செய்திகள்

அறிக்கையை காலதாமதம் செய்யக்கூடாது: விசாரனைக் குழு அதிகாரிகளிடம் சுமந்திரன் ஜெனீவாவில் வலியுறுத்து

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணைக்குழுவின் தலைவர் சந்திரா பெய்ட்ஸ் உட்பட மனித உரிமைகள் சபையின் பல உயர் அதிகாரிகளுடன் ஜெனீவாவில்இன்று காலை சந்திப்பொன்றை மேற்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், எக்காரணம் கொண்டும் ஐ. நா. விசாரணை அறிக்கையை வெளியிடுவதை தாமதம் செய்யக்கூடாது என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

ஐ. நா விசாரணை அறிக்கையை தாமதம் செய்யாமல் ஏற்கனவே அறிவித்திருந்தபடி வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐ. நா மனித உரிமைகள் சபை ஆணையாளர் சீட் ராட் அல் ஹுசைனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததாகவும், இந்த கடிதத்தை மையப்படுத்தியே இன்றைய சந்திப்பு இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ள சுமந்திரன், சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றதாகவும் கூறினார்.

குறிப்பாக, இந்த அறிக்கையை வெளியிடாமல் தாமதம் செய்வதால் ஏற்பபடக்கூடிய விளைவுகளை இந்த சந்திப்பில் எடுத்துரைத்ததாகவும், காலதாமதம் செய்வது அறிக்கையின் முக்கியத்துவத்தை இல்லாமல்போகச் செய்துவிடும் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது கருத்துக்களை ஆழமாக அவர்கள் செவிமடுத்ததாகவும், விசாரணை அறிக்கையை வெளியிடுவது தொடர்பான தீர்மானத்தில் மனித உரிமைகள் சபையின் உறுப்புநாடுகளின் செல்வாக்கு முக்கியமானது என்பதால், உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளை இன்று மாலை சந்திக்கவிருப்பதகவும் அவர் தெரிவித்தார்.