கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்றமை, பரிநிர்வாணம் அடைந்தமை ஆகியவற்றை ஒன்றுசேர நினைவுறுத்துவதே வெசாக் தினமாகும். இது உலகம் பூராகவும் உள்ள பௌத்தர்களுக்குக் குறிப்பாக இலங்கையின் தேரவாத பௌத்தர்களுக்கு புனித நாளாகும். இந்நாளினை ஐ.நா. மன்றம் சர்வதேச வெசாக் தினமாகப் பிரகடனப்படுத்தி அதன் 14 ஆவது ஆண்டு நிகழ்வு இலங்கையில் கொண்டாடப்பட்டது. இதனைச் சிறப்பிக்கவே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இங்கு அழைக்கப்பட்டார்.
இந்தியப் பிரதமர் வெசாக் தின நிகழ்வைச் சிறப்பிக்க வந்திருப்பினும் அதற்குப் பின்னால் இருக்கும் நிகழ்ச்சி நிரல் பற்றியே அரசியல் ரீதியில் நோக்குதல் வேண்டும். இந்தியப் பிரதமரை இரண்டு நிலைகளில் வைத்து நோக்குதல் வேண்டும். ஒன்று அவரது தீவிர இந்துத்துவ நிலைப்பாடு. இரண்டாவது அவரது ஆளும் அதிகார வர்க்கத்தின் நிலைப்பாடு. இவ்விரண்டும் இணைந்தே அவரை இந்தியப் பிரதமராக்கியது. அவர்
சிறுவயது முதலே இந்துத்துவச் சூழலிலேயே வளர்ந்து வந்தவர். அவரது இளமைக் காலப் பயிற்சிக் கூடமாக இருந்தது தீவிர இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ். எஸ். ஆகும். அதன் மூலமே பாரதிய ஜனதாக் கட்சியில் மேலெழுந்து வந்தார். மாநில அதிகாரத்திற்கு வருவதற்காக கடும் முயற்சிகளையும் உழைப்பையும் கொடுத்தவர். அதனால் குஜராத்தின் முதலமைச்சராகி அம்மாநிலத்தின் வளர்ச்சி என்று கூறப்படுவனவற்றின் கதாநாயகன் ஆனார். அவரது தீவிர இந்துத்துவ நிலைப்பாடும் அதனை அரசியலுடன் இணைத்து அதிகாரமாக மாற்றுவதற்கும் இந்துத்துவ வன்முறையைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் விசாரணையும் இந்திய அரசியல் வரலாற்றில் பதிவுடன் இருந்துவருவதாகும். அவர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த வேளையில் இடம்பெற்ற கோத்திரா புகையிரத எரிப்பும் அதனைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட கொடிய வன்முறையும் பிரசித்திபெற்றதாகும். அதன் காரணமாகவே அமெரிக்கா அவருக்கு விசா மறுப்புச் செய்தமையும் பிரதமராக வந்த பின்பே அது இரத்துச் செய்யப்பட்டமையும் பழைய கதைகளாகும். ஆனால் அக்கதைகள், நிகழ்வுகளுக்குப் பின்னால் மனித வலிகளும் வேதனைகளும் அவலங்களும் இருந்தமை எவ்வகையிலும் மறைக்கக்கூடியவை அல்ல. மதவாதம், இனவாதத்தைப் பயன்படுத்தி எவ்வாறு அதிகார உச்சிக்கு வருவது என்பதற்கு இந்திய ஜனநாயகம் என்று அழைக்கப்படும் தளத்தில் நரேந்திரமோடி நல்லதோர் உதாரண மனிதராவார்.
நரேந்திர மோடி தனது இளம் பராயத்தில்
அடுத்து அவர் மாநில அதிகார பீடத்தின் ஊடாக பாரதிய ஜனதாக் கட்சியை மத்திய ஆளும் நிலைக்கு கொண்டுவந்தவர். அவரை பிரதமராக்குவதில் இந்திய கோப்ரேட் முதலாளிகள் எத்தகைய பங்களிப்பு வழங்கினர் என்பதும் கடந்த காலக் கதையாகிவிட்டது. இத்தகைய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியாவின் ஏகப்பெரும்பான்மையான தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களுக்கும் தலித்துகள்,பெண்கள், பழங்குடி மக்களுக்கும் எவற்றைக் கிடைக்கச் செய்து வருகிறார் என்பது பாரத பூமியிலே நாளாந்தக் கேள்விகளாகும். கடன் தள்ளுபடி, காவிரிநீர்ப் பிரச்சினை, நதிகளின் இணைப்புக் கோரிக்கைகளை முன்வைத்து புதுடில்லியில் தமிழக விவசாயிகள் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் விவசாயிகள் பிரச்சினைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும். அதேபோன்றதே தனியார் மயம், ஒப்பந்தத் தொழிலாளர் முறைமை, தொழிற்சங்க உரிமை என்பனவற்றுக்காக மாருதி சுசுக்கி சிற்றூர்தி உற்பத்தித் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் கடந்த ஐந்து வருடங்களாக நடத்திவரும் போராட்டமாகும். அதன் உச்சமாகவே அண்மையில் மாருதித் தொழிலாளர்கள் 13 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டமையாகும். இத்தண்டனை தனியார் மயத்தையும் உள்நாட்டு அந்நிய மூலதனத்தை எதிர்க்கும் தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட சட்டத்தின் பெயரிலான எச்சரிக்கையாகும். இவையாவற்றையும் இந்திய ஆளும் வர்க்கமானது அந்நிய மூலதனக்காரர்களுடன் இணைந்து இந்திய மக்களுக்கு இழைத்துவரும் அநீதிகளாகவே காணமுடிகிறது. இத்தகைய இந்திய ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கை பெற்று நிற்கும் நரேந்திரமோடி இலங்கை மக்களுக்கு அருள்புரிவார் என்று வடக்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் சிலர் எதிர்பார்ப்பது அல்லது தொழுது நிற்பது முட்டாள் தனமானதாகும்.
இந்திய ஆளும் வர்க்கமும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் இந்திய எல்லைகளோடு மட்டுப்படுத்தப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் தென்னாசியப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிராந்திய வல்லரசு நோக்கம் கொண்டவர்கள். அதன் அடிப்படையிலேயே இந்தியா வல்லரசாக வேண்டும் என்னும் பயணத்தில் நரேந்திரமோடியினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தியாவை உருவாக்குதல் முன்னெடுக்கப்படுகிறது. இது அமெரிக்க ஜனாதிபதியாகி நிற்கும் டொனால்ட் ட்ரம் கூறிவரும் “முதல்தர அமெரிக்கா’ என்பதற்கு ஒப்பானதாகும். இந்தியாவை வல்லரசாக்குவதன் ஒரு அம்சமே பிராந்திய மேலாதிக்கமாகும். அதற்கு தென் ஆசியாவைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல் வேண்டும். அதன் வழியிலேயே இலங்கையை இந்தியா கையாண்டு வருவதாகும். தமது பிராந்திய நலனுக்கும் தேவைக்கும் ஏற்றதாக இலங்கை செயற்பட்டு வரவேண்டும் என்பது இந்திய வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்களின் அடிப்படையில் மூலோபாயக் கொள்கையாகும். அதற்கு இசைவாகவும் பெரியண்ணனைப் பகைக்காமலும் இலங்கையின் ஆட்சியாளர்கள் நடந்துகொள்ளல் வேண்டும் என்பது எப்பொழுதும் இந்திய எதிர்பார்ப்பாக இருந்து வந்துள்ளது. இதனையே இன்றைய மைத்திரி ரணில் அரசாங்கத்திடமும் மோடி தலைமையிலான இந்திய ஆளும் வர்க்கம் எதிர்பார்க்கின்றது. அதற்கு இசைவாகவும் விட்டுக் கொடுத்தும் செல்லவேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் தனது ஆதரவுப் போக்கை கடைப்பிடிக்கிறது. அதன் ஒரு அம்சமாகவே எட்கா எனப்படும் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை என்பதை நிறைவேற்ற இந்தியா வற்புறுத்தி வந்துள்ளது. இது இலங்கையில் கடும் எதிர்ப்பலையைத் தோற்றுவித்ததுடன் மேற்படி எட்கா ஒப்பந்தம் இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக்கி விடும் என்ற எச்சரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரும் இலங்கை இந்திய வர்த்தக ஒப்பந்தமானது இலங்கைக்குச் சாதகமாக அமையவில்லை என்பதும் அது இந்தியாவின் நன்மைக்குரியதாக இருந்துவருவதையும் பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். எனவே எட்கா ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியாத சூழலிலேயே இந்தியா வெவ்வேறு வழிகளில் இலங்கையை தனது கரங்களுக்குள் அல்லது மிகக்கிட்டிய நிலையில் வைத்திருக்க முயன்று வருகின்றது.இந்தியாவிற்கு எப்பொழுதும் திருகோணமலைத் துறைமுகம் கண்ணெதிரே காட்சி தரும் அதிமுக்கிய இடமாகும். அதன் காரணமாகவே 1987 இன் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் அதன் பயன்பாடு பற்றிக் கூறப்பட்டிருப்பதன் அர்த்தம் திருகோணமலையின் முக்கியத்துவம் கருதியேயாகும். அங்கு அமைந்திருக்கும் நிலத்தடியிலும் மேலேயும் இருந்துவரும் எண்ணெய் சேமிப்புக் குதங்கள் இந்தியக் கண்களில் தவறவிடக்கூடாதவைகளாக இருந்தும் வருகின்றன. திருமலையின் புவியியல் அமைவிடம் கருதியே இந்தியா மற்றொரு நகர்வாக சம்பூரில் ஐந்நூறு ஏக்கர் நிலப்பரப்பில் அனல் மின் நிலையம் அமைக்க முன்வந்து இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து அதற்கான நிலத்தையும் பெற்றுக்கொண்டது. சம்பூர் மக்களினதும் ஏனைய பிரதேசங்களின் மக்களினதும் கடுமையான எதிர்ப்பியக்கங்களினால் அவ் அனல் மின் நிலையம் கைவிடப்பட்டதாயினும் இந்தியா தொடர்ந்தும் அங்கு வேறு வகை முதலீடுகளைச் செய்யத் தயாராகி வருகிறது.
இலங்கை ஒரு பாரம்பரியம்மிக்க விவசாய நாடு. ஆறுகளால் மட்டுமின்றி மிகப்பெரும் குளங்களாலும் சிறு குளங்களாலும் விவசாயத்தை முன்னெடுத்து வந்த நாடாகும். ஆனால் கொலனித்துவ வாதிகளும் பின்பு ஊடுருவிய நவகொலனியவாதிகளும் இலங்கையின் விவசாயத்தைச் சீரழித்து சின்னா பின்னப்படுத்தி தமது இலாபத்திற்கான பணப் பயிர்களைத் திணித்தனர். அதனால் விவசாயத்தோடு இணைந்ததான சிறுகைத்தொழில்களும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய பெரும் கைத்தொழில்களும் இல்லாமல் ஆக்கப்பட்டன. இவற்றின் தீய விளைவுகளையே இன்று நாடு அனுபவிக்கிறது. ஆனால் இன்றைய ஆளும் வர்க்கமும் முன்னையவர்களும் அந்நிய மூலதனத்திற்கும் முதலீடுகளுக்கும் ஒப்பந்தங்கள் செய்வதற்கு உலகின் பணக்கார நாடுகளுடன் இரந்து நிற்கின்றனர். மேற்குலக நாடுகளிடம் மட்டுமன்றி இந்திய, சீன, ஜப்பானிய முதலீடுகளுக்குப் பிரார்த்தனை செய்து நிற்கிறார்கள். இதனால் மேற்படி நாடுகள் இலங்கையின் நாலாபுறத்திலும் தத்தமது நீண்டகால நோக்கங்களுடன் கால்களை ஊன்றி வருகின்றன. அதன் ஊடாக நமது நாட்டின் மனித உழைப்பும் இயற்கை வளங்களும் வாரிச்சுறுட்டப்பட்டு வருகின்றன. அவை மட்டுமின்றி மேற்படி நாடுகளிடையே இலங்கையை யார் அரசியல், பொருளாதார அரங்குகளில் ஆதிக்கம் செலுத்துவது என்பதில் உள்ளார்ந்ததும் வெளிப்படையிலுமான போட்டா போட்டி இடம்பெற்று வருகின்றன.
இவற்றில் இந்திய, சீனப் போட்டியானது வெளிப்படையாக இருந்துவருகிறது. சீனா, இலங்கையின் பாரம்பரிய நட்பு நாடாகவும் அவ்வப்போது உதவும் நாடாகவும் இருந்து வந்திருக்கிறது. அறுபதுகள், எழுபதுகளில் இலங்கையின் தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் உதவுவதில் சீனா முன்னின்று வந்துள்ளது. அவ்வேளை சீன நாடு ஒரு சோஷலிச நாடாக இருந்து வந்தமை அவ் உதவிகளின் தன்மைக்கு அடிப்படைக் காரணமாகும். ஆனால் எண்பதுகளுக்குப் பின்பு சீனா முன்னைய உதவி என்பதற்கு அப்பால் கடன் வழங்குதல், முதலீடுகளைச் செய்தல், வர்த்தகத்தை முன்னெடுத்தல், பெரும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு இலாபம் சம்பாதித்தல் போன்றவற்றை விரிவாக்கிக் கொண்டது. அதன் அடிப்படையிலேயே அம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்புதுறை முக நகர்த்திட்டம் போன்றவற்றில் பெரும் முதலீடுகளை செய்துகொண்டது. அவற்றை விரிவுபடுத்துவதற்குரிய செயற்பாட்டை முன்னெடுத்தும் வருகிறது. மேலும் பல நடுத்தர முதலீடுகளைத் தெற்கை மையமாகக் கொண்டே சீனா முன்னெடுத்து வருகிறது. இதனால் சீன ஆதிக்கம் வலுவடைகிறது என்ற பிரசாரமும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இலங்கையின் சந்தையில் சகல வகை சீன உற்பத்திகளும் குவிந்து வருகின்றன. இவ்வாறு இலங்கையில் தெற்கிலும் சிங்கள மத்தியிலும் சீன ஆதரவு என்பது தொடர்ச்சியாக இருந்துவருவதாகும்.
அதேவேளை இந்தியாவின் நிலைப்பாடானது திருகோணமலை உள்ளிட்ட வடக்கு, கிழக்கை மையப்படுத்தியதாகவே இருந்து வந்துள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் இந்தியாவைப் போற்றி வரவேற்று நிற்கும் நிலைப்பாடு கொண்டவர்கள். மொழி, மத, பண்பாட்டு வாழ் நிலையில் இந்தியத் தொடர்பைத் தொப்பு கொடி உறவு எனக் கொண்டாடி நிற்பவர்கள். அதனால் இந்தியாவை நம்பி நம்பி ஏமாந்த ஒரு சமூகமாக இலங்கைத் தமிழர்கள் இருந்து வந்துள்ளனர். அத்துடன் அவ்வப்போது இந்தியாவிடமிருந்து பெற்ற மோசமான அடிகளையும் அழிவுகளையும் பொறுத்துக் கொண்டு அவற்றை “மோதிரக் கையால்’ பெற்ற குட்டாகக் கொண்டு இந்திய விசுவாசத்தைப் பெற்று வரும் போக்கே காணப்படுகிறது. இதற்கு தமிழர் தரப்புத் தலைமைகள் வழிகாட்டி இந்தியாவின் முன்னால் மிகுந்த பயபக்தியுடன் இருந்தும் வருகின்றன.
மேற்படி விடயங்களைப் பின்புலமாகக் கொண்டே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெசாக் தினப் பிரதான அதிதியாக இலங்கையில் இருபத்தி நான்கு மணிநேரத்தைச் செலவிட்டமை பற்றிச் சிந்திக்கவைக்கிறது. மத அடிப்படையில் கூட இந்துத்துவ நிலைப்பாட்டிற்கும் பௌத்த தர்மக் கோட்பாடுகளுக்கும் பலத்த வேறுபாடுகளும் முரண்பாடுகளும் உண்டு. அதுமட்டுமின்றி தீவிர இந்துத்துவ வாதி யான மோடி தனது நிலைப்பாட்டையும் கடந்து இங்கு வெசாக் தினத்திற்கு வந்து பங்குபற்றிச் செல்கிறார் என்றால் அதற்குப் பின்னால் இருந்துவரும் காரணகாரியங்கள் ஆழ்ந்து நோக்கப்படவேண்டியவையாகும். பிரதமர் மோடி முன்பு இலங்கை வந்திருந்த போது யாழ்ப்பாணம் சென்று தமிழ்த் தரப்புகளுக்குத் தரிசனம் வழங்கிச் சென்றார். ஆனால் இம்முறை மலையகம் சென்று அங்குள்ள தொழிற்சங்க அரசியல் தலைமைகளுக்கு தரிசனமும் அபயக்கரமும் காட்டிச் சென்றுள்ளார். அவ்வாறு மோடியை மலையகம் அழைப்பதில் கூட பக்தர்களிடையே அடிபிடியும் சண்டை சச்சரவுகளும் இடம்பெற்றிருக்கிறது. இந்திய ஆளும் வர்க்கமானது இலங்கையில் சுமார் இருநூறு வருடங்களாக வாழ்ந்துவரும் மலையகத் தமிழர் பற்றி எவ்வித கரிசனையும் காட்டியது கிடையாது. அவ்வப்போது சில போக்குக் காட்டுதல்களுக்கு அப்பால் மலையகத் தொழிலாளர்களுக்கு உருப்படியான எதையும் செய்ததோ அக்கறைப்பட்டதோ கிடையாது. மலையகத் தமிழர்கள் இந்திய வம்சாவளியினராக இருந்த போதும் அவர்கள் இன்று இலங்கையர்கள். அவர்கள் ஒரு தேசிய இனமாக வளர்ச்சி பெற்றுள்ளனர். அதேவேளை தமது உரிமைகளைத் தாமே போராடிவென்றும் வந்துள்ளனர். அத்தகைய மலையக மக்களுக்கு மோடியின் வருகையால் எதிர்பார்க்க எதுவுமே இருக்க முடியாது என்பதே யதார்த்தம். நாலாயிரம் வீட்டுத் திட்டமோ, கிளங்கன் வைத்தியசாலைப் புனரமைப்போ அல்லது மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களோ, உதவிகளோ மேம்போக்கான பிரசார உத்திகளுக்கானவைகளே யாகும். இவை சிலவேளை மலையகத்தின் அடிபிடிப்படும் தலைமைகளுக்கு ஏதாவது உதவக்கூடும். ஆனால் காணி, வீடு உரிமையற்று மிகக்குறைந்த சம்பளத்தோடு வாழ்ந்து வரும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மோடி வருகையால் எதுவுமே மாற்றம் வந்துவிடமாட்டாது என்பது உணரப்பட வேண்டியதாகும்.
இதுவரை காலமும் வடக்கு, கிழக்கின் தமிழர்தரப்புத் தலைமைகள் இந்தியாவை விசுவாசித்து நின்று கண்ட மிச்சம் தான் என்ன? முள்ளிவாய்க்காலில் இந்திய பரமாத்மா தனது விஸ்வரூபத்தைத் தமிழ் மக்களுக்கு காட்டிய பின்பும் இப்போதும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழர் தரப்புத் தலைவர்கள் தங்களுக்குள் பேசாது விடினும் பிரதமர் மோடிக்கு போலித்தன ஐக்கியம் காட்டித் தமது விசுவாசம் தெரிவிக்கக் காத்து நின்றனர். இவையாவற்றையும் தமிழ் மக்கள் மிகுந்த உன்னிப்புடனேயே அவதானித்து வருகின்றனர். இந்தியப் பிரதமர் இலங்கை வந்து திரும்பியமை இலங்கையின் எந்தவொரு தரப்பு மக்களின் நலன்களுக்காக அல்ல. இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நலன்களுக்காகவே என்பதே அடிப்படை உண்மையாகும்.