Search
Saturday 23 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடகொரிய- அமெரிக்க போரை தீர்மானிக்கும் சீனா

வடகொரிய- அமெரிக்க போரை தீர்மானிக்கும் சீனா
 -கலாநிதி கே. ரி.  கணேசலிங்கம்

வடகொரியா  அமெரிக்கா இடையிலான போர் இறுதி எல்லைக்கு நகர்த்தப்பட்டுள்ளது. சில ஊடகங்கள் மே 13 போர் என பிரகடனப்படுத்தும் அளவுக்கு ஊடக மிரட்டல் ஏற்பட்டு விட்டது. இத்தகைய போர் நிச்சயமாக அணுவாயுதப் போரின் எல்லையை நோக்கியே நகர்த்தும் என்பதும் அதன் பாதிப்புகள் உலகம் முழுவதும் தாக்கத்தை விளைவிக்கும் என்பதையும் இந்த ஊடகப்போரியல் வாதிகள் உணரத்தவறுகின்றனர். ஏனைய போர்களைப் போல் அல்ல அணுவாயுதப் போர் என்பது இரண்டாம் உலக யுத்தத்தின் போதே ஜப்பான் மற்றும் உலக நாடுகளும் உணர்ந்திருந்தது. இக்கட்டுரை வடகொரிய அமெரிக்கப் போரின் யதார்த்த  நிலையை வெளிப்படுத்த முயல்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை வடகொரியா மீதான நகர்வுகள் அதிகமான சாதகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது. ஏறக்குறைய நடந்து முடிந்த கடந்த இரண்டு மாதகால போருக்கான தயார்ப்படுத்தல் அமெரிக்கத் தரப்புக்கு இலாபகரமானதாக அமைந்துள்ளமை மறுக்க முடியாது. இத்தகைய இலாபம் வடகொரியா அணுவாயுதத்தை பாவிக்கும் வரை அமெரிக்கா பக்கமே வெற்றி வாய்ப்பு நிரந்தரமாகும். இப்படியான அணுவாயுதப்போரை தவிர்க்கும் வரை உலகத்திற்கும் சாதகமானது. ஆனால் வடகொரியா திட்டமிட்டு அணுவாயுதத்தினை பிரயோகித்தால் அது மிக அபாயகரமான தாக்கத்தை அமெரிக்காவுக்கும் உலகத்திற்கும் ஏற்படுத்தும். ஏனெனில் வெள்ளை மாளிகையை அழிப்பதுவே வடகொரியாவின் பிரதான நோக்கமாகும்.

north-korea-832x447

காரணம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அணுவாயுதங்கள் குவிந்துள்ளன. அதனால் அணுவாயுதப் பாவனை நிகழாதவரை அமெரிக்காவுக்கு அதிகமான வாய்ப்புகள் ஏற்படும். அதுவும் இத்தகைய யுத்த நிலைக்கான கொதிநிலை நீடித்தால் வாய்ப்பு அதிகரிக்கும்.தற்போது அமெரிக்காவின் இரண்டு பாரிய யுத்தக் கப்பல்களுடன், நீர்மூழ்கிகளும், விமானம் தாங்கி நாசகாரியும் கொரியக் குடாவில் குவிந்துள்ளன. இத்தகைய யுத்த கப்பல்களுக்கு அனுசரணை வழங்குவதென்ற பெயரில் ஜப்பானிய கப்பல்களும் கடற்படையும் அமெரிக்காவுடன்  இணைந்துள்ளன.

கடந்த 2010 வரையும் ஜப்பானிய இராணுவ வளர்ச்சியை முற்றாக தடுத்து நிறுத்தியிருந்த அமெரிக்கா, கொரியக்குடாவிலும், தென் மற்றும் கிழக்கு சீனக்கடல் பகுதியில் நிலவிய நெருக்கடியையும் கருத்தில் கொண்டு அத்தகைய தடையை தளர்த்தியது. இவற்றைவிட அமெரிக்க எதிர்ப்புவாதிகள் எண்ணிக்கையை  ஜப்பானிய சனத்தொகையில் கடந்த அறுபது ஆண்டுகளில் அமெரிக்கா குறைத்துள்ளது. அதனாலும் கிழக்காசிய அதிகாரச் சமநிலையை தக்கவைக்கவும் ஜப்பான் தடைகளில் தளர்ச்சியை ஏற்படுத்தி அமெரிக்காவின் கூட்டு நாடாக மாற்றி கொரியக்குடாவை கூட்டமாக கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. ஜப்பானின் இராணுவ வளர்ச்சியானது அமெரிக்க நலனுக்கானது. அதுவே எதிர்கால அமெரிக்காவின் இருப்பாக மாற்றமடையும்.

அடுத்து அமெரிக்கா அடைந்த பாரிய வெற்றியாக ஏவுகணை எதிர்ப்பு கோபுரத்தை தென்கொரியாவில் நிறுவும் முயற்சியாகும். ஏறக்குறைய ஐரோப்பாவுக்கு வெளியே அல்லது ஆசியாவில் முதல் முதலாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏவுகணைத் திட்டத்தின் பிரிவான தாடட்  எனப்படும் ஏவுகணை எதிர்ப்புத் திட்டத்தை சாத்தியப்படுத்தியுள்ளது. இது தென்கொரியாவில் அமைந்திருப்பதென்பது கிழக்காசியா முழுவதையும் கண்காணிப்பதற்கான வல்லமையைக் கொண்டமையும். அது சீனாவின் அமெரிக்காவுடனான போட்டியில் அதிக நெருக்கடியை சீனாவுக்கு ஏற்படுத்தும். இந்த ஏவுகணைத் திட்டத்தை சாத்தியப்படுத்துவதற்காகவே உக்ரேன் நெருக்கத்தை ஏற்படுத்தியது அமெரிக்கா. ஆனால் ரஷ்யாவின் எழுச்சி அதனை சாத்தியமற்றதாக்கிவிட்டது. ஆனால் தென்கொரியா விவகாரத்தில் சீனாவின் எல்லாவகை உத்திகளையும் அமெரிக்கா தகர்த்துவிட்டதாக சொல்லப்படுவது எந்தளவுக்கு சரியானது என்ற வாதம் நியாயமற்றதாக மாறவில்லை.

mfc-thaad-info-web-page-intercepting-hr

அமெரிக்கா ஏவுகணைத் தடுப்பு நடவடிக்கையானது கொரியக் குடாவில் ஏற்படுத்தியுள்ள தந்திரமான நகர்வை சீனாவில் தடுக்க முடியாத நிலை போரைத் தூண்டுவதில் முனைப்புச் செலுத்த வேண்டியதாகியுள்ளது.

அமெரிக்காவின் ஏவுகணைத் திட்டத்தை தகர்ப்பதற்கு ஒரு போரா? அல்லது அத்தகைய மிரட்டலை ஏற்படுத்தி அமெரிக்காவை பின்வாங்கச் செய்யும் உத்தியா? என்ற நிலைக்குள் சீன வடகொரிய திட்டமிடல் சென்றுள்ளது. இதனை சரிசெய்ய போர் அவசியமானதாக மாறிவிட்டதென கருதும் சந்தர்ப்பத்திலும் அணுவாயுதப் போர் என்ற அச்சுறுத்தலையும் கையாண்டு கொண்டு சீனா வடகொரியாவை அமெரிக்காவுடன் போர் செய்யவும் சமதளத்தில் பேசவும் முயற்சிக்கின்றது.

இந்தக்கணம் சீனாவின் எழுச்சிக்கான தருணமாக கருதப்படுகின்றது. அமெரிக்க ஏவுகணைத் திட்டத்தை உக்ரேனிலிருந்து பின்வாங்கச் செய்தது போல் தென்கொரியாவில் செயல்படுத்த முடியுமா? என்பது தவறான கணிப்பாகவே அமையும். அமெரிக்காவின் நகர்வில் பாரிய வெற்றியை எட்டியுள்ள நிலையிலிருந்து பின்வாங்குமா? அமெரிக்காவின் வீழ்ந்து கொண்டிருக்கும் உலக அதிகாரப் போட்டியில் இது ஒரு நிமிர்வு மட்டுமல்ல. ஒரு பாரிய நிமிர்வென்றே கூறமுடியும். இது படிப்படியாக ஆசியக்கண்டம் முழுவதும் அமெரிக்காவின் செல்வாக்கு சாத்தியமாகும்.

mfc-thaad-info-web-page-high-ground-hr

படிப்படியாக ஏனைய ஆசிய நாடுகளில் எதிர்ப்பு ஏவுகணை பொருத்தப்படுமாயின் சீனாவின் ஆசியா நோக்கிய எழுச்சி அர்த்தமற்றதாகும். இதனால் சீனா நிச்சயம் போரைத் தூண்டும். அதாவது சமாதான பேச்சுகளுக்கான தூண்டலை ஏற்படுத்துவது போல் போரைத் தூண்டும். அதில் ஓரம்சமாகவே சென்யாங் நகரில் ஒரே நாளில் ஆறு தடவை அபாயச் சங்கினை சீனா ஊதியுள்ளது. மேலும் வடகொரியாவை சீனா எச்சரிப்பதன் மூலமும் அதனை போருக்குள் செல்லத் தூண்டுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் சீனாவும் அமெரிக்காவும் சேர்ந்தே வடகொரியாவை தாக்குவது போலான இராஜதந்திர நகர்வுகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

இது சீனாவின் தருணம்.

கொரியக்குடாவின் கொதிநிலையை தீர்மானிக்கும் கட்டத்தில் சீனா விளங்குகிறது. அது சீனாவுக்கு தவிர்க்க முடியாத கட்டமாகவும் உள்ளது. தைவான் விவகாரத்தை அமெரிக்காவின் புதிய நிர்வாகம் கையாண்ட விதத்தினைக் கண்டு அதிருப்தி அடைந்த சீனா வடகொரியாவைப் பயன்படுத்த திட்டமிட்டது. ஆனால் அமெரிக்க புதிய ஆட்சியின் ஜனாதிபதியும் அவரது நிர்வாகமும் அதனை சாதுரியமாகப் பயன்படுத்தி ஒபாமா நிர்வாகம் செய்ய முடியாததை சாதித்து விட்டது

டொனால்ட் ட்ரம்பை பொறுத்தவரை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவரது கொள்கையால் அமெரிக்கர்கள் அதிருப்தியுற்றிருந்தனர். இதனை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவதென குழம்பியிருந்த சந்தர்ப்பத்தில் பலமான வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்தது. அதனால் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை ஆசியாவில் நிறுவியது. அமெரிக்க மக்கள் மத்தியிலும் ஆட்சித்துறை மட்டத்திலும் பெரும் வெற்றியாகக் கருதுகின்றனர். இதனால் ட்ரம்ப் தனது முதல் இலக்கை எட்டிவிட்டார். இந்த இடத்தில் சீனா கருதுவது போல் இராணுவ அரசியல் மிதமான நெருக்கடியால் ட்ரம்ப் பின்வாங்கமாட்டார். அப்படியாயின் போர் ஒன்றினை சீனா தவிர்க்க முடியாதென கருதும் நிலை ஏற்படும். ஆனால் அத்தகைய போரும் அணுவாயுதப் போராக மூழாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும். காரணம் அணுவாயுதப் போர் கொரியக்குடாவில் ஏற்பட்டால் சீனாவும் பெரியளவில் பாதிப்புக்குள்ளாகும். அதுமட்டுமன்றி உலகம் அணுவாயுதப் போர் மூழுமாயின் சீனாவின் பலவீனமாகவே கருதுகின்ற நிலை ஏற்படும். ஆனால் சீனா போரும் வேண்டும், அணுவாயுதம் இல்லாத போராகவும் அமைய வேண்டும் என கருதினால் சீனாவுக்கு தோல்வியாகும். காரணம் அப்போரில் வடகொரியாவை விட அமெரிக்காவுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும். அதனால் வடகொரியா அணுவாயுதத்தை கைவிட்டால் சரணடைவதற்கு சமமான நிகழ்வுகள் ஏற்படும்.

சீனா தற்போதும் பேசிக்கொண்டிருக்கும் போதே வடகொரியாவின் தலைமையை கொல்வதற்கு அமெரிக்கா பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மேலும் போர் ஒத்திகைகள், பல ஆயிரக்கணக்கான அமெரிக்க படைகள் குவிப்பு, வடகொரியா மீதான அமெரிக்க யுத்த விமானங்களின் பறப்பு என்பன நிகழ்ந்துள்ளன. போரை நோக்கிய நகர்வு இடைவெளியை அதிகம் குறைத்துள்ளது. இரு தரப்பும் வாய்வார்த்தைகளில் பெரும்போரை நிகழ்த்துகின்றன. இது ஏறக்குறைய இருதரப்பின் தந்திரோபாயமாகும்.

north-korea-china-bridge-closed-shut-kim-jong-un-relations-614178

அமெரிக்கா வடகொரியாவின் அந்தரங்க அரசியலை விமர்சனம் செய்யும் நகர்வையும் ஆரம்பித்துள்ளது. இந்த பொய்யான தகவல்கள் சார்ந்த ஊடகப்போர் அரசியலில் மிக முக்கியமானதாக தற்போதுள்ளது என ஈராக் போர் வெடிக்கும் போது பிரஞ்சு சிந்தனையாளன் எலீ வீஸல் குறிப்பிட்டார். இது ஒரு அரசியல் மாயை உலகம். அனேகமாக உலக மக்கள் ஊடகங்களுக்கூடாகவே போரை அளவீடு செய்கிறார்கள். ஈராக் யுத்தத்தை தொலைக்காட்சி ஒளிப்படங்களை பார்த்து விட்டு முடிவுகளை எடுக்கும் உலகம் தற்போதுள்ளது என்றார். இது போலியுலகம். தகவல்களில் உண்மையில்லை. அதனை ஆதாரப்படுத்தும் போலிகளுடன் ஊடகங்கள் காணப்படுகின்றன என்றார் எலீ வீஸல்.

வடகொரிய விவகாரத்தை முதன்மைப்படுத்திய கருத்துகளை வெளியிடும் ஊடக எழுத்துகளில் காட்சி மட்டுமே மாற்றம். ஏனைய உள்ளடக்கம் யாவும் ஈராக் யுத்தம் போன்றது என்கிறார்கள். அதாவது அமெரிக்கா அடங்கி மேற்குலகம் வடகொரியா அபாயகரமான அரசு என்பதை நிறுவ முயற்சிக்கின்றது. அதன்பின்பு யுத்தம் வேண்டுமா இல்லையா என அமெரிக்கா தீர்மானிக்கும் என இன்னொரு வாதம் நிலவுகிறது. அமெரிக்க தரப்பு எதிர்ப்பு ஏவுகணைத் திட்டத்தை முழுமைப்படுத்தி தென்கொரியாவில் நிரந்தர தளத்தை அமைத்துவிட்டால் வடகொரியா மீதான யுத்தத்தை மட்டுப்படுத்தியளவில் கட்டம் கட்டமாக நகர்த்த முயலலாம். ஏறக்குறைய எதிர்ப்பு ஏவுகணைத் திட்டத்துடன் யுத்தத்தின் பாதிப்பகுதி நிறைவடைந்துவிடும். இது சிரிய கடற்படை துறைமுகத்தை ரஷ்யா கைப்பற்றியதற்கு பதிலீடாகக் கூட அமெரிக்கா கருதலாம்.

இந்த விவகாரம் 1962 கியூபா ஏவுகணை விவகாரத்தை மீள நினைவுகோர உதவுகிறது. அதில் சோவியத் யூனியன் பிரதான தரப்பாக அமைந்திருந்தது. இப்போது அமெரிக்கா பிரதான தரப்பாகவுள்ளது. இங்கு சீனாவின் இராஜதந்திரத்திற்கே அதிக வேலை. அங்கு அமெரிக்க நிர்வாகத்திற்கு ஏற்பட்டது போலுள்ளது. இதனை ஜின்பிங் வெற்றி கொள்வாரா? ஆனால் சீனாவின் இராஜதந்திரத்தின் தெரிவு வேகமாக மாற்றங்களை நோக்கி நகர்கிறது.

இதனால் ஒருபுறம் சீனாவுக்குள் தெரிவுகள் சமாதானமாக நகர உதவுவதாக அமையும். அதனை அதிகம் எதிர்பார்க்கும் சீனா ஒரு மென் அதிகார நாடு  என்ற அடிப்படையில் இயங்க அதிகமாக முயற்சிக்கும். ஆனால் எதிர்த்தரப்பு மென் அதிகாரத்தையும் வன் அதிகாரத்தையும் சேர்ந்தே பயன்படுத்தும் நாடு அமெரிக்கா. இதனால் சீனா இரண்டாவது தெரிவுக்கே கொரிய விவகாரத்தை நகர்த்த வேண்டும். அப்படி நகர்த்தினால் போர் தான் முடிவாகும். அதில் சீனாவுக்கு எத்தகைய இலாபம் அதிகமாக உள்ளது என்பதைப் பொறுத்தாகும்.

A U.S. military vehicle which is a part of Terminal High Altitude Area Defense (THAAD) system arrives in Seongju, South Korea, April 26, 2017. Kim Jun-beom/Yonhap via REUTERS

போர் ஒன்றும் திகதி குறித்து ஆரம்பிக்கப்படுவதில்லை. ஏதாவது ஒரு சிறு சம்பவமே போரை தொடக்கிவிடும். அது இப்போது பல தரப்புகளிடம் உள்ளது. எந்தத் தரப்பும் யுத்தத்தை உருவாக்க முடியும். கொரியப் பகுதி அடிக்கடி யுத்தத்தை அனுபவித்த பகுதிதான். இது ஒன்றும் அந்த பிரதேசத்திற்கு முதலாவது யுத்தமல்ல. சீனாவும் அமெரிக்காவும் கொரியாவுக்காக பல தடவை யுத்தங்களை கொரியாக்களுக்கூடாக நடத்தியுள்ளன.

எதுவாயினும் போரையும் சமாதானத்தையும் தீர்மானிக்கும் பொறுப்பு சீனாவிடம் தான் உள்ளது. அமெரிக்கா போரின் கணிசமான பகுதியை நிறைவேற்றிவிட்டது. வடகொரியா போரை தொடங்கவே இல்லை. இதில் சீனாவின் முடிவைக் கொண்டு கொரியக்குடா மட்டுமன்றி புதிய உலக ஒழுங்கின் இன்னோர் வடிவத்திற்கு வித்திடுவதாக இப்போர் அமையும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *