Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரிட்டனில் அரசியல் உறுதிப்பாடற்ற நிலை விரைவில் மீண்டும் பொதுத்தேர்தல் வருமா?

பிரிட்டனில் அரசியல் உறுதிப்பாடற்ற நிலை  விரைவில் மீண்டும் பொதுத்தேர்தல் வருமா?

வீரகத்தி தனபாலசிங்கம் 

அடுத்தடுத்து இரு வருடங்கள் ஜூன் மாதம் பிரிட்டிஷ் பிரதமர்களுக்கு பாதகமானதாக அமைந்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் உறுப்புரிமை தொடர்பாக மூண்டிருந்த சர்ச்சைக்கு முடிவொன்றைக் காணும் முயற்சியாக கடந்த வருடம் ஜூனில் அப்போதைய பிரதமர் டேவிட் கமரூன் சர்வஜனவாக்கெடுப்பொன்றை நடத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டுமென்ற தனது நிலைப்பாட்டுக்கு நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவைத் தன்னால் பெறக்கூடியதாக இருக்குமென்ற நம்பிக்கையில் கமரூன் நடத்திய அந்த சர்வஜனவாக்கெடுப்பில் (பிரெக்சிட்) அவருக்குத் தோல்வியே கிட்டியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக 52 சதவீதமான பிரிட்டிஷ் வாக்காளர்கள் வாக்களித்திருந்தார்கள். கமரூன் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டியேற்பட்டது. அவருக்குப் பிறகு பிரதமராக வந்த முன்னாள் உள்துறை அமைச்சர் தெரேசா மே தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று வருடங்கள் இருந்த நிலையில் திடீர்ப் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தி இந்த ஜூன் மாதத்தில் தனது நோக்கத்தில் தோல்வியைத் தழுவியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

பிரிட்டனின் வெளியேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்தப்படவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் தனது நாட்டுக்கு அனுகூலமான நிபந்தனைகளின் அடிப்படையில் கடுமையான முடிவுகளை மேற்கொள்வதற்கு வசதியாக கூடுதல் பலம்பொருந்திய பாராளுமன்றப் பெரும்பான்மையைத் தனது கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெற்றுக்கொள்வதற்காகவே தெரேசா மே பொதுத்தேர்தலை நடத்தினார். தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதத்தில் அவர் செய்த நேரத்தில் தீவிர இடதுசாரிப் போக்குடையவர் என்று சொல்லப்படுகின்ற ஜெரமி கொர்பின் தலைமையிலான தொழிற்கட்சி பெரும் குழப்பநிலைக்கு உள்ளாகியிருந்தது. அந்தக் கட்சியை விடவும் தெரேசா மேயின் கன்சர்வேட்டிவ் கட்சி மக்கள் செல்வாக்கில் 21 புள்ளிகள் முன்னிலையில் இருந்ததாக அபிப்பிராய வாக்கெடுப்புகள் தெரிவித்திருந்தன. அதனால் மிகவும் சுலபமாக தன்னால் பிரமாண்டமான தேர்தல் வெற்றியை பெறமுடியுமென்று அவர் நம்பினார். 650 ஆசனங்களைக்கொண்ட பாராளுமன்றத்தில் சுமார் 400 ஆசனங்களைக் கைப்பற்ற முடியுமென்றும் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய பெரும்பான்மை 100 ஆசனங்களுக்கும் குறைவானதாக இருக்கப்போவதில்லை என்றும் கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதிகள் கனவு கண்டுகொண்டிருந்தார்கள். பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவரான தெரேசா மே தன்னை இன்னொரு இரும்புப் பெண்மணி மார்கரட் தட்சராகவும் காட்சிப்படுத்த முயற்சித்தார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பாணியில் தன்னை முன்னிலைப்படுத்தி இந்த பாராளுமன்றத் தேர்தலை அவர் சந்தித்தார்.

may

கன்சர்வேட்டிவ் கட்சி அதன் அரசாங்கத்தை எந்த விதமான பிரச்சினையுமன்றி தொடர்ந்து நடத்தக்கூடியதாக பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைப்பலம் (330 ஆசனங்கள்) இருந்த நிலையில் பிரமாண்டமான பெரும்பான்மைப் பலத்தின் மூலமான வலிமையான மக்கள் ஆணையைப் பெறுவதற்காக தெரேசா மே நடத்திய அரசியல் சூதாட்டம் ஆபத்தில் முடிந்துவிட்டது. புதிய தேர்தலுக்குப் பிறகு கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்றப் பலம் 317 ஆசனங்களாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. முன்னைய பாராளுமன்றத்தில் அக்கட்சிக்கு இருந்த ஆசனங்களை விடவும் இது 13 ஆசனங்கள் குறைவானதாகும்.

பெரு வெற்றி பெறும் நம்பிக்கையில் பிரதமர் ஒருவர் தேர்தலை நடத்தி ஏற்கெனவே இருந்த சிறு பெரும்பான்மையையும் இழந்து அவமானப்பட்ட அனுபவம் பிரிட்டனின் சர்வஜன வாக்குரிமை யுகத்தில் முன்னொருபோதும் இல்லாதது  என்று லண்டன் கார்டியன் பத்திரிகை கூறியிருக்கிறது. 326 ஆசனங்களைப் பெற்றால் மாத்திரமே எந்தக் கட்சியும் தனியாக அரசாங்கத்தை அமைக்க முடியும். தொழிற்கட்சிக்கு 262 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. முன்னைய பாராளுமன்றத்தில் அக்கட்சி கொண்டிருந்த ஆசனங்களின் தொகையை விடவும் இது 33 ஆசனங்கள் அதிகமானதாகும். தனியாக  அரசாங்கத்தை அமைக்க முடியாத வகையில் எந்தக் கட்சிக்குமே அறுதிப் பெரும்பான்மை இல்லாத ‘தொங்கு பாராளுமன்றம்’ (Hung Parliament) ஒன்றையே பிரிட்டிஷ் மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். கன்சர்வேட்டிவ் கட்சி இப்போது பெற்றிருக்கும் 43 சதவீத வாக்குகள் 2015 பொதுத்  தேர்தலில் பெற்ற வாக்குகளை விடவும் 6 சதவீதம் அதிகமானது என்றபோதிலும் மூன்றாவது கட்சியொன்றின் வாக்குகள் சிதைவடைந்ததனால் தொழிற்கட்சி முன்னைய தேர்தலில் பெற்றதையும் விட 10 சதவீதம் கூடுதலான வாக்குகளை இப்போது பெற்றிருக்கிறது என்று தேர்தல் ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

வட அயர்லாந்து மாகாணத்தில் 10 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கும் அல்ஸ்டர் யூனியனிஸ்டுகள் என்று அழைக்கப்படுகின்ற கடுமையான பழைமைவாதப் போக்குடைய தீவிர வலதுசாரிக்கட்சியான ஜனநாயக ஒன்றியக் கட்சியின் (Democratic Unionist Party) ஆதரவைப் பெற்று அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் தெரேசா மே இறங்கியிருந்தார். இது தொடர்பில் அந்தக் கட்சியின் தலைவி ஆர்லின் ஃபொஸ்டருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த போதிலும் மேற்கு லண்டனில் அடுக்குமாடிக் கட்டடத் தொகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற தீ அனர்த்தம் காரணமாக இறுதி அறிவிப்பு வெளியிடுவதை அவர்கள் பின் போட்டிருந்தார்கள். கன்சர்வேட்டிவ் கட்சியும் ஜனநாயக ஒன்றியக் கட்சியும் கூட்டரசாங்கம் ஒன்றை அமைப்பது சாத்தியமில்லை. முக்கியமான வாக்கெடுப்புகளின் போது பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து அது வீழ்ச்சி கண்டுவிடாதிருப்பதை உறுதி செய்யக் கூடிய (Confidence and Supply agreement  என்று கூறப்படுகின்ற) ஏற்பாடு ஒன்றுக்கே இணக்கம் காணப்படும் என்று செய்திகள் மூலம் அறியக் கூடியதாக  இருக்கிறது. இத்தகைய ஆதரவொன்றை வழங்குவதற்கு பிரதியுபகாரமாக ஜனநாயக ஒன்றியக் கட்சிக்கு என்ன கிடைக்கும் என்பது பற்றி இதுவரை எதுவும் தெரியவில்லை. அக்கட்சியின் ஆதரவைப் பெற்று அரசாங்கத்தை அமைக்கும் தெரேசாமேயின் முயற்சிகளுக்கு  கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் எதிர்ப்பும் இருக்கிறது. வட அயர்லாந்தில் மூன்று தசாப்தங்களாக நீடித்த இரத்தக்களரிக்கு முடிவு கட்டிய பெரிய வெள்ளி சமாதான உடன்படிக்கையை ஜனநாயக ஒன்றியக்கட்சியுடனான தெரேசா மேயின் உத்தேச  உடன்பாடு ஆபத்துக்குள்ளாகிவிடக்கூடும் என்று அயர்லாந்து பிரதமர் எச்சரிக்கை செய்திருக்கிறார். அறுதிப் பெரும்பான்மைப் பலத்துடன் இன்னமும் மூன்று வருடங்களுக்கு அரசாங்கத்தை நடத்தியிருக்கக்கூடிய பிரதமர் தனது கர்வத்தனமான செயலின் விளைவாக இறுதியில் சிறுபான்மை அரசாங்கமொன்றுக்கு (Minority Government) தலைமை தாங்க வேண்டிய விபரீத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். பிரிட்டிஷ் தேர்தல் குறித்து கடந்த வாரம் அரசியல் ஆய்வாளர் ராஜன் பிலிப்ஸ் எழுதிய  கட்டுரையொன்றில் ‘பிரதமர் தெரேசா மே தனது பெரும்பான்மையை இழந்திருக்கிறார். ஜெரமி கொர்பின் பெரும்பான்மைப் பலத்தைப் பெறாவிட்டாலும் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறார்’ என்று சுவாரஷ்யமாகக் குறிப்பிட்டிருந்தார். உண்மையில், பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்களைப் பெற்ற தனிக்கட்சியாக கன்சர்வேட்டிவ் கட்சி விளங்குகின்ற போதிலும், அடிப்படையில் தேர்தலில் அது தோல்வியையே கண்டிருக்கிறது.

Daily-Mirror_10-06-2017_First_p1

ஜனநாயக ஒன்றியக் கட்சியின் ஆதரவுடன் தெரேசா மே அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற போதிலும் அவரது அரசியல் அதிகாரம் மாத்திரம் அல்ல, கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கும் குறுக்கப்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கன்சர்வேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கும் தெரசா மே தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கான பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோரியிருப்பதுடன் தனது செயலின் விளைவாகத் தோன்றியிருக்கும் சிக்கலில் இருந்து கட்சியையும்  நாட்டையும்  மீட்கும் பொறுப்பும் தனதே என்று கூறியிருக்கிறார். ‘எங்களை நானே இந்த  சிக்கலில் மாட்டிவிட்டேன். அதிலிருந்து எங்களை நானே மீட்டெடுக்கப்போகின்றேன்’ என்று கன்சர்வேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கடந்தவாரம் தெரிவித்தார். பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கைகளுக்கு மத்தியிலும், தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க போவதாகச் சூளுரைத்திருக்கும் அவர் பெருமளவுக்கு மாற்றமில்லாத புதிய அமைச்சரவையையும் அறிவித்திருந்தார்.

பிரிட்டிஷ் பொதுத்தேர்தல்கள் தொங்கு பாராளுமன்றத்தை தோற்றுவிப்பது என்பது ஒன்றும் புதியதல்ல. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கு பின்னர் தொடங்கி இதுவரையான காலகட்டத்தில் 5 தொங்கு பாராளுமன்றங்களைப் பிரிட்டன் கண்டிருக்கிறது. 2010 மே (கன்சர்வேட்டிவ் பிரதமர்  டேவிட் கமரூன்), 1974 பெப்ரவரி (தொழிற்கட்சிப் பிரதமர் ஹரோல்ட் வில்சன்), 1929 (தொழிற்கட்சி பிரதமர் ராம்சே மக்டொனால்ட்), 1923 (பிரதமர் ராம்சே மக்டொனால்ட்), 1910 (லிபரல் கட்சி பிரதமர் ஹேபேர்ட் அஸ்குயித்) பொதுத்  தேர்தல்கள் தொங்கு பாராளுமன்றங்களையே  தோற்றுவித்திருந்தன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பில் நடத்தப்பட வேண்டியிருக்கும் பேச்சுவார்த்தைகளிலும் சரி உள்நாட்டு விவகாரங்களிலும் சரி தெளிவானதும் உறுதியானதுமான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டியிருக்கின்ற ஒரு நேரத்தில் பிரிட்டிஷ் மக்கள் குழப்பகரமான முறையில் வாக்களித்திருக்கிறார்கள்.  பொதுத் தேர்தலொன்றை நடத்தவேண்டிய தேவையே  இல்லாத ஒரு நேரத்தில் திடீர்ப் பொதுத்தேர்தலை  பிரிட்டன் மீது திணித்த தெரேசா மேயின்   இறுமாப்புடனான செயலினால் அரசியல் உறுதிப்பாடற்றதொரு நிலை தோன்றக்கூடிய ஆபத்து இருப்பதாக அவதானிகள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அத்தகையதொரு அரசியல் உறுதிப்பாடற்ற நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இவ்வருடத்துக்குள் இன்னொரு பொதுத் தேர்தலை பிரிட்டிஷ் மக்கள் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமோ என்ற கேள்வியும்  எழுகிறது.

பாராளுமன்ற தேர்தல்களை ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையே நடத்துவதைக் கட்டாயமாக்கும் ஏற்பாட்டைக் கொண்ட Fixed – Term Parliaments Act என்ற சட்டம் 2011 ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஒரு அரசாங்கம் தோல்வியடைந்தால் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த முடியும். அதேவேளை,  பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் சபையில் (House of commons) மூன்றில் இரண்டு பெரும்பான்மை   உறுப்பினர்கள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டுமென்ற  தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கும் அச்சட்டம்  இடமளிக்கிறது. இவ்வருடத்திற்குள் இன்னொரு பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டுமானால், தெரேசா மேயின் புதிய அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்படவேண்டும் அல்லது பாராளுமன்ற  உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் புதிய  தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்ற தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றவேண்டும். அவ்வாறு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டுமானால் கன்சர்வேட்டிவ் கட்சியினதும் தொழிற்கட்சியினதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவு தேவை.  தெரேசா மேயின் அரசாங்கம் புதிய தேர்தலை நடத்துவதற்காக பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு கடந்த ஏப்ரலில் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்க்கட்சிகளும் ஆதரித்து அவருக்கு  ஒத்துழைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் நடைமுறையில் இருக்கும் இந்தச் சட்டத்தை அடியொற்றியே இரு வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தத்தில் பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பிலான புதிய ஏற்பாடு புகுத்தப்பட்டது போலும். பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்த பிறகு அதைக் கலைத்து புதிய தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் முன்னர் ஜனாதிபதிக்கு இருந்தது. புதிய ஏற்பாட்டின்  பிரகாரம் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு நான்கரை வருடங்கள் கடந்த பின்னரே ஜனாதிபதியினால் அதைக் கலைக்க முடியும். நான்கரை வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமென்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

jeremy

இது இவ்வாறிருக்க, ஜெரமி கொர்பினின் தலைமையின் கீழ்  தொழிற்கட்சி அண்மைய எதிர்காலத்தில் ஆட்சியதிகாரத்துக்கு வருவது சாத்தியமில்லை என்று அவரின் தலைமைத்துவத்தின் மீது கட்சிக்குள் அதிகரித்து வந்த அதிருப்தியைப் போக்குவதற்கு இத்தேர்தல் அவருக்கு  உதவியிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியான உடனடியாகவே தனது தொழிற்கட்சி சிறுபான்மை அரசாங்கமொன்றை அமைக்கத் தயாராயிருக்கிறது என்று கொர்பின் அறிவித்தார். ஆனால், அதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை. விரைவாகவே பிரிட்டன் இன்னொரு பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்குமென்று அவர் நம்புகிறார். அடுத்த பிரதமராக தன்னால் வர முடியுமென்று கொர்பின் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும் இத்தேர்தல் உதவியிருக்கிறது. தனது கட்சி தோல்வியடைந்து விட்டது என்று கூறப்படுவதை கொர்பின் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். வேண்டுமானால் வெற்றி பெறவில்லை என்று மாத்திரம் சொல்லிக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஒருவருடத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட பிரெக்சிட் சர்வஜன வாக்கெடுப்பு பிரிட்டிஷ் சமூகத்தில் இருக்கின்ற  ஆழமான பிளவை வெளிக்காட்டியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறக்கூடாது என்று 48 சதவீதமானவர்கள் வாக்களித்திருந்தார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் எதிர்காலம் என்ற ஒரேயொரு அம்சத்தை மாத்திரம் முன்னிறுத்தியதாகவே அந்தச் சர்வஜன வாக்கெடுப்பு அமைந்தது.

ஆனால், பொதுத்தேர்தல் அத்தகையதல்ல. நாட்டு மக்களின்  மனநிலையை தெரேசா மே தவறாகப்  புரிந்துகொண்டிருக்கிறார் என்றே கூறவேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்த வேண்டியிருக்கும் பேச்சுவார்த்தைகளில் தனது கரத்தைப் பலப்படுத்துவதற்காக பிரமாண்டமான பாராளுமன்றப் பெரும்பான்மைப் பலத்தைப் பெறும் நோக்கில் தேர்தலை நடத்திய அவர் ஏதோ சர்வஜனவாக்கெடுப்பின் போது கொண்டிருந்த உணர்வுகளின் அடிப்படையிலேயே மக்கள்  வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்த்தார் போலும். பிரெக்சிட்டுக்கு எதிராக வாக்களித்தவர்களை தேசாபிமானம் இல்லாதவர்களாக வர்ணித்தே தெரேசா மேயும் அவரை ஆதரித்த வலதுசாரி ஊடகங்களும் பிரசாரத்தை மேற்கொண்டிருந்ததாக  அரசியல் விமர்சகர்கள் குறை கூறுகிறார்கள். கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தின் சிக்கனத் திட்டங்கள், பொதுச் செலவினங்களின் குறைப்பு, மக்களின்  பொருள் நுகர்வுச் சக்தியின் வீழ்ச்சி ஆகியவை காரணமாக பெரும்பான்மையான வாக்காளர்கள் விரக்தியடைந்திருந்தார்கள்.

பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்கள் என்று வரும்  போது பிரிட்டிஷ் மக்கள் மத்தியில் பாரம்பரியமாக தொழிற்கட்சியை விடவும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கே பெருமளவு ஆதரவு இருந்து வந்திருக்கிறது. அண்மைக்காலமாக பிரிட்டனில் தீவிரமடைந்திருக்கும்  பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக தங்கள்  பாதுகாப்பு குறித்து பெரும் அச்சமடைந்திருக்கும் மக்கள் கன்சர்வேட்டிவ் கட்சியின் பக்கமாக பெருமளவுக்கு சாய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. பரந்தளவிலான பெரிய ஐரோப்பாவின் ஒரு அங்கமாக பிரிட்டனை  நோக்குகிறவர்களும் எஞ்சிய  ஐரோப்பாவில் இருந்து தனித்துவமானதாக பிரிட்டனை நோக்குகிறவர்களுமாக தங்களது நாட்டுக்கென்று இரு மாற்று நோக்குகளைக் கொண்டவர்களாக அந்தச் சமூகம் பிளவுற்றிருக்கிறது. கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே பிரெக்சிட் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதாக நான்கு வருடங்களுக்கு முன்னர் டேவிட் கமரூன் வாக்குறுதியளித்தார். இப்போது கூட தெரேசா மேயும்  பிரெக்சிட்டில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதற்கான முக்கிய காரணம் கட்சிக்குள் பிளவு  ஏற்படாதிருப்பதை உறுதி செய்வதேயாகும். ஆனால், நாட்டு மக்களின் உணர்வுகளில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்க  வாய்ப்புண்டு. பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாக வைத்து நோக்கும்போது மீண்டும் ஒரு சர்வஜனவாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பிரிட்டன் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கே பெரும்பாலும்  வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியும். பிரெக்சிட் தொடர்பில் இரு பிரதான கட்சிகளுக்குள்ளும் கணிசமான பிளவு இருக்கிறது என்பதும் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும்.

தேர்தலையடுத்து புதிதாக தோன்றியிருக்கும் உறுதிப்பாடற்ற சூழ்நிலையில் பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளை முன்னர் திட்டமிட்டிருந்ததுபோல  கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் தெரேசா மேயினால் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது போன்று நாளைய தினம் அந்தப் பேச்சுவார்த்தைகள் பிரசெல்ஸ் நகரில் ஆரம்பிக்கப்படக்கூடிய வாய்ப்பு இல்லை. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை விரும்பாத ஸ்கொட்லாந்தில் இருந்து 13 கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் ஆதரவை  இழக்காத முறையில் பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளை மிகவும் ஜாக்கிரதையாக நடத்த வேண்டிய நிர்ப்பந்தமும் தெரேசா மேக்கு ஏற்படும்.

snp

அதேவேளை, ஸ்கொட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து போவதா?  இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதற்காக இன்னொரு  சர்வாஜனவாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய வலிமையை ஸ்கொட் தேசியவாதிகள் இப்போது இழந்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். 2014 சர்வஜன வாக்கெடுப்பில் பெரும்பான்மையான ஸ்கொட்லாந்து மக்கள் ஐக்கிய இராச்சியத்துடன்  இணைந்திருப்பதற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தார்கள். கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் 54 ஆசனங்களைக் கொண்டிருந்த முதலமைச்சர் நிக்கலோ ஸ்டர்ஜன் தலைமையிலான ஸ்கொட்லாந்து தேசியக் கட்சிக்கு இத்தடவை 35 ஆசனங்களே கிடைத்திருக்கின்றன. அக்கட்சியின் தாபக தலைவரான முன்னாள் முதலமைச்சர்  அலெக்ஸ் சல்மாண்டும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.  ஸ்கொட்லாந்து சுதந்திரம் தொடர்பான இரண்டாவது சர்வஜனவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கக்கூடிய ஒன்றாகவே தேசியக்கட்சி பாராளுமன்றத் தேர்தலை நோக்கியது. ஆனால், மக்கள் அந்த எதிர்பார்ப்பை நிராகரித்திருக்கிறார்கள். குடியேற்றவாசிகளுக்கும் சிறுபான்மையினத்தவர்களுக்கும் எதிரான தீவிரவாத  ஐக்கிய இராச்சிய சுதந்திரக்கட்சிக்கு (United Kingdom Independence Party) இத்தடவை ஒரு ஆசனம்கூட கிடைக்காமல்போனது தேர்தலின் முக்கியமான அம்சங்களில் ஒன்று.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *