செய்திகள்

அறிக்கை தாமதமாவது ஏமாற்றமே தவிர பாதகமல்ல: சுமந்திரன் விளக்கம்

இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை கால தாமதத்தால் ஏற்ப்படுகின்ற ஏமாற்றத்தை தவிர தமிழர்களுக்கு அது எந்த வகையிலும் பாதகமமானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பின்னர் கட்சியின் நிலைப்பாடாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்த அறிக்கையின் முழுவடிவம்:

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கை சம்பந்தமான சர்வதேச விசாரணை அறிக்கையை இந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை பிற்போடுவதற்கு சிபாரிசு செய்தமை சம்பந்தமாகவும், அந்த இடைப்பட்ட காலத்தில் உள்நாட்டு பொறிமுறை ஒன்று ஏற்ப்படுத்தபடுவது சம்பந்தமாகவும் இந்த விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எனது பங்களிப்பு பற்றியும் சில வார்த்தைகள் நான் பேசுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

சென்ற வருடம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட  வேலையில் நடந்த சில சம்பவங்களை முதலில் ஞாபகப்படுத்த  விரும்புகிறேன். நாங்கள் 2011ம்  ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்க ராஜாங்க அமைச்சோடு பேசிய பிறகுதான் இப்படியானதொரு தீர்மானத்தை முன்னெடுத்து நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா முன்வந்தது. நாங்கள் தொடர்ச்சியாக சர்வதேச விசாரணையை கேட்டிருந்த போதும் 2012 மற்றும் 2013ம் ஆண்டும் இலங்கை அரசாங்கம் ஒரு விசாரணையை நடத்த வேண்டும் என்று தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2013ம் ஆண்டு மிக முக்கியமான சொற்பதம் ஒன்று அந்த தீர்மானத்திற்கு கொண்டுவரப்பட்டது. நிலைமாறும் நீதி (Transitional Justice) என்பது உடனடியான குற்றங்களுக்கு தண்டனை மட்டுமல்லாது இந்த பிரச்சினையின் மூல காரணம், அதன் இறுதி தீர்வு என்ற பின்னணியையும் கருத்திற்கொண்டு அந்த சூழ்நிலைக்கு எது பொருத்தமான நீதி என்பதை தீர்மானிக்கும் ஒரு கோட்பாடாகும் . இறுதியில் 2014ம் ஆண்டு ஒரு சர்வதேச விசாரணை ஏற்ப்படுத்தப்பட்டது. அதிலும் 10வது பந்தியின் முதற் பகுதியில் உயர் ஸ்தானிகர் தேசிய பொறிமுறைகளை மேற்ப்பார்வை செய்ய வேண்டும் என்றும் அடுத்ததாக தானாகவே உரிய நிபுணர்களின் உதவியுடன் ஒரு சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது உள்ளக பொறிமுறைகளை மேற்ப்பார்வை செய்கிற அதே உயர் ஸ்தானிகர் அவற்றிக்கு சமாந்திரமாக ஒரு சர்வேதேச விசாரணையையும் நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக வரவேற்றது அந்த நேரத்திலும் கூட பலர் போதிய விளக்கம் இன்மையினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ  இந்த தீர்மானத்தில் சர்வதேச விசாரணை கிடையாது என்று சொல்லி எதிர்த்தார்கள்.

இவர்களில் சுரேஷ் பிரேமச்சந்திரன் திருமதி. அனந்தி சசிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அடங்குவர்.  அந்த வேளையிலே அவர்கள் செய்த ஊடக அறிக்கைகளை நான் இப்போது சமர்ப்பிக்கிறேன். இதற்கு மேலதிகமாக திருமதி. அனந்தி சசிதரன் பெப்ரவரி மாதத்திலே என்னோடு ஜெனிவாவிற்கு போயிருந்த வேளையிலே நான் தன்னை பேச விடாமல் தடுத்ததாகவும் நான் கூட்டங்களில் பேசிய போது சர்வதேச விசாரணையை கோரியிருக்கவில்லை என்றும் மார்ச் 7ம் திகதியளவில் குற்றம் சாட்டியிருந்தார் .

