செய்திகள்

அலரி மாளிகை இராணுவச் சதி முயற்சி: சி.சி.ரி.வி. கமராக்களை பரிசீலிக்கத் திட்டம்

சட்டவிரோதமான முறையில் தன்னுடைய அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இராணுவச் சதி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மேற்கொண்டாரா என்பது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார், அலரி மாளிகையின் சி.சி.ரி.வி. கமராவின் பதிவுகளை ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஜனவரி 9 ஆம் திகதி அதிகாலை இராணுவத்தின் உதவியுடன் அதிகாரத்தைத் தக்கவைப்பற்கான சதி முயற்சி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மேற்கொண்டார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருக்கின்றார்.

அலரிமாளிகையில் குறிப்பிட்ட நேரத்தில் யார் யார் இருந்துள்ளார்கள் என்பதை அறிவதற்காக சி.சி.ரி.வி. கடராவின் பதிவுகளை விசாரணையாளர்கள் ஆராயவுள்ளார்கள். குறிப்பிட்ட வேளையில் அங்கிருந்தவர்களின் தொலைபேசி அழைப்புக்களின் பதிவுகளையும் அவர்கள் ஆராய்வார்கள்.

மங்கள சமரவீரவின் முறைப்பாட்டையடுத்து, விசாரணையை முன்னெடுப்பதற்கான அனுமதியை சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கியுள்ளனர். இதனையடுத்தே பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

“விசாரணைகளை எவவாறு முன்னெடுப்பது என்பது குறித்து ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும்” எனத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், “அடுத்த வாரத்தில் இவர்களுடைய வாக்குமூலங்கள் பெறப்படும்” எனவும் தெரிவித்தார்.