செய்திகள்

ஆட்சியைத் தக்கவைக்க இராணுவச் சதித்திட்டம் தீட்டப்பட்டதா? கம்மன்பிலவிடம் விசாரணை

தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதை நிறுத்தி இராணுவப் புரட்சியொன்றை ஏற்படுத்த அலரிமாளிகையில் சதித்திட்டம் தீட்டியமை தொடர்பாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பிலவிடம் நேற்று புதன்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உதய கம்மன்பிலவை குற்றப்புலனாய்வு தலைமையகத்திற்கு நேற்று புதன்கிழமை பகல் 2 மணிக்கு வருமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அதிகாரி சானி அபேசேகர தொலைபேசியின் ஊடாக தெரிவித்திருந்தார். அதன்படி மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில விசாரணைக்காக வருகை தந்திருந்தார்.

விசாரணை நிறைவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில;

“ஜனாதிபதித் தேர்தலன்று இராணுவத்தைப் பயன்படுத்தி சதித்திட்டம் தீட்டி அரசின் பலத்தை பிரயோகித்ததாக பாதுகாப்புச் செயலாளர் உள்ளடங்கலான குழுவினர் முயற்சி செய்ததாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டில் பாதுகாப்புச் செயலாளரும் நானும் இணைந்து இராணுவப் புரட்சி செய்வதற்கு முயற்சித்ததாக கூறப்பட்டுள்ளது.

என்னைப் போலவே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும் இருக்கின்றார். அப்படியான எங்கள் இருவரையும் இணைத்துக்கொண்டு இராணுவப் புரட்சியொன்றை செய்ய முற்பட்டதாக கூறுவதிலே இவர்களின் கேலித்தனம் தெரிகின்றது. அதற்காக பிரதம நீதியரசரின் ஆலோசனையும் பெறப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகில் சட்டவிரோதமான செயற்பாட்டிற்கு நாட்டின் பிரதம நீதியரசரையும் இணைத்துக்கொண்டு செயற்பட்டதாக வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

என்னிடம் உதவிப்பொலிஸ் அதிகாரி சானி அபேசேகர விசாரணை மேற்கொண்டார். அதன்போது விசேடமாக முக்கியமான சில விடயங்கள் குறித்து என்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஊரடங்குச் சட்டம் குறித்து விசாரணை இடம்பெற்றது. அன்றிரவு நான் அலரிமாளிகையில் இருந்தது உண்மை. என்னுடன் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ,மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், முப்படைத்தளபதி ,பொலிஸ்மா அதிபர், சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மகிந்த பாலசூரிய ஆகியோர் ஜனாதிபதியின் அலுவலக அறையிலேயே இருந்தோம்.

அதன்போது ஊரடங்குச் சட்டம்போட வேண்டிய தேவை உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. காரணம் எம்முடன் பணிபுரியும் மாகாண சபை உறுப்பினர் சமன்மலி சகலசூரியவை ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தல் கணக்கெடுப்பு நிலையத்தில் வைத்துதாக்க முற்பட்டதாக எமக்குத் தகவல் கிடைக்கப்பெற்றது.

அதேபோல கொழும்பிலும் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய அசாதாரண சூழ்நிலை காணப்பட்டது. வெற்றிக்களிப்பிற்காக அப்போதைய எதிர்த்தரப்பினர் அடாவடித்தனமாகச் செயற்பட்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடுமேயென பலரிடம் அச்ச நிலைமையே காணப்பட்டது. இதனால் பாப்பரசரின் வருகைக்குக் கூட பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால் நாட்டை அமைதியான வகையில் வைத்திருக்க ஊரடங்குச் சட்டம் அவசியமென கருத்து முன்வைக்கப்பட்டது. எனினும் அதனை எதிர்க் கட்சியினர் தவறாகச் சித்திரிக்கக் கூடுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

அதற்கமைய ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கினார். ‘இப்போது நான் வெளியேறவுள்ள ஜனாதிபதி. எனவே வரப்போகும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி இவ்விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறுங கூறினார்.

அத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த அன்றைய தினம் அதிகாலை 2, 3 மணியளவில் ‘நாம் தோல்வியடையப் போகிறோம். அதனால் எதிர்கால ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு’ தெரிவித்திருந்தார். அந்த நேரத்தில் ஜனாதிபதிக்கு இருந்த ஒரேயொரு பிரச்சினை பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு மட்டுமே. அது தொடர்பில் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார்.

இவையே அங்கு இடம்பெற்றது. அதைவிடுத்து தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கோ பலவந்தமாக ஆட்சியை கைப்பற்றுவதற்கோ எவ்வித சதித்திட்டமும் இடம்பெறவில்லை. அலரிமாளிகையில் அன்றைய தினம் 2.30 மணிவரை நான் இருந்த காலப்பகுதியில் அப்படியொரு சதித்திட்டமும் இடம்பெறவில்லை. அத்துடன் அன்றைய தினம் 100200 பேர் வரை அங்கே இருந்தனர். அவ்வளவு பேரை வைத்து சதித்திட்டம் தீட்டமுடியாது. சாதாரணமாக இரகசியமாகவே சதித்திட்டம் தீட்டப்படும். இது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும். எனக்குத் தெரிந்தவை அனைத்தையுமே குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன் எனத் தெரிவித்தார்.