செய்திகள்

அரசு பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கவேண்டும்

புதிய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி தமிழ் இளைஞர்களை சுதந்திரமாக நடமாடச்செய்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

இன்று பிற்பகல் மட்டக்களப்பு, வவுணதீவு காளையடிக்குளம் பிரதேசத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வு காளையடிக்குளம் வீரமாகாளி அம்மன் ஆலய தலைவர் வசந்தன் தலைமையில் ஆலய முன்றலில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
பின்னர் 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்ட்டு வந்த விடுதலைப் போராட்டம் இதற்கு முன் இருந்த அரசாங்கத்தினால் மௌனிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எங்களுடன் இல்லாது விட்டாலும் அவர்களின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் எமது நெஞ்சங்களில் இருந்து என்றும் நீங்குவதில்லை.

எமது தமிழ் மக்கள் போர்க்காலத்தில் அனுபவித்த துன்பங்களை வேதனைகளை விட போர் முடிந்ததும் அன்றைய அரசாங்கத்தினால் பல துன்பியல் நிகழ்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்.

அக்காலத்தில் தான் எத்தனையோ பேர் கொல்லப்பட்டார்கள், எத்தனையோ பேர் காணாமற் போயிருக்கின்றார்கள், எத்தனையோ பேர் கடத்தப்பட்டும் இருக்கின்றார்கள். இவை அனைத்தும் சென்ற அரசாங்கத்தின் தலைமையிலேயே நடாத்தப்பட்டது என்றால் அதனை யாரும் மறுக்க முடியாது.

வடக்கு மாகாணத்தைவிட கிழக்கு மக்கள் தமிழ் தேசியத்தில் ஊறியவர்கள் தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்கள் ஏனெனில் கடந்த 2010ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வடக்கில் இருந்து மாற்றுக் கட்சிகளில் இருந்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதும் கிழக்கில் அதுவும் மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைச் சார்ந்தவர்களே அந்தளவிற்கு எமது தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பால் நாட்டம் கொண்டுள்ளார்கள். அது போலவே கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் இடம்பெற்றது.

இன்னும் எமது இனப்பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதற்கான பச்சைக் கொடி ஜனாதிபதி அவர்களால் காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் எமது சில பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இங்கு இல்லாது விட்டாலும் வடக்கில் எமது மக்களின் 6000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் அவர்களுக்கு பகுதி பகுதியாக மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டுமல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பினை எதிர்த்த ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்கள பேரினவாத கட்சிகளும் தற்போது தமிழர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்று கூறும் அளவிற்கு தமிழ் மக்களுக்காக அவர்களும் வாதிடும் அளவிற்கு மாற்றம் வந்திருக்கின்றது.
இருப்பினும் பழைய நிலைமைகள் இன்னும் சிறுசிறு விடயங்களில் மாறாமல் இருப்பதை நாம் காண்கின்றோம் எமது இளைஞர்கள் கிழக்கு ஆசிய நாடுகளில் பணிபுரிந்து விட்டு மீண்டும் இலங்கைக்கு வரும் போது அவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவது எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.

இதற்கு காரணம் பயங்கரவாதத் தடைச்சட்டம் இதனை இந்த அரசாங்கம் நீக்க வேண்டும் என்பதில் நாம் தீவிரமாக இருக்கின்றோம் அதுபோல் இதனை பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் நீக்க வேண்டும் என்று அக்கறை செலுத்துகின்றன. எனவே இந்த அரசாங்கம் இதனை நீக்கி எமது இளைஞர்களை சுதந்திரமாக நடமாட விட வேண்டும். அதற்கு நாம் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டும் வருகின்றோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எவ்வாறு நாம் செயற்பட்டோமோ அது போல் ஏனைய வருகின்ற தேர்தல்களில் எல்லாம் எமது தமிழ் மக்களின் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே இருக்கும் என்பதில் பூரண நம்பிக்கை இருக்கின்றது என்று தெரிவித்தார்.

Selvarasa (2) Selvarasa (3) Selvarasa (4)