அவருடைய இந்த குற்ற சாட்டு முற்றிலும் பொய்யானது என்பதை ஜெனிவாவிலிருந்து திரும்பிய கையோடு  தானாகவே ஊடகங்களுக்கு கொடுத்த செவ்விகளில் நிரூபணமாகிறது. அவற்றில் மூன்றை நான் மேற்கோள் காட்டுகிறேன் . இப்படியாக இதிலே சர்வதேச விசாரணை இல்லையென்று இவர்கள் விமர்சித்த போது, அப்படியாக இந்த தீர்மானத்தை விமர்சிக்க வேண்டாம் என்றும் இதிலே சர்வதேச விசாரணை உள்ளடங்கியிருக்கிறது என்றும் ஜெனிவாவிலிருந்த போதே பல தடவைகள் நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

தமிழ் பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக பிரசுரமான என்னுடைய அந்த வேண்டுகோள்களை நான் சமர்ப்பிக்கிறேன். இந்த தீர்மானத்திற்கு இன்னும் கூடுதலான எண்ணிக்கையான நாடுகள் ஆதரவு கொடுக்காமல் விட்டதற்கு இவர்களுடைய இந்த பொய்பிரசாரம் ஒரு முக்கிய காரணம் என்பது என்னுடைய கருத்து. அது மட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் மண்டபத்திற்கு வெளியிலே புலிக் கொடிகளுடன் லண்டனிலிருந்து நடைபயணமாக வந்தவர்கள் இந்த தீர்மானத்தின் நகல்களை எரித்ததும், தமிழ் நாட்டிலே அமெரிக்க சிற்றூண்டி சாலைகளை தாக்கியதும் இதற்க்கு மேலதிக காரணங்கள்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் கூட பல மாதங்களாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த தீர்மானத்தில் சர்வதேச விசாரணை இல்லை என்றும் இது தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை பலவீனப்படுத்துகின்ற ஒரு பொறிமுறை என்றும் பல தடவைகள் ஊடக அறிக்கைகள் விடுத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். ஆனால் விசாரணை ஆரம்பமானவுடன் அதற்க்கு சாட்சியங்கள் சேகரிப்பதாக பிழையான வழி முறைகளை அறிவித்து அச்சிட்ட படிவங்களை விநியோகித்து அந்த விசாரணையினுடைய  முக்கியத்துவத்தை வெகுவாக குறைத்தார்கள். ஆனால் ஏதோ தாங்கள் தான் இந்த சர்வதேச விசாரணையை நடத்துவதாக காட்டிக்கொண்டார்கள்.

இந்த சர்வதேச விசாரணையை வெகுவாக பாதிக்கிற வண்ணமாக இவற்றை எல்லாம் செய்த அதே ஆட்கள் இப்பொழுது மீண்டும் தவறான தகவல்களை கொடுத்து மக்களை பிழையாக வழி  நடத்த முற்படுகிறார்கள். இப்படியான வேளையிலே அவர்களுக்கு போட்டியாக நாங்கள் செயற்படாமல் தமிழ் மக்களுடைய உண்மையான பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களுக்கு உண்மையை எடுத்து கூறவும் இதனை சரியான விதத்தில் கையாள வேண்டிய  பொறுப்பும் எம்மை சார்ந்தது.

அறிக்கை பின் போடப்பட்டது சம்பந்தமாகவும் உள்ளக பொறிமுறை சம்பந்தமாகவும் பலருக்கு இருக்கின்ற தெளிவின்மை நீக்கப்பட வேண்டும். இந்த மாதம் வெளிவரவிருந்த அறிக்கையை பின் போடுவதற்கான முயற்சிகள் ஆரம்பமான வேளையிலேயே,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜனவரி 26ம் திகதி மனித உரிமை உயர் ஸ்தானிகருக்கு கடிதம் மூலம் எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். அறிக்கை தாமதம் இல்லாமல் வெளிவருவதே எமது மக்களின் எதிர்பார்ப்பு என்றும் உண்மை கண்டறியப்படுவதன் அடிப்படையிலே மட்டும்தான் உண்மையாண நல்லிணக்கம் காணப்பட முடியும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இதே கால கட்டத்தில் இந்த தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகளாகிய அமெரிக்காவோடும் பிரித்தானியாவோடும்  நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.  ஐயாவின் பிரதிநிதியாக நான் ஜெனிவாவிற்க்கும் சென்று உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளோடும் விசாரணை குழு தலைவியோடும் பேச்சுவார்த்தை நடத்தினேன். எங்களுடைய நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றத்தையும் நாங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் எங்களுடைய வேண்டுகோளுக்கும் மாறாக அறிக்கையை பின் போடுவதற்கான தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டிருக்கிறது.

அதற்க்கான காரணங்களையும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்ட வாக்குறுதிகளையும் உயர் ஸ்தானிகர் மிக தெளிவாக அறிவித்திருக்கிறார். கால தாமதத்தால் ஏற்ப்படுகின்ற ஏமாற்றத்தை தவிர மற்ற எல்லா வகையிலும் இந்த பிற்போடுதல் எமக்கு நன்மையாக அமையும் என்பதே எனது கருத்து.

1. இலங்கை அரசாங்கமே சர்வதேச விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. இது கால வரைக்கும் சர்வதேச விசாரணை என்பதை எந்த வகையிலும் ஏற்று கொள்ளாத இலங்கை அரசு இப்பொழுது அப்படியானதொரு விசாரணை அறிக்கை வெளியிடப்படலாம் என்று கூறி இருப்பது மிகப் பெரியதொரு முன்னேற்றமாகும்.

2. உயர் ஸ்தானிகர் தன்னுடைய அறிவித்தலில் இந்த கால தாமதம் புதிய, முக்கியமான சாட்சியங்கள் வெளிவருவதற்கான சந்தர்ப்பமாக இருக்க கூடும் என்றும் அதன் மூலமாக முழுமையானதும் கூடிய பலமுள்ளதுமான ஓர் அறிக்கை செப்டெம்பரில் வெளிவரும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இது ஒரு தடவை மட்டும் செய்யப்படுகிற தாமதம் என்றும் இந்த அறிக்கை செப்டம்பர் மாதம் நிச்சயமாக வெளிவரும் என்பதற்கான தன்னுடைய, jdpg;gl;l> முழுமையான, அசைக்க முடியாத வாக்குறுதியை கொடுப்பதாக சொல்லியிருக்கிறார். சென்ற ஒக்டோபர் மாதம் விசாரணை குழுவினரை நான் ஜெனீவாவில் சந்தித்து பேசிய பொழுது ஒன்பது மாத குறுகிய காலத்திற்குள் இப்படியான விசாரணை  ஒன்றை நடத்துவது குறித்த தக்களுடைய கஷ்டத்தை எனக்கு தெரியப்படுத்தி இருந்தார்கள்.

இந்த பின்னணியில் செப்டம்பர் மாதத்தில் கூடுதலான பலமிக்க அறிக்கை வெளிவருவது, குறைபாடான அறிக்கை ஒன்று மார்ச் மாதத்தில் வெளிவருவதை விட எவ்வளவோ மேலானது

3. இந்த இடைப்பட்ட காலத்தில் உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தோடு ஒத்துழைப்பதாக இலங்கை அரசு வாக்குறுதி கொடுத்திருக்கிறது. நிலைமாறும் நீதிக்கான ஐ.நா.நிபுணர்களையும் மற்றவர்களையும் வரவேற்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளது. உள்நாட்டு பொறிமுறை ஒன்றை ஏற்ப்படுத்துவதாகவும் அதை நிர்மாணிப்பதற்கு உயர் ஸ்தாநிகருடைய  அலுவலகத்தின் தொழிநுட்ப உதவியை கோரியிருக்கிறார்கள்.  இது சென்ற வருடம் நிறைவேற்றப்பட்ட நாங்கள் வரவேற்ற தீர்மானத்தோடு இணங்கிப் போகின்ற செயற்பாடு

செப்டம்பர் மாதத்திலே வெளி வர இருப்பது சர்வதேச விசாரணையின் அறிக்கை. உள்நாட்டு விசாரணையின் அறிக்கை அல்ல. உள்நாட்டு பொறிமுறை என்பது சர்வதேச விசாரணைக்கு மாற்றீடான ஒன்றல்ல; அதற்கு மேலதிகாமான ஒன்று. சர்வதேச விசாரணை அறிக்கை வெளிவரும் போது சம்பந்தப்பட்ட நாடு அதை ஏற்று கொள்ளாமல் இருந்தால் அந்த அறிக்கை ஜெனீவாவிலே புத்த அறையிலே வைக்கப்பட்டிருக்கும்.

சம்பத்தப்பட்ட நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் அதன் சிபாரிசுகளை அமுல்படுத்துவது கடினம். பாதுகாப்பு சபையின் ஊடாக செயற்படக்கூடிய ஒரு வழி இருந்தாலும் நட்பு நாடுகளின் வீட்டோ அதற்க்கு தடையாக இருக்க கூடும். சர்வதேச விசாரணையை நடத்துகிற அதே உயர் ஸ்தானிகர் உள்ளக பொறிமுறையையும் ஏற்ப்படுத்துவதிலே ஈடுபடுவாராக இருந்தால் அந்த சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்க்கான பொறிமுறை ஒன்று ஏற்ப்படுத்தப்படும்.

இலங்கை அரசாங்கம் இது சம்பந்தமாக கொடுத்த வாக்குறுதிகளை மீறி செயற்ப்படுவதாக இருந்தால் அடுத்த நடவடிக்கைகளை எடுப்பது இலகுவாக இருக்கும்.

உள்நாட்டு விசாரணையில் எமக்கு நம்பிக்கை இல்லை என்பது உண்மை. ஆனால் தற்போது இலங்கை கொடுத்திருக்கின்ற வாக்குறுதி சர்வதேச தலையீடு இல்லாமல் முற்று முழுதாக இலங்கை அரசாங்கம் நடத்தும் விசாரணையை பற்றி குறிப்பிடவில்லை. அது நாங்கள் ஏற்nகனவே ஏற்றுக்கொண்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட உயர் ஸ்தானிகரால் மேற்ப்பார்வை செய்யப்படுகிற ஒரு பொறிமுறையை குறிக்கிறது. சர்வதேச விசாரணையின் பெறுபேறுகள் நடைமுறைபடுத்தப்படுவதற்கு இத்தகையதொரு பொறிமுறை அத்தியாவசியமானதாகும்.

ஆகையால் “உள்நாட்டு விசாரணை வேண்டாம்” என்று கோசம் எழுப்பி, ஏதோ சர்வதேச விசாரணையை கைவிட்டு விட்டு முற்று முழுதாக அரசாங்கத்தின் கண்துடைப்பு விசாரணை தான் நடக்கபோகின்றது என்று மக்கள் சந்தேகப்பட்டு அங்கலாய்க்க நாம் இடமளிக்க கூடாது. பலமான சர்வதேச விசாரணை அறிக்கை ஒன்று செப்டம்பர் மாதம் வெளிவரும் என்ற உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டும். அந்த அறிக்கையின் பெறுபேறுகள் நடைமுறைபடுத்தப்படுவதற்கு உயர் ஸ்தானிகரின் மேற்பார்வையின் கீழான ஒரு உள்ளக பொறிமுறையும் அவசியம் என்பதையும் நாம் மக்களுக்கு சொல்ல வேண்டும்.

சர்வதேச விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்றபட்டபோது அதிலே சர்வதேச விசாரணை இல்லை என்றும் அது உதவாத தீர்மானம் என்றும் மக்களுக்கு பொய் சொல்லி குழப்பம் விளைவித்த அதே நபர்கள் மீண்டும் அறிக்கை பின் போட்டதையும் உள்ளக பொறிமுறை பற்றியும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி மக்களை குழப்புவிக்க நாம் அனுமதிக்க முடியாது.  இது குறித்த எமது தெளிவான நிலைப்பாட்டை பயமில்லாமல் மக்கள் முன் வைக்கவேண்டியது எமது மிகப்பெரிய கடைமையென்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.”