செய்திகள்

அவசரமாக பசில் அமெரிக்கா சென்றதன் மர்மம் என்ன? வெளியாகும் திரைமறைவு நாடகங்கள்!

எதிர்க்கட்சியின் தலைமைப் பதவியை தனக்குத் தரவேண்டும் என மகிந்த ராஜபக்‌ஷவிடம் கோரிய பசில் ராஜபக்‌ஷ அதனைப் பெறமுடியாத நிலையிலேயே அமெரிக்கா புறப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற நாள் முதல் அரங்கேறிய திரைமறைவு அரசியல் விளையாட்டுகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்;தும் பரபரப்பான தபவல்கள் வெளிவந்துகொண்டுள்ளன.

முன்னாள் அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவினால் அரசியல் பந்தயத் திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஐ.தே.க. வை நோக்கி அரசாங்கத்தின் அதிகாரங்கள் நகர்ந்து கொண்டிருப்பதை பசில் அறிந்திருந்தார். அந்நிலையில் பராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக் கொள்வதற்கான தந்திரோபாயத்தை அவர் தீட்டியுள்ளார்.

சிறிசேனவிடம் அதிகாரத்தை கையளித்து விட்டு அலரிமாளிகையை விட்டு வெளியேறுவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்த பின்னணியில் பசில் ராஜபக்ஷவின் உபாயம் தீட்டப்பட்டிருக்கிறது. அந்தத் தருணத்தில் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பசில் தொடர்பு கொள்ள ஆரம்பித்தார். எதிர்க்கட்சித் தலைவராக தான் வருவதற்கு ஆதரவு திரட்டுவதற்காக அவர் தொடர்புகளை மேற்கொண்டார்.

பசிலின் வேண்டுகோளுக்கு தமது கடுமையான எதிர்ப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் மேற்கொண்டிருந்தனர். தமது சகாக்களுக்கு தொலைபேசி மூலம் சிலர் இது தொடர்பாக கதைக்க ஆரம்பித்தனர். அரசாங்கத்தை நாசமாக்கியவர்களில் ஒருவராக பசில் இருந்தார். அவர் இப்போது எதிர்காலத்தில் எதிரணியை நாசமாக்குவதற்கும் எதிர்க்கட்சித் தலைவராக வருவதற்கும் முயற்சிக்கிறார் என்று அவர்கள் கூற ஆரம்பித்தனர்.

ஆயினும் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பைக் கொண்டிருந்த போதிலும் முன்னைய அரசாங்கத்திலிருந்த 2 ஆவது மற்றும் 3 ஆவது தர உறுப்பினர்கள் சிலரின் ஆதரவை அவர் திரட்டியிருந்தார். அவர்களின் ஆதரவுடன் தான் மகிந்தவை சந்திப்பதற்கு விரும்புவதாக அறிவித்திருந்தார்.

பசில் எதிர்க்கட்சித் தலைவராக வந்தால் கட்சியிலும் எதிரணியிலும் அதிகாரத்தை ராஜபக்ஷக்களினால் கொண்டிருக்க முடியுமென்று அவர் மகிந்தவிடம் கூறியுள்ளார். ஆனால் அந்தக் கருத்தை மகிந்த உறுதியாகவே நிராகரித்துள்ளார். மக்களே தீர்ப்பை வழங்கியிருப்பதாகவும் அந்தத் தீர்ப்புக்கு மகிந்த தலைவணங்குவார் எனவும் தெரிவித்துள்ளார். புதிய தலைமைப் பதவி ஜனநாயக ரீதியில் அமைந்திருக்க வேண்டுமெனவும் அதாவது சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளின் பிரகாரம் அமைந்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்க்கட்சித் தலைவராக வரும் பசிலின் திட்டம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் அரசியல் திட்டங்களை கைவிட்டு அமெரிக்காவுக்கு செல்வதென அவர் தீர்மானித்தார்.

கொழும்பிலுள்ள தனது விமான சேவையுடன் அவர் தொடர்பை ஏற்படுத்தி திரும்பி வரும் பயணச் சீட்டுகளுடன் பயணத்துக்கான பதிவை மேற்கொண்டிருந்தார். அமெரிக்காவுக்கு அவரும் அவரின் மனைவியும் செல்வதற்கு பதிவு செய்யப்பட்டது. ஜனவரி 22 ஆம் திகதி கொழும்புக்கு அவர் திரும்பி வருவது பயணச் சீட்டுகள் மூலம் அறிய வந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பின்னர் தனது அரசியல் பயணத்தை மீள ஆரம்பிப்பதென அவர் திட்டமிட்டிருந்தார்.

அவரின் பயணம் ஐ.ம.சு.மு. வின் மத்தியில் பல அதிருப்தியை ஏற்படுத்தியது. மகிந்தவை கைவிட்டு அவர் ஓடிச் சென்றுள்ளதாக பலர் குற்றம் சாட்டினர். மைத்திரிபாலவின் கரங்களில் மகிந்த தோல்வியுறுவதற்கு பசிலையே அவர்கள் குற்றம்சாட்டினர். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு சமாந்தரமாக பாரியளவிலான ஊழல், பொது நிதியம் விரயமாக்கப்பட்டமை அதாவது பசிலின் பொறுப்பிலுள்ள அமைச்சுகளின் கீழ் இவை இடம்பெற்றமை தொடர்பாக ஊடகங்கள் வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தன. இதேவேளை தனது எதிர்காலம் குறித்து பசில் இரு விதமான தீர்மானங்களை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயகத்துக்கு மீண்டும் சில காலத்துக்கு திரும்பி வராமல் இருப்பது இரண்டாவது தீர்மானமாகும். திரும்பி வருவதற்கான திகதியை இரத்துச் செய்வதென அவர் தீர்மானித்திருந்தார்.

பசிலின் வெளியேற்றத்துடன் சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைமைத்துவம் தொடர்பாக மற்றொரு விவகாரம் மேலெழுந்துள்ளது. மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் அப்பதவிக்கு போட்டியிடுவோரின் பட்டியல் மேலெழுந்திருக்கிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் முதலமைச்சர் பதவியை விட்டு விட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு ரணதுங்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது. அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்துடன் ஏப்ரல் 29 இல் ஜனாதிபதியினால் தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாகாண சபையை விட்டு வெளியேறி பொதுத் தேர்தலில் போட்டியிடுவதென ரணதுங்க தீர்மானித்தால் மாவட்ட தலைமைத்துவத்தை அவர் பெற்றுக் கொள்ளும் சாத்தியப்பாடு காணப்படுகிறது.