செய்திகள்

அவுஸ்திரேலியா அணி இலங்கைக்கு வந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நாளை மஞ்சள் ஆடை அணிவோம்: இலங்கை ரசிகர்கள் கோரிக்கை

கடுமையான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரமற்ற நிலையிலேயே அவுஸ்திரேலிய அணி இலங்கையை வந்தடைந்தது. நாட்டில் நிலவும் பல்வேறு முரண்பாடுகள் மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக அவுஸ்திரேலிய அணி இலங்கை விஜயத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், அந்தக் கருத்துக்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு அவுஸ்திரேலிய அணியினர் இலங்கைக்கு வர முடிவு செய்தனர்.இலங்கை கடுமையான டொலர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் அவர்கள் டொலரை மட்டும் கொண்டுவராமல் இலங்கைக்கு அனைவரது உதவியும் தேவைப்படும் தருணம் இது என்பதை மீண்டும் உலகிற்கு சுட்டிக்காட்டினர்.

பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் இலங்கை அணி கைப்பற்றியது. இறுதி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் தற்போது விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆனால் நன்றியுள்ள தேசமாக அனைத்து இலங்கையர்களும் செய்யக்கூடிய ஒன்று இன்னும் மீதமாகவுள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் ஆரம்பித்துள்ள இந்த நன்றியை வெளிப்படுத்தும் உன்னதப் பணியில், அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். நாளைய தினம் உலக மக்களின் கவனத்தை எமது சிறிய நாட்டின் பக்கம் திருப்புவோம்.

பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் அவுஸ்திரேலியா அணி இலங்கைக்கு வந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இவ்வாறு மஞ்சள் ஆடை அணியுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்திற்கு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இந்நிலையில் கொழும்பு, கெத்தாராம மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டியைக் காண வரும் அனைத்து இலங்கையர்களும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து வருமாறு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.(15)