Search
Saturday 25 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மாறிவரும் உலக ஒழுங்கில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம்

மாறிவரும் உலக ஒழுங்கில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம்

லோ. விஜயநாதன்

அண்மைக்காலமாக விடுதலைப் போராட்டம் சம்பந்தமான ஒரு வித விரக்தி நிலையும் ஏமாற்ற நிலையும் தமிழ்மக்களிடையே ஏற்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இவற்றுக்கான காரணங்களாக மாறிவரும் உலக ஒழுங்கமைப்பு பற்றிய சரியான புரிதல் இல்லாமையும் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட புதிய ஜனநாயக வெளியில் எவ்வாறு தமிழ் மக்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதென்ற தற்போதைய தலைமைகளின் குழப்பமான செயற்பாடுகளும் காரணமாக இருக்கின்றன.

the-cold-war-eraதமிழ் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தொடங்கும் போது உலகம் மேற்கு கிழக்காக முறையே அமெரிக்கா சோவியத் ஒன்றியம் என்ற தலைமைகளின் கீழ் இரு துருவங்களாக பிரிந்து காணப்பட்டன. அக்காலகட்டத்தில் உலகில் நடைபெற்று வந்த விடுதலைப் போராட்டங்களை இவ்விரு அணியை சேர்ந்தவர்கள் மறை முகமாகவோ நேரடியாகவோ ஒன்றுக்கொன்று எதிராக அனுசரித்து வந்தனர். இக்காலகட்டத்தில் பல நாடுகள் காலனித்துவ பிடியில் இருந்து விடுபட்டதுடன், நாடுகள் உடைந்து பல புதிய நாடுகளாக உதயமாகின. அந்த வகையில் எகிப்து, அல்ஜிரியா, கானா, கியுனன், மாசில், சூடான், மொரோகோ, அங்கோலா, பேனின், எதியோப்பியா, மொசாம்பியா போன்ற நாடுகளும் ஆசியாவில் வியட்நாம், பங்களாதேஷ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் சுதந்திர நாடுகளாக உதயமாகின.

West Berliners break down a section of the Berlin Wall1991ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தைய நாடுகளே உலக ஒழுங்கை தீர்மானிக்கும் சக்தியாக மாறின. இக்காலகட்டத்தில் நாடுகள் பிரிவதை விட நாடுகள் சேர்ந்து கூட்டாக செயற்படத் தொடங்கின. 1989ல் பேர்லின் சுவரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மேற்கு கிழக்காக பிரிந்திருந்த ஜேர்மனி 1990ல் ஒரே நாடாக உருவாகியது.

sae_tiger11993ல் ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை (EU ) உருவாக்கின. இப்படியாக உலக நாடுகள் இரு துருவ நாடுகளாகவிருந்து ஒரு துருவ நாடுகளாக மாறிய காலகட்டத்தில்தான் ஈழத்தில் தனித்து நின்று போராடி ஒரு பலமிக்க De Facto அரசை தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் உருவாக்கியிருந்தார்கள். எப்படி இஸ்ரேலானது பலமிக்க அரபு நாடுகளால் சூழப்பட்டிருந்தும் வீழ்த்தப்படமுயாத திறன் மிக்க வலிமை மிக்க நாடாக அமெரிக்க மற்றும் மேற்கத்தைய நாடுகளின் துணையுடன் விளங்கியதோ, அதேபோலத்தான் அதையொத்த பலத்துடன் ஆனால் எவ்வித நாடுகளின் உதவியுமின்றி தரை, கடல், வான் என சகல படைக்கட்டமைப்புக்களையும் கொண்ட மரபுவழி இராணுவத்துடன் சட்ட அந்தஸ்தற்ற தமிழீழ அரசாக அமைந்திருந்தது.

Nelson Mandela1992ன் இறுதிக் காலப்பகுதியில் அதாவது யாழ் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த காலகட்டத்தில் இந்த De Facto அரசை தனிநாடாக அங்கீகரிப்பதற்கான சில முயற்சிகளை விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தார்கள். கடுமையான முயற்சியின் பின், அப்போதைய தென்னாபிரிக்க அரசை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் (ANC) ஆதரவு இதற்கு கிடைத்திருந்தது. ஆனால் என்றுமே தமிழனுக்கு தன்னை நண்பனாக காட்டிக் கொண்டு சிங்களத்துக்கு உதவும் காந்திதேசம் மிகக் கடுமையான அழுத்தத்தை தென்னாபிரிக்க அரசுக்குக் கொடுத்து இம் முயற்சியை முறிய
டித்தது.

ltte_rpg_force_2உலக வல்லரசான அமெரிக்காவின் ஆசீர்வாதமும் பிராந்திய வல்லரசான இந்தியாவின் அனுசரணையும் சிறிலங்காவுக்கு இருந்தும் மனம் தளராமல் தமிழீழத்தின் ஒவ்வொரு நிலரப்பரப்பையம் மீட்டெடுத்துக் கொண்டு நிர்வாகத்தையும் விரிவுபடுத்தியபடி புலிகள் வளர்ந்து வந்தார்கள். புலிகளின் வளர்ச்சியும் செயற்பபாடுகளும் உலகத்திலுள்ள விடுதலைப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாகவும் முன்மாதிரியாகவும் காணப்பட்டன . மறுபுறத்தில் உலக வல்லரசுகள் தமது இராணுவ நடவடிக்கைகளையும் உத்திகளையும் பரீட்சிக்கும் களமாக விடுதலைப் புலிகளுக்கெதிரான சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். உதாரணத்துக்கு அமெரிக்காவின் கிறின் பரட் படையணியில் பயிற்சி பெற்ற அதேபடைக்கு நிகரான சிறிலங்காவின் படையணி ஒன்று களமுனையில் இறக்கிப் பலதடவை பரிட்சிக்கப்பட்டதுடன் மட்டும் அல்லாது அமெரிக்க தளபதிகள் பலர் போர் முன்னரங்குகளுக்குச் சென்று திரும்பி வந்த வண்ணமும் இருந்தனர்.

12802910ஆனால், இவற்றையெல்லாம் தகர்த்தெறியும் வகையில் போரியல் துறையில் புரியாத புதிராக புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் அமைந்திருந்தன. புலிகளின் போராட்ட நுணுக்கங்களை உலகில் உள்ள பிற போராட்ட அமைப்புக்களும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்களும் தமது போராட்டங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கின.

Sri Lankan Army Humanitarian Mining Action Programஇதன் காரணமாக, வல்லரசு நாடுகள் புலிகளை வளரவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளை எடுப்பதன் அவசியத்தை உணர்ந்து பல நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கின. அந்தவகையில் இந்தியாவைத் (1992) தொடர்ந்து அமெரிக்காவும் (1997) புலிகளை பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தியதுடன் மேலும் இவர்களின் முகவர் அமைப்புக்காளன ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை போன்றவற்றுக்கூடாக புலிகளுக்கெதிரான பலமான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

911-02_gjzsvdkeஇப்படியான ஒரு காலகட்டத்தில் தான் 2001ம் ஆண்டு செப்ரெம்பர் 11ல் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாத்திற்கெதிரான போர் என்ற அடிப்படையில் மீண்டும் உலக ஒழுங்கு மாற்றியமைக்கப்படுகிறது. அதாவது விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் எல்லாம் அவற்றின் நியாயத் தன்மைகள் சீர்தூக்கிப் பார்க்கப்படாமல் பயங்கரவாத அமைப்புக்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றன.

0119dbsjஇத்தாக்குதலைத் தொடர்ந்து உலகளாவியரீதியில் நடைபெற்றுவந்த மிகப்பெரிய ஆயுதப்போராட்டங்களாக அடையாளப்பட்ட 32 ஆயதப் போராட்டங்கள் அரைவாசியாக (17) குறைவடைந்தது. இவ்வுலக ஒழுங்கை உன்னிப்பாக அவதானித்த விடுதலைப் புலிகள் இராணுவ நிலையில் மிகப் பலமாக இருந்த நிலையில் எங்கே இந்த மாறிவரும் உலக ஒழுங்கில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகுடன் நேரடியான ஒரு முரண்நிலையை ஏற்படுத்தி விடுமோ என்ற நிலையில் அதனை தவிர்ப்பதற்காக அதே மேற்குலகு சார்பு நாடான நோர்வே மத்தியஸ்தத்துடனான யுத்த நிறுத்தத்திற்கும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் உடன்பட்டனர். அந்த உடனபடிக்கை மூலமாக தமிழ்மக்களின் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தவும் தமது De Facto அரசுக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவும் முயற்சித்திருந்தனர். இந்த உடன்படிக்கையானது ஏதோவொருவகையில் இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டிருந்தது. அதாவது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நிலப்பரப்பும் கடல் பகுதியும் இவ்வுடன்படிக்கைமூலம் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

