Search
Thursday 24 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ராஜபக் ஷவுக்கு அரசியல் புது வாழ்வு தேடிக்கொடுக்கும் அரசாங்கத்தின் குளறுபடிகள்

ராஜபக் ஷவுக்கு அரசியல் புது வாழ்வு தேடிக்கொடுக்கும் அரசாங்கத்தின் குளறுபடிகள்

வீரகத்தி தனபாலசிங்கம்

2015 ஜன­வரி ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ தோல்­வி­ய­டைந்து இரு­மா­தங்கள் கூட கடந்து விடாத நிலையில் பெப்­ர­வரி 17 ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சிறிய பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்கள் தலை­நகர் கொழும்­புக்கு வெளியே நுகே­கொ­டையில் பொதுக் கூட்டம் ஒன்றை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர். அடுத்த சில மாதங்­களில் நடை­பெ­ற­வி­ருந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் சுதந்­திர முன்­ன­ணியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி ராஜபக் ஷவை நிறுத்தி களத்தில் இறங்­கு­வ­தற்­கான அந்தக் கட்­சி­களின் வியூ­கத்தின் முதற்­கட்­ட­மாக அந்தக் கூட்டம் அமைந்­தி­ருந்­தது.

ஏற்­பாடு செய்­த­வர்­களே எதிர்­பார்த்­தி­ராத வகையில் பெருந்­தி­ர­ளான மக்கள் கலந்து கொண்ட கூட்­டத்தில் உரை­யாற்­றிய முன்னாள் இரா­ஜ­தந்­தி­ரியும் இன்று சிங்­களத் தேசி­ய­வா­தத்தின் பிர­தான  தத்­து­வ­வா­தி­களில்  ஒரு­வ­ராக தன்னைக் காட்­டிக்­கொள்­கின்­ற­வ­ரு­மான கலா­நிதி  தயான்  ஜெய­தி­லக அதை ‘எழுச்சி’ என்று வர்­ணித்­தி­ருந்தார். ராஜபக் ஷ அக்­கூட்­டத்தில் பங்­கேற்­க­வில்­லை­யெ­னினும் செய்தி ஒன்றை அனுப்­பி­யி­ருந்தார்.

அதற்­குப்­பி­றகு இந்த ராஜபக் ஷ விசு­வா­சிகள் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் அத்­த­கைய பொதுக்­கூட்­டங்­களைத் தொடர்ச்­சி­யாக நடத்­தினர். சுதந்­திரக் கட்­சியின் தலை­மைத்­துவம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் வந்­து­விட்ட போதிலும் கூட, பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ராஜபக் ஷ தலை­மையில் கள­மி­றங்­கு­வதைத் தடுக்கக் கூடிய நிலையில் அவர் இருக்­க­வில்லை.

பாரா­ளு­மன்­றத்தில் சுதந்­திர முன்­ன­ணிக்கு அறுதிப் பெரும்­பான்மை ஆச­னங்கள் கிடைத்­தாலும் கூட, ராஜபக் ஷவை பிர­த­ம­ராக ஒரு போதும் நிய­மிக்கப் போவ­தில்லை என்று பிர­க­டனம் செய்­த­தைத்­த­விர, ஜனா­தி­பதி சிறி­சேன அத்­தேர்­தலில் ஒரு பார்­வை­யா­ள­ரா­கவே இருந்தார். இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் பிர­தான கட்­சி­யொன்றின் தலை­மை­யி­லான கூட்­டணி அக்­கட்­சியின் தலை­வரின் பங்­கேற்­பின்றி தேசியத் தேர்தல் ஒன்றைச் சந்­தித்த முதன் முத­லான சந்­தர்ப்­ப­மாக 2015 ஆகஸ்ட் பாரா­ளு­மன்றத் தேர்தல் அமைந்­தது எனலாம்.

அந்தத் தேர்தல் நடை­பெற்று சுமார் இரண்­டரை வரு­டங்கள் கடந்த நிலையில் இன்று ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சிறிய பங்­காளிக் கட்­சி­க­ளையும் சேர்ந்த ஐம்­ப­துக்கும் அதி­க­மான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்னாள் ஜனா­தி­பதி தலை­மையில் ‘கூட்டு எதி­ரணி’ என்ற பெயரில் இயங்கிக் கொண்­டி­ருக்­கின்ற அதே­வேளை, ஜனா­தி­பதி சிறி­சே­ன­வுடன் இருக்கும் சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் சேர்ந்து அமைக்­கப்­பட்­டி­ருக்கும் தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கி­றார்கள்.  ஜனா­தி­பதி சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக இரு வரு­டங்­க­ளாக இருக்­கின்ற போதிலும் கட்சி இன்­னமும் முழு­மை­யாக அவரின் கட்­டுப்­பாட்­டிற்குள் வர­வில்லை.

Mahinda17-e1458745894327

இதன் விளை­வாக அவர் அர­சியல் ரீதியில் பெரும் நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கு­கின்றார். நாட்டின் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாக இருந்­தாலும் கூட, தனது கட்­சியை முழு­மை­யாக கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்தால் மாத்­தி­ரமே உருப்­ப­டி­யான முறையில் அதி­கா­ரத்தைச் செலுத்திச் செயற்­ப­டக்­கூ­டி­ய­தாக இருக்கும் என்­பதை ஜனா­தி­பதி சிறி­சே­னவின் பரி­தாப நிலை உணர்த்தி நிற்­கி­றது.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி ராஜபக் ஷ முகாம் என்றும் சிறி­சேன முகாம் என்றும்  பிள­வுண்­டி­ருப்­பதன் கார­ணத்­தினால், நாட்டின் இரு பிர­தான அர­சியல் கட்­சி­களும் வர­லாற்றில் முன்­னென்­று­மில்­லாத வகையில் ஒன்று சேர்ந்து தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தை அமைத்­தனால் கிடைக்கக் கூடி­ய­வை­வென்று எதிர்­பார்க்­கப்­பட்ட பயன்­களை நாட்டு மக்­க­ளினால் பெற­மு­டி­யாமல் இருக்­கி­றது. அது மாத்­தி­ர­மல்ல , அர­சாங்­கத்தின் ஐக்­கிய தேசியக் கட்சிப் பிரிவும் சுதந்­திரக் கட்­சிப்­பி­ரிவும் கொள்கைத் தீர்­மா­னங்­களை எடுப்­பதில் இணக்க பூர்­வ­மான அணு­கு­மு­றை­களைக் கடைப்­பி­டிக்­கவும் முடி­யாமல் இருக்­கின்­றன.

அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்தச் செயன் முறைகள் என்­றா­லென்ன, பொரு­ளா­தார அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் என்­றா­லென்ன, அர­சாங்­கத்தின் இரு பிரி­வு­களும் முரண்­ப­டு­கின்ற போக்கு அண்மைக் கால­மாக தீவி­ர­ம­டைந்­தி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் தலை­மையில் ஐக்­கிய தேசியக் கட்சி அமைச்­சர்கள் முன்­வைக்­கின்ற யோச­னைகள் மற்றும் முன்­னெ­டுக்­கின்ற திட்­டங்­களில் பல­வற்­றையும் ஜனா­தி­பதி சிறி­சேன ‘வீட்டோ’ செய்து சுதந்­தி­ரக்­கட்சி அமைச்­சர்­களைத் திருப்­திப்­ப­டுத்த முயற்­சிக்­கின்ற போக்கைக் காண்­கின்றோம்.

அதனால் ஆட்சி நிர்­வா­கத்தை உருப்­ப­டி­யான முறையில் முன்­னெ­டுக்க முடி­யாமல் இருக்­கி­றது. முரண்­பா­டு­களின் உரு­வ­மாக இன்­றைய அர­சாங்­கத்தை மக்கள் காண்­கி­றார்கள். பொரு­ளா­தார முனை­யிலும் சரி, அர­சியல் சீர்­தி­ருத்த முனை­யிலும் சரி பெரு­ம­ள­வுக்கு தேக்க நிலை­யையே காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. மிகவும் குறு­கிய காலத்­திற்குள் அதா­வது சில­வ­ருட காலத்­திற்குள் மக்­களின் விரக்­திக்­கா­ளாகி விட்ட ஒரு அர­சாங்­க­மாக இதை நோக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது.

ஜனா­தி­பதி சிறி­சே­னவின் முகாமைப் பொறுத்­த­வரை ராஜபக் ஷ தலை­மை­யி­லான ‘கூட்டு எதி­ரணி’ ஒவ்­வொரு விவ­கா­ரத்­திலும் எடுக்­கின்ற நிலைப்­பாட்­டுக்கு ஈடி­ணை­யான நிலைப்­பாட்டை எடுக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்தில் இருப்­பதே அவர்­களின் முக்­கி­ய­மான பிரச்­சினை.

அன்­றைய எதி­ர­ணியின் பொது வேட்­பா­ள­ராக ஜனா­தி­பதித் தேர்­தலில் ராஜபக் ஷவை  எதிர்த்துப் போட்­டி­யிட்ட சிறி­சே­னவை சுதந்­திரக் கட்­சி­யி­னரில் அதிகப் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் ஆத­ரித்து வாக்­க­ளிக்­க­வில்லை. ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னதும் சிறு­பான்­மை­யின மக்­க­ளி­னதும் வாக்­கு­களின் பலத்தில் தான் அவர் தேர்­தலில் வெற்­றிப்­பெ­றக்­கூ­டி­ய­தாக இருந்­தது. அத்­துடன் ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் நில­விய குடி­யியல் உரி­மை மனித உரி­மை மீறல்கள், சட்­டத்தின் ஆட்­சியின் சீர்­கு­லைவு மற்றும் ஊழல் மோச­டி­களை கடு­மை­யாக எதிர்த்து நின்ற சிவில் சமூக அமைப்­புகள் பலவும் சிறி­சே­ன­வுக்கு ஆத­ர­வாகப் செயற்­பட்­டன.

ராஜபக் ஷவை ஆத­ரித்த வாக்­காளர் தொகு­தியும் சிறி­சே­னவை ஆத­ரித்த வாக்­காளர் தொகு­தியும் அந்த நேரத்­தைய அர­சியல் சூழ்­நி­லையை அடிப்­ப­டை­யாக வைத்து நோக்கும் போது பெரு­ம­ள­வுக்கு இயல்பில் வேறுப்­பட்­ட­வை­யா­கவே இருந்­தன. தன்னை ஆத­ரித்து பத­விக்கு கொண்டு வந்த அர­சியல் சக்­தி­க­ளையும் சிவில் சமூக சக்­தி­க­ளையும் வாக்­காளர் தொகு­தி­யையும் மேலும் வலுப்­ப­டுத்தி, தனது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் நோக்­கி­லான செயன்­மு­றை­களை முன்­னெ­டுப்­பதை விடுத்து ஜனா­தி­பதி சிறி­சேன, ராஜபக் ஷவை ஆத­ரித்த அர­சியல் சக்­தி­க­ளையும்,  வாக்­காளர் தொகு­தி­யையும் தனது    பக்கம் வென்­றெ­டுப்­பதில் நாட்டம் காட்டத் தொடங்­கி­யதே இன்று அவர் எதிர்­நோக்க வேண்­டி­யி­ருக்­கின்ற பல பிரச்­சி­னை­க­ளுக்குக் கார­ண­மாகும்.

Ranil-Sirisena-in-parliament3

அர­சியல் சீர்த்­தி­ருத்­தங்­களை முன்­னெ­டுத்து நாட்டில் புதி­யதோர் அர­சியல் கலா­சா­ரத்தைத் தோற்­று­விக்கப் போவ­தாகக் கூறிக் கொண்டு ஆட்சி அதி­கா­ரத்­துக்கு வந்த ஜனா­தி­பதி சிறி­சேன இன்று அதே அர­சியல் சீர்த்­தி­ருத்­தங்­க­ளுக்கு முட்­டுக்­கட்டை போடு­கின்ற ராஜபக் ஷ முகாமின் நிலைப்­பா­டு­க­ளுக்கு இசை­வான அணு­கு­மு­றை­களைக் கடைப்­பி­டிக்க ஆரம்­பித்­தி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

ராஜபக் ஷ அர­சாங்­கத்­தை­விட்டு வெளி­யேறி 2014 ஆம் ஆண்டு நவம்பர் 21 இல் முன்னாள் ஜனாதி­பதி திரு­மதி. சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க சகிதம் கொழும்பில் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய சிறி­சேன, நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஒழிப்­பதே தனது பிர­தான நோக்கம் என்றும், அதற்­கா­கவே பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக ஜனா­தி­பதித் தேர்லில் போட்­டி­யிட முன்­வந்­த­தா­கவும் பிர­க­டனம் செய்­ததை நாட்டு மக்கள் மறக்­க­வில்லை.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு மறுநாள் 2015 ஜன­வரி 9 ஆம் திகதி கொழும்பு சுதந்­திர  சதுக்­கத்தில் ஜனா­தி­ப­தி­யாக பதவிப் பிர­மாணம் செய்து கொண்ட பின்னர் உரை­யாற்­றிய சிறி­சேன இனி­யொரு ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடப் போவ­தில்லை என்று அறி­வித்­த­தையும் நாட்டு மக்கள் ஞாப­கத்தில் வைத்­தி­ருக்­கி­றார்கள்.

ஆனால், இன்று சுதந்­திரக் கட்­சியின் அமைச்சர் பெரு­மக்கள் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறை தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் 2020 ஆம் ஆண்டில் நடை­பெ­றப்­போகும் ஜனா­தி­பதித் தேர்­தலில் தங்கள் கட்­சியின் வேட்­பா­ள­ராக ஜனா­தி­பதி சிறி­சே­னவே போட்­டி­யிட வேண்டும் என்றும் கூறும்­போது அவர் எது­வுமே மறுத்துப் பேசாமல் பார்த்துக் கொண்­டி­ருக்­கிறார்.

தனது கட்சி அமைச்­சர்கள் கூறி­யி­ருப்­பவை குறித்து பெரும் அர­சியல் சர்ச்­சைகள் மூண்­டி­ருக்­கின்­ற­போ­திலும், ஜனா­தி­பதி இது­வ­ரையில் தனது நிலைப்­பாட்டை பகி­ரங்­கப்­ப­டுத்­து­வதைத் தவிர்க்­கிறார்.

சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றின் மூல­மாக மக்­களின் அங்­கீ­கா­ரத்தைப் பெற வேண்­டிய அவ­சி­யத்தைக் கொண்ட அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் எதையும் செய்யப் போவ­தில்லை என்று ஜனா­தி­பதி சிறி­சேன தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டி­ருந்­த­தாக இன்­றைய அவரின் மௌனத்தை நியா­யப்­ப­டுத்தும் வகையில் சில அர­சி­யல்­வா­தி­களும் அவ­தா­னி­களும் கருத்து வெளி­யிட்­டி­ருப்­ப­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

இலங்­கையின் ஒற்­றை­யாட்சி அந்­தஸ்து பாது­காக்­கப்­படும்; பௌத்த மதத்­துக்­கான அதி முன்­னு­ரிமை இடம் உறு­திப்­ப­டுத்­தப்­படும்; சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு தேவைப்­ப­டு­கின்ற அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­களை ஆத­ரிக்கப் போவ­தில்லை: நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறையில் மாற்­ற­மில்லை; வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் இணைப்பு இல்லை; அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வதன் மூல­மாக மாத்­தி­ரமே அதி­காரப் பர­வ­லாக்கம் என்­ப­வையே அர­சி­ய­ல­மைப்புச் சீர்த்­தி­ருத்தம் தொடர்­பி­லான சுதந்­திரக் கட்சி அமைச்­சர்­களின் தற்­போ­தைய நிலைப்­பா­டுகள்.

இதில் உள்ள முக்­கிய பிரச்­சினை என்­ன­வென்றால், இந்த நிலைப்­பா­டுகள் எல்லாம் இப்­போதே இருப்­ப­வைதான். தற்­போ­தை­யதை விடவும் மாறு­த­லான நிலை­வ­ரத்தைத் தோற்­று­விப்­பதன் மூல­மாக மாத்­தி­ரமே பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­களைக் காண முடியும். மேற்­கூ­றப்­பட்ட நிலைப்­பா­டுகள் மாற்­றத்தை விரும்­பா­த­வை­யாகும்.

இந்த விட­யத்தில் சுதந்­திரக் கட்­சியின் இரு முகாம்­க­ளுமே ஒரே புள்­ளியில் நிற்­கின்­றன. ஜனா­தி­பதி சிறி­சே­னவை ஆத­ரித்த சிறு­பான்­மை­யின மக்கள் அவரின் தரப்­பி­லி­ருந்து இத்­த­கைய நிலைப்­பாட்டை எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை. இரு பிர­தான கட்­சி­களும் கடந்த காலத்தில் ஒன்றின் முயற்­சி­களை மற்­றை­யது எதிர்த்து சீர்­கு­லைத்­த­தால்தான் இன நெருக்­க­டிக்கு அர­சியல் தீர்வைக் காண முடி­யாமல் இருந்­தது என்று கூறப்­ப­டு­வ­துண்டு. இப்­போது இரு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து அர­சாங்­கத்தை அமைத்­தி­ருக்கும் பட்­சத்தில் கூட இன நெருக்­க­டியைத் தீர்ப்­பது சாத்­தி­ய­மற்­றது என்­றா­கி­வி­டு­கி­றதே?

அதே­வேளை, அர­சாங்­கத்தில் இருந்து கொண்டே ஐக்­கிய தேசியக் கட்­சியும் சுதந்­திரக் கட்­சியும் 2020 தேசியத் தேர்­தல்­க­ளுக்குப் பிறகு தனி­யாக ஆட்­சி­ய­தி­கா­ரத்­துக்கு வரு­வது குறித்த கன­விலும் மிதக்­கின்­றன.

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் நாட்டு மக்­க­ளுக்குக் கூறிய புதிய அர­சியல் கலா­சாரம் என்­பது  சேர்ந்து அர­சாங்­கத்தை அமைத்துக் கொண்டு தொடர்ந்தும் கட்சி அர­சியல் நிகழ்ச்சித் திட்­டங்­களை ஏட்­டிக்குப் போட்­டி­யாக முன்­னெ­டுக்­கின்ற தற்­போ­தைய அவர்­களின் நடை­மு­றை­தானோ? ராஜபக் ஷ மீண்டும் அதி­கா­ரத்­துக்கு  வரா­தி­ருப்­பதை உறுதி செய்­வ­தற்­காக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­ப­டு­வார்கள் என்­பதால் தேசிய ஐக்­கிய அர­சாங்கம் முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யிலும்  தொட­ரவே செய்யும் என்ற ஒரு சிந்­தனை இருக்­கி­றது. வெறு­மனே ராஜபக் ஷவை அதி­கா­ரத்­துக்கு வர­வி­டாமல் தடுத்துக் கொண்டு அதே­வேளை உருப்­ப­டி­யான எந்தக் காரி­யத்­தையும் செய்­யாமல் இருக்­கின்­ற­தொரு அர­சாங்­கத்­தினால் மக்­க­ளுக்கு என்ன பயன் என்ற கேள்வி மறு­பு­றத்தில் எழு­கி­றது.

இது இவ்­வா­றி­ருக்க, நுகே­கொ­டையில் முதல் ராஜபக் ஷ ஆத­ரவுப் பொதுக் கூட்டம் நடை­பெற்று சுமார் இரு வரு­டங்­க­ளுக்குப் பிறகு அதே நுகே­கொ­டையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை அவர் தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணியின் பொதுக் கூட்டம் ஒன்று பெரும் எடுப்பில் நடை­பெற்­றி­ருக்­கி­றது.

முதல் நுகே­கொடைக் கூட்டக் காலத்தில் தனது அர­சியல் எதிர்­காலம் குறித்து திட்­ட­வட்­ட­மா­ன­தொரு முடிவை எடுக்­கா­த­வ­ராக இருந்த  ராஜபக் ஷ  இரண்­டா­வது கூட்­டத்தில் கலந்து கொண்டு தற்­போ­தைய அர­சாங்­கத்தை விரைவில் கவிழ்ப்­பது குறித்து மிகுந்த உற்­சா­கத்­துடன் பேசி­யி­ருக்­கிறார்.

“பெர­லி­யக்க ஆரம்­பும ” (புரட்­சியின் தொடக்கம்) என்ற அறை­கூ­வ­லுடன் நடத்­தப்­பட்ட இந்தக் கூட்­டத்தில் அவர் தேசிய ஐக்­கிய அர­சாங்கம் ஊழல் மோச­டிகள் நிறைந்­த­தாக இருக்­கி­ற­தென்று குற்­றஞ்­சாட்­டி­ய­துடன் தான் மீண்டும் அர­சியல் அதி­கா­ரத்தைப் பெறும்­போது இன்று ஊழல் மோச­டி­களைச் செய்து அரச சொத்­து­களை கள­வா­டி­யி­ருப்­ப­வர்­க­ளி­ட­மி­ருந்து அவற்றை மீட்­டெ­டுக்கப் போவ­தாக சூளு­ரைத்த வேளையில், கடந்த ஆட்சிக் காலத்தில் அரச சொத்­து­களை துஷ்­பி­ர­யோகம் செய்­த­தா­கவும், ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­ட­தா­கவும் விசா­ர­ணைக்­குள்­ளா­கி­யி­ருக்கும் அல்­லது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டுப் பிணையில் விடப்­பட்­டி­ருக்கும் பல அர­சி­யல்­வா­திகள் மேடையில் அட்­ட­கா­ச­மாக அமர்ந்­தி­ருந்த விசித்­தி­ரத்தைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

mahinda meeting nugegoda

ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­த­தை­ய­டுத்து அர­சி­யலில் இருந்து விலகி ஓய்­வெ­டுக்கத் தீர்­மா­னித்த தன்னை ஜனா­தி­பதி சிறி­சே­னவின் நட­வ­டிக்­கை­களே மீண்டும் அர­சி­ய­லுக்கு வர நிர்ப்­பந்­தித்­தாக கூறிய ராஜபக் ஷ அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தங்­களை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான அர­சாங்­கத்தின் முயற்­சிகள் நாட்டை பிள­வு­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் என்று தனது வழ­மை­யான பாணியில் வர்­ணித்தார். விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டித்து தனது அர­சாங்கம் பெற்றுக் கொடுத்த வெற்­றிக்கு துரோ­க­மி­ழைக்­கப்­படப் போகின்­றது என்றும் அவர் கூறினார். ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வாக ஏற்­பாடு செய்­யப்­பட்ட முன்­னைய பொதுக்­கூட்­டங்­களில் காணப்­பட்­ட­தைப்­போன்று இந்த நுகே­கொடைக் கூட்­டத்­திலும் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்கு  எதி­ரான உணர்­வ­லைகள் வெளிப்­ப­டை­யா­ன­வை­யாக இருந்­தன.

சிறு­பான்­மை­யி­னங்­களைப் பிர­தி­ப­லிக்­கின்­ற­வை­யாக அமைந்­தி­ருக்கும் செம்­மஞ்சள், பச்சை வரிகள் இல்­லாத “தேசியக் ” கொடி­களை ஆத­ர­வா­ளர்கள் வைத்­தி­ருந்­தனர். சர்ச்­சைக்­கு­ரிய சிங்­கள தேசி­ய­வா­தி­யான பௌத்த பிக்கு எல்ல குண­வன்­சவும் ஒரு பேச்­சாளர். தனது ஆட்­சிக்­கா­லத்தில் தென்­னி­லங்­கையில் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்கு எதி­ரான உணர்­வுகள்  மேலோங்கக் கூடி­ய­தான கொள்­கை­ளையும் செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்த முன்னாள் ஜனா­தி­பதி, மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரு­வ­தற்­கான தனது தற்­போ­தைய முயற்­சி­க­ளிலும் அதே சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு விரோ­த­மான நிலைப்­பா­டு­க­ளையே முன்­னி­லைப்­ப­டுத்தப் போகிறார் என்­பது தெளி­வாகத் தெரி­கி­றது.

முன்­னைய ஆட்­சியில் தலைவிரித்தாடிய ஊழல் மோசடிகளுக்கு எதிராக தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டு ராஜபக் ஷவைத் தோற்கடித்த ஜனாதிபதி சிறிசேனவினதும், பிரதமர் விக்ரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்கத்தை இருவருட குறுகிய காலத்துக்குள்ளாகவே அதே ராஜபக் ஷவினால் ஊழல் நிறைந்தது என்று வர்ணிக்கக்கூடியதாக இருக்கின்ற சூழ்நிலை மிகவும் ஏளனமான ஒரு பிரதிபலிப்பாகும்.

பெரும் எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டாமல் முரண்பாடுகள் நிறைந்ததொரு நிருவாகமாக இருப்பதன் காரணத்தினாலேயே (நல்லாட்சி’ என்ற சொல்லையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட) தேசிய ஐக்கிய அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் மக்களிடையே செல்வாக்கை இழந்து கொண்டு போக வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இதுவே ராஜபக் ஷவுக்கு புதியதொரு அரசியல்  வாழ்வுக்கான வாய்ப்பை தேடிக்கொடுத்திருக்கிறது.

ராஜபக் ஷ மாத்திரம் தான் ஆட்சிக் கவிழ்ப்பை பற்றி பேசுகின்றார் என்றில்லை. ஜனதாவிமுக்தி பெரமுன (ஜே.வி.பி) யின் தலைவரான அநுர குமார திசாநாயக்கவும் 2020 க்கு முன்னதாக அரசாங்கத்தைக் கவிழ்க்கத் தாங்கள் தயாராகி வருவதாக கூறிக் கொண்டிருக்கிறார்.

ஜனாதிபதியும் பிரதமரும் மாத்திரம்தான் தங்களது அரசாங்கம் முழுமையாக அதன் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்யும் என்று அடிக்கடி கூறுகின்றார்களே தவிர, அரசாங்கத்தின் போக்குகள் அதற்கான வாய்ப்பை பிரதிபலிப்பனவாக இல்லை.

இன்றுள்ள இலங்கை அரசியலில் உள்ள மிகவும் விசித்திரமான போக்கு என்னவென்றால், எதிரணிக் கட்சிகள் ஐக்கியப்படாமல் குழப்ப நிலைக்குள்ளாகி­யிருப்பதே அரசாங்கங்களுக்கு வாய்ப்பாக விளங்குகின்ற நிலைமை மாறி அரசாங்கம் குழப்ப நிலைக்குள்ளாகியிருப்பதால் எதிரணிக் கட்சிகளுக்கு வாய்ப்பான நிலைமை தோன்றியிருக்கிறது.

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *