செய்திகள்

அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் பாகிஸ்தான் தலைவர் பலி

இந்திய துணை கண்டத்துக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் கிளை தொடங்கப்பட்டதாக அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவன் அய்மன் அல் ஜவாஹிரி கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தான். இந்த கிளை அமைப்பின் பாகிஸ்தான் மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் தலைவனாக அப்தாலி என்பவன் நியமிக்கப்பட்டதாகவும் அப்போது அவன் தெரிவித்திருந்தான்.

இந்நிலையில், லாகூர் பகுதியில் தலைமறைவாக இருந்தபடி செயல்பட்டுவந்த இந்த அமைப்பினரை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் படைகள் ஈடுபட்டு வந்தன. அங்குள்ள ஒரு உளவு நிறுவனத்தின் மீது பயங்கர தாக்குதல் நடத்தி, சில முக்கிய அரசியல் தலைவர்களை கொல்ல இந்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக வருவதாக ரகசிய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதற்காக, ஏராளமான வெடிகுண்டுகள், ஆயுதங்கள், நவீனரக துப்பாக்கிகள், தோட்டாக்களை பழப்பெட்டிகளுக்குள் மறைத்து கடத்திவந்து தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து, லாகூர் அருகேயுள்ள ஷேக்புரா மாவட்டத்தின் பெரோஸ்வாலா பகுதியில் உள்ள ஒரு பதுங்குமிடத்தில் கடந்த திங்கட்கிழமை ரகசிய போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் எலைட் படை போலீசாருக்கும் இடையில் நடைபெற்ற ஆவேச மோதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒருவன் தனது உடலில் கட்டப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்து பலியானான்.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆனநிலையில் மேற்கண்ட தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் அல் கொய்தா தலைவனாக செயல்பட்டுவந்த அப்தாலி என்பவன் கொல்லப்பட்டதாக பஞ்சாப் மாகாண உள்துறை மந்திரி ஷுஜா கன்சாடா இன்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய துணை கண்டத்தின் அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவனாக இந்தியரான மவுலானா அசிம் உமர் என்பவனை அய்மன் அல் ஜவாஹிரி நியமித்துள்ளதாகவும் நிருபர்களிடம் அவர் தெரிவித்தார். இதற்கு முன்னதாக இந்திய துணை கண்டத்தின் தலைவனாக நியமிக்கப்பட்டிருந்த அமெரிக்கரான மஹ்மூத் என்பவன் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, புதிய தலைவனாக மவுலானா அசிம் உமர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது இவன் ஆப்கானிஸ்தான் நாட்டில் பதுங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.