செய்திகள்

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டுகள் சிறை

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

நாட்டில் ஊழலை ஒழிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு திட்டங்கள் தொடர்பாகவும், சட்டத் திருத்தங்கள் குறித்தும் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், தற்போது அமலில் இருந்து வருகிற 1988 ஆம் ஆண்டு இயற்றிய ஊழல் தடுப்பு சட்டத்தை திருத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் அரசுப்பணியில் இருப்பவர்கள் ஊழல் செய்து, அது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அதற்கு குறைந்த பட்சம் 6 மாதங்களும், அதிகபட்சம் 5 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் ஊழலில் ஈடுபட்டால் குறைந்தபட்ச தண்டனை இனி 3 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகளாகவும் உயர்கிறது. இதற்கான திருத்தம் ஊழல் தடுப்பு சட்டத்தில் செய்யப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”1988 ஆம் ஆண்டைய ஊழல் தடுப்புச் சட்டத்தில், லஞ்சம் பெறுவோர், லஞ்சம் அளிப்போர் ஆகியோருக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. லஞ்சம் வாங்குவோர், கொடுப்போருக்கு தற்போது குறைந்தபட்ச தண்டனையாக 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இதை 3 ஆண்டுகளாக அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், லஞ்சம் வாங்குவோர், கொடுப்போருக்கு அதிகபட்ச சிறைத் தண்டனையை தற்போதுள்ள 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக அதிகரிக்கவும் உத்தேச சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது (7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதன் மூலம், லஞ்சம் கடும் குற்றமாக்கப்படுகிறது). ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்படும் வழக்குகளின் விசாரணை நிறைவடைவதற்கு 8 ஆண்டுகள் வரை ஆகின்றன. ஆகையால், வழக்கு விசாரணையை 2 ஆண்டுகளுக்குள் முடிக்கவும் உத்தேச சட்டத் திருத்தத்தில் வழிவகை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஊழல் வழக்குகளில் பதவியில் உள்ள அரசு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள உயர் நிலை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை தற்போது உள்ளது. அதேவேளையில், ஓய்வுபெற்ற அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இந்நிலையில், ஓய்வு பெற்ற அல்லது ராஜினாமா செய்த அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்கும், அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என உத்தேச சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டு உள்ளது.