயர்த்தி கேள்வி எழுப்பினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *