Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மீண்டும் ஜெயலலிதா

மீண்டும் ஜெயலலிதா

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா ஜெயராம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். 1986 க்குப் பின்னர் முதலமைச்சராகவுள்ள ஒருவர் மீண்டும் பதவிக்கு வருவது இதுதான் முதல்முறை என்பதால் ஜெயலலிதாவின் தெரிவு முக்கியத்துவம் பெறுகின்றது. தமிழகத்தின் இரண்டு கட்சிகளும் மாறிமாறி பதவிக்கு வரும் மரபு இந்தத் தேர்தலில் மாற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றது. மறுபுறத்தில் ஜெயலலிதாவுக்கு நிகராக மாற்றுக் கட்சிகள் எதுவும் இல்லாமையும் அவரது இந்த மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக விமர்சகர்களால் குறிப்பிடப்படுகின்றது.

ஆறுமுனைப் போட்டியில் நான்கு கட்சிகள் அல்லது கூட்டணிகள் அடிபட்டுப்போக, இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளும்தான் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் வந்துள்ளன. தமிழகத்தில் மூன்றாவது அணி என்ற பேச்சே மக்களின் வாக்குகளால் அடிபட்டுப்போயுள்ளது. அதிமுக மீண்டும் ஆளும் கட்சியாக அதிகாரத்துக்கு வந்திருந்தாலும், கடந்த காலங்களில் பெற்றிருந்த வலிமையை இப்போது அவர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதிமுக வின் மீது மக்களுக்கு இருந்திருக்கக்கூடிய அதிருப்தியை தமக்கான வாக்குகளாக அறுவடை செய்யக்கூடிய இயலுமையை திமுக கொண்டிருக்கவில்லை. அதேபோல மூன்றாவது அணியாக தம்மைப் பிரகடனப்படுத்திக்கொண்ட மக்கள் நலக் கூட்டணியின் செயற்பாடுகளும் கோமாளித் தனமானதாகவே முடிந்திருக்கின்றது.  மக்கள் அவர்களை முற்றாக நிராகரித்துவிட்டார்கள்.

தேர்தலின் போது தான் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதா தெரிவித்திருக்கின்றார். ஜெயலலிதாவின் தேர்தல் பிரகடனத்தில் ஈழத்தமிழர் விவகாரம் முக்கியமாகக் கூறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக வாக்காளர்களைக் கவரும் வகையில் பல இலவசங்கள் அதில் அறிவிக்கப்பட்டிந்தாலும், ஈழத் தமிழர்களின் நலன்கள் தொடர்பிலும் வழமைபோலவே ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். “தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ் நாட்டில் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் உள்ள இலங்கைத் தமிழர் களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்” என்பது அவரால் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

jayaதன்னுடைய கடந்த ஆட்சிக் காலத்தின்போதும் ஈழத் தமிழர்களின் நலன்களில் அக்கறை கொண்ட ஒருவராகவே ஜெயலலிதா இருந்துள்ளார். சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களின் மூலம் இதனை அவர் வெளிப்படுத்தியிருந்தார். இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என்ற தீர்மானத்தை ஜெயலலிதாவே சட்டப்பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றியிருந்தார். இதனைவிட, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானமும் சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டமைக்கு அப்பால் ஜெயலலிதாவே தமிழக அரசோ எதனையும் செய்யவில்லை. ஆனால், இந்தத் தீர்மானங்கள் டில்லிக்கும், சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை தொடர்பில் கடுமையாக செயற்படுவதற்கான அழுத்தத்தைக் கொடுக்கும் என அந்த வேளையில் எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது மீண்டும் முதலமைச்சராகத் தெரிவாகியுள்ள ஜெயலலிதாவை வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் வாழ்த்தியிருக்கின்றார்கள். ஈழத் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் ஜெயலலிதா பலவிதமான நன்மைகளைச் செய்வார் என்ற எதிர்பார்ப்பு தமக்கு இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பிவைத்திருக்கும் வாழ்த்துச்செய்தியில் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார். வடக்கு முதல்வரின் நம்பிக்கையைப் போலவே தமிழ் மக்களும் ஜெயலலிதா மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகள் ஈழத் தமிழர் விவகாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது மட்டுமன்றி, தமிழகத்துடனான தொப்புள் கொடி உறவும்தான் தமிழக விவகாரங்களில் ஈழத் தமிழர்கள் அதிகளவு அக்கறை காட்டுவதற்குப் பிரதான காரணம். அந்தவகையில் ஜெயலலிதா தன்னுடைய ஆட்சியை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பது, ஈழத் தமிழர் விவகாரத்தில் அவர் தொடர்ந்தும் உறுதியுடன் செயற்படுவார் என்ற நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கின்றது.

note-paperஇலங்கையில் போர் வெடித்த போது அதிகளவானவர்கள் அகதிகளாகத் தஞ்சமடைந்தது தமிழகத்தில்தான். இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த போதிலும், இப்போது சுமார் ஒரு லட்சம் வரையிலானவர்கள் அங்கிருப்பதாக மதிப்பிடப்படுகின்றது. இதில் பெரும்பாலானவர்கள் தாயகம் திரும்பி தமது சொந்த இடங்களில் வாழ்வதையே விரும்புகின்றார்கள். அவ்வாறு அவர்கள் திரும்ப முடியாமலிருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. நடைமுறைப் பிரச்சினையாக, வடக்கில் அவர்களுடைய நிலங்களில் இராணுவம் குடியிருப்பதால், தமது இடங்களில் மீளக்குடியமர முடியாத நிலை அவர்களுக்குள்ளது. மீளக்குயமர்ந்தாலும், வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கான உறுதியான திட்டங்களை அரசாங்கம் முன்வைக்கவில்லை.  தாயகம் திரும்புவதில் நம்பிக்கையிழந்தவர்களாக தமிழகத்திலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் இருப்பதற்கு இவை பிரதான காரணம். இதனைவிட, இனநெருக்கடிக்கான உறுதியானதும், நீண்டு நிலைக்கக் கூடியதானதுமான ஒரு தீர்வு முன்வைக்கப்படவில்லை. தாயகம் திரும்பினால், பாதுகாப்பானதும் நிரந்தரமானதுமான ஒரு வாழ்க்கை தமக்குக் கிடைக்குமா என அவர்கள் சந்தேகப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஈழத் தமிழர்களுக்காக பல தீர்மானங்களைக் கொண்டுவந்த ஜெயலலிதா, ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், இனநெருக்கடிக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கும் தேவையான அழுத்தங்களை இந்திய அரசின் மூலமாகக் கொடுப்பதே இன்றைய காலத்தின் தேவையாகும். இதனைவிட போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும். தமிழகத்தின் உணர்வுகளின் அடிப்படையிலேயே இலங்கை தொடர்பான தீர்மானங்களை டில்லி எப்போதும் எடுக்கின்றது. தமிழகத்தின் குரலைப் புறக்கணித்துவிட்டு, இலங்கை குறித்த எந்தவொரு கொள்கை முடிவையும் மத்திய அரசாங்கம் எடுப்பதில்லை. அதனால், மீண்டும் அதிகாரத்துக்கு வந்திருக்கும் ஜெயலலிதா, ஈழத் தமிழர்களின் நடைப்முறைப் பிரச்சினைகளுக்கும், இனநெருக்கடிக்கும் நிரந்தரமான ஒரு தீர்வைக்காண்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்க இந்திய மத்திய அரசாங்கத்தைத் தூண்டுவார் என்பதே ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *