செய்திகள்

அல்ஹுசைனின் இலங்கை பயணம் இன்னமும் உறுதியாகவில்லை

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் சயிட் அல் ஹுசைனின் இலங்கைக்கான விஜயம் பற்றி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

வெளிவிவகார அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சின் ஊடக பேச்சாளர் மஹீஷினி கொலன்னே இந்த தகவலை வெளியிட்டார்.

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அல் ஹுசைன் எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யக்கூடும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போதே மஹீஷினி கொலன்னே இந்த விடயத்தை தெரிவித்தார்.

“அமைச்சர் இதை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அமைச்சர், ஐ.நா. உயர்ஸ்தானிகரை சந்தித்தும் இருந்தார். ஐ.நா. உயர்ஸ்தானிகருக்கு இலங்கை அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், அவரது விஜயம் மற்றும் அதற்கான திகதி பற்றி இதுவரை எந்த முடிவும் கிடையாது” என்று அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதேநேரம், எதிர்வரும் ஜூன் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 29 ஆவது அமர்வில் இலங்கையில் இருந்து உயர்மட்ட தூதுக்குழு எதுவும் அனுப்பப்பட மாட்டாது என்றும் ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவே இந்த அமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்வார் என்றும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கொலன்னே தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்கான உள்நாட்டு பொறிமுறை தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் இதுவரை எதுவும் பூர்த்தியாகவில்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேநேரம், ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் சீனாவை ஓரங்கட்டி செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவ்வாறான கருத்துகளை மறுத்த வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹீஷினி கொலன்னே, புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் சீனாவுக்கான விஜயங்களை மேற்கொண்டிருந்ததை சுட்டிக்காட்டியதுடன், அந்த வகையில் அரசாங்கத்தினால் சீனா ஓரங்கட்டப்படுவதாக யாராலும் தெரிவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.