செய்திகள்

ஆசிரியர்கள் மனத்திருப்தியுடன் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு சிறந்த பாடசாலை புறச்சூழல் அவசியம்

ஆசிரியர்கள் சிறந்த மனநிலையுடன் இருந்தால் மட்டுமே ஈடுபாட்டுடன் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும் . இதன்மூலமே மாணவர்களுக்கு சிறந்தமுறையில் கற்பித்தலை முன்னெடுக்கமுடியுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

நேற்று (28.4) வவுனியா கோவில்குஞ்சுக்குளம் அ.த.க பாடசாலையின் ஆசிரியர் விடுதி புனரமக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சரின் 2014 ஆம் ஆண்டிற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து மேற்படி ஆசிரியர் விடுதி புனரமைக்கப்;பட்டுள்ளது. கடந்த யுத்தத்தினால் சேதமடைந்திருந்த மேற்படி ஆசிரியர் விடுதி பாடசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளிற்கமைய புனரமைக்கப்பட்டது.

அங்கு உரையாறறும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

ஆறு ஆசிரியர் தங்கக்கூடிய விடுதியானது புனரமைக்கப்பட்டுள்ளதால் தூர இடங்களிலிருந்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இது பேருதவியாகவிருக்கும். இந்தபகுதி கடந்த யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசமாகும்.

குறிப்பாக பாதுகாப்பு முன்னரங்க பகுதிக்கு அண்மையில் காணப்பட்டதால் யுத்தத்தின்போது கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது சிறிதுசிறிதாக மீண்டு வருகின்றது. இந்த யுத்தம் எமது மக்களின் உடமைகளை அழித்துள்ளது. உயிரை அழித்துள்ளது. எனினும் எமது மக்களின் கல்வியை அழிக்கமுடியாது. எனவே எமது சமூகத்தின் இருப்பிற்கு கல்வி மிக அவசியமாகும். அவ்வாறாக கல்வியை கற்பித்துவரும் ஆசிரியர்கள் போற்றுதலுக்குரியவர்கள். போக்குவரத்து வசதிகுறைந்த இந்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைக்கு ஒவ்வொரு நாளும் தூர இடங்களிலிருந்தே ஆசிரியர்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கு சிறந்த கற்பித்தல் சூழலை வழங்கவேண்டியது எமது கடமையாகும் என தெரிவித்தார்.