செய்திகள்

விக்னேஸ்வரன் முன்னாலுள்ள சவால்கள்?

யதீந்திரா
வடக்கு மாகாண சபையில் நிலவிய குழப்பங்கள் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் சில எதிர்பார்ப்புக்கள் உருவாகியிருந்தன. எதிர்பார்ப்பு ஒன்று: முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும், இதன் வாயிலாக கூட்டமைப்பு உடைவுறும். எதிர்பார்ப்பு இரண்டு : இலங்கை தமிழரசு கட்சி எதிர்த்தரப்பினருடன் இணைந்து விக்கினேஸ்வரனை வெளியேற்றினால், விக்கினேஸ்வரனைக் கொண்டு ஒரு புதிய அணியை கட்டியெழுப்பலாம். எதிர்பார்ப்பு மூன்று : விக்கினேஸ்வரன் தனது பதவியை துறந்து புதிய அணியொன்றிற்கு தலைமை தாங்க முன்வருவார். ஆனால் இறுதியில் எதுவுமே நிகழவில்லை. இதற்கு காரணம் இவ்வாறான எதிர்பார்ப்புக்கள் எவையும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்தியிலோ அல்லது விக்கினேஸ்வரனுக்கு ஆதரவான தமிழ் மக்கள் பேரவையிடமோ இருந்திருக்கவில்லை. உண்மையில் தமிழ் மக்கள் பேரவை கூட்டமைப்பின் உடைவை விரும்பியிருந்தால் விக்கினேஸ்வரனை தொடர்ந்தும் முதல்வராக வைத்திருப்பதற்கான சமரச முயற்சிகளில் இறங்கியிருக்காது.

வடக்கு மாகாண சபை விவகாரம் தலைதூக்கிய நாளிலிருந்தே, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதிலேயே கவனம் செலுத்தின. தமிழரசு கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பில் கடும் விமர்சனங்களைக் கொண்டிருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூட, சமரச முயற்சிகளிலேயே அக்கறை செலுத்தியிருந்தார். அந்த அடிப்படையிலேயே கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகியவற்றுடன் இணைந்து முதல்வர் விக்கினேஸ்வரனுடன் சமரச பேச்சுவார்த்தைகளில் சுரேசும் ஈடுபட்டிருந்தார். இந்த நிலைமைகளை சுமூகமாக தீர்ப்பதற்கான ஆதரவை சம்பந்தன் முதன் முதலாக பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தலைவர் சித்தார்த்தனிடமே கேட்டிருந்தார். சித்தார்த்தனே இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தனுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் இடையில் தெலைபேசித் தொடர்பை ஏற்படுத்தினார். அதன் பின்னர்தான் விடயங்களில் சம்பந்தன் நேரடியாக தலையீடு செய்யும் நிலைமை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்தே விக்கினேஸ்வரனுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் கடிதமொன்று பரிமாறப்பட்டது. ஆனாலும் நிலைமைகள் தொடர்ந்தும் இழுபறியில் இருந்துவந்த நிலையில்தான், டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனையும் இந்த விடயத்தில் பேசுமாறு சம்பந்தன் கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில்தான் செல்வமும் சமரச முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மூன்று கட்சிகளும் இணைந்து விக்கினேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன. அந்த அடிப்படையிலேயே சமரச முயற்சிகள் வெற்றிபெற்றன. இதன் இறுதிக் கட்டத்திலேயே மதத் தலைவர்களின் தலையீடு நிகழ்ந்தது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் சம்பந்தன் இந்த விடயத்தை ஒரு உட்கட்சிப் பிரச்சினையாகவே கையாள முற்பட்டிருக்கின்றார். அந்த அடிப்படையில்தான் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக இருந்த கட்சிகளைக் கொண்டே விக்கினேஸ்வரனை ஆற்றுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். இறுதியில் சமரச முயற்சி எவருக்கும் பிரச்சினையில்லாமல் முடிந்திருக்கிறது. இது பற்றி சித்தார்த்தன் இப்பத்தியாளரிடம் பேசும் போது, இந்த விடயத்தில் எவரும் தோற்கக் கூடாது என்பதிலேயே நான் கவனம் செலுத்தினேன் என்றார். சம்பந்தன் அண்ணனும் தோற்கக் கூடாது விக்கினேஸ்வரன் ஜயாவும் தோற்கக் கூடாது. இறுதியில் நிலைமைகள் அவ்வாறே முடிந்திருக்கின்றன. இந்த முயற்சிகளில் ஈடுபட்டதற்காக சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு சம்பந்தன் தனிப்பட்ட முறையில் நன்றியையும் தெரிவித்திருக்கின்றார். ஆனால் இத்துடன் பிரச்சினைகள் அனைத்தும் முடிந்துவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா?

14966

வடக்கு மாகாண சபையில் எரிந்த நெருப்பு அணைந்துவிட்டது என்பது உண்மைதான் ஆனால் அதனால் ஏற்பட்ட புகை இன்னும் அகலவில்லை. புகைந்து கொண்டிருக்கும் ஒன்றில், எப்போதுமே தீப்பிடிப்பதற்கான வாய்ப்பு உண்டு. அந்த வகையில்தான் வடக்கு மாகாண சபை விவகாரம் மீளவும் பற்றிக்கொள்ளக் கூடிய ஏது நிலையிலேயே இருக்கிறது. முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இனிவரவுள்ள சபை அமர்வுகள் ஒவ்வொன்றிலும் ஏதோவொரு பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழலே காணப்படுகிறது. ஏனெனில் ஒரு பிளவு ஏற்பட்டுவிட்டது. இனி அந்தப் பிளவு சரிசெய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகும்.

அமைச்சர்கள் நிமயனம், புதிய தீர்மாணங்களை மேற்கொள்ளுதல் என்று, ஒவ்வொரு விடயங்களிலும் சவால்களை சந்திக்க வேண்டிவரும். பதவி விலகிய இரண்டு அமைச்சர்களின் இடத்திற்கு யாரை நியமிப்பது என்பது முதலாவது பிரச்சினையாகும். தற்போதைய நிலையில் புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளுக்கு ஒவ்வொரு இடம் கொடுப்பதே சரியானது ஆனால் அவ்வாறானதொரு முடிவை விக்கினேஸ்வரனால் எடுக்க முடியுமா? அவ்வாறானதொரு முடிவை எடுக்க வேண்டுமாயின் விக்கினேஸ்வரன் மீளவும் தமிழரசு கட்சியுடன் மோத வேண்டிவரும். ஏற்கனவே தமிழரசு கட்சி தங்களின் ஆலோசனை கோரப்பட்ட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. மொத்தத்தில் விக்கினேஸ்வரனை மாகாண சபைக்குள் வைத்துக் கொண்டே, அவரை பலவீனப்படுத்தும் ஒரு திட்டம் வகுக்கப்படலாம். ஏனெனில் வடக்கு மாகாண சபை விவகாரத்தால் தமிழரசு கட்சி மக்கள் மத்தியில் தவறானதொரு கட்சியாக அம்பலப்பட்டுவிட்டது. இதனை சரிசெய்வதற்கு விக்கினேஸ்வரனை மாகாண சபைக்குள் வைத்துக் கொண்டே தோற்கடிக்கும் முயற்சிகள் இடம்பெறலாம். அதனை விக்கினேஸ்வரன் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்?

தற்போதைய நிலையில் வடக்கு மக்கள் மத்தியில் நிலவும் ஆதரவைத் தவிர அவரிடம் வேறு எந்தவொரு கட்சி பலமும் இல்;லை. தமிழரசு கட்சியின் முடிவு மக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியதன் காரணமாகவே தமிழரச கட்சி பின்வாங்கியது. ஒரு வேளை அவ்வாறானதொரு மக்கள் ஆதரவு விக்கினேஸ்வரனுக்கு இல்லாதிருந்திருதால், தமிழரசு கட்சி இந்த விடயத்தை கைவிட்டிருக்காது. உண்மையில் தமிழரசு கட்சி இந்த விடயத்தை தொடர்ந்திருந்தால் விக்கினேஸ்வரனை மையப்படுத்தி ஒரு மக்கள் திரள் அரசியல் உருவாக்கியிருக்கும். தமிரசு கட்சியை எதிர்த்து நிற்கும் கட்சிகள் அதனை அறுவடை செய்திருக்கும் முக்கியமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே அது அதிகம் சாதமாகியிருக்கும். அவ்வாறனதொரு நிலைமை ஏற்பட்டிருந்தால் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளும் அந்தப் பக்கமே சென்றிருக்கும். இந்த விடயங்களை சம்பந்தன் கணிக்காமல் இருக்க வாய்ப்பில்லை. இதன் காரணமாகவே விடயங்களை சுமூகமாக முடிப்பதில் சம்பந்தன் அக்கறை செலுத்தினார். ஒரு வேளை இந்த விடயம் இறுதியில் தமிழரச கட்சிக்கு சாதமாக வரக் கூடுமென்று சம்பந்தன் கணித்திருந்தால், அவர் இந்த விடயத்தை கண்டும் காணாமலேயே விட்டிருப்பார். அது வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் ஜனநாயக உரிமையென்று விளக்கமளித்திருப்பார். மக்கள் ஆதரவு இருக்கும் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது, அது அவருக்கே சாதகமாக மாறும். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை நிகழ்ந்துவிடும். எனவே விக்கினேஸ்வரனை வெளியேற்றி மக்களுக்குள் தள்ளிவிடுவது என்பது, தமிரசு கட்சி தனக்கும் தானே புதை குழி வெட்டுவதற்கு ஒப்பானது. இவற்றை துல்லியமாக கணித்ததன் விளைவாகவே சம்பந்தன், இந்த விடயத்தில் தலையீடு செய்திருக்கிறார். விடயங்களை மேலோட்டமாக பார்த்தால் சம்பந்தன் தோல்வியடைந்திருப்பது போன்று தெரிந்தாலும், தமிழரசு கட்சியை பாதுகாக்கும் நீண்டகால நோக்கில் சம்பந்தன் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு மாற்று அணியை கட்டியெழுப்பலாம் என்று கணக்குப் போட்டவர்கள் தோல்வியடைந்திருக்கின்றனர் என்பதே உண்மை.

இந்த பிரச்சினையின் வாயிலாக ஒரு விடயம் தெளிவாகியிருக்கிறது. விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு அணியை கட்டியெழுப்புவதென்பது மிகவும் சவாலான ஒன்று. ஏனெனில் விக்கினேஸ்வரன் கட்சியற்ற ஒருவர். தற்போதைய நிலையில் அவர் எந்தவொரு கட்சியுடனும் இல்லை. ஒரு வேளை அவர் வெளியேறினால் எந்தக் கட்சியுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார்? ஒரு புதிய கட்சியை உருவாக்கும் நிலையில் அவர் இருக்கிறாரா? அவரால் எந்தவொரு கட்சியுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. ஒப்பீட்டிப்படையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அல்லது ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய இரண்டில் ஒன்றுடன்தான் அவரால் இணைய முடியும். விடயங்களை தொகுத்து நோக்கினால் வடக்கு மாகாண சபை விவகாரம் ஒரு வகையில் விக்கினேஸ்வரன் தலைமையிலான புதிய அணி என்னும் நிலைப்பாட்டை சற்று பலவீனப்படுத்தியிருக்கிறது. அதில் ஆவர்மாக இருந்தவர்கள் மத்தியில் சலனங்களையும் தோற்றுவித்திருக்கிறது.

DSCN1576-e1497607761670

சிலருடைய கருத்தின் படி விக்கினேஸ்வரன் ஜயா வருவார். முதலில் நீங்கள் அதற்கான மேடையை உருவாக்குங்கள் என்கின்றனர் சிலர். ஆனால் ஏனைய கட்சியை சேர்ந்தவர்களோ ஒரு வேளை மேடையை போட்டவுடன் அவர் வராமல் விட்டுவிட்டால் என்ன செய்வது என்கின்றனர். விக்கினேஸ்வரன் ஒரு புதிய அணிக்கு தலைமை தாங்க வேண்டுமாயின் அதற்கான ஆதரவு முதலில் அவரிடமிருந்தே வரவேண்டியிருக்கிறது. அவ்வாறில்லாவிட்டால் இந்த விடயத்தில் வேறு எந்தவொரு கட்சியும் முன்வராது. இதுதான் தற்போதைய நிலைமை. விக்கினேஸ்வரன் மீது மக்கள் நம்பிக்கை iவைத்திருக்கின்றனர் என்பது உண்மை. இன்றைய சூழலில் எவருக்குமில்லாத மக்கள் ஆதரவு வடக்கில் அவருக்குண்டு. அதனை ஒரு அரசியல் சக்தியாக திரட்டியெடுக்க வேண்டுமென்னும் ஆர்வம் அவருக்கிருந்தால் மட்டுமே, அவரால் ஒரு புதிய அணிக்கு தலைமை தாங்க முடியும். ஆனால் அடுத்த முறை தமிழரச கட்சி அவருக்கு நிச்சயம் இடம் கொடுக்கப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவ்வாறானதொரு சூழலில் தொடர்ந்தும் அவர் அரசிலில் இருக்க விரும்பினால், அப்போது எந்த அணியுடன் தன்னை அடையாளம் காட்டவிரும்புவார் என்பதும் கேள்வியே! இந்த இடைப்பட்ட காலத்தில் அவ்வாறானதொரு முடிவை நோக்கி அவர் போக முடியாதளவிற்கான சவால்களையும் அவர் மாகாண சபைக்குள் சந்திக்க நேரிடும். ஏனெனில் தமிழரச கட்சியின் அடுத்த இலக்கு அவ்வாறானதொரு ஆர்வத்தை அவருக்குள் ஏற்படுத்தாதவாறு, சில நெருக்கடிகளை கொடுத்து அரசியலில் அவரை கழைப்புற வைப்பது. இதுவே தமிழரசு கட்சியின் அடுத்த இலக்காக இருக்கும். கழைப்புற்ற ஒருவர் நிச்சயம் ஓய்வையே நாடுவார்.