Search
Monday 18 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புதிய அரசியலமைப்பும் தமிழ் தலைமையும்

புதிய அரசியலமைப்பும் தமிழ் தலைமையும்

-நரேன்-

19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே அதாவது இந்த நாடு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்த இறுதிக் காலப்பகுதியில் விடுதலைப் போராட்டம் கூர்மையடைந்திருந்த நிலையில் சிங்கள மேலாதிக்க வாதமும் தலைதூக்கத் தொடங்கிவிட்டது. அதுவரை காலமும் இந்நாட்டின் சமபங்காளிகளாகவிருந்த தமிழ் தேசிய இனமும், சிங்கள தேசிய இனமும் பிரிந்து நிற்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருந்தது.

வடஇந்தியாவில் அசோக சங்கரவர்த்தி கலிங்கத்தை வென்ற பின்னரே பௌத்திற்கு மாறினார். அவருடைய புதல்வர்களான மஹிந்ததேரர், சங்கமித்தை இலங்கை வந்து பௌத்தத்தை பரப்பினர். இதனையே மகாவம்சம் கூறுவதுடன் இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்களும் சிரேஸ்ட பௌத்த துறவிகளும் ஏற்றுக் கொண்டுமுள்ளனர். இதற்கு முன்னர் இங்கு மக்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தமக்கென்று ஒரு கலாசாரத்தையும், மொழியையும், வாழ்விடத்தையும், வழிபாட்டுமுறைகளையும் பேணி வந்திருக்கின்றார்கள். அத்தகையவர்கள் நாகர்கள் என்றும், இயக்கர்கள் என்றும் வரலாற்று அறிஞர்கள் ஆய்வு செய்து கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர். அவர்கள் பேசிய மொழி தமிழ் என்பதும் அவர்கள் கடைப்பிடித்த மதம் இந்து சமயத்துடன் தொடர்புடையது என்றும் அவர்கள் நிரூபித்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் பௌத்தம் என்பது இந்து மதத்தின் சில கொள்கைகளை மறுதலித்து உருவாக்கப்பட்ட ஒரு புதிய மதம். புத்தர் இந்து மதத்தின் சீர்திருத்த வாதியாக இந்தியாவில் பார்க்கப்படுகிறார். ஆக, இந்து மதத்தின் பின்னாலேயே பௌத்த மதம் உருவாகியிருக்கிறது என்பது திண்ணம்.

இந்த நாட்டில் மதம் என்று பார்கின்ற போது இந்து மதத்தை தவிர ஏனைய அனைத்து மதங்களுமே இறக்குமதி செய்யப்பட்டவை தான். மொழியைப் பொறுத்தவரையில் இந்த மண்ணில் நன்கு அறியப்பட்ட மொழி தமிழ் மொழியே. இப் பத்தியின் நோக்கம் மதத்தின் தோற்றுவாயைப் பார்பதோ அல்லது குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு வக்காளத்து வாங்குவதோ அல்ல. இன அடிப்படைவாதிகள் தங்களுக்கு துணையாக மதத்தை கொண்டு வருவதால் இந்த வரலாற்று பின்னனியை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ஆக, அந்நிய ஆக்கிரப்பில் இருந்தும், ஏகாதிபத்திய அடிமைத்தனத்தில் இருந்தும் இந்த நாட்டை விடுவிப்பதற்கு அனைத்து மக்களுமே பங்களிப்புக்களை செய்து வந்திருக்கின்றனர். குறிப்பாக அந்நிய ஆட்சி முறையின் கீழும் தமிழர்களின் இறைமை என்பது மதிக்கப்பட்டிருந்தது. நிர்வாக வசதிக்காகவே நாடு ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. விடுதலை நெருங்க நெருங்க ஏனைய சமூகத்தவர்களின் உதவிகள் தேவையில்லை என்ற நிலைக்கு வந்த சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்க சக்திகள் தமிழ் தேசிய இனத்தை தனது காலடிக்குள் வைத்திருப்பதற்கு கங்கணம் கட்டிச் செயற்பட்டன. நாடு விடுதலையடையும் தறுவாயில் நடைபெற்ற ஒரு தேர்தலில் தமிழ் தேசிய இனம் ஒட்டுமொத்த விடுதலையை வலியுறுத்தி அந்த தேர்தலை புறக்கணித்திருந்த வேளையில், அதற்கு இணங்குவதாக தெரிவித்த சிங்கள தேசியம் பின்புறமாக அந்த தேர்தலில் பங்கு பற்றி பிரித்தானியருக்கு தமது அடிமை விசுவாசத்தை காட்டியிருந்தது. இந்த விசுவாசத்தின் பயனாக தமிழ் மக்களின் இறைமையும் சேர்த்து சிங்கள தலைமைகளிடம் சுதந்திரம் என்ற பேரில் பிரித்தானியர் கையளித்து சென்றனர்.

சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதனை இன்றைய ஆட்சியாளர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் மறந்த விடயம் ஒன்றை மட்டுமே நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இந்த நாட்டின் சிங்கள மொழி பேசுபவர்களும், தமிழ் மொழி பேசுபவர்களும் சம பங்காளிகள் என்பதை முதலில் ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். அந்த உண்மையை எவ்வித தயக்கமும் இன்றி அந்தந்த மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இதுவரை காலமும் பெரும்பான்மை வாதம் இன்னொரு தேசிய இனத்திற்கு துரோகம் இழைத்திருக்கின்றது என்ற உண்மையையும் அதற்கு தீர்வு காணவேண்டியது எமது கடமை என்பதையும் எமக்குள் அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு கைகோர்த்து வாழ்வதே இந்த நாட்டை தேச பக்தியுடன் தேசிய ஒருமைப்பாட்டுடன், நல்லிணக்கத்துடன் அபிவிருத்தியை நோக்கி முன்னேற்றிச் செல்ல முடியும் என்ற கருத்தை ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் தெளிவாகவும் அனைத்து மக்களுக்கும் சொல்ல வேண்டும்.

ஆனால், ஒருபுறம் அரசியல் தீர்வு தொடர்பில் எத்தகைய முடிவுகளும் எட்டப்படவில்லை என்று கூறிக் கொண்டு மறுபுறத்தில் இது கடைசிப் பேரூந்து கொடுப்பதை வாங்கிக் கொண்டு பிரச்சனையை தீர்ப்பதற்கு தமிழ் தரப்பு முன்வர வேண்டும் என்றும், ஒற்றையாட்சியா சமஸ்டியா என்ற சொற்களில் தங்காமல் பொருளடக்கத்தை பார்க்க வேண்டும் என்றும், ஒற்றையாட்சிக்குள் அதியுட்ச பட்ச அதிகார பகிர்வு என்றும் அரசாங்க தரப்பு கூறுகின்றது. மறுபுறத்தில் தமிழ் தரப்பு ஒற்றையாட்சிக்குள் தீர்வு சாத்தியமில்லை என்றும், இறையாண்மை பகிரப்பட வேண்டும், இணைந்த வடக்கு கிழக்கில் ஒரு சுயாட்சியையே கோரி நிற்கின்றோம் என்றும் பேசிக் கொண்டிருக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மறுபுறத்தில் இறைமையை பகிரவேண்டிய அவசியமில்லை என்றும், நாங்கள் அவ்வாறு கோரவில்லை என்றும், இந்த அரசாங்கம் சரியாக சென்று கொண்டிருக்கின்றது, குழப்ப வேண்டாம் என்றும் குழப்பிய நிலையில் இருந்து அறிக்கைகளை வெளியிடுகின்றது.

ஆனால், நிலமையை குழப்ப வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொள்கிறது. இதைத் தான் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி ஒன்றின் தலைவரான சுரேஸ் பிறேமச்சந்திரன் குழம்பியது யார், குழப்புவது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் என்ன காரணத்திற்காக நாட்டின் அனைத்து தரப்புக்களும் அரசியல் தீர்வு தொடர்பில் சுயமுரண்பாட்டுக் கருத்துக்களை வெளியிடுகின்றனர் என்பது மிக கேள்வியாக எழுந்துள்ளது.

நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே தமிழ் மக்கள் தமது இறைமையை பாதுகாக்க வேண்டும் என்றும் தமது இறைமை தம்மிடம் இருப்பதாகவே கருதியே வாக்களித்து வந்துள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் கூட அதையே கூறுகின்றது. கூட்டமைப்பின் ஒருசாரர் குறிப்பாக தமிழரசுக் கட்சியின் வெளியுறவுச் செயலாளர் நாங்கள் இறைமையை பகிரச் சொல்லிக் கேட்கவில்லை என்று கூறியிருக்கிறார். இது அவர் சார்ந்திக்கும் கட்சிக்கும், தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கும் முரணாக இருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

கருமங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு எதனையும் வெளியில் சொல்ல முடியாது என கூறி வந்த கூட்டமைப்பின் தலைவர் இப்பொழுது தீர்வு குறித்து முரண்பட்ட கருத்துக்களை கூறிவருவதற்கான காரணம் என்ன என்று தமிழ் மக்கள் இடத்தில் பெரிய கேள்வி எழுந்திருக்கின்றது. இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து சமூக அரசியல் கட்சி தலைவர்களிடமும் ஒரு உறுதியற்ற நிலைப்பாட்டை காணமுடிகிறது. சிங்களத் தலைமையைப் பொறுத்தவரையில் தமிழ் தேசிய இனத்தை நாம் ஒடுக்கி வந்தமையை ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் அதை நிவர்த்தி செய்யும் வகையிலும், அவர்களது நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையிலும் ஒரு சமஸ்டி அடிப்படையிலான தீர்வை கண்டு தேசபக்தியை கட்டியயெழுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு அவர்களால் இன்னமும் வரமுடியாத நிலமையை காணமுடிகிறது. தமிழ் தரப்பை பொறுத்தவரை மக்கள் கொடுத்த ஆணையை சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்வதில் ஒரு ஆளுமையற்ற தன்மை நிலவுகிறது. இதன் விளைவாகவே ஒரு ஸ்திரமான விடயத்தை இவர்களால் முன்வைக்க முடியாமலும் உள்ளது.

தட்டிக் கேட்டு பெற்றுக் கொள்வதே விடுதலையும் சுததந்திரமும். கிடைப்பதைப் பெற்றுக் கொள்வது வெறும் சலுகைகளாகவே இருக்க முடியும். பிரித்தானியர்களின் கால்களில் விழுந்து சிங்கள தேசியம் ஒட்டுமொத்த இறைமையையும் கையகப்படுத்திக் கொண்டது. 65 வருடத்திற்கு மேலாக தமிழ் தலைமை தனது உரிமைகைளை தட்டிக்கேட்டு பெற்றுக் கொள்ளப் போகிறதா, சமரசம் செய்து கொண்டு சலுகைகளை பெற்றுக் கொள்ள போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *