Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முகமாலை பகுதி எப்போது நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மீண்டும் செழிப்பான பிரதேசமாக மாறும்?

முகமாலை பகுதி எப்போது நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மீண்டும் செழிப்பான பிரதேசமாக மாறும்?

பா.ஜதுர்சிகா

யுத்தம் நிறைவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகிய போதும் கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த நிலங்களில் மீள்குடியேறுவதற்கும் வாழ்வாதார செய்கைகளை மேற்கொள்வதற்கும் நிலக்கண்ணி வெடிகள் பாரிய சவாலாக விளங்குகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இருந்து கடந்த யுத்தம் காரணமாக முழுமையாக இடம்பெயர்ந்த மக்கள் யுத்தம் நிறைவு பெற்ற நிலையில் கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 09ம் திகதி முதல் மீள்குடியேறுவதற்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து தற்போது நாற்பத்தி ஓராயிரத்து 934 குடும்பங்களைச்சேர்ந்த ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 639 இற்கும் மேற்பட்டோர் மீள்குடியேறியுள்ளனர்.

இதேவேளை கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் மீள்குடியேறுவதற்;காக 748 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 602 பேர் வரையில் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கான பதிவுகளை மேற்கொண்டுள்ள போதும் இன்று வரை இவர்கள் மீள்குடியேறுவதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை.

குறித்த குடும்பங்களினது காணிகள் படையினரின் பயன்பாட்டிலும் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினாலும் இதுவரை மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் குறித்த குடும்பங்கள் கடந்த ஏழு வருடங்;களுக்கு மேலாக வாடகை வீடுகிளிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை, முகமாலை தெற்கு, அம்பளாவளை, இந்திராபுரம், மடத்தடி, வேம்பொடுகேணி, நவனிவெளி மற்றும் இத்தாவில் மேற்;கின் ஒரு பகுதி உள்ளடங்கிய பகுதிகளில் இதுவரை வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் இப்பகுதியைச்சேர்ந்த 247 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் வரையில் மீள்குடியேறுவதற்கான பதிவுகளை மேற்கொண்டபோதும் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது.

மிகவும் பழமை வாய்ந்த பல தலைமுறைகளுக்கு முற்பட்ட முகமாலையும் அதனை அண்டிய கிராமங்களும் ஆரம்பகாலங்களில் பல கிராமங்களுடன் இணைக்கப்பட்டு பண்டமாற்று வியாபார மையமாகவும் பின்னர் வியாபார மத்திய பகுதியாகவும் காணப்பட்டதுடன் 50 ஏக்கருக்கும் அதிக நெற் செய்கை காணிகளையும் எண்ணூறு ஏக்கருக்கும் மேற்பட்ட தென்னந்தோட்டங்களையும் கொண்ட வடபகுதியின் வளமிக்க பகுதியாக காணப்பட்ட முகமாலையும் அதன் அயல் கிராமங்களும் யுத்தத்தினால் சின்னாபின்னமாகி போனதுடன் இன்று மிக ஆபத்தான வெடிபொருட்கள் நிறைந்த பகுதியாகவும் காணப்படுகின்றன . பல தலைமுறைகள் பரம்பரை பரம்பரையாக எவரிடமும் கையேந்தாது வாழ்ந்த தங்களது நிலத்தில் தாங்கள் குடியேறுவதற்கு ஏற்ற வழிவகைகளை ஏற்படுத்தித்தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

uk-amb-visit-muhaamalai-020914-seithy-1

கடந்த 2000ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு ஜனவரி வரைக்குமான ஒன்பது ஆண்டுகள் கிளாலி தொடக்கம் முகமாலை இத்தாவில் நாகர்கோவில் வரைக்குமான பகுதி எப்போதும் வெடியோசை முழங்கிய போர் முனைகளாக காணப்பட்டதுடன் பெரும் உயிராபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருட்களின் பூமியாகவும் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் காவுகொண்ட நிலமாகவும் காணப்பட்டது.
யுத்தத்தின் பின்னர் இப்பகுதிகளில் வெடிபொருட்களை அகற்றும் பணிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் இதன் பணிகள் இன்றுவரை நிறைவு பெறாத நிலை காணப்படுகின்றது.

இப்பகுதியில் வெடிபொருட்கள் அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது இப்பகுதியில் வெடிபொருள் அகற்றுவது என்பது மிகவும் சுலபமான விடயமல்லை. நீண்டகாலம் யுத்தம் இடம்பெற்ற ஒரு சூனியப்பிரதேசம். சண்டையில் ஈடுபட்ட இரு தரப்புக்களும் வகை தொகையின்றி பெரும் உயிராபத்துக்களை விளைவிக்கக் கூடிய வெடிபொருட்களை விதைத்துள்ளனர். அத்துடன் வெடிக்காத நிலையில் ஏராளமான வெடிபொருட்கள் காணப்பட்டன. நீண்ட காலம் காத்திருந்து உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்தவை. இவற்றை அகற்றுவதில் நாங்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றோம். தற்போது நவீன இயந்திரங்களையும் கண்ணி வெடி அகற்றும் பணியாளர்களையும் கொண்டு வெடிபொருட்கள் அகற்றும் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இப்பகுதியில் வெடிபொருட்களை அகற்றும் பணிகளை மேற்கொண்ட போது உயிரிழப்புக்கள் கூட இடம்பெற்றுள்ளன என்றும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை பாதுகாப்பற்ற இப்பகுதிக்குள் சென்ற பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தும் உள்ளனர். இவ்வாறு வெடிபொருள் ஆபத்து நிறைந்த பகுதியாக முகமாலை பிரதேசம் இன்றும் காணப்படுகின்றது.

முகமாலை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேறுவதற்கு சவாலாக இருந்த வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டது போன்று இப்பகுதிகளில் விரைவாக வெபொருட்களை அகற்றி மீள்குடியேறுவதற்கு அனுமதிக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வானுயரத்தென்னை மரங்களும் ஏனைய பயன்தரு மரங்களும் கொண்டு காணப்பட்ட முகமாலை இன்று போரால் சிதைந்து சின்னாபின்னமாகி காணப்படுகின்றது. ஏ-9 வீதியின்அருகில் அமைந்துள்ள இக்கிராமத்தின் மிகவும் பழமை வாய்ந்த பாடசாலை அன்னைவேளாங்கன்னி மாதா ஆலயம், புனித திரேசா ஆலயம் என்பனவும் அழிவடைந்துள்ள காணப்படுகின்றன.

கடந்த கால யுத்தம் காரணமாக வடக்கின் சுமார் முகமாலை உட்பட 640 கிராமங்களில் 105 மில்லியனுக்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவை நீண்டகாலம் காத்திருந்து உயிர் குடிக்கும் வல்லமை கொண்டது என்றும் 2010ம் ஆண்டில் கண்ணிவெடி விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த யுனிசெப் நிறுவனம் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் மேற்குறித்த கிராமங்களில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் மீள்குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் 257 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் தவிர ஏனைய பூநகரி கரைச்சி, கண்டாவளை ஆகிய பிரதேசசெயலர் பிரிவுகளில் 491 குடும்பங்களின் காணிகள் படையினரின் பயன்பாட்டில் இருப்பதனால் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்ற முகமாலைப்பகுதியில் வெடி பொருட்களை அகற்றி தாங்கள் மீள்குடியேறி தமது நிலங்களில் வாழ்வாதார பயிர்களை மேற்கொண்டு தமது பொருளாதாரத்தை மேம்படுத்த ஏற்ற வழிவகைகளை விரைவாக ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும். இது எப்போது கைகூடும் என்பது தான் தாங்கள் எதிர்பார்ப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *