Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 10

சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 10

படகு மூலம் வல்வெட்டித்துறையில் இருந்து நான் தமிழ்நாடு சென்றமை பற்றியும் அதன் பின்னர் மாணவர் பேரவை உறுப்பினர்களான தவராஜா ( தற்போதைய வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர்), ஞானம் அண்ணா என்று அழைக்கப்படும் சிவஞானசுந்தரம் (முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்) மற்றும் மகா உத்தமன் (சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன் ) ஆகிய மூவரும் கொழும்பில் இருந்து விமானம் மூலம் என்னை சந்திக்க அங்கு வந்தமை பற்றியும் எனது கடந்த பதிவில் எழுதி இருந்தேன்.

இவர்கள் மூவர் வந்ததும் தமிழ்நாட்டில் எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்தோம். யார் யாரை தமிழகத்தில் சந்திப்பது என்று முதலில் ஆராய்ந்தோம். அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி மற்றும் ஏனைய அரசியல் தலைவர்களை சந்திப்பது நல்லது என்று ஏனைய மூவரும் கூறினர். எனக்கு இந்த யோசனையில் உடன்பாடில்லை. எமது பிரச்சினையை தமிழ் நாட்டின் அரசியலுக்குள் கொண்டு செல்லாமல் , அங்கு மக்களின் தலைவர்களாக இருப்பவர்களின் ஆதரவை முதலில் பெறவேண்டும் என்று கூறினேன். அவர்களும் இதற்கு சம்மதித்தனர்.

இதன் பிரகாரம், திருச்சியில் இருந்த ஈ.வே . ரா பெரியார், ஜி. டி. நாயுடு ( கோயம்புத்தூர் கைத்தொழில் அதிபர்), மா. பொ. சி. என்று அழைக்கப்படும் மா. பொ சிவஞானம் (சென்னை) , முரசொலி பத்திரிகை ஆசிரியர் முரசொலி அடியார் ஆகிய நால்வரையும் முதலில் சந்திப்பது என்று முடிவு செய்தோம்.

ஈ.வே .ரா பெரியாரை அவரது திருச்சி அலுவலகத்தில் சந்தித்தோம்.

periyarஅது ஒரு மதிய நேரம். பெரியாரின் உதவியாளர் ஒருவர் தான் எம்மை வரவேற்றார். போகும் போது ஏதாவது கொண்டு செல்லவேண்டும் என்று எமக்கு தோன்றி இருக்கவில்லை. நாம் வெறும் கையுடன் நிற்பதை கண்ட பெரியாரின் உதவியாளர், வீட்டுக்குள் சென்று தோடம்பழங்கள் சிலவற்றை ஒரு பையில் போட்டு எடுத்துவந்து பெரியாரை சந்திக்கும்போது கொடுக்கும்படி சொன்னார்.

நாம் எம்மை பெரியாரிடம் அறிமுகப்படுத்தி, இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துக்கூறினோம். எமது பிரச்சினைகள் பற்றி அவரும் ஏற்கனவே அறிந்திருந்தார். சாத்வீக வழி போராட்டம் எந்த பயனையும் எமக்கு தரப்போவதில்லை என்று எடுத்துக்கூறி, நாம் ஆயுத ரீதியாக போராடவேண்டும் என்றும் அதற்கான ஆலோசனைகளை கூறுமாறும் கேட்டுக்கொண்டோம்.

அப்போது அவர் எம்மிடம் ஒரு கேள்வி கேட்டார்.

இலங்கையில் தமிழ் மக்களின் எண்ணிக்கை என்ன?

மிகக் குறைவுதான் என்று புள்ளி விபரத்தை கூறினோம்.

குறைந்த எண்ணிக்கையில் உள்ள நீங்கள் எவ்வாறு போராடப்போகிறீர்கள்? அவர்கள், பெரிய பெரிய துப்பாக்கிகள், ஆயுதங்கள் கொண்டு உங்களை அழிக்க மாட்டார்களா என்று கேட்டார்.

எமது ஆயுத போராட்ட சிந்தனைக்கு எதிராக அவர் இந்த கேள்விகளை கேட்டவில்லை. எந்தளவுக்கு ஆயுத போராட்டத்தில் எமது மன உறுதி இருக்கிறது என்பதை அறியவே அவர் இவ்வாறு கேட்டார். ஆயுத போராட்டம் தான் ஒரே வழி என்று நாம் திடமாக நம்பி இருந்த அதேவேளை, எப்படி வங்காள தேசம்- பாகிஸ்தான் யுத்தத்தில் இந்தியா வங்காளதேசத்துக்கு இராணுவ உதவிகளை வழங்கி அதன் சுதந்திரத்துக்கு உதவியதோ, அவ்வாறு எமக்கும் உதவாதா என்ற எதிர்பார்ப்பும் எமக்கு இருந்தது. ஆனால் , இதனை அவரிடம் நாம் கூறவில்லை.

இனி வேறு வழியில்லை என்பதாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளோம் என்றும் அதற்கான காரணங்களையும் கூறினோம். 1. சாத்வீக போராட்டம் தோல்வி 2. சகல ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டன. 3. தொடர் அடக்குமுறை 4. அரசியல் தலைவர்களின் தோல்வி. என்று பல காரணங்களை எடுத்துக்கூறி, இதனால் தான் இளைஞர்களாகிய நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று கூறினோம். காலப்போக்கில் நாமும் இராணுவ ரீதியில் பலம் பெறலாம் என்றும் கூறினோம்.

அவர் சிரித்துவிட்டு, ” ஏதோ செய்யுங்கள். நல்லதாக செய்யுங்கள் ” என்று கூறினார்.

பெரியாருடனான சந்திப்பு அத்துடன் முடிவடைந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று மற்றவர்கள் கூறினார்கள். அங்கு சென்று அர்ச்சனை ஒன்று செய்தோம். பூசகர், நட்சத்திரம் மற்றும் பெயர் கேட்டார். அதற்கு எனது நட்சத்திரத்தை கூறி, ” தமிழீழம்” என்று சொன்னேன். அர்ச்சகரும் அவ்வாறே சொன்னார்.

G Naiduஅடுத்ததாக நாம் ஜி. டி. நாயுடுவை சந்திப்பது என்று தீர்மானித்தோம். இவர் தமிழக வரலாற்றில் விஞ்ஞான தொழில்நுட்ப துறையில் ” அதிசய மனிதர் ” என்று அழைக்கப்படுபவர். ஆரம்பக் கல்வியை மட்டுமே நாயுடு கற்றிருந்தார். ஆனால், அவரை பொறியியலாளர் என்றும் கண்டுபிடிப்பாளர் என்றும் அழைத்தனர். இந்தியாவின் முதலாவது மின்சக்தி மோட்டாரை கண்டுபிடித்த பெருமை இவரையே சாரும். கைத்தொழில் துறையில் மட்டுமன்றி, இயந்திரவியல் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளிலும் பல பொருட்களை தயாரித்தார். இதனால் இவரை இந்தியாவின் ” எடிசன்” என்றும் அழைத்தார்கள்.

அவரை கோயம்புத்தூரில் இருந்த அவரது தொழிற்சாலையில் சந்தித்தோம். இந்த சந்திப்பு பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

பதிவு 9…..

பதிவு 8…..


2 thoughts on “சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 10

  1. கி.பாஸ்கரன்

    சத்தய சீலனின் தொடர்வருமா? வராதா??

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *