Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மட்டக்களப்பு எல்லையில் இராணுவ பாதுகாப்புடன் நடைபெறும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு

மட்டக்களப்பு எல்லையில் இராணுவ பாதுகாப்புடன் நடைபெறும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு

-தீரன்-

இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நால்லாட்சி அரசாங்கத்தின் இணக்க அரசியல் ஒரு புறம், நாட்டில் உள்ள இனங்களுக்கு இடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்றாலும் மறுபுறம் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நடைபெற்ற பல சட்டவிரோத செயற்பாடுகளை சத்தமின்றி தொடர்வதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே மகிந்த ராஜபக்ச ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட சிங்கள தலைமைகளின் நிலஆக்கிரமிப்பு வேலைத்திட்டமானது இன்று மீண்டும் குடியேற்ற திட்டமாக மிக வேகமாக நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு நகருக்கு தெற்கே சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது மயிலத்தமடு (மயில் தங்கிய மடு) மாதவணை (மாடுகளை தவணைமுறையில் கொண்டு மேய்க்குமிடம்) பிரதேசம். செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குறித்த பிரதேசத்தில் உள்ள மான்தலை(மான்திலை) ஆறு பாலமே மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறை மாவட்டத்தையும் பிரிக்கும் எல்லையாகவுள்ளது.

மிகவும் வனாந்தரக் காடுகளாக காணப்பட்ட இந்த எல்லைப்பகுதிக்குள் அம்பாறை மாவட்டத்தின் மகா ஓயா பிரதேசத்தில் இருந்து வருகை தந்துள்ள சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல நூறு ஏக்கர் காடுகளை அழித்து கடந்த மூன்று வருடகாலமாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருவதுடன் தற்போது குறித்த பகுதியில் கல்வீடுகள் மற்றும் களிமண் வீடுகள் என்பன அமைக்கப்பட்டு அந்த பகுதியில் மக்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக பௌத்தவிகரை ஒன்றும் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பௌத்த விகாரையில் விகாரதிபதி ஒருவரும் அங்கு தங்கி அந்த மக்களை வழிநடத்திவருவதை காணக்கூடியதாக இருந்தது.ds

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட இடமாக கருதப்படும் மேற்படி காட்டுப் பகுதிகளுக்கு தங்களது கால்நடைகளை வருடாவருடம் கொண்டு சென்று மேய்க்கும் மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பாளர்கள் இது குறித்து கூறும்போது:

“கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக குறித்த பகுதியில் சிங்கள மக்களின் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றது இங்கு குடியேறியுள்ள சிங்களவர்களில் சிலர் எமது கால்நடைகளை சுட்டு கொல்லுவதும் களவாடி செல்வதும் கால்நடைகளை இங்கு மேய்க்க வேண்டாமென அச்சுறுத்தியும் வருகின்றனர். இதற்கு இங்குள்ள இராணுவத்தினரும் ஆதரவாகவுள்ளனர். இது குறித்து கடந்த பல வருடங்களாக நாங்கள் அரசாங்க அதிபர் மற்றும் அரசியல் வாதிகள் எனப் பலரிடமும் முறையிட்டு வந்துள்ளோம் ஆனால் இதற்கு இன்று வரை எந்த தீர்வும் பெற்றுத்தரவில்லை. எனக் கூறினர்.

13

மூன்று வருடங்களுக்கு பின்னர் சென்ற அரசாங்க அதிபர்

மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரை பிரச்சினை குறித்து பல வருடங்களாக பல்வேறு தரப்பினரும் பேசிவந்துள்ளனர். ஊடகங்கள் வாயிலாகவும், பாராளுமன்றம் மற்றும் கிழக்கு மாகாணசபை ஊடாகவும் இந்தப் பிரச்சினை குறித்து பல்வேறு தடவைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அது குறித்து இன்று வரை நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த 05.05.2016 வியாழக்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் தலைமையிலான குழுவொன்று நேரடியாக அந்தப் பகுதிக்குச் சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளது.

அங்கு சென்ற அரசாங்க அதிபர் அவர்கள் அப்பிரதேசத்தில் நடைபெற்றுவரும் சிங்கள குடியேற்றத்தை கண்ணூடாக கண்டதுடன் அங்கு குடியேறி இருந்த சிங்களவர்கள் மற்றும் அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரையின் விகாராதிபதி அவர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இங்கு குடிசை ஒன்றை அமைத்து கச்சான் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த சிங்களப் பெண் ஒருவர் தங்களது குடியேற்றம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார்.

“நான் கடந்த நான்கு வருடங்களாக இந்தப் பகுதியில் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வருகின்றேன். எனக்கு இந்தப் பகுதியில் மூன்று ஏக்கர் காணியுள்ளது. இந்த பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் உண்டு அவர்கள் தற்போது வேலைக்குச் சென்றுள்ளார்கள். இதில் சிலருக்கு ஒரு ஏக்கர் காணியும் சிலருக்கு அரை ஏக்கர் காணியும் உண்டு. காணிகளை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அவர்களே எங்களுக்கு வழங்கினார் இங்கு மகாஓயா பொலன்னறுவை வெலிகந்த பகுதிகளைச் சேர்ந்த வீடுகள் இல்லாத மக்களே குடியேறியுள்ளனர். எனது வாக்காளர் பதிவு மற்றும் கிராமசேவையாளர் பதிவுகள் மகாஓயா அரலகம்பில பிரதேசத்திலேயே உண்டு. எமக்கான பாதுகாப்பு விடயங்களை மகா ஓயா பொலிஸார் கவனித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

இப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் விகாரையின் விகாராதிபதி கூறுகையில்,

“நாங்கள் இந்தப் பகுதியில் கடந்த 1967ஆம் ஆண்டு காலத்தில் இருந்து வசித்துவருகின்றோம். அதற்கான பதிவுகள் எம்மிடம் உண்டு. யுத்தம் காரணமாகவே நாங்கள் இந்த இடத்தை விட்டுச் சென்றிருந்தோம். தற்போது மீண்டும் வந்து குடியேறியுள்ளோம். என்னிடம் இங்கு விகாரை இருந்ததற்கான பதிவுகள் உண்டு. இங்கு மட்டுமல்ல தாந்தாமலை, கொசனானமலை, கொக்கட்டிச்சோலை எல்லா இடங்களிலும் விகாரைகள் இருந்தது நாங்கள் இன மத பேதம் பார்ப்பதில்லை என கூறினார்.

இதையடுத்து குறித்த சிங்கள மக்களுடன் கலந்துரையாடிய அரசாங்க அதிபர் மற்றும் விவசாய அமைச்சர் இருவரும் இது குறித்து முடிவெடுப்பதற்கான கூட்டமொன்றை எதிர்வரும் 19ஆம் திகதி கூட்டவுள்ளதாகவும் குறித்த கூட்டத்தில் இங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறும் அதன் பின்னர் குறித்த குடியேற்றம் குறித்து முடிவுகளை அறிவிப்பதாகவும் அதுவரை மாடுகளை சுடுவது களவாடுவது போன்ற சம்பவங்களை நிறுத்துமாறு அந்தப்பகுதிக்கு தலைவராக இருப்பவரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துவிட்டு வெளியேறினார்.

மட்டக்களப்பு எல்லை யாருக்கு சொந்தம்

இதேநேரம் குறித்த மட்டக்களப்பு எல்லை யாருக்கு சொந்தமானது இதனை நிர்வகிக்கின்ற அதிகாரம் யாருக்கு உண்டு என்கின்ற சர்ச்சைகளும் எழத்தொடங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தில் பிரதான பங்குவகிக்கும் கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் மாவட்டத்தில் நடைபெறுகின்ற வேளாண்மை செய்கையின் காரணமாக தங்களது கால்நடைகளை கொண்டு சென்று மேய்ப்பதற்கான பாரம்பரிய ரீதியான பூமியாக இந்த மயிலத்தமடு மாதவணை காட்டுப்பகுதியை பயன்படுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.8

கடந்த 1974ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இந்த பிரதேசத்தில் தங்களது மாடுகளை கொண்டுவந்து மேய்த்து வந்ததாகவும், பின்னர் இடையிடையே ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக அது தடைப்பட்டு இருந்ததாகவும், யுத்தம் நிறைவடைந்த கடந்த 2010 ஆண்டு காலப்பகுதியில் மாவட்டத்தில் முழுப் பிரதேசத்திலும் முழுமையான வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக கால்நடைகளை குறித்த பிரதேசங்களில் வளர்ப்பது தடைசெய்யப்பட்டு மீண்டும் கால்நடைகளை வளர்ப்பதற்கான மேய்ச்சல் தரையாக மயிலத்தமடு மாதவணை பகுதிகளை அரசாங்க அதிபர் காரியாலயம் ஊடாக வரையரை செய்து தங்களுக்கு வழங்கியதாகவும், அதன் பிரகாரமே இன்று வரை இந்தப் பகுதியில் தங்களது கால்நடைகளை வளர்த்துவருவதாக மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

இதேநேரம் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட மேற்படி பிரதேசமானது கடந்த 1982ஆம் ஆண்டு காலப்பகுதியில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மகாவலி டீ வலயமாக வர்த்தமானி பிரசுரம் ஊடாக பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த காணிக்கான அதிகாரங்கள் பிரதேச செயலாளர்களிடம் இல்லை என தெரிவிக்கப்படுவதுடன், இதனை பாதுகாக்கின்ற அதிகாரம் வனபரிபாலன திணைக்களத்திற்கே உண்டு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கருத்து தெரிவிக்கும் போது,

“குறித்த பகுதி மகாவலி டீ வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டிருந்தாலும் இந்த பகுதி முற்றிலுமாக மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக எல்லைக்குள் உள்ளபடியால் இங்கு நடைபெறுகின்ற அனைத்துவிடயங்கள் குறித்தும் தங்களது நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து தங்களின் அனுமதியை பெற்றே மேற்கொள்ளமுடியும். ஆனால் இங்கு நடைபெறுகின்ற குடியேற்றங்கள் குறித்தோ அல்லது ஏனைய நடவடிக்கைகள் குறித்தோ தங்களுக்கு இதுவரை யாரும் தெரியப்படுத்தவில்லை. எனவே இங்கு நடைபெறுகின்ற குடியேற்றம் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானவையாகவே தெரிகிறது. எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கூறினார்.

முதற்கட்டமாக இப்பிரதேசத்தில் உள்ள வீதிகளை புனரமைப்பு செய்யவும் வாழைச்சேனை பிரதேசசபையின் ஊடாக குறித்த எல்லையில் குறித்த பிரதேசம் மட்டக்களப்பிற்கு உட்பட்டது என பெயர்ப்பலகை இடவும் உத்தரவிட்டதுடன் குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு குறித்து பொலிஸாருக்கும் வனபரிபாலன திணைக்களத்திற்கு அறிவிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த கிழக்குமாகாண விவசாய கால்நடைகள் அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அவர்கள்

“குறித்த பிரதேசம் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டிருந்தாலும் இந்த பகுதி மட்டக்களப்பு மக்களுக்கு சொந்தமானது. நிர்வாக ரீதியாக பல நடைமுறைகள் இருந்தாலும் இந்த பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் அனைத்தும் இங்கு உள்ள மக்களுக்காகவே மேற்கொள்ளப்படவேண்டுமே தவிர, பக்கத்து மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மட்டக்களப்பு எல்லையை பயன்படுத்தும் அதிகாரம் இல்லை எனவே குறித்த மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கான அதிகாரம் தற்போது ஜனாதிபதியின் கையில் உள்ளபடியால் இது குறித்து எமது தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவின் ஊடாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.”

1978ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றம்

கடந்த 1978ஆம் ஆண்டு இதேபோன்ற சிங்களக் குடியேற்றம் ஒன்றை அப்போது இருந்த திம்புலாகலயை சேர்ந்த பிக்கு ஒருவர் தலைமையில் மேற்கொண்டதாகவும் அதனை அன்று ஐக்கிய தேசியக் கட்சியில் நீதி அமைச்சராக இருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தேவநாயகம் தடுத்து நிறுத்தியதுடன் அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜெயார் ஜயவர்த்தனவின் கட்டளைக்கு அமைய குறித்த பிரதேசத்தில் குடியேறிய சிங்களக் குடும்பங்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது இந்த குடியேற்றத்தை மேற்கொண்ட குறித்த பிக்குவின் மீது நீதி அமைச்சராக இருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவநாயகம் தாக்குதல் நடத்தியதாக கூறி அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

12

பிரதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பு

குறித்த சிங்கள குடியேற்றத் திட்டத்திற்கு இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கிவருவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தின் சிங்கள குடியேற்ற திட்டமானது மட்டக்களப்பு தரவையில் உள்ள இராணுவ முகாமிற்கும் மகாஓயா அரலகம்விலவில் உள்ள இராணுவ முகாமிற்கும் இடையிலான வளங்கள் பாதையை மையமாக கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இராணுவ முகாமிற்கான போக்குவரத்திற்காக அமைக்கப்பட்ட மான்திலை ஆறு பாலம் மற்றும் வீதிகள் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டதன் காரணமாக இந்த பகுதியில் குடியேறியுள்ள குடியேற்றவாசிகளுக்கு குடியேற்றத்திற்கான அபிவிருத்தி பொருட்களை கொண்டுவந்து வீடுகளை கட்டுவதற்கு வசதியாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காடானது யானைகளின் அதிக நடமாட்டம் கொண்ட பகுதியாக இருப்பதனால் இங்கு குடியேறியுள்ள மக்களுக்கான பாதுகாப்பை இங்குள்ள இராணுவத்தினரே வழங்கிவருவதாக கூறப்படுகிறது இதற்காக குறித்த பிரதேசத்தில் சிறிய இராணுவ முகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துமீறிய குடியேற்றத்தால் ஊருக்குள் படையெடுக்கும் யானைகள்!

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் காரணமாக வனாந்தரக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் வாழ்ந்த யானைகள் மான்கள் என்பன மக்கள் வாழும் பகுதிகளை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது. இதனால் தமிழ் பிரதேசங்களில் அண்மைக்காலமாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதுடன் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுவருகின்றது.

காடுகளை அழிப்பவர்கள் மீது முப்படைகளும் பாயுமென நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் இது குறித்து வனபரிபாலன திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கமுடியாமல் போனது நாட்டிற்கு சாபக்கேடானது என்றே கூறவேண்டும். குறித்த பிரதேசத்தில் குடியேறியுள்ளவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் இவற்றை வனபரிபாலன திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கமுடியாது போயுள்ளமை சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது.

எது எப்படியோ கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பது போல் பல வருடங்களாக இங்கு அத்துமீறிய சிங்கள குடியேற்றம் நிகழ்கிறது என்று தெரிந்தும் அது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் அப்போது நடவடிக்கை எடுக்காமல் இன்று வீடுகள் விகாரைகள் பாதைகள் என பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்ட பினனர் இப்போது சென்று நடவடிக்கைகளை எடுப்பது என்பது இந்த விடயத்தில் பல்வேறு அழுத்தங்களை உருவாக்கும் என்பதுடன் மட்டக்களப்பு தமிழர்களின் பூர்வீக நிலத்தை இழக்கின்ற செயற்பாடாக போய்விட்டது.

பல தடவைகள் இங்கு சிங்கள குடியேற்றங்கள் நடப்பதாக தெரியப்படுத்தியும் அது குறித்து கவனம் செலுத்தாத நிலையில் இன்று அப்பிரதேசத்தில் ஒரு நிரந்தர குடியேற்ற திட்டமே உருவாகின்ற அளவுக்கு வீடுகள் விகாரைகள் பாதைகள் என பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.

இதற்கான பொறுப்புக்களை யார் ஏற்கப்போகின்றார்கள்? குடியேறியுள்ள சிங்கள மக்கள் வெளியேற்றப்படுவார்களா? மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதார தொழில் காப்பாற்றப்படுமா? மட்டக்களப்பு மண் பாதுகாக்கப்படுமா? என்கின்ற பல்வேறுபட்ட கேள்விகளுக்கு விடை எதிர்வரும் காலத்தில் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

16


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *