செய்திகள்

அவுஸ்திரேலிய அணிக்கே இம்முறை உலககிண்ணம்- ரிக்கி பொன்டிங்

அவுஸ்திரேலிய அணி இம்முறை உலககிண்ணத்தை வெல்லும் என அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சேன் வட்சன் எதிர்வரும்போட்டிகளில் ஆறாவது வீரராக களமிறங்குவதே சிறந்தது.  மிட்ச்செல் ஸ்டார்க்கினால் அவர் சிறந்த நிலையிலிருக்கும்போது என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் பாhத்துள்ளோம், ஜோன்சன் இதுவரை தனது திறமையை வெளிப்படுத்த தொடங்கவில்லை,ஆனால் வெகு சீக்கிரத்தில் அது இடம்பெறும்,இது தவிர பட் கமின்ஸ், கசில்வூட் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

இலங்கை அணிக்கு எதிராக ஆஸி அணியினர் விளையாடிய விதம் எனக்கு பிடித்திருந்தது.வட்சன் ஆறாவதாக விளையாடுவதால் அணி சமநிலை சரியாக காணப்படுகின்றது. ஸ்மித் மூன்றாவதாகவும், கிளார்க் நான்காவதாகவும்,வட்சனும்,மக்ஸ்வெலும் இறுதியில் அடித்தாடுபவர்களாகவும் விளையாடுவதே சிறந்தது.  அடுத்த சுற்றில் அவுஸ்திரேலியா சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமலே விளையாடும்.சிட்னியில் சுழற்பந்துவீச்சு அவர்களுக்கு பலனளிக்கவில்லை. அவர்கள் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் வட்சனையும்,மக்ஸ்வெல், மற்றும் கிளார்க்கை பயன்படுத்துவார்கள்.

உலககிண்ண போட்டிகளில் விளையாடும் எந்த அணியையும் விட அவுஸ்திரேலியாவிடமே வலுவும், ஆழமும் காணப்படுகின்றது.அவர்களுக்கு அடுத்து நியுசிலாந்தை குறிப்பிடலாம்.  ஆஸி அணியிடம் பலவீனத்தை காண்பது கடினம்.அனைத்து விடயங்களும் சரியாகவுள்ளன.எனினும் முக்கியமான தருணங்களில் உங்கள் திறமைக்கு ஏற்ப விளையாடவேண்டும்,அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே பெருமைக்குரிய விடயம், அவசியமான தருணங்களில், முக்கியமான போட்டிகளில் அவர்கள் தங்கள் முழுதிறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்திய பந்துவீச்சாளர்கள் கள நிலைமையை மிகச்சிறப்பாக பயன்படுத்துகின்றனர், அவர்களது துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த நிலையிலுள்ளனர். இதனால் அந்த அணியே மிகவும் ஆபத்தானது.  தென் ஆபிரிக்காவே ஆச்சரியங்களை அளிக்க கூடிய அணி எனினும் அழுத்தங்களை கையாள்வதில் அவர்கள் பலவீனமானவர்களாக காணப்படுகின்றனர்.அவர்கள் என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
உலககிண்ணத்தை வென்றாலும் தோற்றாலும் நியுசிலாந்து அணி நல்லநிலையிலுள்ளது.கடந்த ஓரு வருடமாகவே நான் அந்த அணி குறித்து சுட்டிக்காட்டி வருகின்றேன்.

முன்னர் எப்போதையும் விட அந்த அணியில் நல்ல வலுவுள்ளது.அணியில் இடம்பெறதா சில வீரர்களை பார்த்தால் அவர்கள் அனைவரும் மிகச்சிறப்பானவர்கள் என்பது அணியின் ஆழத்தை புலப்படுத்தும் என பொன்டிங்குறிப்பிட்டுள்ளார்.