அறிக்கையை திட்டமிட்டவாறு மார்ச் 28 இல் முன்வையுங்கள்: வலியுறுத்துகிறார் வடக்கு முதல்வர்
ஐ.நா.வின் விசாரணை அறிக்கையை கண்டிப்பாக மார்ச் 28 இல் ஐ.நா. மனித உரிமை அமர்வில் சமர்ப்பிக்கப்படவேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். ஆனால், அதன் உள்ளடக்கத்தை வேண்டுமானால் ஆறு மாதங்களுக்கு பின்னர் வெளியிடுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முதலமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
“இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புத் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்ற விசாரணை அறிக்கை மார்ச் மாதம் 28 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை அமர்வில் கண்டிப்பாக சமர்ப்பிக்கப்படுமென தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இருப்பினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் உள்ளிட்ட சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இவ் அறிக்கையை வெளியிடுவதனை காலம் தாழ்த்துமாறு சிலர் விடுத்த கோரிக்கையின் விளைவாக இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிடுவதை மேலும் ஆறு மாதம் ஒத்திவைக்க ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு விடயங்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட பலரின் முயற்சிகள் எல்லாம் காலம் கடத்தியே பயனற்றுப் போனதால் தமிழ் மக்கள் மனதில் ஒரு சலிப்புத் தன்மையுண்டு.
அதேபோல் தற்போது ஐ.நா.வை நம்பியிருக்கும் தமிழ் மக்கள் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கை கண்டிப்பாக மார்ச் 28 ஆம் திகதியே வெளிவரவேண்டுமெனக் கோரி வந்துள்ளனர். தற்போது பிற்போடுவது உண்மையானால் வட மாகாண முதலமைச்சர் என்ற வகையில் நான் ஒன்றை மட்டும் கூறி வைக்கிறேன்.
ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தால் நியமிக்கப்பட்ட குழு மேற்கொண்ட விசாரணை அறிக்கை எந்தவித காலம் தாழ்த்தாது மார்ச் 28இல் வரவேண்டும். அதாவது சமர்ப்பிக்கப்பட்டு வேண்டுமானால் அதன் உள் அடக்கத்தை ஆறு மாதங்களின் பின் தெரிவிக்கலாம். ஏனெனில் அவ் அறிக்கையே வெளிவராமல் தாமதப்படுத்தி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போய்விடக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு.”
இவ்வாறு வடக்கு முதல்வர் தெரிவித்திருக்கின்றார்.