செய்திகள்

அலரிமாளிகை சதிமுயற்சி: ஒருவாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவிடம் ஆட்சி அதிகாரத்தை கையளிக்காமல் சதி மூலம் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டமைக்கான நிலைமைகள் கடந்த 9 ஆம் திகதி அதிகாலை அலரிமாளிகையில் நிலவியிருந்தனவா என்பது குறித்து விசாரித்து ஒருவார காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கென சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் தலைமையிலான குழுவொன்றை நியமிக்க தேசிய நிறைவேற்று சபை தீர்மானித்திருப்பதாக அச் சபையின் அங்கத்தவரான ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

தேசிய நிறைவேற்று சபையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அநுரகுமார திசாநாயக்க இந்தத் தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில்

”ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று மறுதினமான ஜனவரி 9 ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷ அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை கையளித்துவிட்டுச் சென்றார் என்று இப்போது கூறுகிறார்கள். ஆனால், அவர் அதிகாரத்தை கையளிக்காமல் தக்க வைத்துக் கொள்வதற்கு சதி முயற்சி செய்தார் என்று தான் எமக்கு கிடைக்கும் தகவல்களில் இருந்து தெரியவருகிறது.

இவ்வாறான சதியில் ஈடுபடுவது அரச துரோகமாகும். 1962 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு எதிராக இவ்வாறான அரச துரோக முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்ட போது அதை அறிந்துகொண்ட அவர், 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியிருந்தார்.

ஆட்சியை மாற்றுவதற்கே கடந்த 8 ஆம் திகதி மக்கள் தமது தீர்ப்பை வழங்கியிருந்தனர். அதை ஏற்று ஆட்சி அதிகாரத்தை கையளிக்காமல் தக்கவைத்துக் கொள்ள சதி முயற்சி செய்வது பயங்கரமான நிலைமையாகும். தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்னதாக கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த 7 படையணிகள் (பட்டாலியன்) இந்தப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கொழும்புக்கு பொறுப்பாகவுள்ள இராணுவ கட்டளை அதிகாரிக்குப் பதிலாக விசேட கட்டளை அதிகாரி ஒருவரின் மூலமே இந்தப் படையணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதேபோல், நீர்க்கொழும்பிலும் இன்னுமொரு படையணி நிலைநிறுத்தப்பட்டிருந்துள்ளது. இராணுவ அணி எதற்காக வந்தது என்று அப்பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கேள்வி எழுப்பியுள்ளதுடன், நீர்கொழும்பில் அதுபற்றி விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் காலத்தில் அதுவும் குறிப்பாக கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் எதற்காக கொண்டு வரப்பட வேண்டும் என்பதே இங்கு சந்தேகமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாது, கடந்த 9 ஆம் திகதி அதிகாலை அலரிமாளிகையில் இருந்திருக்க அவசியம் இல்லாத பிரதம நீதியரசர் உள்ளிட்ட பலரும் அங்கு காணப்பட்டுள்ளனர். அன்றைய தினம் அதிகாலை 34 மணியளவில் அலரிமாளிகைக்குச் சென்ற ரணில் விக்கிரமசிங்க அங்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இருந்ததைக் கண்ட சாட்சியும் இருக்கிறது. பிரதம நீதியரசர் ஒருவர் பகிரங்க சந்திப்புகளை நடத்த முடியுமே தவிர எந்த வகையிலும் இரகசிய சந்திப்புகளை நடத்த முடியாது. அங்கு என்ன நடந்தது என்பது நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும்.

பின்னர் ஆட்சி அதிகாரத்தை கையளித்துவிட்டார்கள் என்பதற்காக முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி எந்த வகையிலும் நீங்கிவிடப் போவதில்லை. அப்படி அது இல்லாமல் போவதற்கு இதுவொன்றும் கணிதமல்ல. இது அரசியல். இந்த சதி விவகாரம் பற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (சி.ஐ.டி.) முறைப்பாடு செய்துள்ளார். அந்த சதி மட்டும் வெற்றியளித்திருந்தால், நாடு இரத்தக் களரியாகியிருக்கும். மனிதர்களின் சடலங்கள் மலையாக குவிந்திருக்கும்.

அதேபோல், கடந்த காலங்களில் இடம்பெற்ற கடத்தல்கள், குண்டுத் தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் சிவராம் மற்றும் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, வெலிகடை சிறைச்சாலை கைதிகள் சுட்டுக்கொலை மற்றும் வெலிவேரிய, சிலாபம் மற்றும் கட்டுநாயக்க சம்பவங்கள், ஊடகவியலாளர் போத்தல ஜயந்த தாக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்த குழு நியமிப்பதற்கும் தேசிய நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதுமட்டுமல்லாது, யுத்தத்தின் இறுதியில் வடக்கில் குவிந்து கிடந்த வாகனங்களுக்கு ஏற்பட்ட நிலைமை, மக்களின் காணிகள் அபகரிப்பு, விடுதலைப் புலிகளின் வங்கிகளில் மக்கள் வைத்திருந்த தங்க ஆபரணங்களுக்கு ஏற்பட்ட கதி போன்ற விடயங்கள் பற்றியும் முழுமையான விசாரணை நடத்துவதென்றும் தேசிய நிறைவேற்று சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. “