செய்திகள்

அறிவுயுத்தம் செய்யும் புலம்பெயர் தமிழர்கள்

யுத்த சூழ்நிலை காரணமாக வடபகுதியிலிருந்து தமிழர்களும் முஸ்லிம்களும் வெளியேறினாலும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழர்கள் ‘அறிவுயுத்தம்’ செய்யும் விற்பன்னர்களாக நாட்டுக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள் என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.

தமிழர்கள் நாடு கடந்து செல்லும் போது அறிவு மட்டும் தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றார்கள். அவர்களது நம்பிக்கையும் வீண்போகவில்லை என்று கூறினார்.

முட்டக்களப்பு ஏறாவர் அறபா வித்தியாலயத்தில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் –

எமது நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக வட மாகணாத்திலிருந்து தமிழர்களும் முஸ்லிம்களும் அவர்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் நாட்டின் நாலா திசைகளிலும் அகதிகளாகத் தஞ்சமடைந்தார்கள். வடக்கிலிருந்து வெளியேறிய தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் அகதிகளானார்கள். அவர்கள் அகதி அந்தஸ்தோடும் உலகம் முழுவதும் வியாபித்தார்கள்.

வடக்கிலிருந்து வெளியேறிய தமிழர்களும் நாடு கடந்து செல்லும் போது அறிவு மட்டும் தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றார்கள். அவர்களது நம்பிக்கையும் வீண்போகவில்லை. புலம்பெயர்ந்து சென்ற தேசத்தில் எல்லாம் அறிவைத் தேடினார்கள். அந்தத் டேலின் விளைவாக மிச் சிறந்த புத்திஜீவிகளாக மாறியுள்ளார்கள்.

நாடுகடந்து வாழும் தமிழர்கள் அறிவு யுத்தம் செய்யும் விற்பன்னர்களாக நாட்டுக்க மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தற்பொழுது உலகம் முழுவதும் வியாபித்துள்ள தமிழர்களின் அறிவு பல தந்திரோபாயத்தில் சிக்குண்டிருக்கிறது. ஆதனால் புலம்பெயர் தமிழர்களது வாழ்க்கை, திட்டமிடல், எதிர்காலம் எல்லாமே ஒரு விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலைகள், இருப்புக்கள் பற்றி எடுத்துச் சொல்வதற்கு எத்தனை அறிவார்ந்த முஸ்லிம்கள் உலகம் முழுவதும் பரந்திருக்கிறார்கள் என்றால் அதற்கான பதில் கேள்விக்குறியாகவே உள்ளது. அதனால் முஸ்லிம் சமுதாயம் ஒட்டுமொத்தமாக மனித குலத்திற்கு கல்விப் புரட்சியை ஏற்படுத்துகின்ற ஒரு சமுதாயமாக மாற வேண்டும் என்றார்.