செய்திகள்

அறிக்கை பின்போடப்பட்டமை பெரும் பாதிப்பு:ஜப்பானிய தூதரக ஆய்வாளரிடம் ரவிகரன்

இன அழிப்பை எதிர்கொண்டுள்ள எம் இனத்திற்கு அறிக்கை பிற்போடல் பாதிப்பே என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜப்பானிய பிரதிநிதியுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் ஜப்பானிய தூதரக அரசியல் ஆய்வாளரும் ஆலோசகருமான மேரிக்கோ யமமொட்டோவுக்கும் இடையில் நடந்த சந்திப்பின்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வு குறித்து ரவிகரனிடம் அவர் வினவினார்.

இதன்போது ரவிகரன் மேலும் தெரிவித்ததாவது,
என்னிடமோ அல்லது ஒரு சிலரிடமோ மட்டும் இந்த கேள்வியைக் கேட்டு விட்டுச் செல்வதை விடுத்து இதே கேள்வியை ஒவ்வொரு தமிழரிடமும் நீங்கள் கேட்க வேண்டும் அதுவே ஜனநாயக தீர்ப்பாகவிருக்கும். எனவே சர்வதேச கண்காணிப்பிலான பொது வாக்கெடுப்பே நிரந்தரத் தீர்வுக்கான நீதியான அணுகுமுறையாகும்.
சர்வதேச விசாரணை அறிக்கையை வெளிவிடுவதற்கு காலம் தாழ்த்துவது தமிழ் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. போருக்கு பின்னரான காலப்பகுதியில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொண்டுள்ள எங்கள் மக்களுக்கு இது போன்ற தாமதங்களும் அநீதியாகும். விசாரணை அறிக்கையை உரிய காலத்தில் வெளிவிட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று வலியுறுத்தினார்.