செய்திகள்

அவுஸ்திரேலியாவில் உலக தவில் மாமேதை தெட்சணாமூர்த்தியின் ஆவணப்படம் நூல் வெளியீடு

உலக தவில் மாமேதை தெட்சணாமூர்த்தி அவர்கள் பற்றி தெட்சணாமூர்த்தி அறக்கட்டளையின் ஆதரவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப்பாளி அம்ஷன்குமார் தயாரித்த ஆவணப்படமும் மற்றும் ‘தெட்சணாமூர்த்தி: எட்டாவது உலக அதிசயம்’ எனும் நூல் அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு மார்ச் மாதம் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் புடைசூழ தூங்க்காபி சமூக மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் தெட்சணாமூர்த்தியின் புதல்வர் உதயசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு, ஈழத்தின் தலைசிறந்த நாதஸ்வர, தவில் கலைஞர்களும் உள்ளுர் கலைஞர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வு உள்ளுர் கலைஞர்களின் மங்கல இசையுடன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தெட்சணாமூர்த்தியின் திருவுருவப்படத்துக்கு உதயசங்கர் அவர்கள் மாலை அணிவிக்க மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து அவுஸ்திரேலிய கீதம் மற்றும் மௌன அஞ்சலி ஆகியனவும் இடம்பெற்றன.

நிகழ்வுகளை கலாநிதி பாலவிக்னேஸ்வரன் அவர்கள் ஆரம்பித்து வைத்திருந்தார். தொடர்ந்து, நிகழ்வினை நவரட்ணம் ரகுராம் அவர்கள் வழிநடாத்த வரவேற்புரையினை சந்திரவதி தர்மதாஸ் வழங்கியிருந்தார்.

தொடர்ந்து பின்னணி இசையின்றி “குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா” எனும் பாடலை திருமதி நித்யகல்யாணி சத்யமூர்த்தி அவர்கள் பாடி சபையோரை மெய்லிர்க்க வைத்தார்.

இளமுருகனார் பாரதி அவர்களின் சிறப்பு கவிதையோடு உரைகள் ஆரம்பித்தன. முதலில் தமிழறிஞர் திரு ம.தனபாலசிங்கம் அவர்கள் ‘தமிழனின் வாழ்வியலில் தவில்’ எனும் பொருளில் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, ‘தெட்சணாமூர்த்தி ஒரு மேதை’ எனும் தொனிப்பொருளில் திருமதி கார்த்திகாயினி கதிர்காமநாதன் அவர்களும் நிறைவாக இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் சந்திரசேகர சர்மா தனது நினைவுகளை பகிர உரைகள் நிறைவுற்றன.

தொடர்ந்து, தவில் நாதஸ்வர கலைஞர்களிடமிருந்து ஆவணப்படம் மற்றும் நூல் பிரதிகளை மண்டபத்தில் இருந்த ரசிகர்கள் பெற்றுக் கொண்டதனைத் தொடர்ந்து கலைஞர்களின் சார்பில் உள்ளுர் கலைஞர் திரு மா.சத்தியமூர்த்தி அவர்கள் ஏற்புரை வழங்க, திரு கானா பிரபா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

நிகழ்வின் நிறைவில் மகுடம் வைத்தது போல் இலங்கை கலைஞர்களின் நாதஸ்வர, தவில் இசைக்கச்சேரியோடு மதியம் 12.30 மணிக்கு நிகழ்வு நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் சேகரிக்கப்பட்ட நிதி முழுவதும் இலங்கையில் மங்கல இசை கற்கும் அடுத்த சந்ததிக்கான ஊக்க நிதி அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

DSC_0366 DSC_0382 DSC_0392 DSC_0446 DSC_0460 DSC_0492 DSC_0586