செய்திகள்

அறநெறிப் பாடசாலைகள் சீராக இயங்க ஒழுங்குகள் செய்யவும்: முதலமைச்சரிடம் வேண்டுகோள்

அறநெறிப் பாடசாலைகளை சீராக இயங்குவதற்கும் அவற்றை கண்கானிப்பதற்கும் ஏற்ற ஒழுங்குகளை செய்யுமாறு வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையின் உப தவிசாளர் த. சந்திரமோகன் வட மாகாண முதலமைச்சருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்து அறநெறி ஆசிரியர்களுக்கு இதுவரை ஒரு முறையான வேதனமோ அல்லது ஊக்குவிப்பு கொடுப்பனவோ வழங்கப்படவில்லை. வவுனியாவில் சுமார் எழுபதிற்கும் மேற்பட்ட அறநெறி பாடசாலைகள் இயங்குகின்றது.

கலாசார சீரழிவுகள், போதைவஸ்து பாவனை உட்பட இளம்பருவத்தினர் பாதை மாறி செல்கின்ற இக் காலப்பகுதியில் அவர்களை ஒழுக்க சீலர்களாகவும் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை கடைப்பிடிப்பவர்களாகவும் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக வளர்வதற்கும் அறநெறிப்பாடசாலைக் கல்வி பெரிதும் உதவுகின்றது.

வெறுமனே பாடசாலைக்கல்வி மட்டும் இவர்களை நற்பண்போடு வாழ போதுமானதல்ல. ஆகவே அறnறிப்பாடசாலைகளை சீராக இயங்குவதற்கும் அவற்றை கண்கானிப்பதற்கும் ஏற்ற ஒழுங்குகளை செய்வதோடு இதுவரை காலமும் சமய சமூக பணியாக கல்வி கற்பிக்கும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாதாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு வட மாகாணசபை முன்வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.