செய்திகள்

ஆட்சியைத் தக்கவைக்க மகிந்த மேற்கொண்ட இராணுவச் சதி: பெப்ரவரி 10 பாராளுமன்ற விவாதம்

ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு அலரி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினால் வகுக்கப்பட்டதாகக் கூறப்படும் சூழ்ச்சித் திட்டம் தொடர்பான விவகாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் முடிவடைந்த பின்னர் பெப்ரவரி 10 ஆம் திகதி இது குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தேர்தலுக்கு பின்னர் எதிரணி உறுப்பினர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் உட்பட நடைமுறை விடயங்கள் தொடர்பில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

பெப்ரவரி 7 ஆம் திகதி பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு முடிவடைந்தப் பின்னர், மேற்படி விடயங்கள் பற்றி விவாதிப்பதற்கு பெப்ரவரி 10 ஆம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலையடுத்து, புதிய ஆட்சி உதயமாகிய பின்னர், மகிந்த ஆட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி விவரங்களை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வெளியிட்டு வருகின்றனர். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பெரும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அதிகாரத்தை தக்கவைத் துக்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய, முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் ஆகியோர் திட்டம் தீட்டினர் எனவும் கூறப்படுகின்றது.

எதிரணி உறுப்பினர்கள், அவர்களின் ஆதரவாளர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளன என சுட்டிக்காட்டியே எதிரணி உறுப்பினர்கள் இந்த விசேட விவாதத்தை கோரியுள்ளனர்.