செய்திகள்

அறிக்கை ஒத்திவைப்புக்கு எதிராக கையெழுத்துப் போராட்டம்: தமிழ் சிவில் சமூகம் ஆரம்பித்தது

இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையகத்தின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதற்கு எதிர்ப்பும் கவலையும் தெரிவித்தும், ஐநா வின் விசாரணைக் குழு  இலங்கைக்கு நேரடியாக வ்ந்து விசாரணைகளை நடத்த அரசாங்கத்தை அனுமதிக்குமாறு  ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விட வேண்டும் எனக் கோரியும், எந்த விதத்திலுமான உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்வதில்லை என்பதனை தெளிவுபடுத்தியும், சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றைக் கோரியும் தமிழ்  சிவில் சமுக அமையம் கையெழுத்துப்  பிரச்சாரம் ஒன்றை நேற்று ஆரம்பித்திருக்கின்றது.

இதன் பொருட்டு இலங்கைத் தீவு வாழ் தமிழர்களின் கையெழுத்துகள் பெருமளவில் திரட்டப்பட்டு ஐ.நா மனித உரிமை ஆணையளருக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இக் கையெழுத்துப் பிரச்சாரத்தை நேற்று (24 பெப்ரவரி) தமிழ்  சிவில் சமுக அமையத்தின் அழைப்பாளர், மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆரம்பித்து வைத்தார்.

இக் கையெழுத்துப் பிரச்சாரத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல இளைஞர் கழகங்கள் சனசமுக நிலையங்கள் விளையாட்டுக்கழகங்கள் ஏற்கனவே தமது ஆதரவை வெளிப்படுத்தி, இதில் தம்மை ஈடுபட ஆரம்பித்து உள்ளன. இவர்களின் உதவியுடன் கையெழுத்து சேகரிப்பதற்காய் நாங்கள் தமிழ் சிவில் சமூகத்தின் மாவட்டக் கிளைகளின் ஊடாக உங்களிடம் வருவோம். நீதிக்கான தமிழர்களின் குரலை ஓங்கி ஒலிக்க செய்வதற்கு இக்கையெழுத்துப்போராட்டத்திற்கு தமிழ் மக்களின் ஒட்டுமொத்த  ஆதரவை தமிழ்  சிவில் சமுக அமையம் வேண்டி நிற்கிறது.

கையெழுத்து சேகரிக்கும் செயன்முறைக்கு தங்கள் பங்களிப்பை வழங்க விரும்பும் அமைப்புகள்  தமிழ் சிவில் சமுக அமையத்தின் இணைப் பேச்சாளர் எழிழ் ராஜன் அவர்களையோ (077144663) அல்லது அமையத்தின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் வைத்திய கலாநிதி. தி. பாலமுருகன் அவர்களையோ (0772094344) தொடர்பு கொள்ளலாம்.