IPKF-LTTEஇதுவரை இலவுகாத்த கிளியாகவிருந்த இந்தியா, அன்று தனது பிராந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகவிருந்த சிறிலங்காவை தனது வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்து எவ்வாறு தமிழ் ஆயுதக் குழுக்களை வளர்த்து தனது இலக்கை இலங்கை இந்திய உடன்படிக்கை மூலம் நிவர்த்தி செய்ததோ, அதேபோல, இலங்கை -இந்திய உடன்படிக்கை மூலம் அளிக்க முடியாமல் போன விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு புலிகளின் யுத்த நிறுத்தத்தை ஒரு வரப்பிரசாதமாக கருதி காய்களை துரிதமாக நகர்த்த ஆரம்பித்தது.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்கு விடுதலைப் புலிகள் நேரடியான அச்சுறுத்தலாக ஒரு போதும் இருந்ததில்லை. இருந்தும், அவர்களின் இராணுவ வளர்ச்சியானது தமது நேசநாடுகளுக்கு அச்சுறுத்தலாகவிருக்கும் ஆயுதப்போராட்டக் குழுக்களுக்கு முன் உதாரணமாக அமைந்திருப்பதே அவர்களின் புலி எதிர்ப்பு நிலைக்குக் காரணமாக அமைந்திருந்தது.

ஆனால் இந்தியாவுக்கோ, இலங்கை இரண்டாக பிரிவதோ அன்றி இந்திய மாநில சுயாட்சி தீர்வுக்கு மேலாக தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படுவதோ இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்ற தனது பழைய சித்தாந்த கொள்கை காரணமாக புலிகள் தலைமையிலான ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் பெரும் அச்சுறுத்தலாக தெரிந்தது.

rachஇதற்காக சந்திரிக்கா- ரணில் முரண்பாட்டை ஒரு கருவியாக வைத்து விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கான வேலைத்திட்டத்தில் திரைமறைவில் இந்தியா இறங்கியது. ரணிலை வைத்து விடுதலைப் புலிகளுக்கெதிரான சர்வதேச வலைப்பின்னல் ஒன்றை ஏற்படுத்தியதுடன் விடுதலைப் புலிகளை தொடர்ந்து யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்க வைத்து புலி உறுப்பினர்களை மெதுமெதுவாக ஆயுதப் போராட்ட மன நிலையிலிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியது. இதன் ஓரு அங்கமாகவே விடுதலைப் புலிகளின் அப்போதைய கிழக்கு மாகாணத் தளபதி கருணாவின் பிரிவு நிகழ்ந்தது. கருணா விடயத்தில் இந்தியாவின் பங்கைப்பற்றி அந்தக் காலகட்டத்தில் பல ஆங்கில நாளேடுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் பிரிந்த பின் கருணா கொழும்பிலிருந்த இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்தாகவும் கூறப்பட்டிருந்தது.

மறுபுறம், சந்திரிகாவை பயன்படுத்தி யுத்த நிறுத்த உடன்படிக்கையின் முக்கிய சரத்துக்கள் மெது மெதுவாக செயலிழக்கச் செய்யப்பட்டதுடன் விடுதலைப் புலிகளின் கடல் ஆதிக்கமும் முற்றாக முடக்கப்பட்டது. பல ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுடன் முக்கிய தளபதிகள் மீதான தாக்குதல்களை சிறிலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்கள் இணைந்து மேற்கொண்டனர்.

இந்தியாவின் காய்நகர்த்தல்களை புரிந்து கொண்டு சுதாரித்துக் கொண்ட புலிகள் தாக்குதல் நிலைக்குத் திரும்பிச் செல்ல தயாரான வேளையிலேயே எதிர்பாராத விதமாக உலகையே உலுக்கிப்போட்ட சுனாமியின் தாக்கம் ஏற்ப்பட்டது. இதனால், தமது திட்டங்களை தற்காலிகமாக பின்போடவேண்டி நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டனர்.

ஆனால் மறுபுறத்தே சிறிலங்காவின் இராணுவம் நவீனமயப்படுத்தப்பட்டு முழுமையாக பலப்படுத்தப்பட்டு எந்நேரத்திலும் தாக்குதலுக்கு தயாரான நிலைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் மறைமுக அறிவுறுத்தலுக்கமைய சந்திரிக்காவினால் ரணில் ஆட்சி கலைக்கப்பட்டது.

sri1silvaபின்னர், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் ‘இறையாண்மை’ என்ற கோட்பாட்டை வைத்து யுத்த நிறுத்தத்தை ஒரு தலைப்பட்சமாக முறித்துக்கொண்டு விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல் சிறி லங்கா அரசினால் தொடங்கப்படுகிறது.

எப்படி டென்சில் கொப்பேகடுவ மீது தாக்குதல் நடத்தி யாழ்.குடாநாடு மீதான சிறிலங்கா இராணுவத் தாக்குதலை பின்போட வைத்தனரோ, அதேபோல, சிறிலங்காவின் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச மீதும் தாக்குதல் நடத்தி அதே முயற்சியை புலிகள் மேற்கொண்டனர். துரதிஷ்டவசமாக இவ்விரு தாக்குதல் முயற்சிகளில் இருந்தும் அவ்விருவரும் தப்பித்துக்கொண்டார்கள்.

SPAIN-MIDEAST-CONFLICT-UNஇந்த நிலையில், தம் மீது வலிந்து திணிக்கப்பட்ட சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கையை வேறு வழியின்றி விடுதலைப் புலிகள் எதிர்கொள்ள நேரிட்டது. 2000ம் ஆண்டிலிருந்து இறுதியாக யுத்தம் நிறைவடையும் வரை (2009) எந்தவித ஆயுத விநியோகமுமற்ற நிலையில், கையிருப்பிலிருந்த ஆயதங்களைக் கொண்டு அதிலும் குறிப்பாக கருணாவின் பிளவினூடாக கிழக்கு மாகாணத்துக்கான கணிசமான ஆயுதங்களை இழந்திருந்த நிலையில் தொடர்ச்சியான மூன்று வருட யுத்தத்தை புலிகள் எதிர்கொள்ள நேரிட்டது. கடைசிவரை தம்மை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்காமல் தமிழ் மக்களுக்கான இறுதித்தீர்வை அந்தக் கடைசி மணித்தியாலப் பேரம் பேச்சுக்கூடாக பெற்றுக்கொள்ள புலிகள் முயற்சித்தனர். அழிவின் விழிம்பில் புலிகள் மேற்கொண்ட இந்த முயற்சிக்கு, மேற்கு நாடுகளின் சமிக்ஞை ஓரளவு சாதகமாக இருந்தது. இருந்த போதிலும் இந்தியாவோ இந்திய விடயத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை எடுத்திருந்ததுடன் எந்த நாடுகளின் தலையீடுகளையும் அனுமதிக்காததுடன் தான் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் காட்டிக்கொண்டு சிறிலங்கா இராணுவத்துக்கு போதிய கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்ததுடன் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு துணை நின்றது.

IMG_7561

உண்மையில் மேற்குலகைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளைச் செயலிழக்கச் செய்வதிலேயே குறியாக இருந்தார்களேயொழிய அவர்களை முற்றாக அழிக்க வேண்டிய தேவை அவர்களுக்கிருந்ததில்லை. ஆனால் இந்தியாவோ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்ற கொள்கையிலேயே செயற்பட்டதுடன் அதற்காக எவ்வளவு உயிர்ப்பலியெடுக்கவும் தயாராகவிருந்தது. ஈற்றில் பல ஆயிரம் மக்களை இனவழிப்புச் செய்து விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டனர்.

ஏன் விடுதலைப் புலிகள் இதைமுன்கூட்டியே உணர்ந்து கெரில்லா போராட்ட நிலைக்கு மீண்டும் மாறவில்லை என்றும் ஓரளவான தீர்வையேனும் ஏற்றுக்கொள்ள முற்படவில்லையென்றும் தற்போது சிலரால் குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

