செய்திகள்

அரசிலிருந்து வெளியேற முன்னாள் பிரதமர் ரட்ணசிறி முடிவு? சந்திரிகாவுடன் இரகசியப் பேச்சு

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் கிழமையுடன் முடிவுக்கு வரவுள்ளதால் இவர்கள் இன்று அல்லது நாளை கட்சி மாறுவார்கள் எனவும், இது தொடர்பாக முன்னர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன், ரத்தினசிறி ஏற்கனவே பேச்சுக்களை நடத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக, கூறப்படும் அமைச்சர்களில், முன்னாள் பிரதமரும் மூத்த அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்கள் எஸ்.பி.நாவின்ன, ஜீவன் குமாரதுங்க ஆகியோரும் அடங்கியுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை, அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கடந்தவாரம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தநிலையில், மூத்த அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அவரது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான விதுர விக்கிரமநாயக்க, அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, அவரது மகளும், மேல் மாகாணசபை உறுப்பினருமான மால்சா குமாரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னான்டோ புள்ளே,  மற்றும் ராஜபக்ச அரசாங்கத்தில் உள்ள மூத்த தலைவர்கள் பலரும், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

நேற்றுவரையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து 27 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 100இற்கும் அதிகமான மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களும் எதிரணிக்குத் தாவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.