செய்திகள்

ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் ரோ: பாக். பத்திரிகையாளரிடம் மகிந்த சீற்றம்

“இலங்கையில் ஒரு கிளர்சிச் சதி இடம்பெற்றிருக்கின்றது. இதன் பின்னணியில் ரோ (இந்தியாவின் புலனாய்வுப் பிரிவு) இருந்துள்ளது” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ சீற்றத்துடன் தெரிவித்திருக்கின்றார்.

“கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களும், வடபகுதி மக்களும் சர்வதேச சக்திகளால் தவறாக நடத்தப்பட்டுள்ளார்கள்” எனவும் பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கிலத் தினசரியான ‘டோன்’  பத்திரிகைக்கு மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

தங்காலையிலுள்ள தன்னுடைய கால்டன் இல்லத்தில் வைத்து டோன் பத்திரிகையாளருக்கு மகிந்த பேட்டியளித்தார்.

“இப்போதும் நீங்கள் ஜோதிடத்தை நம்புகின்றீர்களா?” எனக் கேட்கப்பட்டபோது, “இப்போது நான் நம்பவில்லை” எனக் கூறி பலமாகச் சிரித்தார்.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் இலங்கைக்கு உதவியதாகத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, “அமெரிக்கா, ஐரோப்பா, மேற்கு நாடுகளைப் பாருங்கள். அவர்கள் எமது நண்பர்களல்ல” எனவும் குறிப்பிட்டார்.

“பாகிஸ்தான் எமக்கு உதவியது. விஷேடமாக முஷாரப் உதவினார். இப்போது எமது நாட்டில் என்ன நடைபெற்றிருக்கின்றது எனப் பாருங்கள்? இங்கு ஒரு சதி இடம்பெற்றிருக்கின்றது. இதன் பின்னணியிர் ரோ (இந்திய புலனாய்வு நிறுவனம்) இருந்துள்ளது” எனவும் மகிந்த ராஜபக்‌ஷ சீற்றத்துடன் குற்றஞ்சாட்டினார்.

தேர்தலில் கிடைத்த தோல்வி பற்றி குறிப்பிட்ட மகிந்த ராஜபக்‌ஷ, “கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களும், வடமாகாண மக்களும் சர்வதேச சக்திகளால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார்கள்” எனக் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் மக்களுக்கு ஏதாவது செய்தி சொல்ல வரும்புகின்றீர்களா எனக் கேட்கப்பட்டபோது, “இந்தக் கிளர்சிச் சதி விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என நம்புகின்றோம்” எனத் தெரிவித்தார்.