Aerial view of former battlefront in Vavuniyaபயங்கரவாதத்துக்கெதிரான போர் என்ற உலக ஒழுங்கில் 2001 செப்ரம்பர் 11 ற்குப் பின்னரான 2009 ற்கிடைப்பட்ட காலகட்டத்தில் மூன்று புதிய நாடுகள் உருவாகின. அதில் பனிப்போர் முரண்நிலை காரணமாக கொஸ்ரரிக்காவாகவும் (2006) கொசோவாவாகவும் (2008) உருவாகின. கிழக்கு திமோர் 2002 இல் விடுதலைபெற்றது. ஆனால் கிழக்கு திமோரில் போராட்டமானது அதற்கு முன்னரே சர்வதேச மயப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச்சபையிலும் இடம்பிடித்திருந்தது. இதுவே அப்போதைய இந்தோனேசிய அரசை நெருக்கடிக்குள்ளாக்கியிருந்ததுடன் கிழக்கு திமோர் சுதந்திர நாடாக உதயமாக காரணமாக இருந்தது. இவற்றைத் தவிர எஞ்சிய விடுதலைப் போராட்டங்கள் எல்லாம் பயங்கரவாதப் போராட்டமாக முத்திரை குத்தி அழிக்கப்படும் நிலையிலேயே விடுதலைப் புலிகள் இறுதிவரை போரிட்டு மடிதல் என்ற முடிவுக்கு வந்தனர். இதன் மூலம் இந்தியாவைத் தாண்டி தமிழ் மக்களின் போராட்டத்தை நகர்த்திச் சென்று சர்வதேச அரங்கில் தமிழ் மக்களின் போராட்டத்தை முன்னிலைப்படுத்த அவர்கள் முடிவெடுத்தனர். இதுவே நீண்டகாலத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது புலிகளின் அனுபவ ரீதியிலானதும் வரலாற்று ரீதியிலானதுமான கணிப்பாகும்.

LTTEஅதேநேரம் ஒரு மரபுவழி படையைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு ஒரு சிறிய நிலப்பரப்பைக் கொண்ட தமிழீழத்தில் தமது பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களையும் அவர்களது உறவுகளையும் படைக்கலங்களையும் வைத்து முன்னரைப் போன்ற ஒரு கரந்தடிப்போருக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. அத்தகைய ஒரு நிலையில், இனவழிப்பு நிகழ்ச்சி நிரலில் செயற்ப்பட்டு வந்த சிறி லங்கா இராணுவம் இவர்களை விட்டுவைக்காது என்பதை நன்கு உணந்து கொண்டிருந்தனர். அத்துடன், ஈராக்கில் அப்பெரும் தேசத்தில் சதாம் ஹுசைனினால் ஒழிந்திருக்க முடியவில்லையே. இவையெல்லாவற்றையும் சீர்தூக்கிப்பார்த்துத்தான் இறுதிவரை போரிட்டு மடிவதென்று முடிவிற்கு விடுதலைப்புலிகள் வந்திருந்தார்கள்.

SLMM_LTTEஆனால், அரசியல் துறையைச் சார்ந்தவர்களையும் காயப்பட்ட போராளிகளையும் சரணடையும்படி வேண்டிக்கொண்டனர். ஏனென்றால் அரசியல் ராஜதந்திரப் போராட்டத்தினூடே தமிழ் மக்களின் போராட்டத்தை முன்னகர்த்த வேண்டும் என்பதற்காகவும் சிறிலங்கா அரசானது ஒருபோதும் உலக நம்பிக்கைக்குரித்துடையதன்று என்பதை நிரூபிப்பதற்காகவுமே சரணடைபவர்களுக்கு என்ன நடைபெறும் என்பதை தெரிந்து கொண்டு இவ்வாறு செய்தனர். இந்த முடிவினூடாக, தமிழ் மக்களின் பிரச்சினையை இன்று (ஐக்கிய நாடுகள் சபைவரை) சர்வதேசப் பிரச்சினையாக மாற்றியுள்ளனர்.

இத்தகைய ஒரு அரசியல் சந்தர்ப்பத்தை தான், எம்மில் சிலர் அதனை குரங்கின் கையில் கொடுத்த அப்பம் போல் மீண்டும் இந்தியவுக்குள்ளும் இலங்கைக்குள்ளும் மட்டுப்படுத்திவிட முற்படுகின்றனர். இதை சில மறைகரங்கள் ஊக்குவிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக நான் பெரிதா நீ பெரிதா என்ற மேதாவித்தனச் சண்டைக்குள் தமிழ் மக்களின் போராட்டம் சிக்கித் திணறுகின்றது.

ltte-tnaஇங்கே மக்களை நெறிப்படுத்த வேண்டியவர்களே நெறிதவறிச் செயற்படுகின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் போராட்ட பரிமாணங்கள் மற்றும் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதன் இயங்கு சக்தியாக விளங்கும் அமைப்புக்கள், கட்சிகள் மாற்றம் காண்பது அவசியம். அவ்வாறான ஒரு காலகட்டத்தில் உதயமாகியதுதான் ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ . இதற்கு இன்றும் இருக்கும் மக்கள் செல்வாக்குக்கு ஒரே காரணம் விடுதலைப்புலிகள் காலகட்டத்தில் அவர்களால் உருவாக்கப்பட்டது என்பதுதான். எப்படி தமிழரசுக் கட்சி தொடங்கப்பட்டு தமிழ் மக்களுக்காக போரடியதோ, பின்னர் அக்கால சூழ்நிலைக்கேற்ப மறைந்த தலைவர்களான பொன்னம்பலம், செல்வநாயகம், தொண்டமான் ஆகிய மூன்று பேரும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் கூர்மையடையும்வரை செயற்பட்டார்களோ அதுபோலவே ஆயுதப்போராட்டத்துக்கு பின்னரான தமிழ் மக்களின் விடுதலைக்கான கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் பார்க்கின்றனர். இந்த அரசியல் பரிணாமத்தில் எவரும் பழைய கட்சிகளை புதுப்பிக்க முயலவில்லை. ஏனென்றால் புதிய காலச்சூழலுக்கேற்ப கட்சிகள் அதன் தலைமைகளால் வடிவமைக்கப்பட்டன. இன்றைய காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், தலைமைத்துவ ஆசைக்காக அக்கட்சியை பதிவு செய்வதை இழுத்தபடிப்பதும் அதை முறையான ஒரு கட்சியாக மாற்றி செயற்படுவதைத் தவிர்ப்பதுவும் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவர்கள் கொண்டுள்ள தமிழ்தேசியக் கொள்கையிலிருந்து பிரிவுகளினூடாக சிதறடிப்பதற்குச் சமனாகும்.

tna3ஒரு கட்சியாக செயற்படுமிடத்து கருத்தொருமித்த ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்கக் கூடியதாக இருப்பதுடன் எல்லோரும் ஒரே குரலில் பேசுவதற்கும் அது உதவியாகவிருக்கும். இது எதிர்காலத்தில் வரப்போகும் தேர்தல்களில் கொள்கைப்பற்றுடைய வேறு கட்சிகளை சேர்ந்த ஆற்றல் மிக்க நபர்களையும் உள்வாங்கி எதிரியின் பிரித்தாளும் தந்திரத்துக்குள் சிக்காது போராட்டத்தை முன்கொண்டு செல்ல உதவும். அத்துடன், ஒருவருக்கொருவர் முரண்படும்போது ஏற்படும் முரண்பாடுகளையும் அவநம்பிக்கைகளையும் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றக் கூடியதாகவும் இருக்கும்.

அதேசமயம், இன்றைய உலக ஒழுங்கானது இராணுவ மேலாண்மையை விட பொருளாதார மேலாண்மையை வைத்தே தீர்மானிக்கபபடுகின்றது. ஒரு நாட்டின் பொருளாதார மேலாண்மையானது தனியே பொருளாதார வளர்ச்சியுடன் மட்டும் நில்லாது சிறந்த மனிதவுரிமை வளர்ச்சிகளிலும் தங்கி இருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் பொதுவில் மேற்கு நாடுகளே இந்த பொருளாதார மேலாண்மையில் முன்னிலை வகிக்கின்றன. சீனாவானது அசுர வேகத்தில் பொருளாதார ரீதியில் வளர்ச்சிகண்டாலும் அதன் எதிர்கால மனிதவுரிமை செயற்பாடுகளைப் பொறுத்தே அதன் மேலாண்மை நிலை தீர்மானிக்கப்படும். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக தற்போதைய ரஷ்ய அரசை எடுத்துக் கொள்ள முடியும். அது பொருளாதார வளர்ச்சியில் கணிசமான உயர்வைக் கண்டும் அதன் தற்போதைய உக்ரைன் விவகாரத்தினால் ஏற்பட்ட மனிதவுரிமை பிரச்சினை காரணமாக அதன் மேலாண்மை நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா கூட இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.

இந்த நிலைமைகளையும் சீர்தூக்கிப் பார்த்தே தமிழ் மக்களின் அரசியல் ராஜதந்திர போராட்டம் முன்னகர்த்தி கொண்டு செல்லப்பட வேண்டும். அதுவே, எதிர்காலத்தில் ஒரளவு நியாயமான தீர்வை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *