Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பொருளாதார மத்திய நிலையம்: தென்னிலங்கை அழுத்தங்களுக்கு அடிபணிவாரா சம்பந்தன்?

பொருளாதார மத்திய நிலையம்: தென்னிலங்கை அழுத்தங்களுக்கு அடிபணிவாரா சம்பந்தன்?

– சதுர்வேதி-
வவுனியாவில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கான இடத்தினைத் தெரிவு செய்வதில் அரசியல்வாதிகளுக்கிடையில் இடம்பெற்றுவருகின்ற நேர்முக மற்றும் மறைமுகமான முரண்பாடுகள் உச்சக் கட்டத்தினை எட்டியுள்ளது. முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிலரும்  வடக்கிற்கான பொருளாதார வலயம் வவுனியாவின் ஓமந்தை பிரதேசத்தில் அமைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்கள் சிலரும் மற்றும் அவர்களுக்கு ஆதரவான சில பாராளுமன்ற உறுப்பினர்களும் இப் பொருளாதார வலயம் தாண்டிக்குளத்தில் அமைய வேண்டும் என அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.

அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான வாக்குவாதங்கள், ஊடக அறிக்கைகள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்ட பேரணிகள் என ஏட்டிக்குப் போட்டியாக பல்வேறு விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கிடையில் இவ் இடப்பிரச்சனையில் தீர்வு எட்டப்படாவிட்டால் பொருளாதார வலயத்தினை வடக்கிற்கு வெளியே அநுராதபுரம் மாவட்டத்துக்கு கொண்டு சென்று விடுவோம் என மத்திய அரசாங்கத்தினைச் சேர்ந்த சிலர் மிரட்டல் விடுத்த நிலையில் எங்கே எமக்கு வந்த அபிவிருத்தி திட்டம் வெளியே போய்விடுமோ என வடக்கை சேர்ந்த பொது மக்களும் விவசாயிகளும் அஞ்ச தொடங்கியுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைவது பொருத்தமாக அமையும் முன்மொழியப்பட்டுள்ள ஒவ்வொரு இடத்திலும் காணப்படக் கூடிய சாதக பாதக நிலைமைகள் என்ன என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தம்புள்ளயில் காணப்படுவதைப் போன்று வடக்கிற்கு என ஒரு பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப் பட வேண்டுமாக இருந்தால் அதற்கு மிகப் பொருத்தமான இடம் மாங்குளம் அல்லது அதற்கு அண்மைய பிரதேசமாக காணப்படுகின்றது. ஏனெனில் புவியியல் ரீதியாக வடக்கின் மையப்பகுதியில் இது காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தினைத் தவிர வடக்கின் ஏனைய நான்கு மாவட்டங்களான கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா போன்றவற்றிலிருந்து ஐம்பது கிலோமீற்றர் தூரத்தில் மாங்குளம் காணப்படுகின்றது. இதனால் அனைத்து மாவட்ட விவசாயிகளும் தமது விளை பொருட்களை குறைந்த தூரப்பிரயாணத்தின் மூலம் சந்தைப்படுத்தக் கூடிய வாய்ப்புக் கிடைக்கின்றது. இது தவிர வடக்கின் பிரதான விளை நிலங்களான விசுவமடு, முத்தையன்கட்டு, பாண்டியன்குளம் போன்ற பிரதேசத்திலிருந்து ஒப்பீட்டளவில் சமதூரத்தில் காணப்படுவதால் யாருக்கும் பாதிப்பில்லாத அனைவருக்கும் நன்மை பயக்கக்கூடிய இடமாக காணப்படுகின்றது. இது தவிர வட மாகாண சபை தனது அலுவலகங்களை மாங்குளம் நோக்கி நகர்த்துகின்ற எதிர்கால திட்டம் ஒன்றினைக் கொண்டிருப்பதால் வடக்கின் பொருளாதார மையத்தினையும் மாங்குளத்தில் உருவாக்குவது மிகவும் சிறந்த ஒன்றாகக் காணப்படும்.

நாம் விரும்பியோ விரும்பாமலோ எங்கள் வாழ்வின் ஒவ்வொரு விடயங்களையும் தீர்மானித்து வருகின்ற தென்னிலங்கை  அரசியல் சக்திகள் இத்தகைய விடையங்களினை எல்லாம் சிந்தித்து தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. துரதிஷ்டவசமாக எமது தமிழ் அரசியல் தலைமைகள் கூட ஆழமாக சிந்தித்து நீண்ட கால நோக்கில் நலன் தரக் கூடிய அரசியல் மற்றும் பொருளாதார செயல் திட்டங்களை முன்னெடுக்க இயலாதவர்களாக அல்லது விரும்பாதவர்களாக காணப்படுகின்றனர்.

எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது எண்ணம்; பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்தோமா! தீர்வை அற்ற வாகன அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொண்டோமா! அதனை இரண்டு கோடி ரூபாய்க்கு விற்றோமா! என்பதில் தான் இருக்கின்றதே தவிர மக்களின் அபிவிருத்தி திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. இதன் விளைவுகளில் ஒன்று தான் கடந்த வரவு செலவு திட்டத்தில் வடக்கின் பொருளாதார மத்திய நிலையம் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்தார். அப்போதும் வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இது குறித்து அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. தூர  நோக்கற்ற இவ் இடத்தேர்வு பற்றி எவரும் வாய் திறக்கவில்லை. இறுதியில் வவுனியா என்பது உறுதியானது. இப்போது வவுனியாவில் எங்கு அமைப்பது என்பதில் தான் குடும்பி பிடிச் சண்டை.

economic zone vavuniya

மத்திய அரசு சார்ந்த அமைச்சர்களில் சிலர், பாராளுமன்ற உறுப்பினர்களில்  சிலர் மற்றும் அவர்கள் சார்ந்த அரசியல்வாதிகள் ஆகியோர் பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என பல்வேறு விதத்தில் அழுத்தங்கள் கொடுத்து வருகின்றனர். இந் நிலையில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்   சிலர்  மத்திய அரசு சார்ந்த அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக திரை மறைவில் மறைமுகமாக பல்வேறு அழுத்தங்களை கொடுத்தது வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக ஏற்கனவே திட்டமிட்டவாறு மாகாண சபைக் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் மத்திய அமைச்சர் ஒருவரின் தொலைபேசி மூலமான அழுத்தத்தை சுட்டிக்காட்டி தாண்டிக்குளத்துக்கு சம்மதிக்காது விட்டால் பொருளாதார மத்திய நிலையத்துக்கான நிதி வடக்குக்கு வெளியே சென்று விடும் என தெரிவித்து முதலமைச்சர் இல்லாத வேளையில் வட மாகாண சபையில் ஒரு தீர்மானத்தை மிகத் தந்திரமான முறையில் நிறைவேற்றினார்கள். தற்போது வட மாகாண சபையின் அத் தீர்மானத்தை சுட்டிக்காட்டி தண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைக்க பல்வேறு அழுத்தங்களினை கொடுத்துவருகின்றனர்.

தாண்டிக்குளம் பகுதியில் ஏற்கனவே பல்வேறு காணிகளையும்  முதலீட்டுத் திட்டங்களினையும் கொண்டுள்ள வடபகுதி அரசியல்வாதிகளில் சிலர் பொருளாதார மத்திய நிலையத்தின் வருகையால் அவற்றின் பெறுமதி பன்மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்த்தே இவ்வாறு அழுத்தங்களினைப் பிரயோகிக்க உதவுகின்றனர் என பொதுமக்கள் தரப்பில் பேசிக்கொள்வதினை அவதானிக்கக்கூடியதாக இருந்தது .

தாண்டிக்குளம் பிரதேசத்தினை தெரிவு செய்வதில் இருக்கக்கூடிய பிரச்சனை என்னவென்றால் அப் பிரதேசத்தில் ஏற்கனவே விவசாயக் கல்லூரி ஒன்றும் விதை நெல் பண்ணை ஒன்றும் காணப்படுகின்றது. விதை நெல் பண்ணை காணப்படுகின்ற காணியின் ஒரு பகுதியை தற்போது பொருளாதார மத்திய நிலையத்துக்காக விடுவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இதனால் வடக்குக்கான விதை நெல் ஆராட்சி மற்றும் விதை நெல் உற்பத்தி போன்றன பாதிப்படையும். அதுதவிர புதிய பொருளாதார நிலையத்தினால் ஏற்படக்கூடிய சூழல் மாற்றம் விதை நெல் உற்பத்தியினை முற்றாக பாதித்துவிடும் அபாயம் உள்ளது. மேலும் அருகில் விவசாயக் கல்லூரி காணப்படுகின்றது  புதிய பொருளாதார நிலையத்தின் வருகை அதன் கற்றல் செயற்பாடுகளைப் பாதிக்கும் என மாணவர் ஒருவர் அண்மையில் கவலை வெளியிட்டிருந்தார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக தாண்டிக்குளம் வவுனியா நகருக்கு அண்மையில் உள்ள பகுதி இதனால் காலை வேளைகளில் ஒப்பீட்டளவில் அதிக போக்குவரத்து காணப்படும் இடமாக காணப்படுகின்றது. மேலும் வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தினை தாண்டிக்குள பிரதேசத்துக்கு மாற்றுவதற்காக பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு இன்னமும் பாவிக்கப்படாமல் உள்ளது. எதிர்காலத்தில் இப் பேருந்து நிலையம் பாவிக்கப்படும் போது இப் பிரதேசம் இன்னமும் போக்குவரத்து நெருக்கடி நிறைந்ததாக மாறும். இவ்வாறான நிலையில் புதிதாக அமைக்கப்பட இருக்கின்ற பொருளாதார மத்திய நிலையத்தினை ஏன் இப்படியான பாதகங்கள் நிறைந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பதே எம்முள் எழுந்துள்ள கேள்வி?

புதிய பொருளாதார மத்திய நிலையத்தில் வடக்கில் விளைவிக்கப்படும் மரக்கறி வகைகள் மற்றும் பழ வகைகளை விவசாயிகள் நேரடியாக மொத்த விற்பனை செய்யக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புள்ளிவிபரங்கள் படி மரக்கறி வகைகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலே தான். இம் மாவட்டங்களினை சேர்ந்த விவசாயிகள் தமது விளை பொருட்களினை சந்தைப்படுத்த  மிக நீண்ட தூரம் பிரயாணிக்க வேண்டிவரும். எனவே  புதிய பொருளாதார மத்திய நிலையத்தினை வவுனியா மாவட்டத்தில் அமைப்பதாக இருந்தால் கூட எவ்வளவுக்கு எவ்வளவு தூரம் வவுனியாவின்  வடக்கு பகுதியினை நோக்கி நகர்த்தி சென்று அமைக்கின்றோமோ அவ்வளவு தூரத்துக்கு வடக்கின் அனைத்தது விவசாயிகளுக்கும் நன்மை பயப்பதாக அமையும். இந்த அடிப்படையில் பார்க்கும் போது வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுவதைப் போன்று ஓமந்தையில் அமைப்பது வடபகுதியின் அனைத்து விவசாயிகளுக்கும் நன்மையளிப்பதாக அமையும்.

இங்கு எழுகின்ற ஆதங்கம் என்னவென்றால் இப்போது கூட தமிழரசுக் கட்சியை சேர்ந்த வடக்கின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள்  மத்திய அரசு சார்ந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அடாவடித்தனம் சார்ந்த அழுத்தங்கள் குறித்து அலட்டிக்கொள்ளாத  தெரிந்தும் தெரியாதது மாதிரியான மதில் மேல் பூனைகளாக காணப்படுகின்றனர்.

புதிய பொருளாதார மத்திய நிலையத்தினை ஓமந்தையில் அமைப்பது என்பது ஒப்பீட்டளவில் வடக்கின் அனைத்து விவசாயிகளுக்கும் நன்மையளிக்கும் என்றறிந்தும்  கூட வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணைந்து அவருக்காதரவாக குரல் கொடுக்க முன்வராத வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களது நிலையினை என்னவென்று சொல்வது.

ஆயினும் இப் பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வட மாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களினையும் நாளை ஞாயிற்றுக்கிழமை அழைத்துள்ளதாக அறியமுடிகின்றது. தென்னிலங்கை அரசு சார்ந்த அரசியல்வாதிகளின் அழுத்தங்களிற்கும் மிரட்டல்களுக்கு அடிபணியாது ஒப்பீட்டளவில் வடக்கின் அனைத்து விவசாயிகளுக்கும் நன்மையளிக்கக்கூடிய ஓமந்தை பிரதேசத்தில் புதிய பொருளாதார மத்திய நிலையத்தினை அமைக்குமாறு தீர்மானம் எடுத்து அதனை மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவாரா இல்லை மென்வலு அரசியல் தந்திரோபாயம் எனக்கூறிக் கொண்டு தென்னிலங்கை சார் அரசியல்வாதிகளின் அழுத்தங்களிற்கு அடிபணிந்து தாண்டிக்குளத்தினையே தாமும் வழிமொழிந்து வடக்கு விவசாயிகளை இடருக்குள் தள்ளுவாரா என்பதை நாளை அறியலாம். பொறுத்திருப்போம் நம்பிக்கையுடன்…


One thought on “பொருளாதார மத்திய நிலையம்: தென்னிலங்கை அழுத்தங்களுக்கு அடிபணிவாரா சம்பந்தன்?

  1. தமிழ் அழகம்

    பொருளாதார மத்திய நிலையம் என்ற தலைப்பில் எழுதுகின்றோம் என்று சொல்லிக்கொண்டு முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சி அரசியலை எழுதியிருக்கின்றீர்கள், உங்கள் பத்தியில் வரிக்கு வரி மிகக் கவனமாக இனவாத்தை குறிப்பாக சிங்கள் இனவாதத்தை விதைத்திருக்கின்றீர்கள். இது ஒருசில தமிழ் எழுத்தாளர்களின் இரத்தத்தில் ஊறி விட்ட விடயம். பொருளாதார மத்திய நிலையம் வெற்றியடைவதற்கான காரணிகள் குறித்து நீங்கள் சற்றும் கவனம் செலுத்தவில்லை. உங்களுடைய கருத்துக்களில் மறைந்திருக்கின்ற உண்மை என்னவென்றால் “தமிழர் நாம் தோற்றுவிட்டோம், சிங்களவனுக்கு கிட்டேயும் சென்று நிற்க மாட்டோம், நின்றால் இன்னும் இன்னும் தோற்போம்” என்பதாகவே இருக்கின்றது

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *