Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வாள் வெட்டுக்களும் வழிதவறிய இளைஞர்களும்

வாள் வெட்டுக்களும் வழிதவறிய இளைஞர்களும்

-மு.பொ

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள் வெட்டுக்களும் அதனோடு ஒத்து நிகழும் குற்றச் செயல்களும் இன்று பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாகியுள்ளதால் அதை விளக்குவதற்கு ‘ஆய்வாளர்கள்’ கல்லடி வேலன் காலத்து கொலைகளுக்கும் இன்று வாள் வெட்டோடு இடம் பெறும் வன்செயல்களுக்கும் கொலைகளுக்கும் ஒப்பீடு ஒன்றை முன்வைக்க புள்ளிவிபரம் தேடித்திரிவது ரசனைக்குரியது.

ஆனால் இந்த வாள்வெட்டுகள் மற்றும் இன்னோரன்ன வன்முறை செயற்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கு இந்த புள்ளிவிபரச் சில்லறைத் தேவைகள் உதவப்போவதில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வன்முறைகள் உலகெங்கும் இன்று நடைபெறுவனவாய் உள்ளதைக் கணக்கிலெடுத்து நமது ஆய்வு விரிய வேண்டும்.

அமெரிக்க மானிலங்களில் பல தடவைகள் பாடசாலைக்குள் புகுந்து மாணவர்களை சுட்டுத்ள்ளும் சக மாணவன் என்றவாறு பல செய்திகள் அடிக்கடி வருகின்றன. அண்மையில் எகிப்து, ஈராக், லிபியா, யேமன் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் வெடித்தெழுந்த கிளர்ச்சிகள், தற்போது மத்திய கிழக்கை மட்டுமல்லாது ஐரோப்பாவையும் நடுங்க வைக்கும் ஐ.எஸ்.எஸ் காரரின் கிளர்ச்சிகள், ஜேர்மனியில் பழைய நாசி (NAZI) ஆட்சியின் வேர்களிலிருந்து கிளம்பும் புதிய நாசிகளின் (NEW NAZI) அடாவடித்தனங்கள், நைஜீரியாவில் அடிக்கடி வெடித்துக்கிளம்பும் மத வெறியாளர்களின் கலவரங்கள் எல்லாம் யாழ்ப்பாண வாள்வெட்டுக்காரர்களுக்கு அநியாயமானவை அல்ல.

இதன் பின்னனி என்ன?
இன்றைய கோளமயப் போக்கின் விளைவு இது என்றால் அதை விளங்கிக் கொள்வது கடினமானது. அவ்வாறு சொல்லாது, இன்று தனிமனிதன் ஒருவனின் இருப்பை கணக்கிலெடுக்காது, அவனை மேவி விழுங்கிக்கொண்டு வளரும் சமூகப்போக்கே (இதற்குள் அரசியல், சமூகம், பொருளாதாரம், இனம், மதம் எல்லாம் அடங்கும்) காரணம் எனலாம். இன்று தன்னை விழுங்கி வளரும், சமூகத்தை சற்று நிறுத்தி, தன் ‘இருப்பை’ பார்க்க வைக்க யாழ்ப்பாணத்து இளைஞன் வாளை வீசுகிறான் என்றால் ஜாவா இளைஞன் ஒருவன் அறுவை சிகிச்சை மூலம் தன் முகத்தை பயங்கரமாக்கி சமூகத்தில் தன் இருப்பைத் திணிக்கின்றான். இவ்வாறு தன் இருப்பை சமூகத்தில் திணிக்க பல்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன.

இன்றைய மனிதவியல்- சமூகவியல் அறிஞர்கள் இன்று சமூகத்தில் உள்ள மக்களை 3 வகையாகப் பிரிக்கின்றனர். இந்தப்பிரிவு 60 களில் முன்வைக்கப்பட்டு இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. முதலாவது பிரிவு மற்றவர்களால் இயக்கப்படும் மனிதர்கள் (OTHER DIRECTED), இரண்டாவது பிரிவு மரபால் இயக்கப்படும் மனிதர் (TRADITION DIRECTED), மூன்றாவது பிரிவு தன்னால் இயக்கப்படும் மனிதர்கள். (INNER DIRECTED). இம் மூன்று வகையுள் மற்றவர்களால் இயக்கப்படுபவரும், மரபால் இயக்கப்படுபவரும் இச் சமூகவளர்ச்சிக்கு எதிராகத் தாக்குப் பிடிக்க முடியாது, பத்தோடு பதினொன்றாக அள்ளுப்பட்டு போகின்றனர். ஆனால், தன்னால் இயக்கப்படுபவன் இந்த சமூகத்தின் ராட்சத வளர்ச்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறான். அவன் தன் இருப்பை ஓங்கி அறைந்து பதிய வைக்கிறான்.

outsiderஇத்தகையோரைதான் சமூகவியலாளர்கள் OUTSIDERS என்று (பிறத்தியான்கள்) அழைக்கிறார்கள். இந்த OUTSIDERS லும் பல வகையறாக்கள் உண்டு. பாடசாலையில் புகுந்து தன் சக மாணவர்களை சுட்டுக்தள்ளும் ஒருவனே OUTSIDERS என்றப்பிரிவில் வரும் மிக கீழ் நிலையிலுள்ள சிந்தனை, தரிசனம் (VISION) இல்லாத பிறத்தியான்கள். இனனும் இன்று பல கிளர்ச்சிகளுக்கு காரணமாகியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளும் இவ்வாறானப் பிறத்தியான்களே.

இவர்கள் முன்வைக்கும் கோட்பாடு எந்தவித தரிசனமுமற்ற, ஈற்றில் தம்மையே அழிவுக்குள் வீழ்த்தும் அடிப்படைவாதச் சிந்தனைகளின் உறைவிடமாக இருப்பதால், இவர்கள் பாடசாலைக்குள் புகுந்து ஏனைய சக மாணவர்களை சுட்டுத்தள்ளும் இளைஞர்களைப் போன்ற கீழ் மட்ட நிலையில் உள்ளவர்களே. பின்லாடன் இவர்களில் முக்கிமான பிறத்தியான். பெரிய செயற்பாடுகளோடு இயங்கிய போதும் உலகெங்கும் இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் இவரது கோட்பாடே இவருக்கு எதிராய் இருந்தது. இவர்களுக்குரிய இன்னோர் உதாரணம் உலகப் புகழ் பெற்ற நாவல் ஆசிரியர் ALBERT CAMU எழுதிய OUTSIDERS இல் வரும் கதாபாத்திரம். இவன் சூரிய ஒளி தன் கண்ணுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதால் ஓர் அல்ஜீரியனை சுட்டுத் தள்ளுகிறான். இவன் எந்த வன்முறையாளனோடும் சேர்த்தி அல்லன். ஆனால் சமூகம் திணிக்கும் மரபு, அதன் வழிவரும் பெறுமதிகள் அனைத்தையும் புறந்தள்ளுவதன் மூலம் தன்னை வித்தியாசப்படுத்துபவன்.

மேற்கூறிய பிறத்தியான்களின் உண்மை (proper) வடிவங்களாக சிந்தனைப் பலமும் தரிசனமும் உடையவர்களே மேலெழுகின்றனர். இவர்கள் தன்னால் இயக்கப்படுபவர்களாக சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும் தலைவர்களாக மாறுகின்றனர். ஒவ்வொரு துறையிலும் இத்தகைய பிறத்தியான்கள் இருப்பர். அதன் வழியில் சமூகத்தை முன்னெடுப்பதில் இவர்கள் பின்னிற்பதில்லை. இவர்களின் வழிகாட்டலில் மற்றவர்களால் இயக்கப்படுபவர்களும் மரபால் இயக்கப்படுபவர்களும் தம்மை மறந்து இவர்களுக்குள் சங்கமமாகி கலந்து விடுகின்றனர்.

LTTEநான் ஆரம்பத்தில் கூறிய தன்னை விழுங்கும் சமூகத்தின் மீது தன் இருப்பை முத்திரை குத்தி தன் இருப்பைப் பார்க்க வைக்க பலவகையான அடாவடித்தனங்களிலும் வன்முறைகளிலும் வாள்வெட்டுகளிலும் ஈடுபடும் கீழ் நிலை பிறத்தியான்கள், ஓர் எழுச்சியைக் காட்டும் உன்னத வழிகாட்டியின் தீவிர விசுவாசியாகவும் அவர் சொல்வதையெல்லாம் சிரமேற்கொண்டு செய்ய முற்படும் அர்ப்பணிப்பாளர்களாகவும் மாறுகின்றனர். இத்தகையவர்களை புடம்போடவல்ல தலைவர்கள் இன்று இல்லாமல் போனது காலத்துயரமே. (புலிகளின் போராளிகளில் பலர் அத்தகையவர்களே.)

உலக அரசியலில் கால்மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் ட்றொக்ஸி, சேகுவேரா, மார்டின்லூதர் கிங் , மண்டேலா, மாவோ ஆகியோர் முதல்தர பிறத்தியான்களாகச் சமூகத்தை முன்னெடுத்துச் சென்ற சிந்தனையாளர்களாக, செயல்வீரர்களாகக் காட்டலாம். அதேவேளை லெனினும், ட்றொக்ஸியும் வென்றெடுத்த ஒக்டோபர் புரட்சியை உட்கொலைகளாலும், சதிகளாலும் திருகி அதை ஒரு பாசிச போக்குடையதாக ஸ்ரலின் மாற்றியபோது அந்த அமைப்புக்குள் இருந்தே அதை எதிர்த்தெழுந்த முதல்தர பிறத்தியான்களாக கலைஞர்களே நிற்கின்றனர். இதை எதிர்த்து தன்னையே தற்கொலை செய்துகொண்ட கவிஞன் மயகோவ்ஸ்கி, டொக்டர் ஷிவாகோ எழுதிய பஸ்ரநாக், ‘கன்சர்வோர்ட்’ எழுதிய சொல் ஹெனிஸ்ற்றின் பெண் கவிஞர் அகமாதாவ் மற்றும் ஹிட்லரின் எழுச்சிக்கு முன்னர் ஐரோப்பாவெங்கும் வெடித்துக்கிளம்பவிருந்த சோசலிச புரட்சியை செம்படையை அனுப்பி ஊக்குவிக்காது, “Socialism in one country” என்று ஹிட்லரோடும் ஒப்பந்தம் செய்துக்கொண்டு தன் தலைமையைக் காப்பாற்றிக் கொண்டிருந்த ஸ்ரலினுக்கு எதிராக ‘பொய்த்த கடவுள்’ (GOD THAT FAILED) என்ற நூலை எழுதி ஐரோப்பா எங்கும் கொதித்தெழுந்த அத்தனை புத்திஜீவிகளும் முதல்தர பிறத்தியான்களே.

உலக அரசியலில் மக்களை மேன்மைப்படுத்த முன்னின்றுழைத்த, தன்னால் இயக்கப்பட்ட மேதைகளை பார்த்தோம். இந்திய அரசியலில் இவர்களுக்கு நிகராக காந்தியையும் ஜெயபிரகாஷ் நாராயணனையும் நாம் கொள்ளலாம். இலங்கை அரசியலில் ரோஹென விஜயவீர, பிரபாகரன் ஆகியோரை சிறந்த உதராணமாகக் காட்டலாம். விஜயவீரவிடம் அடியோடிருந்த இனவாதம் அவரையும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்றவர்களோடு இனங்காண வைத்து அவரை ஒரு சிறந்த வழிகாட்டியாக எடுத்தொழுக முடியாது செய்துவிடும்.

prabhakaranபிரபாகரன் பிறத்தியான்களுக்கு சிறந்த உதாரணம். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தமிழ் அரசியல்வாதிகளால் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக முன்வைத்த கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு, சிங்கள அரசியல்வாதிகளின் தூண்டுதலில் சிங்களப் பொதுமக்கள் பயங்கரவாதிகளாக மாறி தமிழ் மக்களை வதைத்தனர் , கொன்றனர், உடைமைகளை அழித்தனர், பெண்களை கற்பழித்தனர், ஈற்றில் தமிழ் மக்களை கப்பலேற்றி அனுப்பினர். இந்த வெட்கக்கேடான நிலையில்தான் பிரபாகரன் பள்ளிப்பருவத்திலேயே இதற்கெதிராக போராட முன்வந்தான். அல்பிரட் துரையப்பா கொலையோடு இவன்பெயர் பிரபலமாகிறது. இவன் நான் மேலே குறிப்பிட்ட பிறத்தியான்கள் போல் தனியானவன்.

இன்றைய வாள்வெட்டுக்கார இளைஞர்களுக்கும் இவனுக்குமுள்ள வித்தியாசம் முன்னவர்கள் எந்தவித கருத்தியல் பின்னணியுமற்று தம் இருப்பின் பிரபலத்திற்காக அதனால் வரும் thrill இற்காக அல்லது இவர்களை பின்னால் நின்று போதை வஸ்த்து ஊட்டி தூண்டும் பலம்வாய்ந்த சக்திகளின் விருப்புக்காக – பாராட்டுதலுக்காக செயற்படுகிரார்கள். அதாவது ISIS இளைஞர்களும் ஏன், பின்லாடன் உட்பட ஆரம்பத்தில் அமெரிக்காவால் போஷிக்கப்பட்டு செயற்பட்டது போலதான் இவர்களும். இது outsiders இன் கீழ் மட்டம். ஆனால் பிராபாகரன் தமிழ்பேசும் இனத்தின் விடுதலை கருத்தியலோடு போராட முன்வந்தவர். அந்த இலக்கை அடைய தேவைப்பட்ட அனைத்தோடும் பரிட்சியப்படுத்திக் கொண்டவர். இதனால் பெரும் வெற்றி ஈட்டிய அவர் கடந்த 30 வருடங்களாக இலங்கை அரசியலை ஆட்டிப்படைத்தார். ஆனால் இவர் ஈற்றில் தோற்றதற்கு காரணம் இவர் விடுதலை போராட்டத்தை இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு இடம் கொடுக்காது வெறுமனே இரத்தம் சிந்தும் ஆயுதப் போராட்டமாக பாவித்தும் உள் முரண்பாடுகளுக்கும் இடம் கொடுத்தும் தம் போன்ற சிறுபான்மை இனத்தவரை மிக மோசமாக நடத்தியதுமே.

30 வருட கால விடுதலைப் புலிகளின் ஆட்சியின் போது நடந்தவை இன்று புராணங்களாக மட்டுமே உலவுகின்றன. முன்னையப் போராளிகளுக்கும் இன்று வாள்வெட்டில் ஈடுபடும் இளைஞர்களுக்கும் இரண்டு தசாப்தக்கால இடைவெளி உண்டு. இவர்களுக்குப் போர்பற்றி எந்த அனுபவமும் இல்லை. இவைப் பற்றி அறிந்தவர்கள் கூறுபவை இவர்கள் காதை நிரப்பலாம். ஆனால் உண்மையான மேல்நிலைப்பட்ட, தரிசனமிக்க பிறத்தியான் இவர்களுக்கு வழிகாட்ட இங்கு இல்லை. அதனால் இவர்கள் வாள்வீச்சு என்பது அண்ணாந்து துப்பிய எச்சிலாய் அவர்கள் முகத்திலேயே வீழ்ந்து அசிங்கப்படுத்துகிறது.

இந்நிலையில் இவர்களையும் மீட்டெடுத்து, உரிமை இழந்து ஆள்வோரால் ஏமாற்றப்படும் தமிழ் பேசும் இனத்தையும் மீட்டெடுக்க யாராவது உள்ளனரா? மார்டின் லூதர் கிங் போல் அல்லது ஜெயபிரகாஷ் நாராயணன் போல் வீரமுடனும் விஷய விளக்கத்துடனும் சத்திய வழியில் நின்றுப் போராட யாராவது இருக்கின்றார்களா? தழிரசுக்குட்சிக்குள் தேடுவது என்பது முயற்கொம்பைத் தேடுவது போன்ற காலவிரயமே. கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் இருக்கிறார்களா? என் அறிவுக்கு எட்டாமல் இருக்கலாம். முழுமையாக மறுக்க முடியாது. யாராவது திடீரென தோன்றலாம்.

வடக்கில் உள்ள முதலமைச்சர் விக்னேஸவரன் எப்படி? இவர் முன்னர் ஒரு Mediocre இலக்கிய அமைப்புக்கு தலைவராகி தன் பெயரை விற்று அந்த அமைப்பு பிழைக்க வழிவகுத்தவர் என்ற ரீதியில் அவர் ஆளுமையில் சந்தேகம் இருந்தது. ஆனால் நல்லகாலம் அதிலிருந்து விலகிவிட்டார். இப்போது அவரது பேச்சில் ஸ்த்திரத்தன்மையும், நேர்மையும் இருப்பதை காண்கிறேன். ஆனால் ஒரு விடுதலைப் போராட்டத்துக்கான தத்துவார்த்த அறிவும் தரிசனமும் இவரிடம் உண்டா? காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஒரு சிறந்த போராளிக்குரிய கருத்தியலுக்கும், தரிசனத்துக்கும் முன்னால் காலம் கைக்கட்டி பணிசெய்ய எப்பொழுதும் தயாராக இருக்கும் என்பது அறிஞர் வாக்கு.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *