Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

போர் வெற்றி விழாவும் நல்லிணக்கமும்

போர் வெற்றி விழாவும் நல்லிணக்கமும்

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஏழு வருடங்கள் பூர்த்தியடையும் பின்னணியில், ஒருபுறம்   போர் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தென்னிலங்கை தயாராகிக்கொண்டுள்ளது. மறுபுறத்தில் போரில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர வடக்கு கிழக்கு மக்களும் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த ஏழு வருட காலப் பகுதியில் கூட, இரு தரப்பினருக்கும் இடையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட்டுவிடவில்லை என்பதையும், துருவமயப்பட்ட நிலை இன்னும் தொடர்கின்றது என்பதையும்தான் இந்த நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த நிலையை முடிவுக்குக்கொண்டுவந்து உண்மையாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் எதனையாவது செய்யுமா என்ற கேள்வியுடனேயே நாம் அடுத்த வாரத்தில் இடம்பெறும் நிகழ்வுகளுக்குள் பிரவேசிக்க வேண்டியிருக்கின்றது.

போர் வெற்றியை முன்னைய மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் செய்ததைப்போல பாரிய வெற்றிக்கொண்டாட்டமாகச் செய்யப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. ஆனாலும், இதனை நினைவுகூரும் வரையில் பாராளுமன்றக் கட்டடப்பகுதியில் இராணுவ அணிவகுப்பு ஒன்று நடைபெறவிருக்கின்றது. போர் வெற்றிக் கொண்டாட்டங்களை ஒரேயடியாக கைவிட்டுவிடுவதற்கு அரசாங்கம் தயாராகவில்லை என்பது இதன்மூலம் உறுதியாகின்றது. இதனைக்கூட செய்யவில்லை என்றால், சிங்கள கடும்போக்காளர்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போகலாம் என்பது அரசாங்கத்துக்குத் தெரியும். இந்தநிலையில் போர் வெற்றி அணிவகுப்பு ஒன்று இடம்பெறப்போகின்றது. போரில் கொல்லப்பட்ட படையினரும் இங்கு நினைவுரப்படவுள்ளார்கள்.

தமிழர்களைப் பொறுத்தவரையில் ‘மே 18’ என்பது வழமைபோல பதற்றம் நிறைந்த ஒன்றாகத்தான் இவ்வருடமும் வருகின்றது. “போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவு கூரலாம், விடுதலைப் புலிகளை நினைவுகூர முடியாது. அவ்வாறு நினைவுகூர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன அறிவித்திருப்பது இந்த பதற்ற நிலையை மேலும் அதிகப்படுத்தியிருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இவ்வாறான ஒரு நிலைப்பாட்டைத்தான் அவர்கள் எடுப்பார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். வடக்கில் புலிகள் நினைவுகூரப்பட்டால், தெற்கில் மகிந்த ராஜபக்‌ஷ எழுச்சி பெறுவார் என்ற அச்சம் அரசாங்கத்துக்குள்ளது. அரசாங்கத்தின் இன்றைய ஒவ்வொரு நடவடிக்கையுமே மகிந்த ராஜபக்‌ஷ எழுச்சிபெற்றுவிடக்கூடாது என்பதை நோக்கியதாகவே உள்ளது.

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரண்டு தடவைகள் ஆயுதப் புரட்சியை ஜே.வி.பி. மேற்கொண்டிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இதன்போது, அரசியல் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டமையையும் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். இந்தக் கிளர்ச்சி அரசாங்கத்தினால் கொடூரமாக முறியடிக்கப்பட்டபோது, கொல்லப்பட்ட தமது தலைவரையும், உறுப்பினர்களையும் ஜே.வி.பி. வருடாந்தம் நினைவுகூருகின்றது. ஜே.வி.பி. மீதான தடையும் நீக்கப்பட்டு அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்ளவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஜே.வி.பி.யும் சரி புலிகளும் சரி இரண்டு தரப்பினருமே ஆயுதங்களைக் கையில் எடுத்து அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றவர்கள்தான். ஆனால், ஜே.வி.பி.யினர் சிங்களவர்கள் என்பதால்தான் அவர்களுக்கு தம்மவர்களை நினைகூர அனுமதி வழங்கப்படுகின்றதா என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் எழுதுவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஏழு வருடங்கள் பூர்தியாகும் நிலையில் கூட, இறந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செய்ய முடியாத நிலையில், ஒரு இனம் இருக்கும்போது நல்லிணக்கம் என்பது எப்படிச் சாத்தியமாகும்? மகிந்த ராஜபக்‌ஷவும் சரி பின்னர் பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேனவும் சரி நல்லிணக்கத்துக்காக என முன்னெடுத்த எந்தவொரு செயற்பாடுகளுமே அதனைக் கொண்டுவரவில்லை. நல்லிணக்கம் என்பது பொறுப்புக்கூறலிலிருந்தே ஆரம்பமாக வேண்டும். பொறுப்புறக்கூறல் என்பதே அரசாங்கத்துக்கு கசப்பாக இருக்கிறது. இராணுவ வெளியேற்றம், மீள்குடியேற்றம் என்பனவும் பூர்த்தியாகவில்லை. போரில் வெற்றிபெற்றோம் என்ற மனோ நிலையிலிருந்து படைத்தரப்பு இன்னும் மாறவில்லை. ஒரு எஜமானுக்கும் அடிமைக்கும் இடையிலான உடன்படிக்கை போல நல்லிணக்கம் இருக்க முடியாது என அரசியல் ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தமை கவனிக்கத்தக்கது.

உண்மையான ஒரு நல்லிணக்கத்தை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தப்போவதில்லை. ஏற்கனவே உள்ள சிங்கள – பௌத்த மேலாதிக்க நிலைக்கு மேலாக போரில் வெற்றிபெற்றுவிட்டோம் என்ற மனப்பாங்கும் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு ஒன்றை வழங்க அரசாங்கத்துக்கு இடமளிக்கப்போவதில்லை. “தமிழர்களுக்கு நீதி வழங்கினால் ராஜபக்‌ஷக்கள் எழுச்சிபெற்றுவிடுவார்கள்” என்பதன் ஊடக தமது நிலைப்பாட்டை அரசாங்கம் நியாயப்படுத்துகின்றது. ராஜபக்‌ஷக்கள் நீதி வழங்கப்போவதில்லை என்பதால்தான் ஒரு மைத்திரிபால சிறிசேனவை தமிழர்கள் ஆதரித்தார்கள். ஆட்சி மாற்றத்துக்கும் உதவினார்கள். இப்போதும், ராஜபக்‌ஷதான் காரணமாகச் சொல்லப்படுகின்றார். ராஜபக்‌ஷ அதிகாரத்திலிருந்தாலும் தீர்வு இல்லை. அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டாலும் தீர்வு இல்லை என்பதுதான் இன்றைய நிலை. இந்த நிலையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்பதைத்தான் அடுத்து வரும் தினங்களில் இடம்பெறப்போகும் நிகழ்வுகளும் உணர்த்தப்போகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *