செய்திகள்

அலரி மாளிகை சதி: நீதிமன்றத்தில் ஆஜராக மகிந்தவுக்கு அழைப்பாணை

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகாரத்தைத் தக்கவைக்க முயன்றார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மார்ச் 31ஆம் தேதி நேரில் ஆஜராக இலங்கை உயர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூன்று நீதியரசர்களை கொண்ட குழு இந்த உத்தரவை பிறப்பித்தது.

முன்னிலை சோசலிஸக் கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் ஜனவரி 9ஆம் தேதியன்று கொழும்பில் முப்படைகளையும் தயார்படுத்தி நாட்டில் குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்த முனைந்தார் என்ற குற்றச்சாட்டே ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ளது.

இது அரசியல் அமைப்பின்படி அடிப்படை உரிமை மீறல் செயலாகும் என்று மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஸ்ரீபவன் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மார்ச் 31ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ராஜபக்ஷவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.