செய்திகள்

அவுஸ்திரேலியப் பிரதமர் டொனி அபேர்ட் – மகிந்த புதிரான உறவு: சாடுகிறார் ரணில்

அவுஸ்திரேலியப் பிரதமருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையிலான உறவுகள் புதிரானதாக இருந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். மனித உரிமை மீறல்களை விமர்சிக்காமல் இருக்க ஆஸ்திரேலியா இணங்கியிருந்ததாகவும் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

இலங்கையிலிருந்து கடல் வழியாக மனிதக் கடத்தல்கள் நடப்பதை முறியடிக்க இலங்கை அரசாங்கம் உதவுகின்றமைக்கு கைமாறாக ஆஸ்திரேலியா இந்த உடன்பாட்டை செய்திருந்ததாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவை நோக்கி தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்செல்லும் படகுகளை தடுப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ, ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட்டுடன் உடன்பட்டிருந்ததாக ரணில் தெரிவித்துள்ளார்.

பதிலுக்கு, மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புகார்களை செய்யப்போவதில்லை என்று ஆஸ்திரேலியாவும் உடன்பட்டிருந்ததாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.

ஆஸ்திரேலியா கடந்தகால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மனிதக் கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இலங்கையுடன் ஒத்துழைத்துச் செயற்படவுள்ளதாக ஆஸ்திரேலியா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.